Saturday, November 26, 2011

மலேசியாவில் தமிழ்க்காப்பு மாநாடு



தமிழ்ப்பள்ளியும் தமிழ்க்கல்வியும் மலேசியத் தமிழர்களின் முக முகாமையான அடையாளங்களாகும். இவற்றில், தெரிந்தோ தெரியாமலோ ஏற்படும் பாதிப்புகள் ஒட்டுமொத்தச் சமுதாயத்திற்கே பேரிழப்பாக அமைந்துவிடும். தமிழ்ப்பள்ளியும் தமிழ்க்கல்வியும் தாழ்ந்து போகுமானால், தமிழ்மொழியின் நிலையும் கவலைக்கிடமாகிப் போகும். தமிழ்மொழிப் பாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டிய தமிழர்கள், சிறிதும் அக்கறையின்றிப் பொறுப்பற்ற நிலையில் இருந்தால் காலப்போக்கில் நமது தமிழ்மொழி தானே அழிய நேரிடும். எனவே, தாய்மொழியைப் பேணிக்காக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.

பல்வேறு வகைகளில் தாய்மொழிப் பாதுகாப்பினை நாம் உறுதிசெய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்தப் பொறுப்பினை உணர மறுப்பது தமிழ்மொழிக்குத் தீங்கு விளைவிக்கும். இதனைக் கவனத்தில் கொண்டு சற்று விழிப்புடன் செயல்பட தமிழுணர்வாளர்களை மலேசியத் தமிழ்க் காப்பகம் கேட்டுக்கொள்கின்றது.

இதன் தொடர்பாக, மலேசியாவில் தமிழ்மொழியின் நலனைக் காக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் காரணமாக மலேசியாவில் ‘தமிழ்க்காப்பு மாநாடு’ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ்க் காப்பகத்தின் ஏற்பாட்டில் மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ் ஆய்வியல் துறையின் ஆதரவுடன் இந்த மாநாடு நடக்கவுள்ளது. 

அதன் விவரம் பின்வருமாறு:-

      நாள்  :- 11-12-2011 (ஞாயிறு)
      நேரம் :- காலை மணி 9:00 - மாலை மணி 6:00
      இடம்  :- விரிவுரை அரங்கம் ஏ, மலாயாப் பல்கலைக்கழகம்

இம்மாநாட்டில் நான்கு ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட உள்ளன. 

அவற்றின் விவரம்:-

1)தமிழ்ப்பாட நூல்களில் காணப்படும் குறைகளும் அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளும்.

2)தமிழ் ஒலி ஒளிபரப்பு மின்னூடகங்கள், இதழியல் துறை ஆகியவற்றில் தமிழ்மொழியின் தரம்


3)தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் தீர்வுகளும்

4) மலேசியாவில் தமிழ்மொழியின் பயன்பாடும் எதிர்காலமும்

இந்த மாநாட்டில் பங்குபெற பேராளர் கட்டணம் RM20.00 (இருபது ரிங்கிட் மட்டும்) செலுத்த வேண்டும். பேராளர்களுக்கு மாநாட்டுப் பை, உணவு, காலை மாலை தேநீர் ஆகியவை வழங்கப்படும். பேராளர்கள் விரைந்து முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

தமிழ்மொழிப் பாதுகாப்பையும் பயன்பாட்டையும் முழுமயாகக் கொண்டு நடைபெறும் தமிழ்க்காப்பு மாநாட்டில், தமிழ் மொழி, இனம் சார்ந்த சமூக இயக்கங்களின் தலைவர்கள், பொறுப்பாளர்கள், கல்விக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தமிழ்க்கல்வி அதிகாரிகள், தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழியல் துறை மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள், தமிழ்ப்பணியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி, தமிழ்மொழி மீது அன்பும் அக்கறையும் கொண்ட அனைவரும் கலந்துகொண்டு பேராதரவு வழங்க வேண்டும் என மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

மாநாடு தொடர்பான மேலதிக விவரங்களுக்கு:- 
சு.வை.லிங்கம் (019-6011569) /  முனைவர் சு.குமரன் (012-3123753) / இரெ.சு.முத்தையா (012-7649991)

@சுப.நற்குணன், மலேசியா

10 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள்.

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

Albert Fernando said...

பேரன்பிற்குரிய சுப.நற்குணன் அவர்களுக்கு,

தாய்மொழிப் பாதுகாப்பினை முன்னிறுத்தி நடைபெறவுள்ள இந்த மாநாடு சிறக்கவும்,
அதன் நோக்கம் வெற்றியடையவும் வாழ்த்துகிறேன். இதை முன்னெடுக்கும்
மலேசியத் தமிழ்க் காப்பகத்திற்கு என் உளமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
தகவலை அறியத் தந்த தங்களுக்கும் நன்றிகள்.
மிக்க அன்புடன்,
ஆல்பர்ட், அமெரிக்கா.

Ilakkuvanar Thiruvalluvan said...

பாராட்டுகள். இம்மாநாடு மலேசியாத்தமிழர்களுக்கு மட்டுமானதா?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

nayanan said...

மனமகிழ்ச்சி தரும் செய்தி. மாநாடு சிறக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

சுப.நற்குணன்,மலேசியா. said...

அன்பின் முனைவர் மு.இளங்கோவன் ஐயா, தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

சுப.நற்குணன்,மலேசியா. said...

அன்பின் ஆல்பர்ட் ஐயா,

தங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றியுடையேன். மகிழ்ச்சி.

சுப.நற்குணன்,மலேசியா. said...

அன்பின் திருவள்ளுவனார் ஐயா,

இந்த மாநாடு மலேசியத் தமிழர்களுக்கு மட்டுமானதாக இருந்தாலும், அயலகத் தமிழன்பர்கள் விரும்பினால் கலந்துகொள்ளலாம்.

அவ்வாறு விரும்புபவர்கள் ஏற்பாட்டுக் குழுவினருடன் தொடர்புகொள்ளலாம்.

தங்கள் மறுமொழிக்கு நன்றி ஐயா.

சுப.நற்குணன்,மலேசியா. said...

அன்பின் நாக.இளங்கோவன் ஐயா,

தங்கள் மறுமொழிக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

மலேசியாவிலும் அவ்வப்பொழுது இப்படியான மாநாடுகள் தேவைப்படுகின்றன. இங்கேயும் தமிழை மீட்க வேண்டிய; காக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.

thiru said...

வணக்கம்.தமிழைக் காக்கும் அருமைமிகு முயற்சி. ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துகள்.தமிழ் வாழ, வழிவிடுவோம். வாரீர்.

அன்புடன்,
திருவருள்.

மணிவானதி said...

தமிழ்க்காப்பு மாநாடு வெற்றியடைய எமது தமிழ்த்துறைச் சார்பாக வாழ்த்துக்கள்.
அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.

Blog Widget by LinkWithin