Wednesday, December 16, 2009

இந்திய இந்தியனும் மலேசிய இந்தியனும்


‘இந்திய இனத்தவர் கூச்சல் போட விரும்புபவர்கள்’ என்று எழுதி பரபரப்பை ஏற்படுத்திய நாளிகை ஆசிரியர் ஒருவர், ஒரு வாரத்திற்கு தாம் எழுதுவதை நிறுத்திக்கொள்ளப் போவதாக முறுக்கிக் கொண்டிருக்கிறார்.

மலேசியாவில் வெளிவரும் ‘ஊத்துசான் மலேசியா’ எனும் மலாய் நாளேட்டின் முகமை ஆசிரியர் சைனி அசான். அவர் எழுதிவரும் ‘சுவிட்’ (Cuit – தமிழில் சீண்டல்) பகுதியில் இன்று (16.12.2009) ஒரு கேலிச்சித்திரம் போட்டு செய்தியும் எழுதியுள்ளார்.

இந்தக் கேலிச்சித்திரத்தில் சைனி அசானுடைய வாய் ஒட்டப்பட்டது போலவும்; அவருடைய கணினி திரையில் ‘தூதுப்’ (TUTUP தமிழில் ‘மூடு’) என்று எழுதப்பட்டது போலவும் காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அவருடைய கையும் காலும் கட்டப்பட்டு இருப்பதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதன்வழி, இந்த வாரத்தில் வாயை மூடிக்கொண்டும், எழுதுவதை நிறுத்திக்கொண்டும் இருக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.


வாயை மூடிக்கொள்ள வேண்டிய அளவுக்கு அவருக்கு என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறீர்களா? தொடருங்கள்...

அதாவது கடந்த 9.12.2009இல் தன்னுடைய சிறப்புப் பகுதியில் சைனி அசான் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ‘இந்திய இந்தியர்கள், மலேசிய இந்தியர்களின் கதை’ என்பது அதன் தலைப்பு.

அக்கட்டுரையில், ‘இந்திய இனத்தவர் கூச்சல் போட விரும்புபவர்கள்’ என்று கூறியிருந்தார். இதற்கு அவர் கூறிய சான்று என்ன தெரியுமா? அண்மையில் அவர் ஐதிராபாத் சென்றிருந்தாராம். அவர் தமிழ், இந்திப் படங்கள் பார்ப்பாராம். இந்தப் பட்டறிவின் அடிப்படையில் அவர் கண்டுபிடித்து எழுதியது இதுதான்.

“இந்திய நாட்டில் வாழும் இந்தியர்கள் கோளாறு குளறுபடிகளோடு வாழ்பவர்களாம். அந்த பண்பாடு இங்கே மலேசியாவில் உள்ள இந்தியர்களிடமும் எதிரொலிக்கிறதாம். இந்தியர்கள் மற்றவரைவிட மாறுபட்டவர்களாம். அதாவது, இந்திப் படங்களிலும் தமிழ்ப் படங்களிலும் அவர்களின் பண்பாட்டைப் பார்க்க முடியுமாம். அவர்கள் எப்போது பார்த்தாலும் கூச்சல்.. கூச்சல்.. கூச்சல் போட்டுக்கொண்டே இருப்பார்களாம்.

அதேபோல, மலேசியாவில் உள்ள இந்தியர்களும் கூச்சல் போடுகிறார்களாம். இங்கே கூச்சல் போடுபவர்கள் அனைவரும் நிபுணர்களாக, வழக்கறிஞர்களாக, அரசியலாளர்களாக இருக்கிறார்களாம். நன்குப் படித்தவர்கள் எல்லாரும் அதிகம் கூச்சல் போடுகிறார்களாம்.”


இது எப்படி இருக்கிறது..?

இந்த எழுத்தாளர் இப்படி ஒரு கருத்தை ஏன் எழுதினார் என்பதையும் இங்குச் சொல்ல வேண்டும்.

மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பிராக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு என்.குலசேகரன் (இவர் ஒரு வழக்கறிஞர்) அண்மையில் “மலாய்க்காரர் மேலாண்மைக் கொள்கையை அடியோடு வேரறுக்க வேண்டும். அதற்குப் பதிலாக மலேசிய மக்கள் மேலாண்மைக் கொள்கையை முன்னெடுக்க வேண்டும்” என்று நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

இந்தப் பேச்சினால் சினமடைந்துபோன சைனி அசான் எனும் மலாய்க்கார ஊடகவியலாளர், மேலே சொன்ன செய்திகளை எல்லாம் குறிப்பிட்டு என்.குலசேகரனை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களையே வசைபாடி எழுதியிருந்தார்.

மலேசிய இந்தியர்களை மிகவும் இழிவுபடுத்தி எழுதிய அவருக்கு எதிராக மாண்புமிகு என்.குலசேகரன் உள்பட, ஆளும் / எதிர்க்கட்சித் தலைவர்களும், பொது இயக்கங்களும், தனியாட்களும் படையெடுத்துக் காவல்துறையில் பல புகார்களைச் செய்தனர்.

இதனால்தான் அந்த ஊடகவியலாளர் ஒரு வாரத்திற்கு எழுதப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் போலும்.

இது உண்மையிலேயே அவருடைய முடிவா அல்லது அண்டப் புளுகா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

அடுத்த வாரம் அவருடைய தூவலும் (பேனா) அந்த நாளேடும் மீண்டும் ஒரு நஞ்சை கக்காமல் இருக்குமா?

4 comments:

மனோவியம் said...

எனது கவிதை ....5 நாட்களுக்கு முன் பதிவேற்றினேன் ஐயா.
நம்மை இழிவாக எழுதிய பிறகு நான் எழுதிய கவிதை.,,,,மனதுக்கு வருத்ததான் மற்ரவர்களை தரம் தாழ்தி எழுதுன்றேன் என்று ,,,,ஆனால் மற்றவர்கள் நம்மை எப்பொழுது இழிவாகத்த எழுதுக்கின்ற்னர்..என்ன செய்யா?

அல்கிசா லனுன்.......


உண்மைகளை சொன்னால்
உறுத்தும் இவர்களுக்கு
ஊமைகளாய் இருந்தால்
உத்தமர்கள் என்பார்கள்

உரிமைக்காக போராடினால்
உதவாக்கரை என்பார்கள்
உணர்விழந்து நின்றால்
உருப்படுவாய் வா என்பார்கள்



மொழிக்காக விறுக்கொண்டால்
வாய் பேசும் வாயாடிகள்
குரைக்கும் நாய் என்பார்கள் - நாம்
வாய் மூடி இருப்பதோ இவர்களின் சுகம்?

நம் ரத்தம் இவர்களுக்கு சுண்டக்காய்
இவர்களின் ரத்தம் பொடலங்காய்?
ரத்த வெறிப் பிடித்த பேய் கூட்டம்
ஓதுவதோ உத்தமர் கோசம்

உத்தமர் ரத்தமா - இல்லை
ஒருவர் ரத்தமா உங்களுடையது
கலந்து ஒடும் சாக்கடை நீ
கரைந்து அழைப்பது எங்களை ஏன்?

திருக் கூட்டமா இது - கடற்
திருடர்க் கூட்டம் எங்கும்
திருந்தா கூட்டம் இது - மதி
திருந்தா மடமையர் கூட்டம்

நம் உணர்வினை சொன்னால்
நம்மை மதிக் கெட்டவர் என்பார்
மாற்றுக் கருத்துச் சொன்னால்
மடையர் கூட்டம் என்பார்

வார்த்தைகள் வேண்டாம் - இனி
வாக்கு மட்டும் போதும்
சிதைந்தது போது - இனி
சிந்தித்திட வேண்டும்

சுகந்திர நாட்டில் ஏன் இந்த தடை?
பேசித் தீர்க்க முடியாத?
ஏசினால் தான் உனக்கு முடியுமா?
குரைத்தால்தான் உனக்கு நிம்மதி?
வெறிப் பிடித்த நாய் ஜைனி......(சனி.)
எங்கள் வேதனை எப்படி புரியும் உனக்கு?

Tamilvanan said...

//கேளிச்சித்திரம்// கேலிச்சித்திரம். எது சரி அல்லது இரண்டுமே சரியா ? வெவ்வேறு அர்த்கங்கள் கொண்டவையா ?

இதுவரை ஆசிரியர் சைனி அசான் மீது பாரிசான் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கமால் இருப்பது, அரசாங்கமும் அவரின் கருத்தை ஆமோதிக்கிறது போலும். இது தொடருமானால் இந்திய மக்கள் உத்துசான் பத்திரிக்கையை மட்டுமின்றி பாரிசானையும் நிராகரிக்க வேண்டும் .

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,

////கேளிச்சித்திரம்// கேலிச்சித்திரம். எது சரி//

கேலிச்சித்திரம் என்பதே சரியானது. தவற்றைத் திருத்திவிட்டேன். சுட்டலுக்கு நன்றி.

subra said...

இன்னுமா utusan இதை தமிழர்கள் படிக்கிறார்கள் ,இவன் என்னா
இன்று மட்டும்தானா எழுதறான் ,அட கருமமே . சி.நா.மணியன்

Blog Widget by LinkWithin