Monday, May 10, 2010

தமிழ் வலைப்பதிவர்கள் சிந்தனைக்கு..


முக்கிய அறிவிப்பு:- இது ‘தமிழ்’ வலைப்பதிவர்களுக்கு மட்டும்.

வலைப்பதிவு உலகம் இன்று சமுதாயக் கட்டமைப்பில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. உலகத் தமிழ் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் வலிமைமிக்க கருவிப்பொருளாக வலைப்பதிவுகள் செயல்பட முடியும். இந்த உண்மையை உணர்ந்து செயல்படுகின்ற வலைப்பதிவுகள் ஏராளம் உள்ளன.

வலைப்பதிவு எழுதுபவர்கள் சமுதாய நோக்கோடு செயல்படுவது நல்லது. எழுதுகின்ற பதிவு ஒவ்வொன்றும் வாழும் தலைமுறைக்கும் வருகின்ற பரம்பரைக்கும் பயனுள்ளதாக அமைதல் வேண்டும். நலிந்து கிடக்கும் தமிழ்ச் சமூகத்தைத் தூக்கி நிறுத்துவதாக இருக்கட்டும். எழுதும் பத்து பதிவுகளில் ஒன்றேனும் இன எழுச்சிக்குப் பயன்படுவதாக இருக்கட்டும். புதிய கலைகள், அறிவியல், தொழில்நுட்பங்களைப் பாங்கான முறையில் பரிமாற வேண்டும். பொழுதுபோக்கு கேளிக்கை தன்மைகளில் அளவுக்கதிகமான ஈடுபாடு காட்டுவதே கொள்கையாக இல்லாமல், அவ்வப்போது அறிவார்ந்த விடயங்களையும் விவாதிக்க வேண்டும்

அந்த வகையில், எழுத்துப் பணி செய்பவர்களுக்காகத் தமிழியக்கம் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் சொன்ன அருமை செய்தியை இங்கு பகிர்ந்துகொள்ள விழைகிறேன். ஏடெழுதுவார் என்னும் தலைப்பில் எழுதப்பட்ட இந்தக் கவிதை இன்று பதிவெழுதுவாருக்கும் பொருந்தும். ‘ஏடு’ என்று வரும் இடங்களில் எல்லாம் ‘பதிவு’ என மாற்றிப் படித்துக்கொள்ளவும்.

தமிழியக்கம் - ஏடெழுதுவார்!

பாரதிதாசன்

இலக்கணமும் இலக்கியமும்
தெரியாதான் ஏடெழுதல்
கேடு நல்கும்

தலைக்கணையில் நெருப்பிட்டுத்
தலைவைத்துத் துயில்வது போல்
பகைவனைப் போய்

நிலைப்புற்ற தமிழ் ஏட்டின்
ஆசிரிய னாக்குவது
நீங்க வேண்டும்.

கலைப்பண்பும் உயர்நினைப்பும்
உடையவரே ஏடெழுதும்
கணக்கா யர்கள்!

தன்னினத்தான் வேறினத்தான்
தன்பகைவன் தன்நண்பன்
எவனா னாலும்

அன்னவனின் அருஞ்செயலைப்

பாராட்டு வோன் செய்தி
அறிவிப் போனாம்!

சின்னபிழை ஏடெழுதும்
கணக்காயன் செய்திடினும்
திருநாட் டார்பால்

மன்னிவிடும் ஆதலினால்
ஏடெழுதும் வாழ்க்கையிலே
விழிப்பு வேண்டும்!

ஏற்றமுறச் செய்வதுவும்
மாற்றமுற வைப்பதுவும்
ஏடே யாகும்!

தோற்றுபுது நிலையுணர்ந்து
தோன்றாத வழிகூறித்
துணை புரிந்து

சேற்றிலுயர் தாமரைபோல்
திருநாட்டின் உளங்கவர்ந்து
தீந்த மிழ்த்தொண்

டாற்றுந்தாள் அங்கங்கே
அழகழகாய் அறிஞர்களால்
அமைத்தல் வேண்டும்!

தொண்டர்படை ஒன்றமைத்துத்
தமிழ் எதிர்ப்போர் தொடர்ந்தெழுதும்
ஏட்டை யெல்லாம்

கண்டறிந்த படி அவற்றை
மக்களெலாம் மறுக்கும் வணம்
கழற வேண்டும்

வண்டுதொடர் மலர்போலே
மக்கள் தொடர் ஏடுபல
தோன்றும் வண்ணம்

மண்டுதொகை திரட்டி, அதை
ஏடெழுத வல்லார்பால்
நல்க வேண்டும்!

ஆங்கிலத்துச் செய்தித்தாள்
அந்தமிழின் சிர்காக்க
எழுதல் வேண்டும்

தீங்கற்ற திரவிடநன்
மொழிகளிலே பலதாள்கள்
எழுதல் வேண்டும்.

ஓங்கிடநாம் உயர்முறையில்
நாடோறும் கிழமை தோறும்
திங்கள் தோறும்

மாங்காட்டுக் குயிலினம் போல்
பறந்திடவேண்டும் தமிழ்த்தாள்
வண்ணம் பாடி!


இதனையே நடத்திர வாரத்தின் இறுதிப் பதிவாகக் பகிர்ந்துகொள்கிறேன்.

மே திங்கள் 3-10 வரையில் நட்சத்திரப் பதிவராகத் தெரிவுசெய்து எனக்கு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்மணம் நிருவாகத்தினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்த ஒரு கிழமையில் என்னுடைய பதிவுகளைப் படித்தோருக்கும், பின்னூட்டம் பதிவு செய்தோருக்கும் நனிநன்றி.


5 comments:

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

நல்லா சொன்னீங்க .
ஆனால்.......?????.

நட்சத்திரப் பதிவரா இருந்ததிற்கு வாழ்த்துக்கள் .

முனைவர் இரா.குணசீலன் said...

நட்சத்திர வாரத்தில் தங்கள் கட்டுரைகள் வழக்கம் போலவே தமிழுணர்வை வளர்ப்பதாகவும், சிந்திக்கத் தூண்டுவதாகவும் அமைந்தன நண்பரே..

மகிழ்ச்சி..!

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் நண்டு@நொரண்டு,

ஆனால்...????

சொல்லியிருக்கலாமே நண்பரே!

வாழ்த்துக்கு மிக்க நன்றி.

சுப.நற்குணன்,மலேசியா. said...

@திருத்தமிழ் அன்பர் முனைவர் ஐயா,

வரவுக்கு மிக்க நன்றி.

Anonymous said...

புதியொதொர் உலகம் செய்வோம்.. வலைகளிலே ... வள்ளுவம்.கொம் நல்ல விடயங்களை எழுதும் ஒரு அருமையான நவ வலைப்பூ... என்பதில் ஐயமில்லை....

Blog Widget by LinkWithin