இந்த நன்நாளை முன்னிட்டு மலேசியத் தமிழ் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் “ஆசிரியர் நாள் நல்வாழ்த்தினை” மிகுந்த அன்போடும் மரியாதையோடும் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நன்னாளில், எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்தை சிறந்த முறையில் வளர்த்தெடுக்கும் அரும்பணியை ஆசிரியர்கள் செம்மையாக செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
ஆசிரியர் நாளை முன்னிட்டு, மே திங்கள் ‘மயில்’ இதழில் அதன் ஆசிரியர் பெரியவர் ஐயா.ஆ.சோதிநாதன் அவர்கள் எழுதியிருக்கும் தலையங்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதனை பகிர்ந்துகொள்ள வேண்டி இங்கு பதிவிடுகிறேன். உள்ளத்தை நெகிழவைக்கும் வகையில் அமைந்திருக்கும் இதனை மலேசிய ஆசிரியர்களின் சிந்தனைக்கும் செயலுக்கும் முன்வைக்கிறேன்.
**குரு வாழ்க! குருவே துணை!**
ஓதலும் ஓதுவித்தலும் அந்தணர் தொழில் என்பர். அந்தணன் என்போன் அறவோன்; செந்தண்மை பூண்டொழுகுவோன். அவனே ஆசிரியனும் ஆவான்.
அரசனிமும் உயர்ந்தோன் ஆசிரியன். அரசனுக்கும் அறநெறி புகட்டி நல்வழி காட்டுபவன் ஆசிரியனே. குரு – ஆசிரியர் – அருள் இன்றேல் திருவருள் இல்லை என்பது நம் முன்னோர் மொழி. எழுத்தறிவித்தோனை – ஆசிரியனை, இறைவனாகவே கருதினர்.
இருளிலிருந்து ஒளியை நோக்கி அழைத்துச் செல்பவனும், அறியாமையிலிருந்து அறிவை நோக்கி வழிநடத்துபவனும், மரணத்திலிருந்து அமரத்துவத்தை – மரணமில்லாப் பெருவாழ்வை அளிப்பவனும் ஆசிரியனே என்பது வேதவாக்கு.
பிரம்மனாய், அரியாய், அரனாய் எல்லாம் தாமாகி அருளுபதேசம் புரியும் தென்னாடுடைய சிவனாய் = தட்சிணாமூர்த்தியாய் வீற்றிருப்பவரும் குருநாதரே!
ஆசிரியர் எப்பொழுதும் எரிகின்ற விளக்கைப் போன்றவர். அவர்தாம் பல விளக்குகளை – அறிவொளியை ஏற்றத்தக்கவர். கால நேரம் கருதாது உழைப்பவர். தம் மக்கள் – மாணவர் நலனையே முதன்மையாகக் கொள்பவர். ஊதியங் கருதி உழைகாது தம் மாணவர் உயர்வை எண்ணியே உழைபவர்; அவ்வுழைப்பில் இன்பம் காண்பவர்.
எப்பொழுது தாம் கற்பதை நிறுத்தினால் அப்பொழுதே நல்லாசிரியர் எனும் தம் நிலையிலிருந்து நழுவிவிடுவோம் என்றுணர்ந்து நாளும் கற்று மேன்மை பெறும் ஆசிரியப் பெருமக்களின் பெருந்தொண்டுக்குத் தலைவணங்குவோம்.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது (குறள் 101)
இத்தகு சீர்மையும் சிறப்பும் மிக்க ஆசிரியரைப் பொற்றுவதற்குரிய நாள் – ஆசிரியர் தினம் மே 16. அன்றாவது அவருக்கு நம் அன்பின் காணிக்கையாக ஒரு போங்கொத்து வழங்கலாமே.
வாழ்க ஆசிரியர் தொண்டு;
வளர்க அவர்தம் பெருமை!
அன்புடன்;
ஆ.சோதிநாதன்
- பி.கு:-ஐயா.ஆ.சோதிநாதன் அவர்கள் நிரம்ப தமிழ்ப்பற்றும் தமிழுக்காகப் பாடாற்றும் செயலூக்கமும் மிகுந்தவர்; அனைவராலும் மதிக்கப்படும் தமிழ்ப் பெருந்தகை; இல்லை என்னாது வாரி வழங்கி தமிழைப் புரந்துகாக்கும் வள்ளல் குணம்படைத்தவர்; ஓய்வெடுக்கும் அகவையிலும் ஓயாமல் தமிழ்ப்பணிகள் ஆற்றும் சான்றாளர். ஐயா அவர்களின் வாழ்மொழியில், ஆசிரியர் நாளை முன்னிட்டு வாழ்த்து பெறுவதை, ஆசிரியர்கள் அனனவரும் பெரும் பேறாகக் கருதவேண்டும்.
4 comments:
மலேசியாவில் மே 16 ல் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது என்பது எனக்கு புதிய தகவல் ...
முன்னாள் மற்றும் இந்நாள் மலாயா ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் பணிவின் வணக்கங்கள் ... அன்பின் வாழ்த்துக்கள் ...
நன்றி நற்குணன் அவர்களே!
ஆசிரியர்கள் அனைவருக்கும் `ஆசிரியர் நாள்' வாழ்த்துகள்.
- அ. நம்பி
http://nanavuhal.wordpress.com/2010/05/16/movies-television/
ஆசிரியர் பெரும் தகை அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கமும் வாழ்த்துக்களும். சுப நற்குணன் அவர்களே, உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். நேற்று எனது மனைவியின் பள்ளியிலும் ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாப்பட்டது.
திருத்தமிழில் இணைந்த்து குறித்து பெருமிதம் கொள்கிறேன்
Post a Comment