Thursday, June 17, 2010

சுழியமா? பூச்சியமா? ஒரு கல்வியியல் நோக்கு (2/2)


  • தமிழில் பிறமொழிச் சொற்கள் வந்து வழங்குகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இன்னும் சொல்லப்போனால், தமிழ்ப்பள்ளிப் பாடநூல்களில் தமிழ் அல்லாத சொற்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன. அவற்றை எல்லாம் உடனடியாக தூக்கி எறிய வேண்டும் யாரும் இதுவரை போராட்டத்தில் குதித்ததும் இல்லை.
காலந்தோறும் தமிழில் கலைச்சொற்கள்

ஆனால், பத்து, இருபது ஆண்டுக்கு முன்பு இருந்த பாடநூல்களோடு ஒப்பிடுகையில் இன்று ஆயிரமாயிரம் தமிழ்ச் சொற்கள் உருவாகி பிறமொழிச் சொற்கள் இருந்த இடத்தை நிறைவு செய்துள்ளன. (உபாத்தியாயர்)ஆசிரியர், (வியாஸம்)பயிற்சி, (தேகாப்பியாஸம்)உடற்கல்வி, (சுகாதாரம்)நலக்கல்வி, (விஞ்ஞானம்)அறிவியல், (நமஸ்காரம்)வணக்கம், (மலஜலக்கூடம்)கழிப்பறை, (இன்ஸ்பெக்டர்)ஆய்நர், (ஆஸ்பிட்டல்)மருத்துவமனை, (பஸ்)பேருந்து, இப்படியாக ஆயிரக்கணக்கில் சொற்கள் மாறியிருக்கின்றன.

அதுமட்டுமா? நமது கல்வித் துறையில் புதிது புதிதாக அறிமுகமான பாடங்களுக்கு இசைக்கல்வி, வாழ்வியல் திறன், வட்டாரக் கல்வி, குடிமையும் குடியுரிமைக் கல்வியும், நன்னெறிக் கல்வி என்றெல்லாம் அழகுதமிழில் பெயர்சூட்டி கல்வித் துறையில் தமிழை வளப்படுத்தியிருக்கும் கல்வியாளர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.

முன்பு பாடத்திட்டம் என்று இருந்ததைப் பின்னர் கலைத்திட்டம், கலைத்திட்ட விளக்கவுரை, ஆண்டுக் கலைத்திட்டம், என்று மாற்றி, இப்போது கலைத்திட்ட தர ஆவணம் என்றெல்லாம் தமிழை முன்படுத்தியிருக்கும் பணிகள் பாராட்டுக்குரியவை அல்லவா? யாராவது பாடத்திட்ட தர தஸ்தாவேஜு என்று சொல்ல முன்வந்தார்களா? தஸ்தாவேஜு(ஆவணம்), பிரஜை(குடியுரிமை), வருஷம்(ஆண்டு) என்பதை யாரும் வலிந்து புகுத்தவில்லை.


பூச்சியம் சிக்கல் ஏன்? எதற்கு?

ஆனால், இப்போது மட்டும் ‘பூச்சியம்’ (பூஜ்யம்) நிலைபெற வேண்டும் என்று சிலர் முனைப்புக்காட்டுவது ஏன்? இதில், ஏதோ ஒரு பின்னணி மறைந்திருப்பதாக ஐயப்படவேண்டியுள்ளது. முப்பது ஆண்டுக்கு முன்பு பாடநூலில் பூச்சியம் இருந்திருக்கலாம். அப்போது படித்த சிலருக்கு இச்சொல்லே மனதில் ஆழமாகப் பதிந்தும் இருக்கலாம்.

ஆனால் இன்று சூழல் மாறி இருக்கிறது; தமிழ்க்கல்வி விரிந்து வளர்ந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், உலகில் வேறு எங்குமே இல்லாத தரமான தமிழ்க்கல்வி மலேசியாவில் வழங்கப்படுகிறது.

நமது கலைத்திட்டம், பாடநூல்கள், பயிற்சி நூல்கள், துணை நூல்கள், தேர்வுத் தாள்கள் ஆகியவற்றின் தரத்திற்கு நிகராக உலகில் வேறு எங்குமே இல்லை; ஏன் தமிழ்நாட்டில்கூட இல்லை எனத் துணிந்து சொல்லலாம். அறிவியல், கணிதம், உடற்கல்வி, நலக்கல்வி போன்ற பாடங்களுக்கு உலகில் வேறு எங்குமே தமிழ்ப் பாடநூல்கள் இல்லை. அந்தப் பெருமையும் நம்மையே சாரும்.

இன்றைய கணினி உலகத்திற்கு கலைச்சொற்களை கொடையளித்த பெருமையும் மலேசியத் தமிழர்களுக்கு இருக்கிறது. இணையம் என்ற சொல்லை நயனம் இராஜகுமாரனும், www. என்பதற்கு வையக விரிவு வலை என்று மருத்துவர் ஐயா.சி.ஜெயபாரதியும் தமிழ்ச் சொற்களை வழங்கியிருக்கிறார்கள். முரசு செயலியை உருவாக்கி உலகம் முழுவதும் கணினியில் தமிழை எழுத வைத்தவர் நமது முத்து.நெடுமாறன்.

இவ்வாறெல்லாம் தமிழை முன்னெடுத்து வளம்சேர்த்திருக்கும் வரிசையில் ‘சுழியம்’ இணைவதில் எந்தவித குறைபாடும் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழ்ப் பாடநூலில் தமிழே இடம்பெற வேண்டும்

தமிழ்ப் பாடநூலில் தமிழ்தான் இடம்பெற வேண்டும் என்ற மிகமிக எளிமையான ஏரணத்தின் (Logical) அடிப்படையில் ‘சுழியம்’ என்ற சொல் இடம்பெறுவதே சாலச் சிறந்தது. சுழியம் தமிழ்ச்சொல். மேலும், சுழியம் இப்போது பொது மக்கள் வழக்காகிவிட்டது. மலேசிய எழுத்தாளர்களின் நூல்கள், மலேசியாவில் உருவாக்கப்பட்ட அகராதிகள், நாளிதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, பெர்னாமா செய்தி இப்படியாகப் பலதரப்பட்ட நிலையில் சுழியம் இன்று மிகப் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது என்பதை மறுக்கவியலாது.

தொடக்கத்தில் கூறியதுபோல, மாணவர்களின் முன்னறிவு, சுற்றுச் சூழல், ஆசிரியரின் கற்பித்தல் ஆகியவற்றால் ஏற்படுகின்ற பட்டறிவின் அடிப்படையில் மாணவர்களிடையே கற்றல் நடைபெறுகிறது. அந்த வகையில், சுழியம் தொடர்பான முன்னறிவு, சுற்றுச்சூழல், ஆசிரியரின் கற்பித்தல் ஆகிய சூழல்கள் இப்போது உருவாகிவிட்டதால், சுழியம் எனும் தமிழ்ச்சொல்லை மாணவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்வார்கள். ஆகவே, எவ்வித ஐயமுமின்றி சுழியத்தைப் பாடநூலில் தராளமாகப் பயன்படுத்தலாம்; பயன்படுத்த வேண்டும்.


@திருத்தமிழ் ஊழியன், சுப.நற்குணன்

No comments:

Blog Widget by LinkWithin