Sunday, January 10, 2010

தமிழ்ப்பள்ளிகள் நமது பிறப்புரிமை! நம்புங்கள்!



மலேசியாவில் 2010க்கான கல்வியாண்டு தொடங்கி ஒரு வாரம் ஓடிவிட்டது. வழமைபோலவே இவ்வாண்டிலும் தமிழ்ப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

கிட்டதட்ட 20,000 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிவு செய்துள்ளார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். தமிழ்ப்பள்ளிகள் மீது நமது பெற்றோர்களின் கவனம் திரும்பியிருப்பது ஆக்கமான மனமாற்றம். தமிழ்ப்பள்ளியையும் தமிழ்க்கல்வியையும் நிலைப்படுத்துவதில் நமது பெற்றோர்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பது புலனாகி இருக்கிறது.

தமிழ்ப்பள்ளிகள் வெறும் கல்வி நிறுவனங்கள் கிடையாது. மாறாக, மொழி, இனம், சமயம், கலை,பண்பாடு, வாழ்வியல், இலக்கியம் என அனைத்தையும் தழுவியிருக்கும் தமிழ்ப் பண்பாட்டு நடுவம் என்பதை நமது பெற்றோர்கள் உணரத் தொடங்கியிருகிறார்கள்.

தமிழ்ப்பள்ளிகள் இல்லாமல் போகுமானால், அதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பாரிய – பாதகமான விளைவுகளை எண்ணிப்பார்த்து நமது பெற்றோர்கள் தங்கள் தாய்மொழிக் கடமையைச் சரியான காலக்கட்டத்தில் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

நீண்ட காலப் பயணத்தில் தமிழ்மொழிக்கு எதிராக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் அழிப்பு நடவடிக்கைகளுக்கு இதன்வழியாக நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க பெற்றோர்கள் அணிதிரண்டு தமிழ்ப்பள்ளிகளை முற்றுகையிட்டிருப்பது காலத்தால் செய்யப்பட வேண்டிய பணியாகும். அந்த நற்பணியை நமது பெற்றோர்கள் நன்றாகச் செய்திருக்கிறார்கள்.

இதற்காக, இவ்வாண்டில் தங்கள் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிகளில் (முதலாம் ஆண்டில்) பதிவு செய்திருக்கும் நாடு முழுவதிலும் உள்ள பெற்றோர்களுக்குப் பாராட்டுகளைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.


2010இல் தமிழ்ப்பள்ளியில் பதியும் மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்படும் என்று பலராலும் கணிக்கப்பட்டது. இதற்கு பின்வரும் சில காரணங்களும் சொல்லப்பட்டன:-

1)கணிதமும் அறிவியலும் மீண்டும் தாய்மொழிக்குத் திரும்புவதால்

2)எசு.பி.எம்.தேர்வில் தமிழையும் இலக்கியத்தையும் எடுத்துப் படிப்பதில் இழுபறியான சூழல் நிலவுவதால்

3)நாட்டின் மிக விரைவான வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்ப்பள்ளிகள் செயல்படாததால்

4)தமிழ்ப்பள்ளி நிருவாகங்கள் மற்ற பள்ளிகளுக்கு இணையாக திறமையாக இல்லாததால்

5)தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமையாது என்பதால்

ஆனால், இவை அனைத்திலும் அடிப்படையே இல்லை என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

தமிழ்ப்பள்ளிகளுக்கு எதிராகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்யான – போலியான தகவல்களை நமது பெற்றோர்கள் அடித்து நொறுக்கிப் போட்டிருக்கிறார்கள்.

இனியும் இப்படியான தப்பான பரப்புரைகளைக் கேட்டு நம்பிக்கொண்டிருக்க பெரும்பாலான பெற்றோர்கள் அணியமாக(தயார்) இல்லை.

இதற்குத் தக்க சான்று ஒன்றைச் சொல்லலாம். படித்த பெற்றோர்களும், நிபுணத்துறை சார்ந்தவர்களும், பொருள்வளம் கொண்டவர்களும் இப்போது தமிழ்ப்பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்து வருகின்றனர் என்பதே அது.


தம்முடைய ஐந்து குழந்தைகளையும் தமிழ்ப்பள்ளியில் சேர்த்துள்ள முனைவர் டாக்டர் இரா.சிற்றறசு பற்றி அண்மையில் நாளிகையில் செய்தி வந்திருந்தது. தமிழ்ப்பள்ளியில் படித்து இன்று சிறந்த கல்விமானாக உயர்ந்துள்ள இவரும் இவருடைய துணைவியார் திருமதி.சாந்தியும் தமிழ்ப்பள்ளியில் படித்தவர்கள் என்பதாலும் உள்ளத்திலும் உயிரிலும் தமிழ் உணர்வு கலந்திருப்பதாலும் தமிழ்ப்பள்ளியில் படித்தால் வாழ்வில் உயரலாம் என்ற நம்பிக்கை இருப்பதாலும் தங்களின் 5 குழந்தைகளையும் தமிழ்ப்பள்ளியில் சேர்த்துள்ளனர். முனைவர் ஐயா இரா.சிற்றறசு போன்றவர்கள் நாட்டில் பலர் இருக்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை.

அதுமட்டுமல்லாது, நமது அரசியல் தலைவர்கள் சிலர் தங்கள் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளியில் படிக்க வைத்திருப்பதானது, சமுதாயத்தில் பெரிய தாக்கத்தையும் பெற்றோரிடத்தில் மனமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். கூட்டரசு பிரதேசத் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ மு.சரவணன் போன்றோர் தங்கள் பிள்ளையைத் தமிழ்ப்பள்ளியில் சேர்த்திருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இதற்கிடையில், மற்ற பள்ளிகளில் சேர்க்கப்படும் நமது குழந்தைகள் பல மன உலைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பதை பெற்றோர்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, தேவையில்லாத மற்ற மற்ற பாடங்களைப் படிக்க நமது குழந்தைகள் கட்டாயப்படுத்தப்படுவதைப் பெற்றோர்கள் அறிந்துள்ளனர்.

இதனைப் பற்றி அண்மையில் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மா.மனோகரன் மிகவும் கண்டித்துள்ளார். அதுமட்டுமல்லாது, இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு நமது பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளிகளையே தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் அறைகூவல் விடுத்துள்ளார்.

இதனையெல்லாம் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது, தமிழ்ப்பள்ளிகளின் வாழ்வும் நீடுநிலவலும் (survival) மட்டுமே நமக்கு முழுமையான பாதுகாப்பையும் முன்னேற்றமான எதிர்காலத்தையும் வழங்கும் என்பதை நமது மக்கள் உணர்ந்துகொண்டு வருகின்றனர் என்பது தெரிகிறது.

இந்த உணர்வு படிப்படியாக இன்னும் வளருமானால், பன்முகத் தன்மையை ஏற்றுக்கொண்டு பல்லினச் சூழலில் ஒரே மலேசியாவை வளர்த்தெடுக்க விரும்பும் கனவு கண்டிப்பாகப் பலிக்கும். அப்படி பலிக்கின்ற நாளில், மலேசியர்கள் அனைவரும் அவரவர் மொழி, இன, சமய, பண்பாட்டு அடையாளத்தை இழந்துவிடாமல் ஒன்றுபட்டு வாழ்கின்ற சூழல் உலகத்தையே வியக்கச்செய்யலாம்.

மேற்கோள்:-
1.மலேசிய நண்பன் செய்தி (5 & 6-1-2010)
2.மலேசியாஇன்று இணையத்தளம்

7 comments:

Anonymous said...

//கூட்டரசு பிரதேசத் துனையமைச்சர் மாண்புமிகு டத்தோ மு.சரவணன் போன்றோர் தங்கள் பிள்ளையைத் தமிழ்ப்பள்ளியில் சேர்த்திருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.//

மிக நல்ல செய்தி ஐயா. துணையமைச்சர் சரவணன்போலும் தகைமையர் இன்னும் பலர் சமுதாயத்துக்கு வேண்டும்.

அ. நம்பி

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் அ.நம்பி,

டத்தோ மு சரவணன் தமிழ்ப்பற்றையும் புலமையும் நாம் எல்லாருமே அறிவோம்.

வாய்ச்சொல்படியே வாழ்வை வடிவமைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு டத்தோ அவர்கள் நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்.

இப்படி நாட்டில் பலர் இருக்கிறார்கள்.
இன்னும் பலர் இப்படி உருவாக வேண்டும். நமது குமுகாயத்திற்கு நல்லது.

Sathis Kumar said...

திருத்தமிழ் ஐயா சுப.நற்குணன்,

நீங்கள் இப்படி கூறுகிறீர்கள், ஆனால் தமிழர்கள் இந்நாட்டில் ஓரங்கட்டப்படுவதற்கே தமிழ்ப் பள்ளிகள்தாம் காரணம் எனவும், தமிழ்ப்பள்ளிகளை ஒழிக்க வேண்டும் எனவும் ஒரு மடையன் கூறுகிறான்..

இங்கு பாருங்கள் :
http://toffeesturn.blogspot.com/2009/09/time-for-tamils-to-break-loose.html

Tamilvanan said...

த‌மிழ்ப் ப‌ள்ளிக‌ளில் மாண‌வ‌ர்க‌ள் எண்ணிக்கை உய‌ர்வு ம‌கிழ்ச்சிக்குறிய‌து.க‌ட‌ந்த‌ ஆண்டு இவ்வாண்டு விகிதாசார‌ உய‌ர்வு , எல்லா ப‌ள்ளிக‌ளின் மாண‌‌வ‌ர்க‌ளின் சேர்க்கை எவ்வ‌ள‌வு என்ப‌த‌னை அல‌சியிருந்தால் ப‌திவு இன்னும் சிற‌ப்பாக‌ இருந்திருக்கும்.

டத்தோ மு சரவணன் தமிழ்ப்பற்றை பார‌ட்டுவோம்.த‌மிழ் ப‌ள்ளிக‌ளில் பிள்ளைக‌ளை சேர்த்த‌ பெற்றோர்களை போற்றுவோம்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் ஒற்றன்,

நீங்கள் சுட்டிய அந்த வலைப்பதிவைப் படித்துப் பார்த்தேன். அதில் சிந்திக்கத் தக்க விடயமோ அல்லது எதிர்க்க வேண்டியதோ எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்திய அரசியலாளர்களின் அரசியல் விளையாட்டுகளில் சலித்துப்போன ஒருவரின் புலம்பலாக அதனைப் பார்க்கிறேன்.

அரசியலாளர்கள் மீது உள்ள சீற்றம் தமிழ்ப்பள்ளிகள் பக்கம் பாய்ந்திருக்கிறது. அவ்வளவுதான்.

மேலும், அவர் தமிழ்ப்பள்ளி வரலாறு - தமிழ்ப்பள்ளிகளின் சூழல் - தமிழ்ப்பள்ளிகள் காக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி கொஞ்சமும் சிந்தித்து அறியாதவர் போலும்.

அனைத்திற்கும் மேலாக, தமிழன் என்ற இன அடையாளத்தோடு வாழ வேண்டும் என்ற இனமான உணர்ச்சி அவரிடம் இருப்பதாகவும் தெரியவில்லை.

அரசியலமைப்புச் சட்டத்தில் நமக்கு இருக்கும் உரிமையை இழந்து ஏதிலியாய் - அகதியாய் வாழ்வதற்கு இவரைப் போன்றவர்கள் உடன்படுவது போல நம் எல்லாரையும் ஆகச் சொல்கிறார் அவர்.

அந்தக் கருத்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

உனதுரிமை இழக்காதே; பிறருரிமை பறிக்காதே என்ற கோட்பாடில் நாம் சொல்லுவதை சொல்வோம்.. செய்ய முடிந்ததைச் செய்வோம்.

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி ஒற்றரே. இப்படி இன்னும் செய்தி ஓலைகள் இருந்தால் அறியச் செய்யவும்..!!

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,

//த‌மிழ் ப‌ள்ளிக‌ளில் பிள்ளைக‌ளை சேர்த்த‌ பெற்றோர்களை போற்றுவோம்.//

இந்தப் பெற்றோர்கள்தான் நாட்டில் உண்மையிலேயே தமிழை வாழவைப்பவர்கள்.

இவர்கள் மட்டும் இல்லாது போனால், எண்ணாயிரம் ஆசிரியர்களுக்கு வேலை இல்லாமல் போகும்.. 523 தலைமையாசியர்கள் பொறுப்பு காணாமல் போகும்.. கல்வித்துறை அதிகாரிகள் இல்லாமல் போவார்கள்.. பட்டப்படிப்புகள் பாடையில் போய்விடும்.. நாளிதழ்கள் நாறிப்போகும்.. ஊடகங்கள் ஒழிந்துபோகும்..

ஆகவே,

//த‌மிழ் ப‌ள்ளிக‌ளில் பிள்ளைக‌ளை சேர்த்த‌ பெற்றோர்களை போற்றுவோம்.//

Unknown said...

வணக்கம் சுப.நற்குணன் அய்யா!
நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு திருத்தமிழில் உலா வருகிறேன்.

இதில் நாம் பெருமை பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது???

தமிழர்கள் அனைவரும் தத்தம் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் என்றால்தானே நமக்கெல்லாம் பெருமை.

50 % மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் இன்னும் தங்கள் பிள்ளைகளைப் பிறமொழிப் பள்ளிகளுக்குத்தானே அனுப்புகின்றனர்.
இது மாபெரும் வெட்கக்கேடுதானே...?

கேட்டால்....
தமிழ் என்ன சோறு போடுமா...?
கஞ்சி ஊற்றுமா...?
என சோற்றுக்கு மட்டும் பிறந்தவர்கள்போல் கேள்வி கேட்பார்கள்?

மாண்புமிகு டத்தோ சரவணன் மட்டும் போதாது...! ஏனைய ஆளுங்கட்சி தலைவர்களும் எதிரணித் தலைவர்களும் டத்தோ சரவணன் அவர்களைப் பின்பற்ற வேண்டும்.

அனுப்புவார்களா...???

அன்புடன்,
சந்திரன், ரவாங்

Blog Widget by LinkWithin