Saturday, February 09, 2008

ஊழிப் பேரறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர்


7-2-2008ஆம் நாள் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் 106ஆவது பிறந்தநாள். வாழ்ந்த காலம் முழுவதையும் தமிழுக்காக ஈகம் செய்து, தமிழ் தலைநிமிர தம்முடைய வாழ்க்கையை ஒப்படைத்துக்கொண்ட அந்த ஊழிப் பேரறிஞர் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது.

கடந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழறிஞர்களில் தனித்தன்மையானவர்; தலைமையானவர்; இன்னும் சொல்லப்போனால் தமிழுக்குப் பாடாற்ற எல்லாம் வல்ல இறைவனாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் எனலாம்.

23 உலகப் பெருமொழிகளில் இலக்கண இலக்கிய ஆராய்ச்சி அறிவும் 58 மொழிகளில் வேர்ச்சொல் ஆய்வறிவும் கொண்ட மாத்திறம் கொண்டவர்.

மொத்தம் 81 மொழிகளை அறிந்த பேரறிஞர் உலகத்திலேயே பாவாணர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அவர் நம்மினத்தில் பிறந்தவர்; ஒரு தமிழர் என்பது ஒட்டுமொத்த உலகத்தமிழர்களுக்கே பெருமையாகும்.

மேலை மொழிகளுக்கு மட்டுமே சொந்தாமாயிருந்த வேர்ச்சொல் ஆராய்ச்சி முறைமையக் கற்றித் தேர்ந்து தமிழில் வேர்ச்சொல் ஆய்வுகளை செய்ததவர். மேலைநாட்டவரே வியந்துநிற்கும் அளவுக்கு தமிழையும் மற்றைய உலக மொழிகளையும் நுணுகிநுணுகி ஆய்ந்தவர்.

வேர்ச்சொல்லாய்வுத் துறையில் கொண்டிருந்த தன்னிகரற்ற பேராற்றலால் உலக மொழி ஆய்வாளர்களையும் வரலாற்று அறிஞர்களையும் கலங்கடித்தவர்.

தமிழ் திரவிடத்திற்குத் தாய், தமிழ் ஆரியத்திற்கு மூலம், உலக முதல்மொழியும்(தமிழ்) முதல் மாந்தனும்(தமிழன்) தோன்றிய இடம் மறைந்த குமரிக்கண்டம் எனவாகிய முப்பெரும் உண்மைகளை எந்த வரலாற்று ஆசிரியரும் மறுக்கவியலாத அளவுக்கு மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டியவர்.

உலகத்தின் முதல் தாய்மொழியாகிய தமிழ்மொழியே பல்வேறு காலங்களில் பல்வேறு மாறுதல்களை அடைந்து பல்வேறு மொழிக் குடும்பங்களாக மாறிப் பிரிந்து இருக்கிறது என்றும் உலக மக்கள் யாவரும் தமிழ்மொழியால் உறவினர்கள் ஆகின்றனர் என்றும் அறுதியிட்டுச் சொன்னவர்.

50 ஆண்டுகள் தொடர்ந்து மொழியாராய்ச்சி செய்து 35க்கும் மேற்பட்ட அரிதிலும் அரிதான ஆய்வியல் நூல்களை தமிழுக்கும் தமிழருக்கும் வழங்கியவர்.

7-2-1902இல் மண்ணுலகில் வந்துதித்த பாவாணர் என்னும் ஊழிப் பேரறிஞர் 1981 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் இரவு 12:30க்கு தேவநேயர் இறைவனடி சேர்ந்தார். பாவாணரைப் போன்ற பேரறிஞர் ஒருவரைப் பெற்றதற்காக தமிழ்க்கூறு நல்லுலகம் என்றுமே பெருமையடையலாம்.

பாவாணரின் கண்டுபிடிப்புகளை உலகம் மதித்து ஏற்கும் பொற்காலம் கண்டிப்பாக மலரும். உலக உருண்டையின் மிகநீண்ட வரலாற்றில் பெரும்பகுதியைத் தமிழ்மொழி தன்னுள் கொண்டிருக்கும் உண்மை கண்டிப்பாக வெளிப்படும். அதுவரையில் பாவாணரின் புகழ் உலகத்தில் நிலவும்; அதன்பின்னர் உலகத்தின் உச்சியில் பாவாணரின் புகழ் மிளிரும்.

பாவாணர் இணைய இணைப்பு :


Friday, February 08, 2008

பல சமயத்தார் போற்றும் பைந்தமிழ்


உலகப் பெருமொழிகள் ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு சமயத்தைச் சார்ந்திருக்கின்றன. மொழிக்கும் வேறு சமயம் வேறாக இருந்தாலும், மாந்தவியல் தொடர்பின் காரணமாகவும், புவியியல் தொடர்பின் காரணமாகவும், பழங்காலத் தொடர்பின் காரணமாகவும் சில மொழிகளுக்கும் சமயங்களுக்கும் ஆழமான உறவு ஏற்பட்டுவிட்டதைக் காணமுடிகிறது.

விவிலியம் எழுதப்பெற்ற இலத்தின்மொழி கிறித்துவத்திற்குத் தொடர்பான மொழியாக இருக்கின்றது. புத்தர் பேசிய பாலிமொழி புத்த சமயத்தோடு பிணைந்துள்ளது. அரபுமொழி இசுலாத்தின் மொழியாக ஆகியுள்ளது. அதுபோல், சமற்கிருதம் இந்துமதத்தின் மொழியாக வழங்குகிறது. மேற்குறித்த அத்தனை மொழிகளைப்போல் அல்லாமல், தமிழ்மொழி மட்டும் மாறுபட்டும் தனிச்சிறப்புப் பெற்றும் விளங்குகிறது. குறிப்பிட்ட எந்தவொரு மதத்தையும் அல்லது சமயத்தையும் சாராமல், அனைத்து சமயங்களுக்கும் பொதுவான மொழியாகவும் எல்லா மதத்தையும் அரவணைத்துப் போற்றும் மொழியாகவும் உலகப் பெருநெறிகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் மொழியாகவும் தமிழ்மொழி விளங்கிவருவது வியப்பளிக்கும் செய்தியாகும்.

பல சமயத்தைச் சார்ந்தோர் தங்கள் சமயத்தைப் போற்றிய அதே அளவீட்டில் ஒரு மொழியைப் போற்றியுள்ளார்கள் என்றால் அது தமிழ்மொழியாக மட்டும்தான் இருக்கமுடியும். இந்த மாபெரும் உண்மை தமிழ் இலக்கியங்களில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதற்கான சில சான்றுகள் பின்வருமாறு:-

1.வான்புகழ் கொண்ட தமிழர் மறையாம் திருக்குறள் எந்தவொரு சமயத்தையும் சாராமல் மிகமிகப் பொதுமையான முறையில் எழுதப்பெற்ற முந்துதமிழ் நூலாக விளங்குகிறது. திருக்குறள் தமிழ் எந்தவொரு சமயமதத்திற்கும் உட்பட்டு இயங்கவில்லை. உலகம் முழுவதற்கும் ஏற்றதாகிய திருவள்ளுவர் காட்டும் கடவுள்நெறி தமிழ்மொழியில் குறட்பாக்களாகப் பாடப்பெற்றுள்ளது.

2.வள்ளுவரின் கடவுள்நெறிக்கு இணையாக பொதுமையாக வைத்துச் சொல்லப்படும் தகுதியைக் கொண்டது சிலப்பதிகாரம். நெஞ்சை அள்ளும் இந்தச் சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் ஒரு சமயத்துறவியாவார். இதுபோலவே, சீவகச் சிந்தாமணியை அருளிய திருத்தக்க தேவரும் சமணரே ஆவார். வளையாபதியும் குண்டலகேசியும் கூட சமணக் காப்பியங்களே.

3.சிலம்போடு சேர்த்து இரட்டைக் காப்பியமாகப் போற்றப்படும் மணிமேகலை நூலை ஆக்கியவர் சாத்தனார். இவர் புத்த சமயத்தைச் சேர்ந்தவர்.

4.ஐஞ்சிறு காப்பிய நூல்களான சூளாமணி, உதயணன்காதை, நீலகேசி, நாககுமார காவியம், யசோதர காவியம் ஆகியவற்றை பாடியோரும் பௌளத்தரும் சமணருமே ஆவர்.

5.கம்பர் பாடிய கம்பராமாயணமும் வில்லிப்புத்தூரார் பாடிய மகாபாரதமும் வைணவ சமயத்தை வலியுறுத்தும் காபியங்கள். திருமால் பெருமை பாடும் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களும் வைணவ வழிவந்த நூல்களே.

6.சிவ நெறியை போற்றவும் தமிழ்மொழியை அடிமை விலங்கிலிருந்து மீட்கவும் சேக்கிழார் பாடிய பெரிய புராணம் சைவ சமயக் காப்பியம். அதோடு, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகிய நால்வர் அருளிய தேவார திருவாசகத் திருப்பாடல்களும் பன்னிரு திருமுறைகளும் சைவ சமயம் சார்ந்தவை.

7.கிறித்துவ நெறிசார்ந்த தேம்பாவணி எனும் நூலை வீரமாமுனிவர் எனும் கிறித்துவப் பாதிரியார் வரைந்தார். அழகுத் தமிழில் ஏசுகாவியம் பாடிய கிருட்டிணப் பிள்ளை ஒரு கிறித்துவர்.

8.இசுலாமியக் கருத்துகளைச் சீறாப்புராணம் வழி தமிழில் வழங்கியவர் முகமதியச் சமயத்தவரான உமறுப் புலவர்.

இப்படி உலகின் முகாமையான சமயங்களைச் சார்ந்தவர்கள் பலரும் பெருமதிப்புடன் ஏற்றுக்கொண்ட மொழி தமிழாகும். தமிழ்ப் புலவோர்களும் சான்றோர்களும் தங்களின் சமயம் எதுவாக இருந்தாலும் அதற்கு நிகராகத் தமிழை ஏற்றுக்கொண்டு போற்றிவளர்த்துள்ளனர். சமய வேற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் தமிழால் ஒற்றுமையைப் பேணிவந்துள்ளனர்.

உலகம் யாவையும்... (தமிழமுது 1)

கடவுள்நெறியைப் போற்றி வாழ்ந்தவர்கள் தமிழர். தமிழரின் கடவுள் கொள்கையை பறைசாற்றும் அகப்புறச் சான்றுகள் மிக ஏராளம். தமிழரின் மறைநூலாகிய திருக்குறள் இறைமையை ஏற்றுப்போற்றும் நூலாக மிளிர்கிறது. திருவள்ளுவர் 'கடவுள் வாழ்த்து' அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்களில் இறைவனின் அருங்குணத்தையும் அருட்கொடையையும் ஆழ்ந்து விளக்கியுள்ளார். சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் சூரியன், சந்திரன், மழை முதலான இயற்கைப் பொருளாக எல்லாம்வல்ல இறைமையை உணர்த்திப் பாடியுள்ளார். இவ்வாறாக, தமிழ் இலக்கியங்கள் பலவும் பரம்பொருளை வாழ்த்தி வணங்குகின்றன. அவ்வழியில், கவிச்சக்கரவர்த்தி கம்பரும் கடவுளின் பெருமையைப் பாடியுள்ளார். அந்தக் 'கடவுள் வாழ்த்துப்' பாடல் இதோ:-

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி வாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே! (கம்பர்)

உலகங்கள் அனைத்தையும் தன்னந்தனியராக இருந்து படைத்தலும், தம் படைப்புகளாகிய ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான எல்லா உயிர்களையும் பரிவோடு காத்தலும், காத்தவற்றை அழித்தலும் ஆகிய முத்தொழில்களையும் ஒரு விளையாட்டாகவே செய்து கொண்டிருப்பவரான அந்த இறைவனே, எல்லா உலகங்களுக்கும் தலைவர் ஆவார். அந்தக் கடவுளிடமே நாங்கள் சரணடைவோம் என்பதாக இப்பாடல் கூறுகின்றது.

'உலகம் யாவையும்' என்ற அன்றைய கம்பரின் தொடர் இன்றைய அறிவியலை விளக்குவதாக உள்ளது. நாம் வாழும் உலகத்தையும் தாண்டி வேறு உலகங்கள் இருக்கக்கூடும் என்று இன்றைய ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர். ஆனால், தமிழர்களோ அன்றே இந்த உண்மையை உணர்ந்துவிட்டனர் என்பதற்கு இப்பாடல் நற்சான்று. இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலைத் தனியராகவே செய்கிறார் என்ற தமிழரின் கோட்பாட்டைக் கம்பரும் இப்பாடலில் வழிமொழிகிறார். (அமுது ஊறும்...)

Tuesday, January 15, 2008

பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து

பொங்கல்-தமிழரின் அறிவாண்மை விழா (பகுதி 1)

"பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி"
- என்பது புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியரின் அரும்பாடலாகும்.

இந்தப் பாடல் கூறும் கருத்து யாதெனில், "முற்காலத்தில் பேரோசையுடன் ஆர்ப்பரித்து எழுந்த மாபெரும் வெள்ளம் இவ்வுலகத்தையே மூழ்கடித்தது. அவ்வெள்ளம் நீங்கியபோது முதலில் மலை தோன்றியது. அதனைத் தொடர்ந்து, அதன் கீழ்ப்பகுதியான மண் தோன்றுவதற்கு முன்பதாக இருந்த காலக்கட்டத்தில் தோன்றி, வீரம் மிகுந்து விளங்கிய குடி எம்முடைய குடியினர். அக்காலக்கட்டத்தில் பிற குடியினர் எவரும் தோன்றியிருக்கவில்லை. இத்தகைய சிறப்புப்பெற்ற எமது குடியினர் பொய்மையை நீக்கி புகழ்பெற்று, நாளுக்கு நாள் சிறப்படைவதில் வியப்பு என்ன இருக்கிறது?" என்பதாகும்.

இந்தப் பாடலில் தமிழரின் தொன்மையும் வரலாறும் வீரமும் சொல்லப்பட்டுள்ளன. இவற்றோடு, கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவெனில், தமிழர் வாழ்ந்த மூன்று திணைகள் அதாவது நிலப்பகுதிகள் சுட்டப்படுகின்றன. 'கல்தோன்றி' என்பது குறிஞ்சி நிலம் தோன்றியதையும், 'மண்தோன்றா' என்பது மருதநிலம் இன்னும் தோன்றாததையும் குறிக்கின்றன. 'கல்தோன்றி மண்தோன்றா' என்பதற்கு இடையில் மறைமுகமாக முல்லைநிலத்தை இப்பாடல் சுட்டிக்காட்டுகிறது. குறிஞ்சி என்பது மலையும் மலைசார்ந்த இடமுமாகும். முல்லை காடும் காடுசார்ந்த நிலமுமாகும். மருதமானது நாடும் நாடுசார்ந்த நிலமுமாகும். இந்த மூன்று நிலப்பரப்புகளோடு கடலும் கடல்சார்ந்த நிலமுமாகிய நெய்தல் நிலமும், வறட்சியான பாலை நிலமும் சேர்ந்த ஐந்து நிலப்பகுதிகளைத் தமிழ் இலக்கியங்கள் ஐந்திணை என்று குறிப்பிடுகின்றன.

மனித நாகரிகம் தொடங்கியது குறிஞ்சி நிலத்தில்தான். குறிஞ்சிநில மாந்தன் காட்டு விலங்குகளை வேட்டையாடியும், தீக்கல்லால் எழுப்பப்பட்ட தீயில் இறைச்சியைச் சுட்டு உண்டும் குகைகளில் வாழ்ந்து வந்தான். முல்லை நிலத்தில், காடுகளில் விளைந்த காய், கனி, கிழங்குகளை உண்டும், மலைகளில் ஓடிய அருவிநீரைப் பருகியும் மக்கள் நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர். நாளடைவில் குழுவாக, கூட்டமாக, குலமாக வாழவும் உணவுகளைச் சேமித்துவைத்தும், விலங்குகளைப் பழக்கி பயணம் போகவும் கற்றுக்கொண்டான். அதன் பிறகு, மருத நிலத்தில் குடியேறி நிலையான குடியிருப்புகளை அமைந்துக்கொண்டு ஆடுமாடுகளை வளர்த்தும், பயிர்தொழில் செய்தும் வாழ மக்கள் கற்றுக் கொண்டனர். இங்குதான் பழந்தமிழர் தம் வாழ்வியல் நெறிகள், பண்பாடுகள், கலைகள், விழாக்கள், இலக்கியங்கள் ஆகியவற்றைப் பெருமளவில் உருவாக்கி வளர்த்துக்கொண்டனர். இந்தப் பழங்காலம் முதற்கொண்டு தமிழ் மக்கள் கொண்டாடிவரும் பண்பாட்டுப் பெருவிழாதான் பொங்கல் திருநாள். மருத நில மக்களின் மன வளர்ச்சியின் எச்சமாகவும் பண்பாட்டு உணர்ச்சியின் உச்சமாகவும் பொங்கல் விழா விளங்குகிறது. முற்றிலும் இயற்கையோடு இயைந்த விழாவாகப் பழந்தமிழர்கள் பொங்கலைக் கொண்டாடியுள்ளனர். இதுதான் வாழ்வு, இதுதான் நாகரிகம், இதுதான் பண்பாடு என ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் வாழத்தொடங்கிய காலத்திலேயே, அன்புணர்ச்சிக்கும் அறிவாண்மைக்கும் பொருத்தமான ஓர் விழாவைத் தமிழர்கள் கொண்டாடியிருப்பது நம்மை வியக்கவைக்கிறது.

உயிர்கள் வாழ வேண்டுமானால் உணவு தேவை. அன்றைய காலத்தில் உணவுக்காக மக்கள் பயிர்த்தொழிலையே நம்பியிருந்தனர். இன்றும்கூட பயிர்த்தொழிலே உலகநாடுகளின் உயிர்த்தொழிலாக இருக்கின்றது. ஆயிரம் தொழில்கள் தோன்றினாலும் பயிர்த்தொழிலால் மட்டுமே உலகம் நிலைக்க முடியும். அதனால்தான், 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்று திருவள்ளுவர் தொடங்கி 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று மாபாவலன் பாரதி வரையில் பயிர்த்தொழிலை ஏற்றிப் போற்றியுள்ளனர்.

இந்தப், பயிர்த்தொழில் செழிக்கவேண்டுமானால் நீர் வளமும் நில வளமும் வேண்டும். இவை இரண்டும் வேண்டுமானால் மழை பொழிய வேண்டும். மழை பொழிவதற்கு நீர் நிலைகளிலிருந்து நீரையெடுத்து ஆவியாக்கக் கதிரவனின் துணை வேண்டும். மேலும், தாவர வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் கதிரவனின் ஒளி வேண்டும். மாந்தனுக்கு இயற்கையான மருத்துவ பாதுகாப்பையும் சூரிய ஒளி தருகிறது. இயற்கையின் இத்தனை கூறுகளையும் உணர்ந்திருந்த அன்றையத் தமிழர்கள் ஏற்படுத்திய பண்டிகையாகப் பொங்கல் நன்நாள் விளங்குகிறது. இயற்கையோடு இயைந்த தமிழர் தம் வாழ்வை நினைத்துப் பார்க்கையில் இன்றையத் தமிழர்களான நமக்குப் பெருமையாக இருக்கிறது. (பகுதி 2 பார்க்க..)

பொங்கல்-தமிழரின் அறிவாண்மை விழா (பகுதி2)

பொங்கல் விழாவில் சூரியனுக்குத் தனி இடம் தரப்பட்டு வழிபடப்படுகின்றது. உலகின் ஆதி சோதியாக விளங்கும் சூரியனைத் தமிழ் மக்கள் இறைமை உணர்வோடு போற்றினார்கள் என்பதற்கான நேரடியான சான்றைப் பொங்கல் விழாவில் காணமுடிகிறது. தமிழன் முதன் முதலில் ஞாயிறை(ஒளியை)தான் வணங்கியிருக்கிறான். ஞாயிறு எழுந்தால்தான் உலகில் எல்லாவகை இயக்கமும் செயலும் நடைபெறும். உலகின் நல்வாழ்வுக்குச் சூரியன் ஆதாரமாக இருப்பதால்தான், தை முதல் நாள் சூரியப் பொங்கல் என்று கொண்டாடப்பெறுகிறது. உலக இயக்கத்திற்கு மூலமாக இருக்கும் சூரியனுக்கு வணக்கஞ்செய்வதும் நன்றிசொல்வதும் தமிழரின் உயரிய பண்பாட்டின் அடையாளங்களாகும்.

சூரியனுக்கு அடுத்து பொங்கல் திருநாளில் சிறப்புப்பெறுவது உழவுத் தொழிலுக்கு இன்றியமையாது விளங்கும் மாடுதான். வயலில் ஏர் இழுப்பது, பரம்பு அடிப்பது, அறுவடை காலத்தில் சூடடிப்பது, களத்து நெல்லை களஞ்சியத்தில் சேர்ப்பது ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்வது மாடுதான். அதோடு, பாலையும் நெய்யையும் உணவாகக் கொடுத்து உடலை வளர்ப்பதும் மாடுதான். மாட்டுப் பொங்கலன்று மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பொட்டிட்டு, மாலையிட்டு, பொங்கலிட்டு வணக்கம் செய்வது தமிழரின் உயிரிரக்கப் பண்பாட்டை வெளிப்படுத்திக் காட்டுகிறது. ஐந்தறிவு உயிர்களையும் தமிழர்கள் உயர்வாக மதித்துப் போற்றியுள்ளனர் என்பதற்கு இதனைவிட வேறு அடையாளம் வேண்டுமோ?

தைமாதத்தின் மூன்றாம் நாள் காணும் பொங்கல் என்றும் கன்னிப் பொங்கல் என்றும் வழங்கப்படுகிறது. இந்நாளில், ஒருவரை ஒருவர் கண்டும், உற்றார் உறவினர் வீடுகளுக்குச் சென்றும் கண்டு, கேட்டு, உண்டு, கலந்துரையாடி கொண்டாடுவர். கன்னிப் பெண்கள் ஒன்றாகக்கூடி பொங்கலிட்டு கடவுள் வழிபாடு செய்வர். இளைஞர்கள் தங்களின் வீரத்தை வெளிக்காட்ட காளைகளை விரட்டிப் பிடிப்பர். இதனைச் சல்லிக்கட்டு, ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்று அழைப்பது வழக்கம். மொத்தத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து மனமகிழ்வை ஏற்படுத்தும் ஒற்றுமை விழாவாகப் பொங்கல் பெருநாள் இருந்துள்ளது. அதோடு, தமிழர்களின் வீர மரபைப் பேணிக்காக்கும் விழாவாகவும் இருந்துள்ளது.

உடல் உழைப்புக்கும் உழவுத் தொழிலுக்கும், அந்த உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கதிரவனுக்கும் மாடுகளுக்கும் மதிப்பளித்து நன்றிசெலுத்தும் உயர்ந்த நெறியைத் தம்முள்ளே கொண்டுள்ள இந்தப் பொங்கல் விழா, மதம் கடந்த நிலையில்தான் அன்றைய நாளில் கொண்டாடப்பட்டது. எனவேதான், பொங்கல் பண்பாடு சார்ந்த விழா எனப்படுகிறது. பொங்கல் விழா எந்தவொரு மதம் சார்ந்ததோ அல்லது சமயம் சார்ந்ததோ அன்று. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர், அவர் எந்தச் சமயம் சார்ந்தவராக இருந்தாலும் பொங்கலைக் கொண்டாடலாம். ஆகவே, பொங்கல் மதங்களைக் கடந்து மாந்த நேயத்தை முன்படுத்தும் முத்தமிழ் விழா என்பது அறியவேண்டிய ஒன்றாகும். பழந்தமிழரின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற மாந்த நேயப் பண்பாட்டைப் பொங்கல் விழாவிலும் தெள்ளென காணமுடிகிறது.

பொங்கல் திருநாள் தைத்திங்கள் முதல்நாளில் வருவதால், தை முதல்நாளே தமிழாண்டுப் பிறப்பு என்றும் சொல்லப்படுகிறது. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம், தை முதல் நாளில்தான் சூரியன் தட்சிணாயத்திலிருந்து அதாவது தென் திசையிலிருந்து உத்தராயணத்துக்கு அதாவது வடதிசைக்கு மாறுகிறது. மேலும், தமிழர்கள் ஓராண்டை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்தனர். அவை, இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனிக் காலம் எனப்படும். தமிழர் இளவேனில் காலத்தையே ஆண்டின் தொடக்கமாகக் கொண்டனர். இந்த இளவேனிற் காலமும் தைத்திங்களில்தான் தொடங்குகிறது. தைப்பிறப்பே தமிழாண்டின் தொடக்கம் என்பதற்கான சான்றுகள் நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, கலித்தொகை முதலான தமிழ் இலக்கியங்களில் உள்ளன. இதிலிருந்து, தமிழர்கள் மிகப் பழங்காலத்திலேயே வானியல் கலையிலும் கணக்கியல் கலையிலும் தெளிவுபெற்றிருந்தனர் என்பது நமக்குத் தெரியவருகிறது. இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான், 1921ஆம் ஆண்டில் தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகளார் தலைமையில் பல்வேறு சமயங்களையும் சேர்ந்த ஐந்நூறு தமிழறிஞர்கள் ஒன்றுகூடி தைமுதல் நாளில் திருவள்ளுவர் பெயரில் தமிழுக்குத் தொடராண்டைத் தொடங்கினர்.

மொத்தத்தில், உழைப்பை மதித்தல், உழவுத் தொழிலுக்கு மதிப்பளித்தல், நன்றியுணர்வு, மாந்த நேயம், ஆன்ம நேயம் முதலான தமிழரின் உச்சமான பண்பாட்டு நெறிகளைப் பொங்கல் விழா வெளிப்படுத்திக் காட்டுகிறது. தமிழர்கள் வீர மரபுவழித் தோன்றல்கள் என்பதையும் பொங்கல் விழா விளக்குகிறது. அது மட்டுமல்லாமல், தமிழர் இயற்கை அறிவு, அறிவியல் நுட்பம், வானியல் கலை, கணக்கியல் முதலானவற்றில் பழங்காலத்திலேயே ஆழ்ந்த அறிவும் தெளிவும் பெற்றிருந்தனர் என்ற உண்மையை உலகத்திற்கு உணர்த்துகிறது. ஆக, மதம் கடந்த பெருநாளாகவும், பண்பாட்டு நெறிகளைப் பேணும் பண்பாட்டு விழாவாகவும், தமிழரின் ஒற்றுமையுணர்வை வளர்க்கும் பழம்பெரும் தமிழ்விழாவாகவும் சிறப்புப் பெற்றுள்ள பொங்கல் திருநாளைத் தமிழர்கள் வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும்; அதன் உண்மைப் பொருளறிந்து போற்ற வேண்டும். (முற்றும்)

Tuesday, December 18, 2007

தனித்தமிழ் நாள்காட்டி 2008

தமிழை முன்னெடுக்கும் உலகின் முதலாவது
தனித்தமிழ் நாள்காட்டி 2008

தமிழ் நாள்காட்டி வரலாற்றில் தனிப்பெரும் சிறப்பாக இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, முழுமையாகத் தமிழிலேயே நாள்காட்டி வெளிவந்துள்ளது. தமிழ் மொழி, இன, சமய, பண்பாடு சார்ந்த தமிழியல் மீட்பு, மேம்பாட்டுப் பணிகளை அமைதியாகவும் ஆக்ககரமாகவும் ஆற்றிவருகின்ற தமிழியல் ஆய்வுக் களம் இந்தத் தமிழ் நாள்காட்டியை வெளியிட்டுள்ளது. தமிழியல் ஆய்வுக் களத்தின் நிறுவனர் ஆய்வறிஞர் இர.திருச்செல்வம் இந்த நாள்காட்டியை வடிவமைப்புச் செய்துள்ளார்.

தமிழ்க்கூறு நல்லுலகம் முதன்முறையாகக் கண்டிருக்கும் தனித்தமிழ் நாள்காட்டியென இதனைத் துணிந்து குறிப்பிடலாம். இப்படியொரு அரிய சாதனை நம் மலேசியத் திருநாட்டில் நிகழ்ந்திருக்கிறது என்பது மலேசியத் தமிழர்களுக்குப் பெருமையளிக்கும் செய்தியாகும். முற்றும் முழுவதுமாகத் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ள இந்த நாள்காட்டி தமிழர்கள் இல்லங்கள்தோறும் கண்டிப்பாக இடம்பெறவேண்டும்.



இந்தத் தனித்தமிழ் நாள்காட்டியின் தனிச்சிறப்புகள்

1.முழுமையாகத் தமிழிலேயே வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
2.திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடும் தமிழ் எண்களைப் பயன்படுத்தியும் அமைக்கப்பட்டுள்ளன.
3.ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்), பிறைநாள்(திதி) முதலியன தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.
4.பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணையும் ஐந்திர(சோதிட)க் குறிப்புகளும் உள்ளன.
5.தமிழ் அருளாளர்கள், சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் சிறப்பு நாட்களும் உருவப்படங்களும் உள்ளன.
6.பொதுவிடுமுறை, பள்ளி விடுமுறை, விழா நாட்கள் முதலான விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
7.ஆங்கில நாள்காட்டியை உள்ளடக்கியதோடு, தேவையான அளவு சமற்கிருதத் துணை விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
8.தமிழியல் முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விழைவோருக்கும் இனி வாழ முயல்வோருக்கும் வழிகாட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
9.வள்ளுவர் வள்ளலார் இணைந்திருக்கும் அட்டைப் படத்தோடு முழு வண்ணத்தில் தரமாகவும் கவரும் வகையிலும் அமைந்திருக்கிறது.


உள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக மு‎ன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களையும் ஆர்வலர்களையும் இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்குமாறு தமிழியல் ஆய்வுக் களம் கேட்டுக்கொள்கிறது.




தொடர்புக்கு : தமிழியல் ஆய்வுக் களம் (Persatuan Pengajian Kesusasteraan Tamil)
d/a No.17, Lorong Merbah 2, Taman Merbah, 14300 Nibong Tebal, SPS, P.Pinang, Malaysia.
தொலைப்பேசி : 6013-4392016 / 6012-4643401
இணையம் : aivukalam.6te.net
மின்னஞ்சல் : aivukalam@gmail.com



Blog Widget by LinkWithin