Monday, February 02, 2009

ஈழத்தமிழர்:-எல்லாரும் உணரவேண்டிய உண்மை


1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து சிங்கள அரசு தமிழின ஒடுக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது. இன்று அது தீவிலிருந்து தமிழினத்தை முழுமையாக அழித்து ஒழித்தல் என்ற நிலையை அடைந்துவிட்டது.

இனிமேல் இலங்கையில் தமிழினம் பாதுகாக்கப் படுவதற்கான ஒரே வழி தமிழரின் பாரம்பரிய நிலப்பகுதிகளை தனிநாடாகப் பிரித்து வழங்க வேண்டும் என்பது தான். இதற்கு உலக நாடுகள் ஐ.நா சபை மூலம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
சிங்கள அரசின் கீழ் தமிழருக்கு அதிகாரப் பகிர்வு, தன்னாட்சி போன்ற வேறெந்தத் தீர்வும் தமிழர் மனதில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தாது. தமிழரை தன் நாட்டின் சிறுபான்மையர் எனக் கருதாமல் சிங்கள அரசு தமிழர் மேல் தொடுத்த இன ஒழிப்புப் போர், இந்த உணர்வைத் தமிழர் மனங்களில் ஆழப் பதிந்து விட்டது.

இதனால் உலக மக்களும், அரசுகளும், ஐ.நா சபையும் இந்த உண்மையைப் புரிந்து கொண்டு தமிழரின் பாரம்பரியப் பகுதிகளை தனிநாடாக அறிவிக்க உதவ வேண்டும்.

பிரபாகரன், விடுதலைப்புலிகள், இந்தியப் பிரதமர் ராசீவ் காந்தி கொலை போன்ற நிகழ்வுகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இசுலாமிய பயங்கரவாதம் உலகை அச்சுறுத்தும் வேளையில் இலங்கைத் தமிழரையும் பயங்கரவாதிகளாகப் பரப்புரை செய்து பயங்கரவாத ஒழிப்பு என்ற பேரில் தமிழின ஒழிப்பை இலங்கை அரசு முன்னெடுத்துள்ளது. இந்தத் தமிழின ஒழிப்புப் போரை இந்தியா, சீனா போன்ற சில நாடுகள் நேரடியாகவும் மற்றைய உலகநாடுகள் மறைமுகமாவும் ஆதரிப்பது மிகுந்த பரிதாபத்திற்குரிய நிலையாகும்.

இந்த நிலை இனியும் நீடிக்கக் கூடாது. உண்மையை எல்லோரும் உணர்ந்து நடக்க வேண்டும்.

இலங்கையில் தமிழர் சுதந்திரமாக வாழ ஒரு தனி நாட்டை ஏற்படுத்திவிட்டால், புலிகள் பயங்கரவாதம் என்பது அர்த்தமற்றதாகிவிடும். ஏனெனில் புலிகள் எந்தப் பயங்கரவாதத் செயலையும் உலகின் எந்தப் பகுதியிலும் செய்ததில்லை எதிர்காலத்தில் செய்யப்போவதற்கான அறிகுறிகளும் இல்லை. ஏனெனில் புலிகளுக்கு இலங்கையில் வாழும் தமிழரின் விடுதலை தவிர்ந்த வேறெந்தக் குறிக்கோளும் கிடையாது.

இலங்கையில் தமிழருக்கு என ஒரு தாயகம் உண்டாகாவிட்டால் சிங்கள அரசின் தமிழின ஒடுக்கு முறை நீடித்துக் கொண்டே இருக்கும், அதை எதிர்த்து தமிழினம் போராடிக் கொண்டே இருக்கும். இதனால் இலங்கை நிரந்தரமாக அமைதி இல்லாத ஒரு நாடாகவே இருந்து கொண்டிருக்கும்.

இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் அமைதி என்பது இரண்டு வழிகளில் மட்டுமே சாத்தியம்.

1. இலங்கையில் தமிழர் என்ற ஓர் இனமே இல்லாமல் அழிக்கப்பட வேண்டும். அல்லது

2. தமிழர் பகுதி தனிநாடாகத் தமிழருக்கு வழங்கப்பட வேண்டும்.

இவற்றில் முதலாவது தீர்வை அடைவதற்கு சிங்கள அரசு போராடுகிறது; இரண்டாவது தீர்வை அடைவதற்கு விடுதலைப் புலிகள் போராடுகின்றனர்.

எது நீதி என உலக மக்களும் அரசுகளும் கூறவேண்டிய நேரம் வந்துவிட்டது.
உங்கள் தீர்ப்பு என்ன? நீதிமான்களே ஒரு இனம் பலநூறு ஆண்டுகளாக வாழ்ந்த பாரம்பரிய தாயகத்திலே கொன்றொழிக்கப்படுவது நியாயம் என்கிறீர்களா? எப்போது இலங்கை அரசின் இனப்படுகொலைப் போரை நிறுத்தச் சொல்லப் போகிறீர்கள்?.

மேலே கூறிய இரண்டு தீர்வுகளன்றி இன்னொரு நியாயமான தீர்வை ஏற்படுத்தலாம் என்று யாரும் மனப்பால் குடிக்காதீர்கள். ஏனென்றால் இலங்கை அரசின் அரசியலமைப்புச் சட்டம் என்றுமே சிறுபான்மை இனத்தவரின் சம உரிமையை ஏற்றுக் கொண்டு இயற்றப்படவில்லை. தமிழருக்கு என வழங்கப்பட்ட ஒரு சில சட்ட பூர்வமான உரிமைகளையும் கூடச் சிங்கள அரசு இதுவரை நியாயமாக வழங்கவும் இல்லை; நீதியாக நடக்கவும் இல்லை. ஏனென்றால், இது சிங்கள மக்கள் மனங்களில் ஏற்படுத்தப்பட்ட நீண்டகால அரசியல் உணர்வினால் (political consciousnes of sinhaleese) ஏற்பட்ட முரண்பாடாகும்.

இதைப் புரிந்து கொள்ளாமல் இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ராசீவ் - செயவர்த்தனே ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறிய போது இந்திய அரசினால் அதைத் தடுக்க முடியவில்லை. இதுபோல் தன்னிச்சையாக எந்த ஒப்பந்தத்தையும் மீறும் போக்கு சிங்கள அரசியல் உணர்வின் அடிப்படையில் இருந்து பிறக்கும் ஒரு செயலாகும்.

இந்த மனப் போக்கை மாற்ற முடியாது என்பதால் சிங்கள அரசிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற ஒரே வழி தனிநாடாகத் தமிழர் பகுதியை விடுவிப்பது தான்.

அவ்வாறு இலங்கை தமிழர் தனிநாடு ஒன்றைப் பெறுவதால் தென்னிந்தியாவில் வாழும் இந்தியத் தமிழரும் பிரிவினை கோருவர் என்பது இந்தியர் சிலரின் தவறான கருத்தாகும். ஏனென்றால் இந்தியத் தமிழரின் நிலை பிரிவினை கோருவதற்கான எந்தவொரு காரணத்தையும் கொண்டிருக்கவில்லை. மாறாக இலங்கைத் தமிழரின் அழிவும் அதற்கு இந்திய அரசு துணை போகிறது என்ற நிலையும் தொடருமானால் கண்டிப்பாகத் தென்னிந்தியத் தமிழர் மனங்களில் தம் இனத்தை அழிக்க இந்திய அரசு துணை போயிற்றே என்ற காரணத்தால் வெறுப்பை ஏற்படுத்தும். தமது இரத்தமான சொந்தச் சகோதரரைக் கொல்ல நமது அரசே துணை போகிறதே என்று நினைக்குங்கால் ஒரு வேளை இந்தப் பிரிவினை உணர்வு தென்னிந்தியத் தமிழர் மனங்களில் உண்டாகலாம்.

ஆதலால் இந்தியாவும், உலக நாடுகளும் தங்கள் நிலைப்பாட்டின் மெய்த் தன்மையை உணர்ந்து ஈழத் தமிழரைக் காக்கும் வண்ணம் நீதியான தீர்வாக அவர்களுக்கு ஒரு தனி நாட்டை இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஏற்படுத்தித்தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

மின்னஞ்சல் வழியாக:- சி.கபிலன்

6 comments:

பிரான்சிஸ் சைமன் said...

உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை இது.

பிரான்சிஸ் சைமன் said...

உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை இது.

Anonymous said...

தமிழனாகப் பிறந்தாள் இந்த உணர்வு கண்டிப்பாக அனைவரிடமும் இருக்க வேண்டும். கண்டிப்பாக இதற்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும். இல்லையேல் வீரதமிழன் முத்துகுமார்போல் ஒவ்வொரு தமிழனும் மனதுக்குல் வேதனைப் படத்தான் வேண்டும். போராடுவோம், இறுதிவரை அகிம்சை வழியில் போராடுவோம்.

தமிழநம்பி said...

உண்மை நிலையைச்சரியாக்கக் கூறும் பாராட்டத் தக்க பதிவு!

தொடர்புடைய நாடுகளும் அனைத்துலகமும் புரிந்து கொள்ள வேண்டும்.

Anonymous said...

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.
மீண்டும் தர்மமே வெல்லும்...

உலகின் முதல் மூத்த நாகரீகத்துக்கு சொந்தக்காரர்கள், அமைதியையும், ஆன்மீகத்தையும் உலகிற்க்கு தானமாக தந்த தனிப்பெருங்குடி தமிழ்க்குடி. பெருமைபட்டுக்கொள்ளும் வேளையிலே, சத்தமின்றி ஒரு இனப்படுகொலை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதற்க்கு இந்திய அரசாங்கமும் உடந்தை. எப்படி ஆபிரகாம நிறுவனம் அவர்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட பூர்வீக மக்களின் வரலாற்றை சிதைத்து அல்லது அவர்களை கொன்று குவித்தாவது தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்துகிறார்களோ அதற்க்கு சற்றும் இளைக்காமல் பெளத்த ஆதிக்கத்தை நிலைநிறுத்த ஈழத்தின் பூர்வீக குடிகளாகிய இந்து தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறார்கள். இதற்க்கு இந்திய அரசாங்கமும் உடந்தையாக ராணுவம் மற்றும் தொழில் நுட்பங்களை தந்துதவுகிறது. ஏன்? இந்திய தமிழன் தான் தமிழன் என்பதையே மறந்துவிட்டான், அவனது எழுத்தும் பேச்சும், நடையும், பாவனையும், கொண்டாடும் திருவிழாக்களும் வடக்கையும், மேற்க்கத்திய கலாச்சாரத்திற்க்கு போய்விட்டது. இன்னும் கொஞ்ச காலத்தில் உலகின் மூத்த மொழியாம், எல்லா இந்திய மொழிக்கும் தாயாகிய‌ தமிழ்மொழி செத்து வழக்கொழிந்து விடும், ஆனால் மிச்சம் கொஞ்சம் இலங்கையில் மிஞ்சிவிடும் என்பதால் இன அழிப்பை முன்னின்று இந்திய அரசு நடத்துகிறது. தமிழ் அழிந்தால் தானே வட மொழிதான் மூத்த மொழி என்பதை நிரூபிக்க முடியும். இது ஒரு இன படுகொலை மட்டுமல்ல மொழிப்படுகொலையும் ஆகும்.

முடிவு தமிழ் ஈழம் ஒன்றுதான்.
இது தர்மத்திற்க்கும் அதர்மத்திற்க்கும் நடக்கும் போர். இங்கு தர்மம் வெல்ல வேண்டும். தர்மத்தை நிலை நாட்ட பிரபாகரனின் கையிலிருக்கும் வில்லினால்(துப்பாக்கியால்) மட்டுமே முடியும். அவனே விஜயன் (கலியுக)....
பாலாஜி....

Anonymous said...

"ஆதலால் இந்தியாவும், உலக நாடுகளும் தங்கள் நிலைப்பாட்டின் மெய்த் தன்மையை உணர்ந்து ஈழத் தமிழரைக் காக்கும் வண்ணம் நீதியான தீர்வாக அவர்களுக்கு ஒரு தனி நாட்டை இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஏற்படுத்தித்தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். "

எந்த கிருகத்தில் இருக்கின்றீர்கள். இந்த வேண்டுகோள் 1980 முன்னாலேயே வைக்கப் பட்டு, இந்த 30 வருடங்களில் எவ்வளவோ சம்பவங்கள் நிகழ்ந்திவிட்டன. நீங்கள் 30 வருட சரித்திரத்தை, கண்மூடி நடக்கவில்லை போல பாவனை செய்கிறீர்கள். இந்த 30 வருடஙளில் லட்சக்கணக்கான தமிழர்கள் நாடு விட்டு சென்றனர், அல்லது ஸ்ரீலங்காவிலேயே அகதிகளாஃப இருக்கின்றனர். 1 லட்சம் பேர் ஈழப் போரால் இறந்தனர். ஈழப் பகுதிகளில் தமிழர்களின் ஜனத்தொகை மிகவும் குறைந்து, சீக்கிரத்திலேயே சிறுபான்மையாகிவிடும். அது முதலுக்கே மோசம் செய்து விடும் நிலையில் உள்ளது.

அதனால், முதல் நடவடிக்கை போரை நிருத்தி, சமாதானம் செய்து கொள்ளவேண்டும், அதனால்தான் இப்போது புலிகளை தவிற மற்ற தமிழ் அமைப்புகள் ஸ்ரீலங்க அரசை ஆதரவு செய்து, புலிகளை எதிற்கின்றனர்.

தமிழர்களிடையே எப்போதுதான் புத்தி வரும்? தான் ஒன்றும் செய்ய முடியாத நிலையில், ஈழத்தமிழர்களை அழிவுப் பாதையில் ஊக்குவிக்கிறார்கள்.

இந்திய் அரசாங்கத்திற்க்கு தமிழ்புலிகள் எதிர்கள்; இந்திய ராணுவத்துடன் போரிட்டவர்கள், மேலும் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள். இந்திய அரசாங்கதின் முதல் நோக்கம், புலிகளை தோற்கடிப்பதுதான். அது தான் ஸ்ரீலங்காவின் நோக்கம், மற்ற ஈழ தமிழியக்கஙகளின் குறி. மற்ற அரசாங்களின் குறி. ஏனெனில் 40 அரசாங்களின் பார்வையில் புலிகள் தடைப் பட்டுள்ள பயங்கரவாதிகள்

சர்வதேச அரசியலை புரியாமல், உங்கள் உணர்வுகலை அரசாங்கங்கள் ஏற்கவேண்டும் என்பது, தரையில் தலையை புதைத்த வான்கோழிதான். எவ்வளவு இளைஞர்கள் தீக்குளித்தாலும், இதை மாற்றப் முடியாது.

Blog Widget by LinkWithin