மலேசிய இதழியல் துறையில் அண்மையக் காலமாக முத்திரைப் பதித்திருக்கின்ற
கட்டுரைத் தொடர் ஒன்றனைச் சொல்ல வேண்டுமானால், தாராளமாக ஆ.திருவேங்கடம் எழுதிவரும் ‘ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்’ தொடரைச்
சொல்லலாம்.
மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில் இந்தக் கட்டுரைத் தொடர்
ஓராண்டையும் தாண்டி வெற்றிகரமாக வந்துகொண்டிருக்கிறது.
இதனைவிட பெரிய வெற்றி என்னவெனில், தமிழ் நாளிதழ் வரலாற்றிலேயே
ஆய்வின் அடிப்படையிலும், புள்ளி விவரத்தின் அடிப்படையிலும், துல்லியமான தரவுகளின் அடிப்படையிலும்
எழுதப்பட்ட மிகச் சிறப்பான ஆய்வுத் தொடர் என இந்தக் கட்டுரைக்குப் புகழாரம் சூட்டலாம்.
மக்களிடையே சிந்தனை மாற்றம் ஏற்படவும், அறிவார்ந்த முறையில்
ஆராய்ந்து பார்க்கவும் மிகச் சிறந்த களமாக இந்தக் கட்டுரைத் தொடர் அமைந்து வருகின்றது.
மலேசிய தமிழ்ச் சமூகம் தொடர்பான அரசியல், பொருளியல், கல்வி,
அடிப்படை உரிமை, தமிழ்ப்பள்ளி, பண்பாடு, சமயம், தொழில்நுட்பம் எனப் பலதரப்பட்ட கோணங்களில்
இந்தக் கட்டுரை பல உண்மைகளைச் சான்றுகளோடு வெளிப்படுத்திக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது
என்று துணிந்து சொல்லலாம்.
இந்த அருமையான கட்டுரைத் தொடரைப் பல்வேறு சிரமங்களுக்கு
இடையில், தன்னார்வ அடிப்படையில் அரும்பாடுபட்டு எழுதிவருபவர் ஆ.திருவேங்கடம். ஒவ்வொரு
தொடரையும் எழுதுவதற்கு அவர் என்னவெல்லாம் சிரமப்பட்டிருப்பார்; எப்படியெல்லாம் மெனக்கெட்டிருப்பார்
என்பதை இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து வாசித்துவரும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் நன்கு
அறிவார்கள்.
‘ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்’ தொடர் வெறுமனே ஓர் எழுத்துப் படைப்பாக
இல்லாமல், சமுதாயத்தின் சிக்கல்களை முன்னெடுத்து அதற்கான சிந்தனைக் களத்தையும் தீர்வுக்கான
வழிதடத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சான்றுக்கு, பினாங்கு கம்போங் புவா
பாலா சிக்கல், எசுபிஎம் தேர்வு 10+2 பாடச் சிக்கல், பள்ளி மேலாளர் வாரிய அமைப்பு, தமிழ்க்கல்விச்
சிக்கல், கல்விக் கடனுதவி வாய்ப்புகள் முதலான அடிப்படையான சிக்கல்களை இந்தத் தொடரில்
விரிவாக எழுதி அரும்பணி செய்திருக்கிறார் கட்டுரையாசிரியர் ஆ.திருவேங்கடம்.
பெரும்பாலும் இவருடைய கட்டுரையைப் படித்துவிட்டு பல முறை
தொலைப்பேசியுள்ளேன். மணிக்கணக்கில் விவாதம் நடத்தியுள்ளேன். அப்பொழுதெல்லாம் தம்முடைய
கருத்துகளையும் வாதங்களையும் அழுத்தமாக முன்வைப்பார். நாம் சொல்லும் கருத்துகளுக்கும்
செவிகொடுத்து உள்வாங்கிக்கொள்வார். பிறருடடய கருத்துகளுக்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்ளும்
சிறந்த பண்பு இருப்பதால்தான், இவருடைய கட்டுரைகள் சமுதாயத்தின் சிந்தனைப் போக்கையே
மாற்றியமைக்கும் வலுவோடு மிளிர்கின்றன. எந்தவித
ஆர்ப்பாட்டம் இல்லாமலும் மலிவு விளம்பரத்திற்கு ஆளாகமலும், சமுதாய நலனை மட்டுமே முன்படுத்தி,
சரியான வழித்தடத்தில் தம் எழுத்துப் பயணத்தை மேற்கொண்டிருப்பவர் இவர்.
இந்த ‘ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்’ தொடர் நூல்வடிவம் பெற்று
வெளிவர வேண்டும்; ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இதுவொரு மேற்கோள் ஆவணமாக இடம்பெற வேண்டும்
என்பது அவருடைய ஆயிரக்கணக்கான வாசகர்களுடைய கோரிக்கையாகவும் ஏக்கமாகவும் இருந்தது.
அதற்குச் செவிசாய்த்து, அதனை நூலாகத் தொகுத்து வெளியிடவிருக்கிறார் ஆ.திருவேங்கடம்.
‘ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்’ கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு
விழா பின்வரும் வகையில் நடைபெற உள்ளது.
நூலின் அடக்க
விலை: RM30.00 (முப்பது வெள்ளி மட்டும்)
தொடர்புக்கு:-
ஆ.திருவேங்கடம் 017-6470906
நமது சமூகத்திற்குக் கிடைத்திருக்கும் மணியான ஆய்வாளராக
விளங்கும் ஆ.திருவேங்கடம் அவர்களின் சமுதாய பற்றுக்கும் தன்னலம் கருதா பணிக்கும் மதிப்பளித்து
இந்த நூல் வெளியீட்டு விழாவில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென ‘திருத்தமிழ்’
வழியாகக் கேட்டுக்கொள்கிறேன்.
@சுப.நற்குணன், மலேசியா.
No comments:
Post a Comment