Thursday, December 17, 2009

தமிழ் இயக்கங்கள் எதிர்க்கட்சிகளின் கைக்கூலிகளா?



எசுபிஎம் எனப்படும் மலேசியக் கல்விச் சான்றிதழ் தேர்வு தொடர்பாக நிலவிவரும் நெருக்கடி இன்னமும் முற்றிலுமாக ஓய்ந்தபாடில்லை. இந்த நெருக்கடியிலிருந்து தமிழை மீட்கவும் இலக்கியத்தைக் காக்கவும் தமிழ் சார்ந்த பொது இயக்கங்கள் போராடி வருகின்றன.

குறிப்பாக, எசுபிஎம் 12 பாட மீட்புக் குழுவினர் என தங்களை அடையாளப்படுத்தி இருக்கும் ஆ.திருவேங்கடம் தலைமையிலான குழுதான் இந்தப் போராட்டத்தை முழுவீச்சுடன் முன்னெடுத்துள்ளது.

இக்குழுவில், மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்திய இளைஞர் மன்றம், உலகத் தமிழர் மாமன்றம், தமிழ் அறவாரியம், சிவநெறி வாழ்க்கை மன்றம், வள்ளலார் நற்பணி மன்றம், மலேசிய இந்தியர் மேம்பாட்டுக் கழகம், மலேசியத் திராவிடர் கழகம், மலேசியத் தமிழ்நெறிக் கழகம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல இயக்கங்கள் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டு தமிழுக்காகக் குரல்கொடுத்து வருகின்றன. தவிர, சு.வை.லிங்கம் தலைமையிலான தமிழ்க் காப்பகமும் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் மீட்டெடுக்கும் பணியில் தொடக்கத்திலிருந்தே குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றி வருகின்றது.

இதற்கிடையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு தரப்பையும் சேர்ந்த தலைவர்களும் இந்தச் சிக்கல் தொடர்பாகக் கருத்துரைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், மீட்புக் குழுவினருக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்; அவர்கள் ஏற்பாட்டில் நடந்த கவன ஈர்ப்புப் பேரணியிலும் கலந்துகொண்டுள்ளனர்.


இப்படி, பல தரப்பினரும் ஒன்றுகூடி ஒரே குரலில் ஓங்கி ஒலிக்கும் சமயத்தில், “தமிழுக்காகப் போராடும் இவர்கள் எதிர்க்கட்சிகளின் கைக்கூலிகளாகச் செயல்படுகின்றனர்” என்ற ஒரு குற்றச்சாட்டைச் சிலர் முன்வைத்துள்ளனர். அதனை உறுதிபடுத்துவதற்குச் சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. அவை:-

1.இந்திய சமுதாயம் தொடர்பாக அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கிறது. அதற்காக சில நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த முடிவுகளை எதிர்க்கும்படி சில அரசு சார்பற்ற இயக்கங்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன.

2.இந்திய சமுதாயத்தில் சிறு சிறு குழுக்கள் பல அரசு சார்பற்ற இயக்கங்கள் என்று காளான்களைப் போல முளைத்துக் கொண்டிருக்கின்றன. அவை எதிர்க்கட்சிகளுக்குத் துணைபோகின்றன.

3.இந்த இயக்கங்களுக்கு எதிர்க்கட்சிகள் நிதியுதவி செய்கின்றன.

4.இவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக இந்திய மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

5.இந்த இயக்கங்கள் கருத்தரங்குகளை நடத்தவும், விடுதிகளில் (ஓட்டல்) கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தவும் எதிர்க்கட்சிகள் உதவுகின்றன.

6.இந்த இயக்கங்களின் தலைவர்கள் சிலர் எதிர்க்கட்சிகளின் முக்கியப் பதவிகளில் கூட இருக்கின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் முழுப் பொறுப்பு மக்களைச் சார்ந்தது. ஏனெனில். நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு இடையில் அரங்கேறும் அரசியல் போட்டா போட்டிகளும் நுண்ணரசியல் விளையாட்டுகளும் மக்களுக்குத் தெரியாமல் இல்லை. அந்த அளவுக்கு மக்கள் இப்போது விழிப்புணர்வு அற்றவர்களாகவும் இல்லை.

மாற்றுக் கருத்துகளை வெளியிடுவதும்; மொழி இன நலனுக்காகப் போராடுவதும்; கட்சி, கொள்கைகளை மறந்து பொதுநலத்துக்காக ஒன்றுபடுவதும் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு நிகரானது என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல.

அரசாங்கத்தின் ஒரு கொள்கையானது குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு எதிர்மறையான விளைவுகளை நீண்ட காலத்தில் ஏற்படுத்திவிடும் என்பதால், அதனை எதிர்த்து நிற்பதும்; மாற்றுக் கருத்து கூறுவதும்; மாற்றத்தைக் கோருவதும் மக்களாட்சிக்கு மாண்பினை அளிக்குமே தவிர ஒருபோதும் மருட்டலாகாது.

ஆகவே, தமிழைக் காக்கவும் இலக்கியத்தை மீட்கவும் போராடும் தமிழ் இயக்கங்களின் செயற்பாடுகளும் மக்களாட்சி நடைமுறையில் இயல்பானவைதாம். அதேவேளையில், மொழியினநல அடிப்படையில் பார்க்கும்போது இவர்களின் போராட்டம் பெரிதும் போற்றுதலுக்கு உரியது.

அந்த வகையில், தமிழ் இயக்கங்களின் நகர்வுகளும் நடவடிக்கைகளும் எந்த அளவுக்கு உண்மையானவை; நம்பகத்தன்மை கொண்டவை; நியாயமானவை; நன்மையானவை என்பதைப் பொதுமக்களும் காலமும்தான் தீர்மானிக்க முடியும்.

11 comments:

வலைப்பதிவாளர் said...

வணக்கம் ஐயா,

//மாற்றுக் கருத்துகளை வெளியிடுவதும்; மொழி இன நலனுக்காகப் போராடுவதும்; கட்சி, கொள்கைகளை மறந்து பொதுநலத்துக்காக ஒன்றுபடுவதும் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு நிகரானது என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல.//

முற்றிலும் உண்மை இது. அரசியலைப்புச் சட்டம்,மக்கள்தம் கருத்துக்களையும் எண்ணங்களையும் நன்முறையில் அரசிடம் தெரிவிப்பதற்கு உரிமை கொடுத்துள்ளது. அவ்வகையில் மொழி இன நலனுக்காகக் குரல் எழுப்புவது அரசுக்கு முரணாகாதது. எல்லா இயக்கங்களும் மொழியைக் காப்பதற்காக ஓர் அணியில் திரண்டிருப்பது பாராட்டுக்குரியதும் போற்றதர்குரியதாகும். இதைச் சில தரப்பினர் அரசியலாகாமல் இருந்தால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி எனக்கு.

நன்றி.

மு.மதிவாணன்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் மு.மதிவாணன்,

மீண்டும் உங்கள் மறுமொழி கண்டதில் மகிழ்ச்சி. அடிக்கடி வாருங்கள்.

//மக்கள்தம் கருத்துக்களையும் எண்ணங்களையும் நன்முறையில் அரசிடம் தெரிவிப்பதற்கு உரிமை கொடுத்துள்ளது. //

மாற்றுக் கருத்து சொல்பவர்களை எதிரிகள் போல பலரும் நினைக்கிறார்கள். அரசியலில் இதுவே மூலதனமாகவும் இருக்கிறது.

இங்கு, எல்லாவற்றிலும் அரசியல் ஊடுருவல் இருப்பது பெரும் குறைபாடு.

அரசியலாளர்கள் எல்லா விடயத்திலும் மூக்கை நுழைப்பது தவிர்க்கப்படுதல் நல்லது.

அரசு அதிகாரிகள் நடுநிலையோடும் நெறியோடும் பணியாற்ற பழக்கப்படுத்தப்பட வேண்டும்.

தடுமனாகிக் கொண்டிருக்கும் இனவியல் சித்தாந்தங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பேராசையும் தன்னலமும் பெருகிவிட்ட இன்றைய நிலையில் இதெல்லாம் நடப்பது எளிதானது அல்ல.

subra said...

எனக்கு தெரிந்து ஒரே ஒரு வழி ,hindraf,செய்ததைப்போல் எல்லா தமிழர்களும் ஒன்று கூடி
கோல லம்புருக்கு பொய் எங்களுக்கு இனி ம .இ.கா வேண்டாம் என்று பெரிய மறியல்
செய்வோம் ,தமிழர்கள் மலேசியாவில் மானத்தோடு வாழ வேண்டும் என்றால்
இதை தவிர வேறு வழி இல்லை

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் சி.நா.மணியம்,

//தமிழர்களும் ஒன்று கூடி
கோலலம்புருக்கு போய் எங்களுக்கு இனி ம.இ.கா வேண்டாம் என்று பெரிய மறியல் செய்வோம்//

என்ன ஐயா நீங்கள் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? உங்களையும் கைக்கூலி என்று சொல்லி பெர்னாமா, டிவி2, டிவி3, என்டிவி, மின்னல் என எல்லா ஊடகங்களிலும் பரப்புரை செய்யப் போகிறார்கள்.

கவனம் ஐயா!!!!!!!!

கோவி.மதிவரன் said...

வணக்கம் வாழ்க

மொழிக்கும் இனத்திற்கும் கேடு நிலவுகின்ற பொழுது துணிந்து குரல் கொடுப்பவர்கள் தான் உண்மையான தமிழர்கள். மாறாக இவர்களைக் எதிர்க்கட்சிகளில் கைகூலிகள் என்று சொல்வது ஓர் அரசியல் விளையாட்டு. இவர்களும் ஒன்றும் செய்யமாட்டார்கள். செய்பவர்களையும் விடமாட்டார்கள். இதுதான் இன்றைய அரசியல் கட்சிகளின் நிலை. அரசுக்குக் கங்காணி வேலை பார்ப்பதற்காக தன் இன மொழி உரிமையை விட்டுக் கொடுத்துவிடும் அரசியல் கயவர்கள் இவர்கள். இவர்களைப் போன்ற தன்னலமிக்க அரசியல் வாதிகள் இருக்கின்ற வரை தமிழனுக்கு மீட்சியில்லை. இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு அடுத்தவனுக்கு அடிமைதான்.

N.Thamilvanan said...

தமிழால் ஒன்றுபட்டு தமிழுக்கெனக் குரல் கொடுப்பது 'மெல்லத் தமிழினிச் சாகும்' என்ற கூற்றைப் பொய்யாக்கியுள்ளது. இந்த ஒற்றுமை நீடித்து நிலைக்க வேண்டும். மக்கள் ஒன்றுபட்டிருப்பது அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

போராடித்தான் பெறவேண்டும் என்ற நிலை இந்நாட்டில் இருக்கும்வரை நாம் ஒன்றுபட்டுத்தான் ஆகவேண்டும்.
போராடத்தான் வேண்டும்.

மண்ணுக்காகப் போராடி உயிர்நீத்த (ஈழப்)போராளிகளும் மொழிக்காகப் போராடும் போராளிகளும் நிகரானவர்களே.

அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அடிப்படை மொழி உரிமை கூட நமக்குத் தரப்படாவிடில் நம் குடியுரிமையின் பொருள்தான் என்ன?

ந.தமிழ்வாணன்.
ஸ்கூடாய்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் கோவி.மதிவரன்,

வாருங்கள் ஐயா. நீண்ட காலமாக உங்களைக் காணவில்லையே? உங்கள் வலைப்பதிவும் புதுப்பிக்கப்படாமல் இருக்கிறதே! வேலைப் பளு அதிகமோ?

//இவர்களைப் போன்ற தன்னலமிக்க அரசியல் வாதிகள் இருக்கின்ற வரை தமிழனுக்கு மீட்சியில்லை. இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு அடுத்தவனுக்கு அடிமைதான்.//

அடிமையாக வாழ்வதே சிலருக்கு நல்வாழ்வாக இருக்கும்போது யார் என்ன சொல்லி என்ன பயன்?

மொழி, இனம், குமுகாயம், மானம், மரியாதை என எதையும் விட இவர்களுக்குத் தன்நலமே முக்கியமாக இருக்கிறது.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் ந.தமிழ்வாணன்,

நலமா ஐயா? நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் மறுமொழி கண்டதில் மகிழ்ச்சி.

//மண்ணுக்காகப் போராடி உயிர்நீத்த (ஈழப்)போராளிகளும் மொழிக்காகப் போராடும் போராளிகளும் நிகரானவர்களே. //

உங்கள் வரிகள் நமது மொழிப் போராளிகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவதாக அமையட்டும்.

மனோவியம் said...

தமிழன் என்ற முறையில் குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் குரல் கொடுக்க வேண்டும் ஐய.ஆளும் கட்சியோ இல்லை எத்ரிக்கட்சியோ..தமிழுக்கு ஆபத்து என்னும் பொழுது இனைந்து கைக்கோர்பவன் தமிழ் வித்து ஆக இருப்பான்.

Tamilvanan said...

இன்று ந‌ம்மிட‌ம் உள்ள‌ இய‌க்கங்க‌ளில் எத்த‌னை இய‌க்க‌ங்க‌ள் த‌ன‌து சுய‌ ப‌ல‌த்தில் உள்ள‌ன‌?
ஒரு வகையில் எல்லா இய‌க்க‌ங்க‌ளும் ஏதோ ஒரு வ‌கையில் ம‌த்திய‌ மாநில‌ அர‌சாங‌க‌ மான்ய‌த்தை, உத‌வியை எதிர் பார்க்கும் நிலையிலேயே உள்ள‌ன‌.( உண்மையில் ப‌ல‌ இய‌க்க‌ங்க‌ள் அர‌சாங்க‌ மான்ய‌த்தை குறி வைத்தே தொட‌ங்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌). இதில் ஒரு சில‌ இய‌க்க‌ங்க‌ள் ம‌ட்டுமே ச‌முதாய‌த்திற்கென குர‌ல் எழுப்புகின்ற‌ன‌( அதுவும் மக்களின் உணர்வுகளை திருப்தி ப‌டுத்த‌ வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே ) ஒரு சில‌ இய‌க்க‌ங்க‌ள் தொண்ட‌ர்க‌ளின் நெருக‌க்க‌த‌லுக்காக‌ குர‌ல் எழுப்புகின்ற‌ன‌. சில‌ இய‌க்க‌ங்க‌ள் உற‌ங்குகின்ற‌ன‌, அதை விட‌ கேவ‌ல‌ம் ப‌ல‌ இய‌க்க‌ங்க‌ள் உற‌ங்குவ‌து போல் ந‌டிக்கின்ற‌ன‌. இவை யெல்லாம் ந‌ம்பிக்கை துரோக‌ம் இல்லையா? இய‌க்க‌ங்க‌ள் வ‌ச‌திக் கேற்ப‌ சோர‌ம் போவ‌து இங்கு வாடிக்கையாகி விட்ட‌ ஒன்றுதானே.ச‌முதாய‌ உண‌ர்வுகளை ம‌ட்டும் முன் வைத்து சமுதாய நலனுக்காக பாடுபடுகின்ற இயக்கங்கள் நாட்டினில் உள்ளனவா என்று கேள்வி கேட்கும் நிலை அல்லவா ஏற்படுள்ளது .
இந்த இயக்கங்களை அரசாங்கத்தின் கைக்கூலிகள் என அழைக்கலாமா?

அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிப்பதும் எதிர்ப்பதும் ஜனநாயக முறையில் ஒன்று. அதனை தனி மனிதனாகவோ இயக்கமாகவோ இருந்து செய்யலாம். உண்மையில் நாட்டை நேசிப்பவன்தான் அரசாங்கத்தின் தவறான கருத்துக்களை விமர்சிப்பான். எதிர்கால சமுகம் நலம் வாழ வேண்டும் எல்லாவற்றிற்கும் ஆமாம் சாமி போடக் கூடாது.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,

நம் நாட்டுப் பொது இயக்கங்கள் பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தும் உண்மையே..!

நீங்கள் சொல்ல மறந்த ஒன்றைச் சொல்லவா?

சிலருக்கு தலைவர் பதவி வேண்டும் என்பதற்காகவே பல இயக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. உண்டா இல்லையா?

எனினும், உண்மையாகவும் உணர்வோடும் தொடர்ந்து போராடும் தமிழ் அமைப்புகளும் இருக்கின்றன. அவர்களுக்குத் தலை தாழ்த்தி வாழ்த்து சொல்லுவோம்.

//உண்மையில் நாட்டை நேசிப்பவன்தான் அரசாங்கத்தின் தவறான கருத்துக்களை விமர்சிப்பான். //

இந்தத் தெளிவு எல்லாருக்கும் இருந்துவிட்டால், நாடு இன்னும் வளமாகுமே ஐயா!!

கிளைகளை வெட்டுப்போடுவது என்பது மரத்தைச் சாய்ப்பதற்கு அல்ல.. அது இன்னும் விருட்டமாக வளர்ப்பதற்குத்தான். இது மரமண்டைகள் சிலருக்கு ஏறுவதே இல்லையே.. என்ன செய்ய?

ஆமாம் சாமி போடுபவர்களுத்தானே பட்டம், பதவி, பணம், வாய்ப்பு, வசதி எல்லாமும் கிடைக்கிறது.

Blog Widget by LinkWithin