Wednesday, December 02, 2009

தமிழ் காப்பான் நண்பன்; துணை நிற்கட்டும் தமிழன்

மலேசியக் கல்விச் சான்றிதழ் எனும் எசுபிஎம் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற கல்வியமைச்சின் அறிவிப்பினால் தமிழ்மொழிக்கும் தமிழ் இலக்கியப் பாடத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருகிறது.

நீண்ட காலத்தில் தமிழ்மொழிக்கும் தமிழ்க்கல்விக்கும் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதால் தமிழ்சார்ந்த அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் ஓங்கி குரலெழுப்பி வருகின்றன; கடும் கண்டனத்தைப் புலப்படுத்தி வருகின்றன.

இந்தச் சூழலில், மலேசியவின் நாளிதழ்கள் மூன்றும் இதற்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவர்களுக்குத் நன்றிகூற மலேசிய இந்தியர்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.

தமிழை மீட்டெடுப்பதில் தமிழ் செய்தித்தாள்களுக்கு முக்கியப் பொறுப்பு இருப்பதைப் பற்றி நேற்று ஒரு பதிவிட்டிருந்தேன். இதுவும் அது தொடர்பான பதிவுதான். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ‘மலேசிய நண்பன்’ நாளேடு பற்றிய செய்தி இது.

‘மலேசிய நண்பன்’ நாளேடு தொடர்ந்தாற்போல ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த மொழிப்போராட்டச் செய்திகளை விரிவாக வெளியிட்டு வருகின்றது. அதுவும் ஒவ்வொரு நாளும் முதற்பக்க செய்தியாகப் போடுகிறது.

தொடர்ந்து ஒரே செய்தியைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டால், வாசகர்கள் வெறுப்படைவார்கள் என்ற வணிக நியதியை புறந்தள்ளிவிட்டு, தமிழ்ச் சமுதாயத்தின் நலன் கருதி, இந்தச் சிக்கல் பற்றி செய்திகள் போட்டு வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு நண்பன் நாளேடு முழுமூச்சுடன் எடுத்துக்கொண்டிருக்கும் முனைப்பு பாராட்டுக்கு உரியது.

தமிழ்மொழியையும் தமிழ் இலக்கியப் பாடத்தையும் மீட்கும் தன்னுடைய முயற்சியின் மேலும் ஒரு நடவடிக்கையாக இன்று 2.12.2009 ‘பிரதமருக்கு இந்தியர்கள் கோரிகை’ என்ற படிவத்தை வெளியிட்டிருக்கிறது நண்பன் நாளேடு.

மலேசியப் பிரதமர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்களின் பார்வைக்கு இந்தச் சிக்கலைக் கொண்டு சென்று நல்லதொரு தீர்வைக் காணும் நோக்கத்தில் இந்தப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது.

எசுபிஎம் தேர்வில் தமிழ், தமிழ் இலக்கியம் ஆகிய இரண்டு பாடங்களையும் எடுப்பதற்குரிய வகையில் அந்தப் பாட எண்ணிக்கையை 10லிருந்து 12ஆக அதிகரித்து உதவுமாறு பிரதமரையும், கல்வியமைச்சராகிய துணைப்பிரதமரையும் கேட்டுக்கொள்கிறது இந்தக் கோரிக்கைப் படிவம்.

மேலும், பிரதமர் வகுத்துள்ள ‘ஒரே மலேசியா’ கோட்பாட்டின் கீழ் அனைவரின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற கருத்தையும் இது மேற்கோள் காட்டியுள்ளது.

இதில், பெயர், முகவரி. அடையாள அட்டை எண் முதலான விவரங்களை எழுதி மலேசிய நண்பன் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இன்றுதொடங்கி இன்னும் 10 நாட்களுக்கு இந்தப் படிவம் மலேசிய நண்பனில் வெளிவரும்.

ஆகவே, மலேசிய நண்பன் வாசகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மலேசியத் இந்தியர்கள் அனைவரும் உடனடியாக இந்தக் கோரிகைப் படிவத்தை நிறைவு செய்து அனுப்ப வேண்டும். இதன் மூலம் நமது தாய்மொழியாம் தமிழை இந்த நெருக்கடியிலிருந்து மீட்க வேண்டும்; தமிழ் இலக்கியத்தை காக்க வேண்டும்.

முக்கிய அறிவிப்பு:- இது மலேசிய நண்பனுக்காகச் செய்யப்படும் விளம்பரம் அல்ல. மலேசியாவில் தமிழ்மொழியின் வாழ்வுரிமைக்காக முன்வைக்கப்படும் வேண்டுகை.

10 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இந்த 10 பாடத்திட்டம் என்றால் என்ன, மலேசியக் கல்வி முறை பற்றி சற்று விளக்க முடியுமா?

நன்றி.

subra said...

அய்யா உங்களின் தமிழ் தொண்டு ,எங்களுக்கு பெருமையாகவும் ஊக்கம்
அளிப்பதாகவும் இருக்கிறது அய்யா.உங்களின் போராட்டங்களுக்கு
எங்களின் ஆதரவும் அன்பும் என்றும் தோல் கொடுக்கும் அய்யா ,ஊர் கூடி
தேர் இழுப்போம் ,அதில் வென்று காட்டுவோம் அய்யா ,வாழ்த்துக்கள் அய்யா .
சி.நா.மணியன்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் ரவிசங்கர்,

உங்களைத் திருத்தமிழில் காண்பதில் மகிழ்ச்சி.

//இந்த 10 பாடத்திட்டம் என்றால் என்ன, மலேசியக் கல்வி முறை பற்றி சற்று விளக்க முடியுமா?//

இதுபற்றி விரிவாக எழுதியுள்ளேன். காண்க:-

http://thirutamil.blogspot.com/2009/11/blog-post_28.html

காலங்காலமாக தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் படித்துவந்த நமது மாணவர்களின் கல்விக் கண்கள் இப்போது பிடுங்கி எடுக்கப்படும் நெருக்கடியில் இங்கு மாட்டித் தவிக்கிறோம்; போராடுகிறோம்.

தமிழனுக்கும் தமிழுக்கும் விழுகின்ற ஒவ்வொரு அடியும் மரண அடியாகத்தான் இருக்கிறது.

என்ன செய்வது? போராடுவது தமிழன் தலையில் எழுத்தப்பட்ட எழுத்து போலும்.

போராடுவோம்..!

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் சி.நா.மணியம்,

உங்கள் தொடர் வருகை மகிழ்வையும் ஊக்கத்தையும் கொடுக்கிறது.

//ஊர் கூடி தேர் இழுப்போம், அதில் வென்று காட்டுவோம் அய்யா//

இந்த மொழிப் போராட்டத்தில் எல்லாரும் வேறுபாடு இன்றி தமிழுக்காகக் குரல் கொடுப்பது நல்ல அறிகுறியாக இருக்கிறது.

வெற்றி கிட்டும்.. நம்புங்கள் தமிழனால் முடிந்தால் தமிழால் முடியும்!

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா.

கே.பாலமுருகன் said...

http://bala-balamurugan.blogspot.com/2009/12/blog-post_03.html
சிறுபான்மை இனத்தின் தாய்மொழிக்கு - மொழி பேரழிவு

ஏதோ ஒரு தீவில் குறிப்பிட்ட ஒரு பழங்குடியினரின் மொழியைப் பேசி வாழும் 4 பேர் மட்டும் இருப்பதாகவும் அவர்களுக்குப் பிறகு அந்த மொழி காணாமல் போய்விடும் என்றும் ஆங்கில பத்திரிக்கையில் வாசித்ததாக ஞாபகம். இப்படி வரலாற்றில் காணாமல் போன மொழிகள் ஏராளம்.

ஒரு மிகப் பெரிய அரசியல் தவறினால் மலேசியாவில் தமிழ் மொழி பயன்பாட்டிலும் தேசிய அளவிலும் புறக்கணிக்கப்படுவதன் விளைவு, அடுத்து அந்த மொழிக்கு உருவாகப் போகும் முதல் சரிவென மதிப்பிடக்கூடும்.

ஒட்டு மொத்தமாக விவாத ஆற்றலும் (உணர்ச்சிவசப்படாமல்) அதிகாரத்தின் முன் மண்டியிடாமல் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்துப் போராடுவோம். தமிழ் தொன்றுக்கு வாழ்த்துகள்.

குறிப்பு: மலேசிய நண்பன் பத்திரிக்கை குறித்து எனக்கு அதிருப்தி இருந்த போதும், அவர்களின் இந்தப் போராட்டம் பாராட்டுதலுக்குரியது.

மனோவியம் said...

உங்கள் தொண்டு நல்ல தொண்டு ஐயா...தமிழ் நாளிதழ்களின் சேவை போற்றுக் தக்கவை.

மனோவியம் said...

இதோ எனது கவிதை வரிகள் படித்துதான் பாருங்களேன்........

சோம்பல்முறித்தது போதும்மடா தமிழா ! உன்
சேதி என்ன வேன்று கூறு...
சாதிவெறி போதும்மடா - தமிழ்ச்
சாதி நீ என்று கூறு.....
கூடிச் சேர்ந்திட வேண்டும் - தமிழர்
கூற்றவன் கூட தமிழைப் பழித்தால்
கூடி உதைத்து பந்தாடிட வேண்டும்மடா.....

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் கே.பாலமுருகன்,

உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி.

//ஒரு மிகப் பெரிய அரசியல் தவறினால் மலேசியாவில் தமிழ் மொழி பயன்பாட்டிலும் தேசிய அளவிலும் புறக்கணிக்கப்படுவதன் விளைவு, அடுத்து அந்த மொழிக்கு உருவாகப் போகும் முதல் சரிவென மதிப்பிடக்கூடும்.//

மொழியின் சிறுசிறு சரிவுகள் பின்னாளில் பெரும் கேடுகளை விளைவிக்கும் என்பது வரலாற்றில் நாம் கண்டிருக்கும் உண்மை.

இதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு:-

தமிழிலிருந்து பிரிந்து சென்ற தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் இன்று தமிழுக்கு எதிராகவே எ.கே 47 தாங்கி வருகின்றன.

தமிழரின் உண்மையான விடுதலை தமிழின் உயிர்ப்பிலும் அதன் தூய்மையிலுமே உள்ளது.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருஷ்ணன்,

உங்கள் மறுமொழி சிக்கலின்றி வருகிறது. முன்பு இருந்த 'அடையாளம் தெரியாத' தடை நீங்கிவிட்டது என நினைக்கிறேன்.

அந்த இக்கட்டில் உங்கள் ஆறுதலில் தேறுதல் அடைந்தேன். நன்றி.

//தமிழர் கூற்றவன் கூட தமிழைப் பழித்தால் கூடி உதைத்து பந்தாடிட வேண்டும்மடா.....//

இந்தத் துணிவு எல்லாருக்கும் இருந்தால் நல்லது. இது வன்முறை அன்று.. தற்காப்பு.

coconut said...

Mr Najib,no tamil no vote for u.thats very much easy.discard anyone who discards tamil.bye bye najib.

Blog Widget by LinkWithin