Thursday, June 10, 2010

திருக்குறள் வகுப்பு ஓராண்டு நிறைவு விழா

பினாங்கு மாநிலம், நிபோங் திபால் எனும் ஊரில் மிகச் சிறப்பாக இயங்கிவருகின்றது ‘கலிடோனியா இளைஞர் மன்றம்’. தனக்கென தனி மண்டபத்தைக் கொண்டிருக்கும் இந்த இளைஞர் மன்றம் தமிழ் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது.


அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அரிய பணியாகத் ‘திருக்குறள் வகுப்பு’ நடக்கிறது. இவ்வகுப்பு ஒவ்வொரு காரி(சனி)க்கிழமையும் மாலை 4.00 மணி தொடங்கி 6.00 வரையில் நடக்கிறது. 50 மாணவர்கள் இவ்வகுப்பில் கலந்து பயில்கின்றனர். கடந்த 2009 சூன் திங்கள் தொடங்கிய இவ்வகுப்பு தன்னுடைய ஓராண்டு நிறைவை கடந்த 6-6-2010இல் கொண்டாடியது.

திருமதி பிரேமா அமிர்தலிங்கம் அவர்களுடைய பொறுப்பில் இவ்வகுப்பு கடந்த ஓராண்டு காலமாக மிகச் சிறப்பாக நடைபெற்று வருவது பாராட்டுக்குரியது மட்டுமன்று சாதனையுமாகும். இவ்வகுப்பு நடைபெறுவதற்கு திரு.அமிர்தலிங்கம், திரு.ம.தமிழ்ச்செல்வன், திரு.அர்ச்சுணன் போன்றோரும் கலிடோனியா இளைஞர் மன்றமும் உற்றத் துணையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஓராண்டு நிறைவையொட்டி நடைபெற்ற சிறப்பான விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். அவ்விழாவில் நான் பேசியதாவது:-

மலேசியாவில் சிறுபான்மை இனமாக இருக்கும் தமிழர்களிடையே இன்று பல்வேறு சீர்கேடுகள் நிகழ்ந்துவருகின்றன. ஒட்டுமொத்த குமுகாயமும் மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்துகொண்டிருப்பது போன்ற தோற்றம் இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. உண்மையில் நமது குமுகாயம் சீரழிவுப் பாதாளத்தை நோக்கி மிக வேகமாக உருண்டுக்கொண்டிருக்கிறது.

கல்வி, பொருளாதாரம், அரசியல், தொழில் வாய்ப்பு, சமூகவியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் மிகவும் மோசமான பின்னடைவுகளுக்கு தமிழ் மக்கள் இன்று ஆளாகியிருக்கிறார்கள். இதைவிட பரிதாபமான நிலையில் தமிழர்களின் மொழி, இன, சமய உணர்வுகள் மழுங்கிக்கொண்டிருக்கின்றன. இன்றையச் சூழலில் தமிழ் மரபுகளைப் பற்றியோ; கலை பண்பாடு பற்றியோ; இலக்கியம் பற்றியோ தமிழர்கள் கொஞ்சமும் அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை.

இதற்கு நேர்மாறாக, எதிர்மறையான போக்குகள் இன்று கணக்கு வழக்கில்லாமல் மலிந்துகொண்டிருக்கின்றன; மலைபோல் வளர்ந்துகொண்டிருக்கின்றன. வன்முறைகள் எல்லைமீறிவிட்டன; குடும்பச் சிதைவுகள் பெருகிவிட்டன; மனவிலக்குகள் அதிகமாகிவிட்டன; பாலியல் குற்றங்கள் வஞ்சமில்லாமல் நடக்கின்றன.

இப்படிப்பட்ட சமுதாயக் குறைபாடுகள் எல்லா இனத்திலும் நாட்டிலும் இருக்கின்றன என்றாலும்கூட, சிறுபான்மை மலேசியத் தமிழரிடையே இப்படி காணப்படுவது மிகுந்த அச்சமூட்டுவதாக உள்ளது. நிலைமை இப்படியே போகுமானால் அடுத்த 50 ஆண்டுகளில் நமது குமுகாயம் அல்லது நமது குழந்தைகளுடைய எதிர்காலம் பயங்கரமான நெருக்கடி நிலைக்கு ஆளாவதை யாராலும் தடுக்க முடியாது. ஓர் இருண்ட காலத்தை அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச்சென்ற பழிக்கு இன்றைய சமுதாயம் கண்டிப்பாக ஆளாக நேரிடும்.

தென்னாபிரிக்கா, மொரிசியசு முதலிய நாடுகளில் வாழும் தமிழர்கள் போல, மொழி அறியாத, இனம் புரியாத, சமயம் தெரியாதவர்களாக நம்முடைய குழந்தைகளும் இந்த நாட்டில் வாழுகின்ற பரிதாபம் ஏற்படும்.

இதற்கு உடனடியாகத் தீர்வு கிடைக்க வேண்டுமானால், யாரோ ஒரு அரசியல் தலைவர் வருவார்; அல்லது ஒரு வலுவான அரசியல் கட்சி உருவாகும்; சமுதாயத் தலைவர்கள் தோன்றுவார்கள்; அரசாங்கம் செய்யும் என்று தயவுசெய்து யாரும் நம்பவேண்டாம். இது ஒருகாலும் நடக்காது.

இதற்கு ஒரே வழி, தமிழர்கள் அனைவரும் உடனடியாக மனமாற்றம் பெறவேண்டும் – சிந்தனைப் புரட்சி பெறவேண்டும் – அறிவு தெளிவு பெற வேண்டும் – நல்ல கல்வியறிவு பெற வேண்டும். இதனைவிட முக்கியமாக நாம் தமிழர் என்ற இன உணர்வையும்; நம் தாய்மொழி தமிழ் என்ற உணர்வையும் உடனடியாகப் பெற வேண்டும். நம்மோடு வாழும் சீனர்கள் மிகவும் உறுதியாக மொழி உணர்வும் இன உணர்வும் பெற்றிருப்பதால்தான் இன்று வலிமையான சமுதாயமாக அவர்களால் வாழ முடிகிறது; தலைநிமிர்ந்து நிற்க முடிகிறது.

சீனர்களுடைய மொழி, இன உணர்வை அவர்கள் சீனப்பள்ளிகளின் வழியாக எடுத்துக்காட்டுகின்றனர். நாட்டில் உள்ள 95% சீனர்கள் தங்கள் குழந்தைகளைச் சீனப்பள்ளிகளில் படிக்கவைப்பதன் வழியாக தங்களுடைய மொழி உணர்வையும் இன ஒற்றுமையையும் தெளிவாகக் காட்டுகின்றனர். அதனால், அவர்களுக்குக் கிடைக்கவேண்டியவை அனைத்தும் குறைவில்லாமல் கிடைக்கின்றன. அதுபோல நாட்டில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிகளில் சேர்ப்பதன் வழியாக நமது ஒற்றுமையைப் புலப்படுத்துவதோடு உரிமைகளையும் இன்னும் பல்வேறு வாய்ப்பு வசதிகளையும் பெற்றுவிட முடியும்.

அதுமட்டுமல்ல, நமது மொழி, கலை, இலக்கியம், பண்பாட்டுக் கூறுகளையும் காத்துக்கொள்வதற்கு இதுவே சரியான வழியாகவும் அமையும். 2020இல் மலேசியா தன் சொந்த அடையாளத்தோடு வளர்ச்சிபெற்ற நாடாக உருவாக வேண்டுமென முன்னனள் பிரதமர் துன் மகாதீர் கனவு கண்டது போல, நாமும் நம்முடைய மரபுகளோடு முன்னேறுவதை உறுதிபடுத்த வேண்டும். நம்முடைய மரபியல் அடையாளங்களை அழித்துப்போட்டுவிட்டு, பணக்காரராகவும், தொழிலதிபராகவும், உயர்ந்த பதவிகளிலும் இருப்பதை உண்மையான முன்னேற்றமாகக் கருத இடமில்லை. சீனர்கள் எவ்வளவு பெரிய நிலைமைக்கு உயர்ந்தாலும் தங்கள் மொழியின, கலை, பண்பாட்டுக் கூறுகளை விட்டுவிடாமல் பாதுகாத்து வருவதை நாம் பாடமாகக் கொள்ளவேண்டும்.

கலிடோனியா இளைஞர் மன்றம் நடத்தும் இந்த திருக்குறள் வகுப்பு மொழிவளம் பெற்ற; ஒழுக்கம் நிறைந்த மாணவர்களை நிச்சயமாக உருவாக்கும். தமிழ் மரபியல் அறிந்த மாணவர்களைக் கண்டிப்பாக வளர்த்தெடுக்கும் என்பது உண்மை. இந்த வகுப்புக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பியுள்ள பெற்றோர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இங்கே பயிலும் மாணவர்கள் தொன்மைத் தமிழின் தொடர்ச்சிகளாக இருந்து தமிழை மேன்மைப்படுத்துவார்கள். எதிர்காலத்தில் தமிழையும் தமிழரையும் தாங்குகின்ற தூண்களாக இருப்பார்கள்.


திருக்குறளை வெறும் நீதிநூல் என்று நினைத்துப் படிக்கவும் மனனம் செய்து ஒப்புவிக்கவும் பயன்படுத்த வேண்டாம். அஃது தமிழருடைய அறிவுச் செல்வத்தின் அடையாளமாகும். தமிழர்களுடைய வாழ்வியல் நூலாகும்; தமிழர் மறையாகும். இன்று திருக்குறளை வாழ்க்கை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர்கள் பல ஆயிரம் இருக்கின்றனர். காலப்போக்கில் இந்த எண்ணிக்கை பெருகுவதற்கு இதுபோன்ற திருக்குறள் வகுப்புகள் கண்டிப்பாக பயனளிக்கும்.


இவ்விழாவில், திருக்குறள் வகுப்பாசிரியர் திருமதி பிரேமா அமிர்தலிங்கம் அறிவிப்பாளராகப் பணியாற்றினார். இவருடைய கணவர் திரு.கோ.அமிர்தலிங்கம் விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராவார். கலிடோனியா தோட்ட நல்லுறவு இயக்கத்தின் தலைவர் திரு.அர்ச்சுணன் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றார். திருக்குறள் வகுப்பில் பயிலும் மாணவர்கள் பாடல், ஆடல், கட்டுரை, ஒப்புவித்தல் என பல்வேறு வடிவங்களில் திருக்குறள் படைப்புகளை வழங்கினர். அமிர்தலிங்கம் பிரேமா வாழ்விணையரின் அருமை மகள் செல்வி.அன்புமலர் 10 அதிகாரங்களில் உள்ள 100 குறட்பாக்களை மனனம் செய்ததோடு அதனைக் கவனகம் அமைப்பில் மேடையில் படைத்தும் காட்டி பலருடைய பாராட்டையும் பெற்றார்.


செல்வி அன்புமலரின் அரிய திறனைக் கண்டு மெய்சிலிர்த்துப்போய், அடுத்த ஆண்டில் 500 குறள்களை மனனம் செய்து ஒப்புவித்து மலேசியச் சாதனை புத்தகத்தில் பெயர்பதிக்க வேண்டுமென ஓர் வேண்டுகையை மேடையில் முன்வைத்தேன். அதனை வழிமொழியும் வகையில் மண்டபமே அதிரும்படி கரவொலி எழுந்தது.

No comments:

Blog Widget by LinkWithin