ஆளும் கட்சித் (தமிழ்த்)தலைவர்களும் சரி, எதிர்கட்சித் தலைவர்களும் சரி இப்போது மாறி மாறி குரல் கொடுக்கிறார்கள்; இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசுவேன் என்கிறார்கள்; தமிழைக் காப்போம் என்கிறார்கள்; ஒன்றுபட்டுப் போராடுவோம் என்கிறார்கள்.
இப்படியாக, எசுபிஎம் தேர்வில் தமிழ்மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் தற்காப்பதற்கான முனைப்பும் உணர்வும் தமிழர்களிடையே உரத்துக் காணப்படுகிறது. இதில், இவருடைய போராட்டம் சரி; அவருடைய பேச்சு சரியல்ல; இவர் பெயர் வாங்கப் பார்க்கிறார்; அவர் அரசியல் ஈட்டம்(இலாபம்) தேடுகிறார் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது.
இதுவொரு சமுதாயத்தின் உரிமை தொடர்பான விடயம். மலேசியத் தமிழர்களின் மொழிவழியான இன அடையாளத்தைத் தற்காப்பதற்கான போராட்டம். தமிழ்மொழியின் இருப்பை இந்த நாட்டில் உறுதிபடுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை.
ஆகவே, எல்லாரும், எல்லாத் தரப்பினரும் ஒரே இலக்கில், ஒரே நோக்கத்தில், ஒரே குரலில், ஒரே குடையின்கீழ் அணிதிரண்டு நிற்கவேண்டியது இன்றியன்மையாத ஒன்று. அப்போதுதான் நமது கோரிகையில் இருக்கின்ற நியாயப்பாடு, உண்மைத்தன்மை சம்பத்தப்பட்ட தரப்பினருக்குப் புரியும்; நாம் எதிர்பார்க்கும் விடிவும் விளைவுகளும் நடக்கும்.
இவ்வாறான போராட்டங்களின் வெற்றிக்குப் பலருடைய பங்கும் ஆதரவு தேவை என்றாலும், ஊடகத்தினரின் பணி மிக முக்கியமானது. மலேசியச் சூழலில், தமிழ் நாளிதள்களைத்தான் நாம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம், இங்கு தமிழ் நாளிதழ்களைத் தவிர ஒலி - ஒளி ஊடகங்கள் அனைத்தும் இந்தப் போராட்டத்திற்குத் துணைநிற்க இயலாது - முடியாது என்பது வெள்ளிடை மலை.
மலேசியத் தமிழ் நாளிகை வரலாற்றில் தமிழவேள் கோ.சாரங்கபாணி, முருகு.சுப்பிரமணியம், ஆதி.குமணன் முதலான இதழாசிரியர்கள் தமிழ்ச் சமுதாயம் சார்ந்த பல்வேறு சிக்கல்களைத் திறம்பட முன்னெடுத்து, திட்டமிட்டுக் கையாண்டு மக்களின் ஒருமித்த ஆதரவோடு மாபெரும் வெற்றிகளைச் சாதித்துக் காட்டியுள்ளார்கள் என்ற வரலாறுகள் இன்னும் பசுமையாகவே இருக்கின்றன.
இப்படிப்பட்ட ஊடக முன்னோடிகளின் வழிவந்த இன்றைய இதழாசிரியர்களும் இப்போது ஏற்படுள்ள நமது மொழிச்சிக்கலை முறையாக அணுகவேண்டும் என்பதே தமிழ்ப்பற்றாளர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்க் குமுகாயத்தின் எண்ணமுமாகும்.
ஆகவே, இங்கே வெளிவரும் மூன்று நாளேடுகளும் எசுபிஎம் தேர்வில் 10 பாடங்கள் தொடர்பான நெருக்கடியை மொழி, இன, குமுகாய நலப் பார்வையுடன் அணுகிட வேண்டும்; நல்லதொரு தீவிர்வினை நோக்கி சமுதாயத்திற்கு வழிகாட்ட வேண்டும்.
மலேசிய நாளிகைகள் தங்களுக்குள் இருக்கின்ற தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இதற்காக ஒருமித்த குரலில் பேசவேண்டும். நாளேடுகளின் அரசியல் முரண்பாடுகளைக் கொஞ்சம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு தமிழ்மொழிக்காக முண்டுகொடுத்து நிற்க வேண்டும். குறிப்பிட்ட தலைவர்கள் சிலரை மட்டும் மேற்கோள்காட்டி செய்திகள் போட்டுவிட்டு, இதே நோக்கத்திற்காகப் போராடும் எதிரணித் தலைவர்களின் செய்திகளை இருட்டடிப்பு செய்துவிடக்கூடாது. அல்லது, ஒரு தரப்பினரின் நடவடிக்கைகளைப் பெரிதுபடுத்திக் காட்டியும், மற்றொரு தரபினரின் நகர்வுகளைக் கொச்சைப்படுத்தியும் குற்றப்படுத்தியும் காட்டிவிடக்கூடாது.
இதில், எது நடந்தாலும் இழப்பு என்னவோ நமது தமிழ்மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும்தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இன்று நாம் செய்கின்ற தவறினால் நீண்ட காலத்திற்கு மிகப் பெரியதொரு பேரழிவு தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் ஏற்பட்டுவிடும் என்பதில் எல்லாரும் விழிப்பாக இருக்க வேண்டும்.
தன்னினத்தான் வேறினத்தான்
தன்பகைவன் தன்நண்பன்
எவனானாலும்
அன்னவனின் அருஞ்செயலைப்
பாராட்டுவோன் செய்தி
அறிவிப்போனாம்!
சின்னபிழை ஏடெழுதும்
கணக்காயன் செய்திடினும்
திருநாட்டார்பால்
மன்னிவிடும் ஆதலினால்
ஏடெழுதும் வாழ்க்கையிலே
விழிப்பு வேண்டும்!
ஏற்றமுறச் செய்வதுவும்
மாற்றமுற வைப்பதுவும்
ஏடேயாகும்!
என்று பாவேந்தர் பாரதிதாசன் தமது தமிழியக்கம் நூலில் ஏடெழுதும் ஊடகவியலாருக்குச் சொல்லியுள்ள கருத்துகளை உள்வாங்கிக்கொள்ள வேண்டும்; தமிழைக் காக்கவும் தமிழ் இலக்கியத்தை மீட்கவும் நடைபெறும் இந்தப் போராடத்தில் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் தமிழ் இதழியல் துறையில் ஆலமரமாக வேர்விட்டு விழுதூன்றி நிற்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாதது எதையும் இங்கு சொல்லிவிட்டதாக நான் எண்ணவில்லை.
ஆனால், அந்த ஆலமரங்கள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட அரசியல் குடையின்கீழ் இருப்பதால், தமிழ்ச் சமுதாயத்தின் – மாணவர்களின் – மொழியின் – இலக்கியத்தின் – ஒட்டுமொத்த மலேசியத் தமிழினத்தின் எதிர்காலத்தை நமது நாளிதழ்கள் சொதப்பிவிடக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இதனை எழுத துணிந்தேன்.
தொடர்பான செய்திகள்:-
1.இலக்கியம் இழுத்து பறிக்கிறது; இதயம் வலிக்கிறது.
2.எசுபிஎம் தேர்வில் தமிழை அகற்றும் முயற்சிக்குக் கடுமையான கண்டனம்:- மலேசியா இன்று
8 comments:
வணக்கம் தோழரே,
தமிழைத் தற்காக்குமா தமிழ் நாளேடுகள்? என்ற தலைப்பில் இன்றைய தமிழ் சமுதாயம் செய்ய வேண்டியப் பணிகளைப் பட்டியல் இட்டுள்ளீர்கள். என்னைப் போன்ற தமிழ் ஆர்வலர்களுக்கு பயன்தரக்கூடிய நிறைய விடயங்கள் இருக்கின்றன. ஆனால், தமிழ் நாளேடுகள் தமிழைக் காக்குமா என்றால் நிச்சயமாக இல்லை. பணம் ஒன்றை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படும் மூன்று பத்திரிகைகளும் அரசாங்கத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கும். மக்கள் ஓசை தலைமையாசிரியர் எம்.இராஜன், மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரன், மக்கள் தலைவர் சுப்ரா, நிர்வாகி பெரியசாமி மட்டுமில்லாமல் நாம் தலையில் வைத்துக் கொண்டு ஆடும் ஆதி.குமணன் உட்பட அனைவரது பிள்ளைகளும் மலாய் பள்ளி மாணவர்களே!பணத்திற்காக மட்டும் தமிழை விற்று அதில் பிழைப்பு நடத்தும் இவர்களைப் போன்றவர்கள் தமிழர்கள் பிரச்சனைகளுக்கு என்றும் செவி சாய்க்க போவதில்லை. இது மற்ற இரு பத்திரிகைகளுக்கும் பொருந்தும்.
இன்று நாம் எதிவினையாற்ற தவறினால், நாளை இதுவே நம் இளைய சந்ததியினருக்குச் செய்கின்ற பெருங்கேடாக போய் முடியும் என்பதனை உணர்ந்து அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியமாகும். இதனால் நமக்கு என்ன வந்து விட போகிறது என்று வாளாவிருந்துவிட்டால் நம்முடைய இழப்புகளின் பட்டியல் இன்னும் நீளும்.
>திருத்தமிழ் அன்பர் குமார்,
முதன் முறையாக உங்களைத் திருத்தமிழில் காண்கிறேன். மகிழ்ச்சி. நல்ல கருத்துகளை எழுதியுள்ளீர்கள். உங்கள் கருத்துகளோடு நானும் உடன்படுகிறேன்.
//பணம் ஒன்றை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படும் மூன்று பத்திரிகைகளும் அரசாங்கத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கும். //
மிகச் சரி ஐயா. இன்னும் சொல்லப்போனால், இரண்டு நாளிகைகள் தங்கள் தலைவர்தான் பெரிய ஆள் என்பதைக் காட்டுவதற்கும், அவருக்கு மேலிடத்தில் எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என்பதைக் பார்த்துக்கொள்வதுமே பெரும் பணியாக உள்ளது.
தமிழுக்குக் குரல் கொடுத்தால் தங்கள் தலைவருக்கும் ஏதும் பாதிப்பு வரும் என்றால்.. உடனே தமிழைத் தூக்கிப் போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். இது நாம் அறியாதது அல்ல.
இன்னும் ஒரு நாளேடு, ஏதோ கொஞ்சம் துணிந்து குரல் கொடுக்கிறது. அதன் தொடர்ச்சியான செய்திகளைப் பார்க்கும்போது உண்மைத்தன்மை கொஞ்சம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது.
எது எப்படி இருந்தாலும், யாரையும் நாம் சாட வேண்டியதில்லை. அவர்களின் பின்புலத்தையும் ஆராய்ந்து பார்க்கத் தேவையில்லை. அவர்களால், இந்த மொழிக்கும் இனத்துக்கும் நன்மையா? என்று மட்டும் பார்ப்போம்.
தொடர்ந்து நல்ல கருத்துகளோடு வாருங்கள் அன்பரே.
>திருத்தமிழ் அன்பர் மகேந்திரன் நவமணி,
//இன்று நாம் எதிவினையாற்ற தவறினால், நாளை இதுவே நம் இளைய சந்ததியினருக்குச் செய்கின்ற பெருங்கேடாக போய் முடியும்//
உண்மை. இன்று தமிழைத் தற்காக்கா விட்டால், பிறகு நமது மொழி, இனம், சமயம், பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றின் நிலைமை "0" தான்.
தொடர்ந்து பின்னூட்டம் இடுவதற்கு நன்றி அன்பரே.
//மலேசிய நாளிகைகள் தங்களுக்குள் இருக்கின்ற தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இதற்காக ஒருமித்த குரலில் பேசவேண்டும். நாளேடுகளின் அரசியல் முரண்பாடுகளைக் கொஞ்சம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு தமிழ்மொழிக்காக முண்டுகொடுத்து நிற்க வேண்டும்.//
அதீத கற்பனை உங்களுக்கு.
//எது எப்படி இருந்தாலும், யாரையும் நாம் சாட வேண்டியதில்லை. அவர்களின் பின்புலத்தையும் ஆராய்ந்து பார்க்கத் தேவையில்லை. அவர்களால், இந்த மொழிக்கும் இனத்துக்கும் நன்மையா? என்று மட்டும் பார்ப்போம்.//
நன்றாகவே ஜால்ரா அடிக்கிறீர்கள்.இன மொழி உணர்வற்றர்களிடமிருந்து மொழிக்கும் இனத்துக்கும் நன்மையான சேவையை எதிர்பார்க்கிறீர்களா?
நான்கு தலைமுறை கட்ந்தும் கூட நாம் இன்றும் தமிழுக்காக போராடிக்கொண்டுதான் இருக்கின்றோம்.தமிழனை கிள்ளுக்கீரையாய் நினைக்கும் வரைக்கும் இது தொடரும் ஐயா.தமிழனின் உணர்வுகளை மதிக்க தெரியாதவர்கள் எல்லாம் கல்வி அமைச்சில் இருக்கும் போது தமிழ் படும் பாடு இருக்கிறதே அப்பாப்பா ....எப்ப்டி சொல்வது? முட்டாள்களின் கூடாராம் ந்மது கல்வி இலகா.அவர்களின் செயல்களை ஆய்வு செய்தாலே புரிந்துவிடும் அவர்களின் தில்லுமுல்லுகள்...
தமிழ் எங்கள் உயிர்.
>திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,
//அதீத கற்பனை உங்களுக்கு.//
இன்றைய (2.12.2009) மலேசிய நண்பன் பக்கம் 3இல் உங்களுக்கு நல்ல பதில் இருக்கிறது.
நேற்றைய எனது அதீத கற்பணை இன்று பலித்திருக்கிறது..! நாளிகை பாருங்கள் புரியும்.
//நன்றாகவே ஜால்ரா அடிக்கிறீர்கள்.இன மொழி உணர்வற்றர்களிடமிருந்து மொழிக்கும் இனத்துக்கும் நன்மையான சேவையை எதிர்பார்க்கிறீர்களா?//
ஏதாவது உள்நோக்கம் இருப்பவர்கள் செய்யும் நுண்ணரசியல் வேலைதான் 'ஜால்ரா' அடிப்பது.
எனக்கு அந்த அவசியம் எதுவும் இல்லை அன்பரே.
"எனக்குத் தெரிந்தது சொல்வேன்
ஊருக்கு நல்லது சொல்வேன்" என்பதே நமது கொள்கையும்.
திணையளவு நன்மை எவர் செய்தாலும் அதனைப் பாராட்ட வேண்டும். அப்படி மனம் இல்லாதவர்களுக்கு குறை மட்டும் சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லை என்பார்கள்.
இப்போது பாராட்டு சொல்லியுள்ள (உங்கள் மொழியில் ஜால்ரா அடித்துள்ள) எனக்கு, பிறகு ஒரு நாள் அவர்களையே குற்றம் சொல்வதற்கு எல்லாத் தகுதியும் அருகதையும் இருக்கிறது.
//தன்னினத்தான் வேறினத்தான்
தன்பகைவன் தன்நண்பன்
எவனானாலும்
அன்னவனின் அருஞ்செயலைப்
பாராட்டுவோன் செய்தி
அறிவிப்போனாம்!//
பாரதிதாசன் வரிகளை எழுதியிருந்தேனே.. படிக்கவில்லை நீங்கள் நண்பரே?
>திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருஷ்ணன்,
மீண்டும் உங்கள் மறுமொழி காண்பதில் மகிழ்ச்சி நண்பரே.
இப்போது மறுமொழி இடுவதில் சிக்கல் நீங்கிவிட்டது என நினைக்கிறேன். என்ன இடையூறு ஏற்பட்டது? ஏன்? யாரால்? எதுவும் தெரியவில்லை. திரைமறைவில் ஏதோ சதியோ? தெரியவில்லை.
//முட்டாள்களின் கூடாராம் ந்மது கல்வி இலகா.அவர்களின் செயல்களை ஆய்வு செய்தாலே புரிந்துவிடும் அவர்களின் தில்லுமுல்லுகள்...//
கேட்கவே கடுமையாகத்தான் இருக்கிறது. அதிகாரி எனப்பெயர் வைத்ததால் 'அதிகாரம்' பண்ணுகிறார்கள் போலும்.
பணியாளர்கள், ஊழியர்கள், வேலையாள், அரசுக் கூலியாள் என மாற்றிவிட்டால் என்ன?
Post a Comment