Sunday, February 14, 2010

கொங் சீ ப சாய் - இன்று சீனப் புத்தாண்டு


இன்று சீன நண்பர்களைக் காண நேர்ந்தால், “கொங் சீ ப சாய்” (சீனப் புத்தாண்டு நல்வாழ்த்து) என்று சொல்லலாம். அல்லது “வன் சீ ரூ யீ” (எல்லா வேலையும் நன்றாக நடக்கட்டும்) என்று சொல்லலாம். ஆம்! இன்று சீனப் புத்தாண்டு என்பதால், மேலே சொன்ன இரண்டு தொடர்கள் அதிகமாக உச்சரிக்கப்படும். அடுத்த 15 நாட்களுக்கு சீனர்களிடையே இதே பல்லவிதான் ஒலித்துக்கொண்டிருக்கும்.

சீனப் புத்தாண்டு பற்றி நாம் மேலோட்டமாக அறிந்திருக்கிறோம். சீனர்களைப் போலவே நாமும் கொங் சீ ப சாய்” என்று சொல்லுகிறோம். அவர்களைப் போலவே இப்போது நாமும் ‘அங் பாவ்’ (மொய்ப்பணம்) கொடுக்கிறோம், ஆனால், எத்தனை பேர் சீனப் புத்தாண்டின் மெய்ம்மத்தை (தத்துவம்) அறிந்து வைத்திருக்கிறோம்? அவர்களுடைய மரபுகளையும் நம்பிக்கைகளையும் தெரிந்து வைத்திருக்கிறோம்?

இதைப்பற்றி கொஞ்சம் அலசுவோம், வாருங்கள்.

மதிமான நாள்காட்டியின் (Lunar Calender) அடிப்படையில் சீனப் புத்தாண்டு முடிவுசெய்யப்படுகிறது. கமாரி என்று அழைக்கப்படும் இந்தச் சீன நாள்காட்டி 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த நாள்காட்டி முறையைச் சீனாவில் அறிமுகப்படுத்தியவர் சீ உவாங் தி (Shi Huang Ti) என்பவர்.


இந்த நாள்காட்டி 5 சுற்றுகள் அடங்கிய மொத்தம் 60 ஆண்டுகளைக் கொண்டது (5X12=60). ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு விலங்கின் பெயர் சுட்டப்பட்டுள்ளது. அவை எலி, மாடு, புலி, முயல், சீன நாகம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, கோழி, நாய், பன்றி ஆகியன. இந்தப் 12உம் மீண்டும் மீண்டும் சுற்றிவந்துகொண்டே இருக்கும். 5 முறை சுற்றியதும் ஒரு முழுமையை அடையும்.

சீனர்கள் ஏன் 12 விலங்குகளின் பெயர்களை ஆண்டின் பெயராகச் சூட்டினர்? அவர்களுடைய தொன்மத்தின்படி (புராணம்) புத்தர் பூமியைவிட்டுப் பிரியும் வேளையில் எல்லா விலங்குகளையும் சந்திக்க அழைத்தாராம். ஆனால், வந்தது என்னவோ இந்தப் 12 விலங்குகள்தானாம். அதனால், அந்த விலங்குகளுக்கு நன்றிக்கடன் பாராட்டும் வகையில் அவை வந்து சேர்ந்த நேரப்படி வரிசைப்படுத்தி ஒவ்வொரு ஆண்டுக்கும் பெயர் சூட்டப்பட்டதாக ஒரு தொன்மம் உண்டு.


புத்தாண்டு பிறப்பானது தங்களின் ஆற்றலைப் புதுப்பிக்கிறது; நம்பிக்கையை அதிகரிக்கிறது; புதிய எதிர்ப்பார்ப்புகளை உண்டாக்குகிறது என்று சீனர்கள் நம்புகிறார்கள். புத்தாண்டு வாழ்க்கையில் பல ஆக்கமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என எண்ணுகிறார்கள்.


புத்தாண்டு நாளில் சீனர்கள் தங்கள் வீடுகளைத் தூய்மைப்படுத்தி அலங்காரமும் செய்கின்றனர். சிவப்பு நிறத்திலான ‘தங்லுங்’ (காகிதத்தைக் கொண்டு அழகழகான வடிவத்தில் செய்யப்பட்டு உள்ளே மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்படும் ஒருவகை ஒளியணிப் பொருள்) வீட்டின் முன்னால் கட்டப்படும். வீட்டு நுழைவாயிலில் மங்கல வாழ்த்து பொறிக்கப்பட சிவப்புப் பதாகைகள் தொங்கவிடப்படும். இப்படிச் செய்வதால் வீட்டுக்குள் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.

அதேவேளையில், துடைப்பம், குப்பைத்தொட்டி, தூரிகை(Brush) போன்ற பொருள்களை எடுத்து மறைத்து வைத்துவிடுகிறார்கள். ஏனெனில், அன்றைய நாளில் வீடுகூட்டுதல், தூய்மைப்படுத்துதல் முதலான வேலைகளைத் தவிர்க்கிறார்கள். இப்படிச் செய்வதால் விட்டில் உள்ள நற்பேறு (Luck) விலகிப்போய்விடும் என்கிறார்கள்.

புத்தாண்டுக்கு முதல்நாள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி ‘பெரு விருந்து’ உண்பது முகவும் முக்கியமானதாகும். குடும்ப உறுப்பினர்கள் எங்கு இருந்தாலும் கண்டிப்பாக இந்தப் ‘பெரு விருந்தில்’ வந்து கலந்துகொள்கிறார்கள். இதன்வழியாக அவர்களுடைய குடும்ப உறவுகளை வலுப்படுத்திக்கொள்கிறார்கள்.

மறுநாள் புத்தாண்டு என்பதால் காலையிலேயே எழுந்து விடுகிறார்கள். இவ்வாறு அதிகாலையிலேயே எழுவதை ‘சௌ சூய்’ (Shou sui) என்கிறார்கள். சௌ சூயைக் கடைப்பிடிப்பதால் தங்கள் பெற்றோரின் ஆயுள் கூடும் என்பது சீனர்களின் நம்பிக்கை.

புத்தாண்டின் முதல் நாளில், எல்லாரும் கண்டிப்பாகப் புத்தாடை அணிய வேண்டும். சொர்க்கத்திலிருக்கும் கடவுளர்களைப் பூமிக்கு அழைத்து, அனைத்து நன்மைகளையும் வேண்டிப் பெறுவதற்காக வழிபாடு செய்கிறார்கள். இந்நாளில் அவர்கள் மரக்கறி (சைவ) உணவையே உண்கின்றனர். வீட்டில் உள்ள பெரியோர்களிடத்தில் மன்னிப்பும் ஆசியும் பெற்றுக்கொள்கின்றனர்.


‘அங் பாவ்’ (Ang Pau) அதாவது மொய்ப்பணம் போன்ற அன்பளிப்பு வழங்குவது சீனப் புத்தாண்டு நாளில் நிகழும் ஒரு வழக்கம். திருமணம் முடித்த பெரியவர்கள் கணவன் மனைவியாக சேர்ந்து சிவப்பு நிற உறைக்குள் பனத்தை வைத்துத் இன்னும் திருமணமாகாதவர்களுக்கு வழங்குவார்கள். அப்படி கொடுக்கப்படும் ‘அங் பாவ்’ பணத்தின் தொகை ஒற்றைப்படை எண்ணில் இருத்தல் கூடாது. அது கெடுதியைக் கொடுக்கும். கண்டிப்பாக இரட்டைப் படை எண்ணாக இருக்க வேண்டும். அதிலும் 4 எண் வரக்கூடாது. சீன மொழியில் நான்கு என்பதன் உச்சரிப்பு ‘சாவு’ என்பதுபோல ஒலிப்பதால் அதனைத் தவிர்க்கிறார்கள். 8 எண்ணில் வரும் தொகையைக் கொடுப்பது நல்ல பேறு (Good Luck) என்று கருதுகிறார்கள்.

பட்டாசு வெடிப்பது சீனப் புத்தாண்டின் குறிப்பிடத்தக்க அங்கமாகும். மனிதர்களைப் பிடித்து விழுங்கும் ‘நியன்’(Nian) என்ற ஓர் அரக்கனை விரட்டவே பட்டாசு வெடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், கெட்ட சத்திகளை விரட்டியடிக்கும் நோக்கத்திலேயே சீனர்கள் பெரிய அளவில் பட்டாசு கொளுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்காகவே, சீனாவில் மணிக்கணக்காக வெடிக்கும் சரவெடிகள் தயாரிக்கப்படுகின்றன. படாசு போலவே சீனநாக நடனமும் சிங்க நடனமும் புத்தாண்டின்போது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது. சீன ஆலயங்களிலும் வீடுகளிலும் இந்த நடனங்கள் படைக்கப்படுகின்றன.

புத்தாண்டின் இரண்டாம் நாளில், மருமகளாக வந்தவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று தங்களுடைய பெற்றோருக்கும் தங்கள் குடும்பத்தில் இறந்துபோன முன்னோர்களுக்கும் வணக்கம் செய்கின்றனர்.

அதேபோல் மூன்றாம், நான்காம் நாட்களில் மருமகன்களாக வந்தவர்கள் தங்கள் மாமனார் மாமியாருக்கு மரியாதை செய்கின்றனர்.

ஐந்தாம் நாள் மிகவும் குறிப்பிடத்தக்கது. அன்றுதான் செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் கடவுளை வணங்கும் நாள். அன்று யாரும் எவர் வீட்டுக்கும் செல்லமாட்டார்கள். அப்படி சென்றால் விட்டுக்காரர் விருந்தினர் ஆகிய இருவருக்கும் நல்லதல்ல. ஆகவே, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவரவர் வீட்டில் ‘செல்வக் கடவுளை’ வரவேற்பார்கள்.


ஏழாம் நாளில், சீனர்களில் கண்தோனிசு (Kantonis) பிரிவினர் ‘யீ சாங்’ (Yee Sang) எனும் விருந்தில் கலந்துகொள்கின்றனர். பல வண்ணங்களில் இருக்கும் கீரைவகைகளையும் மீன் இறைச்சியையும் சேர்த்து பெரிய தட்டில் வைப்பார்கள். அதைக் (சீனர்கள் உணவு உண்ணப் பயன்படுத்தும்) குச்சிகளைக்கொண்டு கிளறியும் மேலே உயரமாக தூக்கி மீண்டும் தட்டிலேயே கொட்டியும் மகிழ்வார்கள். இப்படி செய்வதால் அவர்களின் வாழ்நாளில் ஓர் ஆண்டு கூடிவிடும் என்கிறார்கள். மேலும், பணமும் செல்வமும் வந்து கொட்டும் என நம்புகிறார்கள்.

ஒன்பதாம் நாள், சீனர்களில் ஒக்கியன் (Hokkien) பிரிவினருக்கு மிகவும் முக்கியமமன நாளாகும். அதற்கு முதல்நாள் (அதாவது எட்டாம் நாள்) இரவு ‘செட் மாமன்னர்’ (King Jed) என்னும் கடவுளரை வணங்குகிறார்கள். இந்த வழிபாட்டின்போது வீட்டு வாசலில் கரும்பைக் கட்டவேண்டும் என்பது கட்டாயமாகும். காரணம், முந்தைய காலத்தில் இன்னொரு சீனப் பிரிவு மக்கள் தாக்குதல் நடத்தியபோது, ஓக்கியன் இன மக்களை பேரழிவிலிருந்து காப்பாற்றியது கரும்புதானாம்.

சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் பதினைந்தாம் நாளில் நிறைவு பெறும். இந்நாள் ‘சாப் கோ மே’ (Chap Goh Meh) எனப்படும். அன்று ‘தங்யுவன்’ (Tangyuan) என்ற ஒரு விருந்து நடக்கும். சாப் கோ மே ‘தங்லுங்’ விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இரவில் வீடுகளில் 'தங்லுங்' மெழுகு ஒளியணிகளைத் தொங்க விடுவார்கள். சிறுவர்கள் 'தங்லுங்' ஏந்தி ஊர்வலமாகச் செல்வார்கள். அதுமட்டுமல்லாமல் அன்றுதான் சீனர்களுக்கான அன்பர்கள் நாளும் (Valentine’s Day) கூட என்பது குறிப்பிடத்தக்கது.
"கொங் சீ ப சாய்"

No comments:

Blog Widget by LinkWithin