#தம்முடைய ஓருடலில்
தமிழையும் திருக்குறளையும் ஈருயிராகத் தாங்கி வையத்துள் வாழ்வாங்கு வாழும் தமிழ்ப்
பெரியார்..
#திருக்குறள் தவச்சாலை
நிறுவி வள்ளுவர் காட்டிய வழியே வையக வழி எனத் தமிழ் வாழ்வியலைப் போற்றிப் பரப்பும்
பேரறிஞர்..
#தமிழைத் தமிழாக மீட்கவும்
காக்கவும் வாழ்நாளையே ஒப்புக்கொடுத்து, இதுவரை 390க்கும் மேற்பட்ட அரிய நூல்களை
எழுதியிருக்கும் ஒப்பற்ற தமிழறிஞர்..
#தமிழியல் கரணங்கள்(சடங்கு)
வழியாகவும் தெய்வத் திருமறையாம் திருக்குறளின் சான்றாகவும் இதுவரை 4000க்கும்
மேற்பட்ட தமிழ்த்திருமணங்களை நடத்தி வைத்த தமிழ் அந்தணர்..
#ஐம்பெரும் காப்பியங்களில்
ஒன்றாகிய குண்டலகேசியை மீட்டெழுதி உயிர்கொடுத்த அரும்பெறல் சான்றாளர்..
#அமெரிக்கத் தமிழ்ச்
சங்கங்கள் 52 கூட்டமைப்பின் சார்பில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ அளிக்கப்பட்டு
சிறப்பிக்கப்பட்ட தமிழ்க்கடல்..
செந்தமிழ் அந்தணர் ஐயா மதுரை
இளங்குமரனார் மலேசியா வந்துள்ளார். ஐயா அவர்களின் தாள்பணிந்து வணங்கி மலேசியத்
தமிழுணர்வாளர்கள் சார்பில் வருக வருகவென வரவேற்பு மொழிகின்றேன்.
தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியுடைய ஐயா இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியராக விளங்கியவர். பள்ளிக்கூடமே இல்லாத தம்முடைய சொந்த ஊரான வாழவந்தான்
புரத்தில் தாமே சொந்தமாக ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவியவர். நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல முகங்களைப் பெற்றுத் தமிழுக்கு ஆக்கமான பல பணிகளைச் செய்துள்ளார்.
இவர் எழுதிய நூல்கள் பல நூறாக விரியினும் இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி, யாப்பருங்கலம், புறத்திரட்டு, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைபாடினியம், தேவநேயம் உள்ளிட்ட நூல்கள் இவர்தம் தமிழ்ப்பணிக்கு என்றும் நின்று அரண் சேர்க்கும்.
திருக்குறள் வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட புலவர் ஐயா இளங்குமர னார் வாழும் வள்ளுவராகவே விளங்குபவர். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துப், பாவாணர் நூலகம் கண்டு, தவப் பள்ளியில் உறைந்திருப்பவர்.
எஞ்சியநாளெல்லாம் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தியும் நல்லற மணமக்களை இல்லறப்படுத்தியும் தமிழ் மக்களைத் தமிழ்வழியில் வாழவைத்தும் தாமும் வாழ்வாங்கு வாழ்ந்துவரும் ஒப்பற்ற சான்றாளர் செந்தமிழ் அந்தணர் புலவர் ஐயா மதுரை இரா.இளங்குமரனார்.
புலவர் ஐயா அவர்கள் தற்போது நமது மலேசியாவுக்கு வந்திருக்கிறார். நாடு முழுவதும் சுற்றுச்செலவு மேற்கொண்டு வருகிறார். அடுத்து வரும் இரண்டு வாரக் காலத்திற்கு நாடு முழுவதும் அவருடைய பொழிவுரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
புலவர் ஐயா அவர்கள் தற்போது நமது மலேசியாவுக்கு வந்திருக்கிறார். நாடு முழுவதும் சுற்றுச்செலவு மேற்கொண்டு வருகிறார். அடுத்து வரும் இரண்டு வாரக் காலத்திற்கு நாடு முழுவதும் அவருடைய பொழிவுரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ஐயா அவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியை தங்கள்
ஊர்களில் ஏற்பாடு செய்ய விரும்பும் தமிழன்பர்கள் கீழ்க்காணும் எண்களில் தொடர்புகொள்ளலாம்.
தமிழ்த்திரு அருள்முனைவர் : 017-3314541
தமிழ்த்திரு மாரியப்பனார் : 012-3662286
தமிழ்க்கடல்
ஐயா மதுரை இரா.இளங்குமரனாரின்
மலையகப் பயணம் எல்லாவகையிலும் வெற்றிகரமாக
அமைந்திட வேண்டும். இப்பயணத்தின் வழியாக மலேசியத் தமிழர்கள்
புது நம்பிக்கையும் எழுச்சியும் பெறல் வேண்டும்.
புலவர் ஐயா, நிலையான நலத்துடனும் நீடித்த வாழ்நாளுடனும் இன்றுபோல என்றும் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழுக்கும் தமிழருக்கும் வலுவும் வளமும் உட்டிட எல்லாம் வல்ல இயற்கைச் செம்பொருளாம் இறைமைத் திருவருள் துணைநிற்க வேண்டுவோமாக!
புலவர் ஐயா, நிலையான நலத்துடனும் நீடித்த வாழ்நாளுடனும் இன்றுபோல என்றும் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழுக்கும் தமிழருக்கும் வலுவும் வளமும் உட்டிட எல்லாம் வல்ல இயற்கைச் செம்பொருளாம் இறைமைத் திருவருள் துணைநிற்க வேண்டுவோமாக!
@சுப.நற்குணன், மலேசியா.










No comments:
Post a Comment