Monday, May 03, 2010

திருத்தமிழ் எழுதுகிறேன்; திருத்தமிழ் செய்கிறேன் (1/2)


இன்று, 3-5-2010 தொடங்கி ஒரு கிழமைக்குத் தமிழ்மணத்தின் ‘நட்சத்திரப் பதிவராக’ வலம்வர இருக்கிறேன். நான் வலைப்பதிவு தொடங்கிய மே மாத்திலேயே, இப்போது நட்சத்திரப் பதிவராகி இருப்பது எதிர்ப்பாராமல் நிகழ்ந்திருக்கும் மகிழ்வாகும்.

'நட்சத்திரப் பதிவர்' என்று சொல்லுவதைவிட, ஒரு வாரத்திற்கு வலையுலகப் பதிவர்கள், வாசகர்களிடம் என்னை – என் எழுத்தை – என் வலைப்பதிவை – என் மொழியை – என் இனத்தை – என் வாழ்வியலை, என் நாட்டை அறிமுகம் செய்துகொள்ள கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பாகவே இதனை எண்ணுகிறேன். தமிழ்மணம் எனக்கு வழங்கியிருக்கும் இந்த வாய்ப்புக்கு முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

நட்சத்திர வாரத்தின் முதல் பதிவாக என்னுடைய எழுத்துலக வாழ்க்கை பற்றி எழுதலாமே என்று நினைத்தேன். அதன் எதிரொளிப்புதான் இந்தப் பதிவு.

சின்ன வயதிலிருந்தே எழுதுவதில் மிகுந்த ஆர்வம் எனக்கு. பிறந்து மூன்று வயது இருக்கும்போதே வீட்டுச் சுவர்களில் எழுதிக்கொண்டிருந்தவன் நான். பத்து வயதில் பள்ளியிலேயே கட்டுரை எழுதுவதில் நான்தான் முதல் மாணவன். பன்னிரண்டு வயதில் எழுத்துப் போட்டியில் முதல் பரிசு பெற்றவன் நான். இன்று ஏராளமாக எழுதிக் குவித்துக்கொண்டிருக்கிறேன்.

இப்படியெல்லாம், உளறிக்கொட்டிக் கிளறி மூடாமல், என்னுடைய எழுத்துத்துறை ஈடுபாட்டைப் பற்றி ‘முதன்முறையாக’ எழுத்து வடிவில் பகிர்ந்துகொள்ள – பதிவுசெய்ய விரும்புகிறேன். இதனை வரலாறாக நினைத்துப் படிக்காமல், விரும்பிப் படிக்க வேண்டுகிறேன். இதனைப் பொறுமையோடு முழுதும் படிப்போருக்கு முதற்கண் நன்றி மொழிகிறேன்.

1988 என்று நினைக்கிறேன். அதுதான் எழுத்து எனும் விதை என்னுள் விழுந்த காலம். அப்போது மலேசியாவில் ‘மயில்’ எனும் வார இதழ் வெளிவந்தது. அன்றைய என் பதின்ம வயதில் வாசிப்பை நேசிக்கவைத்தது இந்த மயில்தான். ஒவ்வொரு வாரமும் காத்திருந்து அதனை வாங்கிப் படித்துமுடித்து, ஒருவரி கருத்தாவது எழுதி, மயில் ஆசிரியருக்கு அஞ்சல் பண்ணினால்தான் தூக்கமே வரும் என்ற அளவுக்குக் கட்டுக்கடங்கா மையல் அந்த மயில்மேல்.

‘மயில்’ கடைக்கு வந்துசேரும் முதல்நாளே வாங்கி, நம்முடைய கடிதம் வந்திருக்கிறதா என்று கண்களை அகல விரித்துப், எச்சில்தொட்டுப் பக்கங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்த அந்தநாள் ஆர்வம் புதையல் தேடுபவனையும் மிஞ்சியது. தூவல்(பேனா) பிடித்து எழுத வேண்டும் என்னும் ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தியது இந்த மயில்தான். ஒவ்வொரு வாரமும் என்னுடைய கடிதமோ அல்லது கட்டுரையோ கண்டிப்பாக எங்கோ ஒரு பக்கத்தில் இடம்பெற்றுவிடும். இதுவே எனக்குப் பெரிய ஊக்கமாக அமைந்தது.

இதற்காக, மயில் இதழின் நிருவாக ஆசிரியர் பெரியவர் ஐயா.ஆ.சோதிநாதன் அவர்களுக்கு என்றென்றும் நன்றியுடையேன் ஆவேன். அந்த மயில் இதழில் அப்போது...

‘கனவுகளின் சுயம்வரம்’ என்று ஒரு தொடர்கதை வந்தது. என் இருபதுகளின் தொடக்கத்தில் ஐம்புலன்களையும் கட்டிப்போட்டுக் கொடுமைபடுத்திய கதை அது. ஒரு வாரம் படிக்காவிட்டாலும் பயங்கர மன உலைச்சலுக்கு ஆளாகிய காலம் அது. வாராவாரம் அக்கதைக்கு நான் எழுதிய மறுமொழிகளில், எழுத்துகளுக்குப் பதிலாக என் உணர்வுகளே அதிகமாகப் பதிவாகி இருக்கும்.

என் எழுத்துகளை யார் படித்தாரோ இல்லையோ, கதையாசிரியர் அரவிந்தன் விடாமல் படித்திருக்கிறார். ஒரு நாள் நான் ஒரு சிறிதும் எதிர்ப்பார்க்காத வேளையில் என் வேலையிடத்திற்கு என்னைத் தேடி வந்தார். என் தந்தையார் வயது அவருக்கு. என்னை எப்படியாவது சந்தித்துவிடவே தேடி வந்ததாகச் சொன்னார். காலையில் வந்தவர் மாலை வரை – என் வீடு வரை வந்து அளவளாவினார். கதை பற்றிய என் மறுமொழிகளை மனப்பாடமாகச் சொல்லி மனதார பாராட்டினார். என் எழுத்தின் முதிர்ச்சிக்கும் எனக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லையென வியந்து சொன்னார். தூக்கி வாரிப் போட்டது எனக்கு. கருத்து எழுதியவனைக் கதையாசிரியர் திறனாய்வு செய்வது எனக்குப் புதுமையாக இருந்தது.

எனக்குக் கிடைத்த மாபெரும் தகைமைப்பாடாக(அங்கீகாரம்) அந்த நிகழ்வை நினைத்தேன். தொடர்ந்து ஆர்வத்தோடு எழுதினேன். அதைவிட அதிகமாகப் படித்தேன்.

1993 வாக்கில், பக்கத்து ஊரில் நடந்த திருக்குறள் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஈர்க்கப்பட்டேன். அங்குதான் என் வாழ்க்கைப் பயணத்திற்கான இலக்கை அறிந்துகொண்டேன். தமிழ்த்திரு. இர.திருச்செல்வம், தமிழ்த்திரு. க.முருகையன் ஆகிய இருவரும், காட்டாற்று வெள்ளமாக இருந்த என் எண்ண அலைகளுக்கு இரு கரையாக இருந்து ஒரு தாளகதியில் இயங்கச் செய்தார்கள். இவர்கள்தாம் எனக்குத் ‘தீக்கை’ அளித்து தமிழ்க்கண்ணைத் திறந்துவைத்த ஆசான்கள். இன்றைய சுப.நற்குணனைச் செதுக்கிய சிற்பிகள் இவர்கள் இருவரும்தாம்.

அதுவரை கண்டதையெல்லாம் தமிழ் என்று நினைத்து படித்துக்கொண்டிருந்தவன், இதுதான் தமிழ் என்று தேர்ந்து படிக்கத் தொடங்கினேன். திருக்குறளையும் திருவருட்பாவையும் உருகிப் படித்தேன். தமிழியல் சார்ந்த ஏராளமான நூல்களைச் சேமித்துப் படித்தேன். தமிழியல் தொடர்பான ஏராளமான பணிகள், நிகழ்ச்சிகள், பயிலரங்குகள், சொற்பொழிவுகள் என நாடு முழுவதும் என் ஆசான்களோடு சுற்றிச் சுழன்றேன். இன்றும் அப்படித்தான் சுழலுகின்றேன். அதில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், 2002இல் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் நூற்றாண்டு விழாவை மலேசியாவில் மாபெரும் எழுச்சியோடு ஒரு இலக்கம்(இலட்சம்) மலேசிய வெள்ளி செலவீட்டில் பெரும்பாடு பட்டு நடத்தி முடித்தோம்.

என்னுடைய பெயரைச் சுப.நற்குணன் என நிலைப்படுத்திக்கொண்டதும் இந்தக் காலத்தில்தான். என் பெற்றோர் ‘சற்குணன்’ என்று வடமொழி கலந்து எனக்கு வைத்துவிட்ட பெயரைத் தமிழ்ப்படுத்திக்கொண்டேன். என் பெயரில் இருந்த இழுக்கைச் சரிபடுத்தியதன் வழியாக, அறிந்தோ அறியாமலோ; தெரிந்தோ தெரியாமலோ என் பெற்றோர் செய்துவிட்ட ஒரு கலங்கத்தைச் துடைத்தொழித்த மனநிறைவு எனக்கு எப்போதும் இருக்கிறது.

பின்னர் திருமணம், புதுமனை புகுவிழா, அருமைச் செல்வங்கள் மூவருடைய பெயர்சூட்டு விழா, இல்ல வழிபாடு, குரு வழிபாடு, இறை வழிபாடு என அனைத்தையும் தமிழ் வழியிலேயே அமைத்துகொண்டேன். இனிவரும் அனைத்தும் என் இறுதிக்கடன் உட்பட தமிழிலேயே நடக்க வேண்டுமெனவும் விருப்பம் கொண்டுள்ளேன்.

இம்மட்டில் கதையைச் சுருக்கிக்கொள்கிறேன். இனி, வலைப்பதிவு எழுத எப்படி வந்தேன் என்று சொல்லி முடித்துக்கொள்கிறேன். அதை அடுத்தப் பதிவில் சொல்வேன்.
  • நனிநன்றியுடன்:-
  • திருத்தமிழ் ஊழியன், சுப.நற்குணன் - மலேசியா.

20 comments:

Sathis Kumar said...

தமிழ்மண நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் மற்றுமொரு மலேசியத் தமிழர் ஐயா சுப.நற்குணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அடுத்த ஒரு கிழமைக்கு தமிழுலகப் பார்வை உங்கள் பதிவை நோக்கியிருக்கும். வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஐயா.

கோவி.கண்ணன் said...

உங்கள் தமிழ்பற்று நெகிழ்ச்சியளிக்கிறது. பாராட்டுகள். வின்மீன் கிழமையில் சிறப்பான கட்டுரைகள் அளிக்க நல்வாழ்த்துகள்.

Anonymous said...

மகிழ்ச்சி; வாழ்த்துகள் ஐயா.

- அ. நம்பி

Unknown said...

வின்மீனாக தேர்வுப் செய்யப்பட்டிருக்கும் அருமை அன்பருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்து மொழிகின்றேன்.உங்களது எழுத்துப்பணி வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன்;இரசித்தேன்; அகம் நெகிழ்ந்தேன்.இனியும் சிறக்கட்டும் தங்களது தமிழ்ப்பணி.

தமிழ் said...

வாழ்த்துகள்

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள்...

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அருமைத்தமிழில் ஆற்றொழுக்காய் வரப்போகும் கட்டுரைகளுக்கு காத்திருக்கிறோம்...

வாழ்த்துக்கள்!

Vignes Krishnan விக்கினேசு கிருட்டிணன் said...

வாழ்த்துக்கள் அன்பரே, தங்கள் திருப்பணி சிறக்கட்டும்.

முனைவர் மு.இளங்கோவன் said...

திருவாளர் நற்குணனார் அவர்களே!
தமிழ் விண்மீனாகச் சுடர்விட்டு ஒளிர்க.
அன்பன்
மு.இளங்கோவன்
புதுச்சேரி.

ஜோதிஜி said...

வலைப்பதிவு பணியைப் பொழுது போக்காக மட்டுமே எண்ண முடியாதவன். இதன்வழி எனை ஈன்ற மொழிக்கும், இனத்திற்கும் ஏதேனும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு எழுதுபவன்.


அறிமுகம் அற்புதம். வார்த்தைகள் சிறப்பு. நோக்கங்கள் மொத்தத்திலும் பெருமைபடத்தக்க விசயம்.

நல்வாழ்த்துகள்.

மனோவியம் said...

வணக்கம்
வின்மீன் வாழ்த்துக்கள் ஐயா.
சுப.நற்குணன் அவர்களே

வின்மீன் விடியும்வரைக் காத்திருக்கும்
இந்த தமிழ் வின்மீன்
அகிலம் உள்ளவரைக்கும்
திருத்தமிழால் மின்னவேண்டும்

அழகுத் தமிழிலே
அற்புத கருத்துக்களை படைக்கும்
திருத்தமிழ் நண்பரே....

தனித்தமிழிலே
தரணையேங்கும்
தமிழ்மணம் பரப்பும்
திருத்தமிழ் நண்பரே

இனிய தமிழை
இதயத்தில் ஏற்றி
இன்ப நாதமெனும்
முழங்கும் என் இனிய
திருத்தமிழ் அன்பரே

பெயரை மட்டுமா
நீங்கள் தமிழ் படுத்தினீர்கள்?
வள்ளுவன் போல
உங்கள் வாழ்க்கையையும் அல்லவா
தமிழ்ப் படுத்தியிருகின்றீர்கள்
இது புகழ்ச்சி அல்ல ஐயா
தமிழுக்கு தொண்டு செய்தோன்
தரணியில் சாகவரம் பெற்றோன்

மீண்டும் மீண்டும்
தங்கள்
தமிழுக்காக வாழ்ந்து
தமிழாலே உயர்ந்து
திருத்தமிழ்
தொண்டு செய்யவேண்டும்
என்பதே என் ஆவா

வாழ்க வளமுடன் ஐயா.
மனநிறைந்த வாழ்த்துக்கள்
அன்பன் மனோகரன் கிருட்ணன்

அறவேந்தன் said...

வணக்கம்.
நீங்கள் தமிழ்மண் நட்சத்திரமாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதில் எங்களுக்கும் பெரு மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள், ஐயா. உங்கள் தமிழ்ப்பணி மென்மேலும் தொடர வேண்டும்.

சுடர்கதிர் said...

வணக்கம். தக்கார் ஒருவர்க்குக் கிடைத்த தகைமைப்பாடு. சீரிய தமிழ்ப்பணி தொடரட்டும்..வாழ்த்து..

சரவணன்...

கிளியனூர் இஸ்மத் said...

வாழ்த்துக்கள் ஐயா

வலைப்பதிவாளர் said...

வணக்கம் ஐயா.

திருத்தமிழ் இணையவெளியில் ஒரு விண்மீன். என்றும் குன்றா மாசற்ற ஒளியால் சொலித்து ஓங்குக! வாழ்க!வளர்க!

சுப.நற்குணன்,மலேசியா. said...

@திருத்தமிழ் அன்பர் ஒற்றன்,

"மீ தி ஃபஸ்ட்" என்று மொக்கை போடாமல்,

ஆக்கமூட்டி மறுமொழியிட்ட தங்களுக்கு நனிநன்றி. மலேசிய வலைப்பதிவுகளை தரத்தோடு வளர்த்தெடுப்போம்.


@திருத்தமிழ் அன்பர் கோவி.கண்ணன்,

தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. மீண்டும் வருக.


@திருத்தமிழ் அன்பர் அ.நம்பி,

தங்கள் வாழ்த்துக்கு நன்றியுடையேன்.


@திருத்தமிழ் அன்பர் வெண்முகிழ்,

தங்கள் வாழ்த்தில் மகிழ்கிறேன். நெஞ்சார்ந்த நன்றி.


@திருத்தமிழ் அன்பர் திகழ்,

நலமா? நன்றி!


@திருத்தமிழ் அன்பர் பாசமலர்,

பணிவான நன்றி!


@திருத்தமிழ் அன்பர் அறிவன்,

அன்பார்ந்த நன்றி!

சுப.நற்குணன்,மலேசியா. said...

@திருத்தமிழ் அன்பர் விக்கினேசு,

அருகிருந்து
அன்புகாட்டி
ஆதரவுசெய்யும் உங்களுக்கு
அகமகிழ்ந்த நன்றி!


@முனைவர் ஐயா,

நனிநன்றி. தங்களை விரைவில் மலேசியத்தில் சந்திக்க ஆவலாய் உள்ளேன்.


@திருத்தமிழ் அன்பர் ஜோதிஜி,

நயமான வாழ்த்துக்கு நேயத்துடன் நன்றி!


@திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருட்ணன்,

உள்ளம் நெகிழ்ந்தேன்
உங்கள் வாழ்த்தில்
உள்ளன்போடு ஏந்துகிறேன்
உழுவலன்பு நன்றி..!!


@திருத்தமிழ் அன்பர் அறவேந்தன்,

மறத்தமிழனின் மனங்கனிந்த நன்றி.

சுப.நற்குணன்,மலேசியா. said...

@திருத்தமிழ் அன்பர் சரவணன்,

வாழ்த்துக்கு நனிநன்றி அன்பரே!


@திருத்தமிழ் அன்பர் கிளியனூர் இஸ்மத்,

சலாம் பாய். பொகோத் நன்றி.


@திருத்தமிழ் அன்பர் மு.மதிவாணன்,

நண்புடன் வாழ்த்திய நட்புக்கு நன்றி.

தமிழநம்பி said...

மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

வாழ்த்துகள் ஐயா.

Blog Widget by LinkWithin