Saturday, December 12, 2009

எசுபிஎம்12 பாடக் கவன ஈர்ப்புப் பேரணி

எசுபிஎம் தமிழ்மொழி - இலக்கியம் ஆகிய பாடங்கள் தொடர்பாக நாட்டில் எழுந்துள்ள நெருக்கடியான சூழல் இன்று ஓர் உச்சத்தை அடைந்துள்ளது. இன்று (12.12.2009) காலை 10.00 மணி தொடங்கி பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் "எசுபிஎம்12 பாட கவன ஈர்ப்புப் பேரணி" நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்துகொண்ட இந்தத் தமிழ் மீட்புப் பேரணி மிக கட்டுக்கோப்புடனும் எழுச்சியுடனும் நடைபெற்றது. எசுபிஎம்12 பாட மீட்புக் குழுவின் தலைவர் ஆ.திருவேங்கடம் தலைமையில் இந்த முடற்கட்ட தமிழ் எழுச்சிப் பேரணி வெற்றியுடன் நடைபெற்றுள்ளது.

இந்த எழுச்சியும் - தமிழ் மீட்பு உணர்வும் - தமிழ்க் காப்பு உணர்வும் தொடர்ந்து பேணப்படவேண்டும் என்பது பலருடைய விருப்பமும் எண்ணமுமாக இருக்கிறது. எனவே, தமிழைக் காக்கவும் தமிழ் இலக்கியத்தை மீட்கவும் ஒட்டுமொத்தத் தமிழர்களும் துணை நிற்க வேண்டும்.

இன்று "எசுபிஎம்12 பாட கவன ஈர்ப்புப் பேரணி" இல் நிறைவேற்றப்பட்ட தீ்ர்மானங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை, 12 டிசம்பர் 2009 தோட்ட மாளிகை
"தமிழைக் காப்போம், இலக்கியத்தை மீட்போம்" பேரணியின் தீர்மானங்கள்


1)மலேசிய அரசியலமைப்பு சட்டப்படி, கல்விச் சட்டத்தின் 152-வது அம்சத்தை நிலை நிறுத்த வேண்டும்.

வரைவு எண்:152
அதிகாரப்பூர்வ மொழியாக மலாய் மொழி இருப்பினும் பிற மொழிகளுக்கான நிலைப்பாடு மற்றும் உரிமையைக் கொண்டு, அம்மொழியைப் பயன்படுத்துவதற்கும், கற்றுக்கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும், பொது மானியங்களைப் பயன்படுத்தி அவற்றைச் செயல்முறைப்படுத்துவதற்கும் தடை ஒருபோதும் இருக்கக்கூடாது.

வரைவு எண்:152(1)(a)
பிற மொழிகளைப் பயன்படுத்துவதற்கும் (அதிகாரப்பூர்வ காரணங்களைத் தவிர்த்து), அல்லது கற்பிப்பதற்கும் கற்பதற்கும் யாரையும் மறுக்கவோ தடுக்கவோ முடியாது; மற்றும்

வரைவு எண்:152(1)(b)
கூட்டரசில் அங்கம் வகிக்கும் பல்லின மக்களின் மொழிகளைப் பாதுகாப்பதற்கும், தொடர்வதற்கும், கற்பதற்கும் உரிய மத்திய, மாநில அரசாங்கங்களின் உரிமைகளை இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு வரைவின் உட்பிரிவும் பாதிக்கலாகாது.


2)தாய் மொழியான தமிழ்க் கல்வி சம்பந்தப்பட்ட கொள்கைகளை அமலாக்குவதற்கு முன் சமூக இயக்கங்களையும் கல்வியாளர்களையும் அரசாங்கம் கலந்தாலோசிக்க வேண்டும்.


3)எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் எடுக்க அனுமதிக்கப்படும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் உட்பட அனைத்துப் பாடங்களுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாமல் முழு அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும்.

4)தமிழ் மொழியின் ஆய்விற்கும் வளர்ச்சிக்கும் நிலைத் தன்மைக்கும் அரசுசார் அமைப்பு ஒன்று அதிவிரைவில் முழு அரசாங்க நிதி உதவியோடு அமைக்கப்பட வேண்டும்.

5)நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழ் மொழிக்கு ஊறு விளைவிக்கும் எந்தவொரு தரப்பின் நடவடிக்கைகளையும் இப்பேரணி வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழைக் காக்கவும் இலக்கியத்தை மீட்கவும் வேண்டிய பொறுப்பு நமது மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. கருத்து வேறுபாடுகளால் நாம் வேறுபட்டிருக்கலாம். அது எல்லாவிடத்திலும் நிகழும் இயல்பான ஒன்றுதான். ஆனாலும் மொழி, இனம், சமயம், பண்பாடு என்று வருகின்றபோது, நாம் நமக்குள் இருக்கும் கருத்து வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரே குரலாக ஒலிக்க வேண்டும். அப்படி ஒலித்தால்தான் வெற்றியை நாம் ஈட்ட முடியும் என்பதற்கு இன்று நடந்த "எசுபிஎம்12 பாட கவன ஈர்ப்புப் பேரணி" மற்றுமொரு நற்சான்று என்றால் மிகையில்லை.


4 comments:

subra said...

உடனக்குடன் செய்தியை கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் அய்யா.
இந்த நிலை ,தமிழுக்கு எப்பொழுது எல்லாம் எதிர்ப்பு வருகிறதோ
அப்போதெல்லாம் நம் தமிழ் உணர்வாளர்கள் இப்படி எதிர்கொள்ள
ஆயத்தமாக வேண்டும் .வீழ்வது நாமனாலும் வாழ்வது தமிழாக
இருக்கட்டும்

Anonymous said...

//ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்துகொண்ட இந்தத் தமிழ் மீட்புப் பேரணி மிக கட்டுக்கோப்புடனும் எழுச்சியுடனும் நடைபெற்றது.//

உள்ளத்தோடு உடல் ஒத்துழைக்க மறுக்கிறது ஐயா. அதனாற்றான் நான் கலந்துகொள்ளவில்லை; ஆயினும் தெரிந்துகொள்ள வேண்டுவனவற்றை உங்கள் எழுத்தின்வழி தெரிந்துகொண்டேன். உங்களுக்கு நன்றியறிதல் உடையேன்.

- அ. நம்பி

Tamilvanan said...

//கருத்து வேறுபாடுகளால் நாம் வேறுபட்டிருக்கலாம். அது எல்லாவிடத்திலும் நிகழும் இயல்பான ஒன்றுதான். ஆனாலும் மொழி, இனம், சமயம், பண்பாடு என்று வருகின்றபோது, நாம் நமக்குள் இருக்கும் கருத்து வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரே குரலாக ஒலிக்க வேண்டும்//


மொழி, இனம், சமயம், பண்பாடு என்று வருகின்றபோது ம‌ட்டும்ம‌ல்ல‌ என்றென்றும் நாம் ஒற்றுமையை நிலை நிறுத்த‌ வேண்டும்.கருத்து வேறுபாடுகள் எல்லா ம‌னித‌ரிட‌மும் இன‌த்திர‌ட‌மும் உள்ள‌து.க‌ருத்து வேறுபாடினால் காழ்ப்புண‌ர்ச்சி வ‌ள‌ர்வ‌தை த‌டுத்து போட்டி ம‌ன‌ப்பான்மையை வ‌ள‌ர்க்க‌ வேண்டும்.

//வீழ்வது நாமனாலும் வாழ்வது தமிழா இருக்கட்டும்//

வீழ்ச்சி எனும் எண்ண‌த்தை முறிய‌டிப்போம்.த‌மிழ்லோடு த‌மிழ‌ன் வாழ்வான்.
த‌மிழன் வெல்கிறான்.மேலும் ப‌ல‌ வெற்றிக‌ளை குவிப்பான்.

மனோவியம் said...

//வீழ்வது நாமனாலும் வாழ்வது தமிழாக
இருக்கட்டும்//
நாம் விழ்ந்தால் தமிழுக்கு வாழ்வு ஏது?

Blog Widget by LinkWithin