Monday, February 01, 2010

எசுபிஎம்12: உரிமை இழக்கலாமா? உயிர்த்தமிழ் இறக்கலாமா?


மலேசியக் கல்விச் சான்றிதழ் எனப்படும் எசுபிஎம் தேர்வில் மொத்தம் 12 பாடங்களை மாணவர்கள் எடுக்க முடியும். இத்தகவலை, 13-01-2010 திகதியிட்ட சுற்றறிக்கையின் வழியாக மலேசியக் கல்வி அமைச்சு அதிகாரப்படியாக அறிவித்துவிட்டது.

அந்தச் சுற்றறிக்கையைப் படிக்க சொடுக்கவும்:- http://www.moe.gov.my/upload/galeri_awam/pekeliling/1264067970.pdf

மேலும், மாணவர்கள் எழுதும் 12 பாடங்களின் முடிவும் புள்ளி விவரமும் ஒரே சான்றிதழில் குறிக்கப்படும் எனவும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, நமது மாணவர்கள் இனி எந்தவித அச்சமோ அல்லது ஐயமோ இல்லாமல், துணிந்து 12 பாடங்களை எடுக்கலாம் - எடுக்க வேண்டும். எசுபிஎம் தேர்வுக்குப் பதிவு செய்துகொள்ளும் இறுதிநாள் எதிர்வரும் 31-03-2010 ஆகும்.

இதற்கு, பெர்றோர்கள், இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்கள், பொது இயக்கங்கள், தமிழ் அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரும் மெனக்கெட்டு நமது மாணவர்களுக்கு உதவ வேண்டும் – வழிகாட்ட வேண்டும்.

நமது மாணவர்கள் 12 பாடங்களை எடுப்பது எப்பது அவர்களுடைய உரிமையாகும். ஆகவே, அதனைத் தடுக்கவோ தடை போடாவோ யாருக்கும் உரிமையில்லை.

குறிப்பாக, பள்ளி நிருவாகம் அல்லது பள்ளி முதல்வர்கள் பல்வேறு காரணங்களையும் சாக்குப் போக்குகளையும் சொல்லி நமது மாணவர்கள் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுப்பதை தடுத்து நிறுத்த முடியாது.

அப்படியே யாராவது; எந்தப் பள்ளியாவது; எந்த முதல்வராவது; செய்தால் அது சட்டப்படி குற்றமாகும்.

எனவே,

1) பள்ளியில் மாணவர் எண்ணிக்கை போதாது
2) பள்ளி நேரத்தில் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் கற்பிக்க முடியாது
3) பள்ளியில் முழுநேர தமிழ் ஆசிரியர் இல்லை
4) பள்ளியில் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுக்கும் பாடச் சிப்ப முறை (Pakej Sistem) இல்லை


என்பன போன்ற சாக்குப் போக்குகளை இனி எந்தப் பள்ளியும் சொல்ல முடியாது – சொல்லவும் கூடாது.

அப்படியே, நமது மாணவர்கள் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் தேர்வுக்கு எடுப்பதை தடுக்கின்ற பள்ளிகள் இருக்குமானால் உடனடியாக அதுகுறித்து புகார் செய்ய வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலகம், மாநிலக் கல்வித் திணைக்களம், மலேசியத் தேர்வு வாரியம், மலேசியக் கல்வி அமைச்சு ஆகிய தரப்பினரிடம் இந்தப் புகாரைச் செய்யலாம். ஓவ்வொரு மாநிலக் கல்வித் திணைக்களத்திலும் பணியாற்றும் தமிழ்மொழி உதவி இயக்குநர்களிடம் தாராளமாகப் புகார் கொடுக்கலாம்.

அதற்கு உதவியாக கீழே சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களின் முகவரிகளும் தொலைபேசி தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

1) மலேசியக் கல்வி அமைச்சு
KEMENTERIAN PELAJARAN MALAYSIA, Blok E8, Kompleks E,Pusat Pentadbiran Kerajaan Persekutuan,62604, PUTRAJAYA, MALAYSIATel : 603-8884 6000

2) மலேசியத் தேர்வு வாரியம் (Lembaga Peperiksaan Malaysia) சொடுக்கவும்

3) மாநிலக் கல்வித் திணைக்களம் (Jabatan Pelajaran Negeri) மாநில வாரியாகச் சொடுக்கவும்:-

அ.பெர்லிசு மாநிலம்
ஆ.கெடா மாநிலம்
இ.பினாங்கு மாநிலம்
ஈ.பேரா மாநிலம்
உ.சிலாங்கூர் மாநிலம்
ஊ.பகாங்கு மாநிலம்
எ.நெகிரி செம்பிலான் மாநிலம்
ஏ.மலாக்கா மாநிலம்
ஐ.சொகூர் மாநிலம்
ஒ.கிளந்தான் மாநிலம்
ஓ.திரங்கானு மாநிலம்
ஔ.கூட்டரசு பிரதேசம்

மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் நமக்காக இருக்கின்ற உரிமையை நாம் முழுமையாகப் பயன்கொள்ள வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் நமது உரிமைகளை மறந்து வாளாவிருக்கக் கூடாது.

அந்தவகையில், நமது உயிர்த்தமிழைக் காப்பதற்கு நாம் முனைப்பாக இருந்து செயல்பட வேண்டும். நம்மோடு இந்நாட்டில் வாழும் சீனர்கள் எதற்காகவும் எந்தச் சூழலிலும் தங்களின் தாய்மொழியை விட்டுக்கொடுக்காமல் கண்ணும் கருத்துமாக இருந்து காத்து நிற்பதற்கான மூலக்காரணத்தை நம்மவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நமது மாணவர்களின் நலனுக்காக – நமது தாய்மொழியின் நலனுக்காக – நமது சமுதாயத்தின் நன்மைக்காக – நமது எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காகத் தமிழ்மொழியைக் கற்போம்; தேர்வில் கட்டாயப் பாடமாகத் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுப்போம்.

சாவிலும் தமிழ்ப்படித்துச் சாக வேண்டும் – என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

என்ற உணர்வோடு ஒவ்வொரு தமிழ் மாணவரும் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் படிக்க வேண்டும்.

அவ்வாறு, மாணவர்கள் படிப்பதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் மற்றுள்ள பொது அமைப்புகளும் உறுதிபடுத்த வேண்டும். கூடவே, வேண்டிய உதவிகளையும் ஆதரவுகளையும் உடனடியாகச் செய்ய வேண்டும்.

2 comments:

Tamilvanan said...

நமது மாணவர்கள் 12 பாடங்களை எடுப்பது எப்பது அவர்களுடைய உரிமையாகும். ஆகவே, அதனைத் தடுக்கவோ தடை போடாவோ யாருக்கும் உரிமையில்லை.//

நிச்ச‌ய‌மாக‌ ந‌ம‌து மாண‌வ‌ர்க‌ள் எவ்வித‌ த‌ய‌க்க‌மும் இன்றி இனி வ‌ரும் எல்லா கால‌ங்க‌ளிலும் த‌மிழ் மொழியையும் இல‌க்கிய‌த்தையும் தேர்வுப் பாட‌ங்க‌ளாக‌ எடுத்திட‌ வேண்டும்.

//தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் தேர்வுக்கு எடுப்பதை தடுக்கின்ற பள்ளிகள் இருக்குமானால் உடனடியாக அதுகுறித்து புகார் செய்ய வேண்டும். //

இங்குதான் இடிக்கிற‌து.புகார் கொடுப்பின் எத்த‌கைய‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும்? உதார‌ண‌த்திற்கு ஒரு த‌லைமை ஆசிரிய‌ர் மீது புகார் கொடுத்த‌ பின் அவ‌ருக்கு வெறும் வாய் வ‌ழி க‌ண்டிப்புக்க‌ளும் அல்ல‌து அத‌ற்கு மேல் ஒரு எச்ச‌ரிக்கை க‌டித‌ம் ம‌ட்டும் கொடுக்கின்றார்க‌ள் என்று வைத்துக் கொள்வோம், அத‌ன் பிற‌கு புகார் கொடுத்த‌ மாண‌வ‌னின் நிலை என்ன‌வாகும்?
அல்ல‌து எத்த‌னை மாண‌வ‌ர்க‌ள் அல்ல‌து அவ‌ர்க‌ளின் பெற்றோர்க‌ள் ஒரு இடை நிலைப் ப‌ள்ளி த‌லைமை ஆசிரிய‌ர்க‌ள் மீது த‌மிழுக்காக‌ புகார் கொடுக்க‌ முனைவ‌ர்?
இக்கேள்வியை க‌ல்வி துணை அமைச்ச‌ரிட‌மும் மீட்புக் குழு ச‌ந்திப்பில் கேட்க‌ப் ப‌ட்ட‌து, அத‌ற்கு முறையான‌ ப‌தில் த‌ராம‌ல் முத‌லில் புகார் தெரிவியுங்க‌ள் பிற‌கு பார்ப்போம் என்று கூறிவிட்டார் மிகுந்த‌ ந‌ம்பிக்கையோடு க‌ல்வி துணை அமைச்ச‌ர்.

கேட்ப‌தை முழு ம‌ன‌தில்லாம‌ல் கொடுத்து விட்டு எந்த‌ இட‌த்தில் அணை போட‌லாம் என்று அறிந்த‌வ‌ர்க‌ள்.

பிற‌கு இத‌ற்கு தீர்வுதான் என்ன‌ என்று கேட்டால் அத‌ற்கும் எங்க‌ளிட‌ம் ப‌தில் உள்ள‌து.ஆனால் தேர்வுப் பாட‌ங்க‌ளை 12 என்று அறிவிக்காம‌ல் 10+2 என்று கூறும் அர‌சாங்க‌த்திட‌ம் எத்த‌கைய‌ தீர்வும் எடுப‌டாது என்று ம‌க்க‌ள் அறிவ‌ர்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,

//புகார் கொடுத்த‌ மாண‌வ‌னின் நிலை என்ன‌வாகும்? //

இதற்கெல்லாம் இனி நமது மாணவர்களும் சரி பெற்றோர்களும் சரி பயந்துகொண்டிருக்க தேவையில்லை.

நமது உரிமைக்காக - நலனுக்காக -எதிர்காலத்திற்காக சிலவற்றைத் துணிந்து செய்ய வேண்டும்.

அதை நோக்கி நமது மாணவர்களையும் பெற்றோர்களையும் வழிநடத்துவோம்.

இந்த வேலையை அந்தந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் செய்யலாம். நேரடியாக அவர்கள் தலையிடத் தேவையில்லை. பொது அமைப்புகளுக்குத் தகவல் கொடுத்து உதவலாம்.

நாடு முழுவதிலும் உள்ள நமது இயக்கங்கள் இதில் முனைந்து செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

//கேட்ப‌தை முழு ம‌ன‌தில்லாம‌ல் கொடுத்து விட்டு எந்த‌ இட‌த்தில் அணை போட‌லாம் என்று அறிந்த‌வ‌ர்க‌ள்.//

மிகச் சரி ஐயா.என்ன பண்ணுவது இவர்களைத்தான் நம்பி நம் மக்களும் ஆட்டு மந்தைகளாக ஓட்டுகளைப் போடுகின்றனர்.

நமது வாய்ப்பேச்சுக்கு அஞ்சாதவர்களையும் கைப்பேச்சின் (ஓட்டு) மூலம் எச்சரிக்க முடியுமே நம்மால்..!! நம்மவர்கள் சிந்தித்தால் நல்லது.

Blog Widget by LinkWithin