இது மகாகவி பாரதியின் வாக்கு. பாரதி மட்டுமல்ல, நம்மில் பலருடைய எண்ணமும் அதுவேதான்.
ஏழைகளுக்கு எழுத்தறிவிப்பதே மிகச் சிறந்த பணி என்று பாரதியே சொல்லிவிட்டதால், இனி ஆலயங்களை எழுப்புவதை விட்டுவிட வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல. மாறாக, கோயில்களில் மட்டுமே நமது முழுக் கவனத்தையும் வைத்துக்கொண்டு இருக்காமல், கல்வி அறிவு புகட்டும் பணிகளிலும் முனைந்து ஈடுபட வேண்டும். அதிலும், நமது ஆலயங்களே இவ்வாறான கல்விப் பணிகளை மேற்கொண்டு செய்வது பன்மடங்கு சிறப்பல்லவா?
இதனைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய காலக்கட்டத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். அதற்கேற்றாற் போல, கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ மு.சரவணன் அண்மையில் இதுபற்றிய சிந்தனையைச் சமூகத்தை நோக்கி முன்வைத்திருக்கிறார்.
அந்தச் சிந்தனையை அனைவரோடும் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் அதிலிருந்து ஒரு பகுதியை இங்குத் திருத்தமிழில் பதிவிடுகின்றேன். -சுப.ந
ஆலயங்கள் ஆன்மிக வளர்ச்சியில் மட்டும் முனைப்புக் காட்டாமல், மாணவர்களின் அறிவு வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும்.
நாள் தவறாமல் பூசை செய்வதும், ஆண்டு தவறாமல் திருவிழாவினைக் கொண்டாடுவதும், குடமுழுக்கு செய்வதும் ஆலயங்களுக்கு வேண்டப்படுகின்ற திருப்பணிகள் என்றாலும், வளர்ந்து வரும் மாணவர்களிடையே அறிவு வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு படிப்பறிவை வளர்க்க வேண்டும். அதற்கு ஒவ்வோர் ஆலயத்திலும் நூலகம் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும்.
அறிவே இன்றைக்கு உலகை ஆள்கிறது. அறிவே இன்று உலகை விட்டு வேற்று உலகம் சென்று உலவும் படியான வாய்ப்பை மனிதனுக்குத் தந்துள்ளது. ஆகவே, அறிவை வளர்த்து வாழ்வை உயர்த்திக்கொள்வதற்கு கற்கத் தகுந்த நூல்களை மாணவர்கள் அதிகமாகக் கற்பதற்கான வாய்ப்பினை ஆலயங்கள் உருவாக்க வேண்டும்.
ஒரு மனிதனின் சிந்தனை வளர்ச்சிக்குத் துணையாக, தூண்டுகோலாக அமைந்திருப்பது நூல் கல்வியே ஆகும். கல்வியே இல்லாத ஒருவனுக்கு நுட்பமான நல்லபல நூல்களில் நுழைந்து பார்க்கும் அறிவு வாய்க்காது. அவன் அதிகமான நூல்களை ஆழமாக கற்கையில்தான் அறிவுபெற வாய்ப்புள்ளது.
இன்று இந்திய இளைஞர்களிடையே சமூகச் சீர்கேடுகள் தலைவிரித்தாடுவதை ஆலயங்கள் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் குறைத்திருக்க முடியும். ஆலயங்கள் வழிபாடுகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. சமூகச் சேவைகளில் நாட்டம் கொள்ளவில்லை. சமூகச் சீர்கேடுகளைத் துடைதொழிக்க முனைப்புக் காட்டவில்லை.
இன்று பொதுமக்கள் கூட்டங்களுக்குச் செல்வதில்லை. ஆலயங்களுக்கு மட்டுமே விரும்பிச் செல்கிறார்கள். ஆகவே, ஆலயங்கள் மாணவர்களின் அறிவு வளர்ச்சியில்; சமூகச் சேவையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். (மக்கள் ஓசை செய்தி 12.2.2010)
**************************************
மாண்புமிகு டத்தோ மு.சரவணன் பேச்சில் உண்மை இல்லாமல் இல்லை. நமது ஆலயங்கள் தொடர்பாக அவர் முன்வைத்துள்ள கருத்துகள் சிந்திக்க வேண்டியன மட்டுமல்ல; நமது ஆலயங்கள் உடனடியாக செய்யத்தக்கனவும் கூட.
ஊருக்கு ஊர், நகரத்திற்கு நகரம், தோட்டத்திற்குத் தோட்டம் என ஆலயங்கள் அமைத்து நமது மரபையும் நமது இருப்பையும் நாம் வெகு சிறப்பாகவே பறைசாற்றி வருகின்றோம்.
ஆனால், கல்வி – அறிவு – விழிப்புணர்வு – சமூகம் - தமிழ்ப்பள்ளி - தமிழ்க்கல்வி என்று வருகின்றபோது பல இடங்களில் நாம் வழுக்கி இருக்கிறோம்; நெடுந்தொலைவுக்கு விலகி இருக்கிறோம் என்பதை அனைவரும் மனம்திறந்து ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
அதற்கான சான்றுகள் சில இதோ உங்கள் பார்வைக்கு...
உயர்ந்து நிற்கும் கோயிலும் ஒட்டுக் குடித்தனப் பள்ளியும்
கல்விச் சாலைகளும் கோயில்களாக மாறிட வேண்டும்
இரும்புப் பெட்டிக்குள் தமிழ்ப்பள்ளியின் இருப்பிடமா?
கோயில்களுக்கு நம்மவர்கள் கொடுக்கும் மதிப்பு – மரியாதை – முதன்மை – முகன்மைத்தரம் அனைத்தும் கல்விக்குக் கொடுக்கப்படுகிறதா?
ஆலயங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் நமது மக்கள், அறிவு புகட்டும் தமிழ்ப்பள்ளிகளுக்கு அப்படி கொடுக்கிறார்களா?
வகை வகையாக – புதிது புதிதாக கோயில்களைக் கட்டி நமது சமயப் பாரம்பரியத்தைக் காக்கின்ற நாம், நமது இனவாழ்வின் உயிர்மூச்சாகத் திகழும் தமிழ்க்கல்வியைக் கவனிக்கின்றோமா?
நமது ஆலயங்களும் மக்களும் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய கல்விக் கடமையைச் சரியாகக் செய்கிறார்களா?
நமது இரண்டு கண்களில் ஒன்று சமயத்திற்கு நிகரானது என்றால், மற்றொன்று கல்விக்கு இணையானது அல்லவா? ஒரு கண்ணில் பாலை ஊற்றிவிட்டு, மறுகண்ணில் சுண்ணாம்பை வைப்பதுபோல நம்முடைய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றனவே! இது முறைதானா? சரிதானா?
நாடு விடுதலை அடைந்த அரை நூற்றாண்டு காலத்தை ஆலயங்களுக்காகச் செலவிட்டது போதும்...! நமது வாழ்வும் நமது குழந்தைகள் வாழ்வும் வளமாக அமைய, அடுத்த சில ஆண்டுகளையாவது கல்விக்காகச் செலவிடுவோம் வாருங்கள்.
அனைவரும் சிந்திப்போம்! சீர்பெறுவோம்!!
5 comments:
என்னுடைய எண்ணமும் அதுதான் ஐயா...
அரசாங்கமோ நமது தமிழ்ப்பள்ளிகள் என்றால் மாற்றந்தாய்ப்பிள்ளை போலவே நடத்துகிறது. நமது இந்திய செல்வந்தர்களோ (பலரும்) கோயில் என்றால் ஆயிரங்களை அள்ளிக் கொடுக்கிறார்கள்; தமிழ்ப்பள்ளிகள் என்றாலோ கிள்ளிக்கூடக் கொடுக்க யோசிக்கிறார்கள். செய்கின்ற பாவங்களைக் கழுவ அல்லது தங்கள் செல்வம் இன்னும் பெருக வேண்டி கோயில்களுக்கு நன்கொடை என்ற பெயரில் இறைவனேக்கே இலஞ்சம் கொடுக்கிறார்கள் போலும். என்னவென்று சொல்வது இவர்களின் அறியாமையை.
சிந்திப்போமா? பின்பு செயல்படுவோமா?
இவை இரண்டையும் செய்தால் நிச்சயம் சீர்பெறுவோம்...
அறிவு உள்ளவர்கள் செய்ய வேண்டிய காரிங்கள்
இவைகள்தான் அய்யா,உங்களின் இந்த புகைப்படங்களே
இதற்க்கு சாட்சி ,கோயில்கள் பெருகுவதால் என்னதான்
நன்மையோ இதுவரைக்கும் எனக்கு தெரியவில்லை
காலத்திற்க்கேற்ற நல்ல பதிவு.
//புதிது புதிதாக கோயில்களைக் கட்டி நமது சமயப் பாரம்பரியத்தைக் காக்கின்ற நாம்//
நாட்டில் உள்ள எத்தனை சதவீத கோயில்கள் உண்மையான சமயப் பாரம்பரியத்தையும் சமய அறிவையும் பாமர மக்களுக்கு போதிக்கின்றன?
வழிபாட்டுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து,புதிய புதிய சாங்கிய சடங்குகளை மக்கள் நடை முறை வாழ்வில் அறிமுகப் படுத்தி பணத்தை கொள்ளையடிக்கும் பூசாரிகள்,ஐயர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன கோயில்கள்.
//ஆலயங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் நமது மக்கள், அறிவு புகட்டும் தமிழ்ப்பள்ளிகளுக்கு அப்படி கொடுக்கிறார்களா?//
கொடுக்க மாட்டார்கள். நமது தமிழ்ப் பள்ளிகளின் நிலை வளர்ச்சி அடைந்தால் மாணவர்களின் தரம் உயரும், வருங்கால இந்திய மக்கள் நற்சிந்தனை உடையவர்களாகவும்,தெளிவு பெற்றவர்களாகவும் ஆகுவர்.தன் உரிமையை உணர்ந்தவர்களாக வாழ்வர்.ஆனால் நம் மக்களை வைத்து அரசியல் மற்றும் சமூகப் பயன் பெறும் வசதி படைத்த பணக்காரர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் நம் மக்கள் என்றுமே படிப்பறிவு குறைந்தவர்களாகவும் வாழ்வியல் சிந்தனை அற்றவர்களாகவும் இருப்பதே பிடிக்கும்.இதுதான் பல வருடமாய் அரசாங்கத்திலும் இயக்கங்களிலும் உள்ள பெரும் பாலான தலைவர்களின் கொள்கைகள்.
//கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ மு.சரவணன் அண்மையில் இதுபற்றிய சிந்தனையைச் சமூகத்தை நோக்கி முன்வைத்திருக்கிறார்.//
வழக்கம் போல் இது வெறும் மேடைப் பேச்சாக,ஊருக்கு மட்டும் உபதேசமாக இல்லாமல் முதலில் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் இதனை முழுமையாக செயல் படுத்துகின்றார்களா என்று பார்ப்போம்.
அருமை கட்டுரை, சமயத்தை கண்ணுக்கு நிகராக ஒப்பிட்டுள்ளீர்கள், கோவில்கள் சமயப்பணியினூடே கல்விப்பணியும் செய்யவேண்டும் என்ற கோரிக்கை மிகச்சிறந்த ஒன்று. அப்போதுதான் மக்களுக்கு தமிழின் தமிழனின், ச்ம்யத்தின் பாரம்பரியம் தெரியவரும். நாம் தொலைத்துவிட்ட கலாச்சார மகத்துவம் புரியும். தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊர் ஊராக விவேகானந்தா கேந்திரம் மூலம் தன்னார்வ தொண்டர்களால் குழந்தைகளுக்கும் கோவில்களில் சமய வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வியால் மறைக்கடிக்கப்படும் உண்மையான சமுதாய கலாச்சாரம் பாரம்பரியம், அறிவியல், ஒழுக்கம் அங்கே கற்றுக்கொடுக்கப்படுகிறது. நூறு சதவீதம் சிந்திக்கும் திறனுடன் ஒழுக்கமான குழந்தைகள் அங்கே உருவாக்கப்படுகிறார்கள்.
திரு தமிழ்வாணன் அவர்களின் கருத்து. அதே பழைய மொந்தையில் பழைய அதே கள். வசைபாடுவதை நிறுத்தி கருத்தை பதியலாம்
அன்புடன்
பாலாஜி
//திரு தமிழ்வாணன் அவர்களின் கருத்து. அதே பழைய மொந்தையில் பழைய அதே கள். வசைபாடுவதை நிறுத்தி கருத்தை பதியலாம்//
ஏன் இப்படியும் சொல்லலாம்" அதே பழைய பாடல் அதே பழைய பல்லவி" என்று,என்ன செய்வது, இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் நிலையும் தமிழர்களின் நிலையும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றம் காணாமல்,மலேசிய நாட்டின் வளர்ச்சியில் இந்திய சமூகத்தின் முன்னேற்றம், ஆற்றில் விழுந்த சருகு போல் போய்க் கொண்டிருகிறது.
இதோ எங்கள் சமூகத் தலைவர்களின் அரசியல்வாதிகளின் அக்கறை மிகு செயல்பாடுகளை கீழே கொடுக்கப்பட்ட பதிவில் காணுங்கள்.
http://freemalaysiatoday.com/tamil/?p=1512
// சரக்குப் பெட்டியில் தமிழ்ப்பள்ளி, வெட்கப்பட ஒன்றுமில்லை!
Mon, Mar 1, 2010
செய்திகள்
ஆறு. நாகப்பன்
மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகள் விவகாரம் தொடர்ந்து முடைநாற்றம் வீசுவதாகவே இருந்து வருகிறது.//
வசைபாடுவதை நிறுத்திடவா ?
Post a Comment