Wednesday, February 24, 2010

எசுபிஎம்.12: தமிழ் ஆசிரியர்களுக்கு விளக்கக் கூட்டம்


மலேசியக் கல்விச் சான்றிதழ் (எசு.பி.எம்) தேர்வுப் பாடங்கள் தொடர்பில் எழுந்த சிக்கல் என்ன ஆனது? தீர்ந்ததா? இல்லையா? 12 பாடங்களுக்கு உறுதிப்பாடு (அங்கிகாரம்) கிடைத்ததா?

இப்படிப்பட்ட கேள்விகள் இன்னமும் பலருடைய மண்டைக்கு மேலே வட்டமடித்துக்கொண்டு இருக்கின்றன. குறிப்பாக, இவ்வாண்டு தேர்வு எழுதவுள்ள மாணவர்களும் அவர்களுடைய பெற்றோருக்கும்தாம் பெரிய தலைவலி.

எது எப்படி இருப்பினும், மலேசியக் கல்வி அமைச்சு ஓர் உறுதியை எழுத்துப்படியாகத் தம்முடைய சுற்றறிக்கையின் மூலம் அறிவித்துவிட்டது. 13 சனவரி 2010 திகதியிட்ட அந்தச் சுற்றறிக்கை குறிப்பிடும் விவரங்கள் இவைதாம்:-

1.மாணவர்கள் மொத்தமாகப் 12 பாடங்களை எடுக்க முடியும்.

2.மொத்தம் 12 பாடங்களின் தேர்வு அடைவுநிலை சான்றிதழில் குறிக்கப்படும்.

மேலே உள்ள இரண்டு விவரங்கள் தெளிவாக இருக்கின்றன. ஆனால், பலருக்கு இன்னும் தெளிவில்லாத விவரங்கள் அல்லது தெளிவுபடுத்தப்படாத விவரங்கள் இரண்டு உள்ளன.

1.உயர்க்கல்விக் கழகங்களுக்கான விண்ணப்பத்திற்குத் தமிழ்மொழி, தமிழ் இலக்கியப் பாடத்தின் புள்ளிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா?

2.அரசாங்கக் கல்விக் கடனுதவி விண்ணப்பத்திற்கு இவ்விரு பாடத்தில் பெறப்படும் புள்ளிகள் ஏற்றுக்கொள்ளப்படுமா?

இந்த இரண்டு ஐயங்களுக்குச் சரியான பதிலை அல்லது விளக்கத்தைச் சொல்ல வேண்டிய பொறுப்பு இரண்டு தரப்புக்கு உள்ளது.

1.உயர்க்கல்வி அமைச்சு (Kementerian Pengajian Tinggi)

2.பொதுச் சேவைத் துறை (Jabatan Perkhidmatan Awam)

இதற்கிடையில், எசு.பி.எம் பாட விவகாரம் தொடர்பில் கோலாலம்பூரில் ஓர் விளக்கக்கூட்டம் நடைபெற இருக்கிறது. மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்மொழி, இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இந்த விளக்கக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். அதன் விவரம் பின்வருமாறு:-

நாள்:- 26-2-2010 (வெள்ளி)
நேரம்:- மதியம் 2.00 மணிக்கு
இடம்:- தோட்ட மாளிகை, பெட்டாலிங் செயா

மேல்விளக்கம் பெற:- திரு.ந.பச்சைபாலன் (012-6025450)

மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோ.டாக்டர்.சுப்பிரமணியம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளார்.

மேலே குறிப்பிட்டதுபோல, இன்னும் விடை கிடைக்காத இரண்டு வினாக்களுக்கு இந்தக் கூட்டத்தில் சரியான தெளிவு கிடைக்கும் எனப் பலரும் எதிர்ப்பார்க்கின்றனர். அதனை அறிவிக்கும் அதிகாரப்படியான பொறுப்பாளர் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அல்லர் எனினும், மக்களுக்குச் சரியான தெளிவை அவர் சொல்லுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் சங்கம் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருப்பதானது அனைவருக்கும் நம்பிக்கை தருவதாக உள்ளது. ஏனெனில், இந்த நாட்டில் எசு.பி.எம் தேர்வில் தமிழ் இலக்கியப் பாடம் இன்றளவும் இருக்கிறது என்றால், அதற்கு முழுமுதற் காரணமே மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் சங்கம்தான்.

இன்னும் சொல்லப்போனால், இப்படி ஒரு பெயரில் இயக்கமாகப் பதிவுபெறும் காலத்திற்கு முன்பாகவே நாடு முழுவதும் உள்ள இடநிலைப்பள்ளி நல்லாசிரியர்கள் சிலர் தன்னார்வ அடிப்படையில் ஆற்றியிருக்கும் பங்கு என்பது காலத்தால் வரலாறாகப் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

பல்வேறு சிக்கல்கள், அழுத்தங்கள், இடையூறுகள், தடைகளுக்கு இடையிலும் கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ் இலக்கியப் பாடத்தின் மீட்சிக்காகவும் எழுச்சிக்காவும் அயராது உழைத்தவர்கள் அவர்கள்.

பத்தாண்டுக்கு முன்னர் முன்னூறு மாணவர்கள் மட்டுமே தமிழ் இலக்கியத்தை தேர்வுக்கு எடுக்கும் பரிதாப நிலைமை சூழ்ந்திருந்தது. எசுபிஎம் தேர்விலிருந்து தமிழ் இலக்கியம் நீக்கப்படும் நெருக்கடியான காலக்கட்டம் அன்று இருந்தது.

ஆனால், அந்த நெருக்கடியிலிருந்து தமிழ் இலக்கியத்தைக் காப்பாற்றி, பின்னர் படிப்படியாகப் பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கையின் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் இலக்கியம் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்திய பெருமை இந்த நல்லாசிரியர்களையே சாரும். இங்குத் தரப்பட்டுள்ள பட்டியல் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்ததைக் காட்டுகிறது.

அத்தோடு நின்றுவிடாமல், நாடு முழுவதும் உள்ள இடைநிலைப் பள்ளிகளில் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் மாணவர்கள் தடையின்றி பயிவதற்குத் தேவையான பாடநூல்கள், மேற்கோள் நூல்கள், பயிற்சி நூல்கள், சிப்பங்கள், கையேடுகள், வழிகாட்டிகள், தேர்வுகள் எனப் பல ஏந்துகளை (வசதிகள்) உருவாக்கி தமிழ் இலக்கியக் கல்வியை நிலைப்படுத்திவர்களும் இவர்களே.

மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இந்த நல்லாசிரியர் பெருமக்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டியவர்கள். மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு இவர்களுடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

இப்படியெல்லாம் பாடாற்றியுள்ள அந்த நல்லாசிரியர்கள் இன்று மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் என்ற பெயரில் பதிவுபெற்ற இயக்கமாக உருவாகி முன்னெடுக்கும் இந்த அருமை கூட்ட நிகழ்ச்சி நற்பயன்மிக்கதாக அமையட்டும்.

எசுபிஎம் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் இரண்டையும் சூழ்ந்திருக்கும் கருமேகங்கள் இவர்களால் பட்டென அகலட்டும்.

தமிழும் இலக்கியமும் நமது மாணவர் மனங்களில் மீண்டும் இடம்பெற்று செழித்தோங்கட்டும்.

1 comment:

Tamilvanan said...

//மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோ.டாக்டர்.சுப்பிரமணியம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளார்.//

உயர்க்கல்வி அமைச்சு (Kementerian Pengajian Tinggi),பொதுச் சேவைத் துறை (Jabatan Perkhidmatan Awam) பிர‌திநிதித்து யாராவ‌து வ‌ருகிறார்க‌ளா?

ஏன் இன்னும் க‌ல்வி அமைச்சின் தெளிவான‌ அறிக்கை வெளியிட‌ப்ப‌ட‌வில்லை?

ம‌னித‌ வ‌ள‌ அமைச்சுக்கும் எஸ்.பி.எம் தேர்வுக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்?

தேர்வு எடுப்ப‌வ‌ர்க‌ள் ம‌லேசிய‌ர்க‌ளின் குழ‌ந்தைக‌ள்,உரிமைமிகு ம‌லேசிய‌ர்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு ம‌லேசிய‌க் க‌ல்வி அமைச்ச‌ல்ல‌வா ப‌தில‌ளிக்க‌ வேண்டும் /விள‌க்க‌ம் அளிக்க‌ வேண்டும்?

மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோ.டாக்டர்.சுப்பிரமணியம் க‌ல்வி அமைச்சின் முக‌வ‌ரா(ஏஜென்டா)?

//அதனை அறிவிக்கும் அதிகாரப்படியான பொறுப்பாளர் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அல்லர் எனினும், மக்களுக்குச் சரியான தெளிவை அவர் சொல்லுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.//

த‌னி ஒரு ம‌னித‌ன்(சாமிவேலு) நினைத்தால் அடுத்த‌ நிமிட‌மே ப‌த‌வி இல்லாம‌ல் போகும் அமைச்ச‌ர் மாண்புமிகு டத்தோ.டாக்டர்.சுப்பிரமணியம் வாக்குறுதியை / விள‌க்க‌த்தை க‌ல்வி அமைச்சு அங்கிக‌ரிக்கிற‌தா? க‌ல்விக் கொள்கையாக‌ ஏற்றுக் கொள்ள‌ப்ப‌டுமா? கால‌த்திற்கும் இது நிலைக்குமா?

ச‌ரியான‌ பொறுப்பில் இல்லாத‌வ‌ரிட‌ம் தெளிவான‌ ப‌திலை எதிர்பார்த்து இக்கூட்ட‌த்தில் க‌ல‌ந்து கொள்ளும் ஆசிரிய‌ர்களை எவ்வாறு அழைப்ப‌து?

தின‌ச‌ரி ப‌த்திரிக்கை வ‌ழி, க‌ல்வி அமைச்சின் அறிக்கை வ‌ழி த‌ர‌ப்ப‌ட்ட‌ விள‌க்க‌ங்க‌ளை புரியாத‌ நிலையிலா ந‌ம‌து ஆசிரிய‌ர்க‌ள் இருக்கின்ற‌ன‌ர்? அல்ல‌து இதுவ‌ரை தின‌ச‌ரி ப‌த்திரிக்கையிலும் க‌ல்வி அமைச்சின் அறிக்கையிலும் வெளியிட‌ப் படாத‌ த‌க‌வ‌லை மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோ.டாக்டர்.சுப்பிரமணியம் த‌ர‌ப்போகிறாரா?

Blog Widget by LinkWithin