Wednesday, June 05, 2013

அன்புள்ள மலேசியத் தமிழ்க் கல்வியாளர்களுக்கு..

[மனம் திறந்த மடல்]
 
இன்று 5-6-2013ஆம் நாள் கோலாலம்பூர், பெர்ல் இண்டர்நேசனல் விடுதியில் நடைபெறும் '10ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டு' அரங்கத்திலிருந்து மலேசியத் தமிழாசிரியர்கள் தமிழ்க் கல்வியாளர்கள் சிந்தனைக்காக இதனை இங்குப் பதிவிடுகிறேன்.

இந்த மாநாட்டில் மலேசியா உள்பட இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், கனடா, மொரிசியசு, அசுத்திரேலியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா முதலான நாடுகளின் பேராளர்கள் 'நாட்டுப் படைப்பு' அரங்கத்தில் பேசினார்கள். அந்தந்தப் பேராளர்களின் உரையின் நடுவில் என் மனத்தில் துளிர்த்த சிந்தனைகள் இவை.

அயல்நாடுகளிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து குடியேறிய நாடுகளிலும் தமிழ்மொழி, தமிழ்க்கல்வி, தமிழ்ப்பண்பாடு எப்படி இருக்கின்றன தெரியுமா? எப்படி வளர்க்கப்படுகின்றன தெரியுமா? எவ்வாறு அவை காக்கப்படுகின்றன தெரியுமா?

தாய்மொழியாகிய தமிழுக்காகவும் தமிழ் சார்ந்த வாழ்வாதாரத்திற்காகவும் அரசாங்கத்தின் ஆதரவும் இல்லாமல் - ஆதாரம் இல்லாமல் பலவித இன்னல்களில் வாடுகிறார்கள்!

பல்வேறு இடர்களுக்கு நடுவில் அவர்கள் தமிழை மீட்கப் பாடுபடுகிறார்கள்!
பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் அவர்கள் தமிழைக் காக்கப் போராடுகிறார்கள்!

தமிழ்க்கல்வியை அறிமுகப்படுத்தவும் தமிழைக் கற்பிக்கவும் வழிதேடி வழிதேடி உருக்குலைந்து போகிறார்கள்.

அவர்கள் நாட்டு அரசாங்கப் பள்ளிகளில் பள்ளி நேரத்திலேயே தமிழ் படிக்க வாய்ப்பு இல்லாமல் வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

வார இறுதியில் தமிழ் வகுப்புகள் நடத்தினாலும் மாணவர்களின் வருகை - ஆர்வம் - கற்கும் திறன் ஆகியவை கவலைக்கிடமாக இருப்பதாகப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழைக் கற்பிக்க முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் - ஆசிரியர் பயிற்சி அளிக்கும் பயிற்சிக் கழகம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தன்னார்வத்தின் அடிப்படையில் மருத்துவர், வழக்கறிஞர், பொறியியலாளர், தகவல் தொழிநுட்பர், இல்லத்தரசிகள் போன்றோர் எந்தவொரு ஊதியமும் இல்லாமல்  தமிழைக் கற்பிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

தமிழ்க்கல்விக்கான முறையான கலைத்திட்டம் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழைக் கற்கவும் கற்பிக்கவும் பாடநூல்கள் - பயிற்சிநூல்கள் இல்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் அடுத்த தலைமுறை தாய்மொழி அறியாத இனமாகி விடுமோ என அஞ்சுகிறார்கள்.

அவர்களின் குழந்தைகள் தமிழ்ப் பண்பாடு தெரியாதவர்களாக ஆகி விடுவார்களோ எனப் பயப்படுகிறார்கள்.

அவர்களின் எதிர்கால சரவடிகள் தமிழிய வரலாற்றையும் வாழ்வியலையும் அறியாமல் இனமல்லா இனமாக ஆகிவிடுமோ என உண்மையிலேயே கலங்குகிறார்கள்! கண்ணீர் வடிக்கிறார்கள்!

இப்படியெல்லாம், பல்வேறு அல்லல்களுக்கும் அவலங்களுக்கும் இடையில் பெரும்பாடு பட்டு தமிழை வாழவைக்க.. வளர்த்தெடுக்க அரும்பாடு படுகிறார்கள்..! புலம்பெயர் நாடுகளின் அரசாங்கத்தின் போதுமான உதவிகள் இல்லாமல் தங்கள் தாய்மொழிக்காகவும் மொழி சார்ந்த வாழ்வியலுக்காகவும்  உயிரைப் பிழியும் பெரும்பாடு படுகிறார்கள்..!

அவர்களுடைய பாடுகளைப் பார்க்கும் பொழுது நமக்கும் இதயம் வலிக்கிறது..! அவர்களுடைய இடர்களைக் காணும் பொழுது நமக்கும் கண்ணீர் வருகிறது..! அவர்களின் ஈக (தியாக) உள்ளத்தைப் பார்க்கும் பொழுது நமக்கும் உள்ளம் நெகிழ்கின்றது..! அவர்களின் தமிழ் உணர்வைப் பார்க்கும் பொழுது நம் உடலும் சிலிர்க்கின்றது..!

தமிழ்மொழி, தமிழ்க்கல்வி, தமிழ்ப்பண்பாடு, தமிழ் விழுமியங்களை மீட்டெடுக்கவும் காத்து வளர்க்கவும்.. அவர்களின் குழந்தைகளைத் தமிழ் இனமான உணர்வுள்ளவர்களாக - தமிழ்க் குழந்தைகளாக வளர்த்தெடுக்க மிக மிகக் கடுமையாக மெனக்கெட்டு உழைக்கிறார்கள்.

ஆனால், இங்கே மலேசியாவில்  நிலைமை எப்படி இருக்கின்றது..?

 அவர்களோடு ஒப்பிடும் பொழுது நமக்கு இடர்கள், இன்னல்கள், நெருக்கடிகள், போராட்டங்கள், சிக்கல்கள் எல்லாமே குறைவு. அவர்களோடு ஒப்பிடும் பொழுது நமக்கு வாய்ப்பு, ஏந்து (வசதி), சலுகை, உதவி, ஆதரவு ஆகிய அனைத்தும் மிக மிக அதிகம்.
அரசாங்க உதவியுடன் தொடக்கப் பள்ளியில் படித்து..
அரசாங்க உதவியுடன் இடைநிலைப் பள்ளியில் படித்து..
அரசாங்க உதவியுடன் கலைத்திட்டங்களில் நடைபயின்று..
அரசாங்க உதவியுடன் தேர்வுகளில் அமைர்ந்து தேர்வு பெற்று..
அரசாங்க உதவியுடன் ஆசிரியர்க் கல்லூரியில் பட்டயம்  பயின்று..
அரசாங்க உதவியுடன் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் பட்டம் பெற்று..
அரசாங்க உதவியுடன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை பெற்று..
அரசாங்க உதவியுடன் ஆசிரியர் பணியில் சேர்ந்து..
அரசாங்க உதவியுடன் கற்றல் கற்பித்தலை நடத்தி..
அரசாங்க உதவியுடன் பணியிடைப் பயிற்சிகளில் கலந்துகொண்டு..
அரசாங்க உதவிடன் உதியம், படிச்செலவு, ஓய்வூதியம் அனைத்தும் பெற்று..

இன்னும் இப்படி பற்பல பற்பல உதவிகளும் ஏந்துகளும் எல்லா ஆதரவுகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் பெற்றுக்கொண்டு மலேசியாவில் நாம் ஆசிரியர்களாக இருக்கின்றோம்; விரிவுரைஞர்களாக இருக்கின்றோம்; பேராசிரியர்களாக இருக்கின்றோம்; முனைவர்களாக இருக்கின்றோம்.

நம்மில் எத்தனை பேர் தமிழுக்காகவும் - தமிழ் மாணவர்களுக்காகவும் - தமிழ்ப் பள்ளிகளுக்காகவும் - தமிழ்க் கல்விக்காகவும் - தமிழ் இனத்திற்காவும் - தமிழ்ப் பண்பாட்டுக்காகவும் - தமிழ் விழுமியங்களுக்காகவும் - தமிழ் வாழ்வியலுக்காகவும்..

உண்மையாக சிந்திக்கின்றோம்..?
உளமாற எண்ணிப் பார்க்கின்றோம்?
நேர்மையாக உழைக்கின்றோம்..?
தமிழ் உணர்வோடு செயல்படுகின்றோம்..?
தமிழ்ப் பற்றோடு பாடாற்றுகின்றோம்..?

நமது மாணவர்களும் இளையத் தலைமுறையினரும் எதிர்காலத்தில் தமிழிய உணர்வோடும் தமிழிய அறிவோடும் வாழ நம்மில் எத்தனை கல்வியாளர்கள் தெளிந்த அறிவோடும் தூய்மை உணர்வோடும் பணிசெய்கின்றோம்? பாடாற்றுகின்றோம்?

பல்லினம் வாழும் மலேசியச் சூழலைக் கருத்தில் கொண்டும்  படுவேகமாக வளர்ந்துவரும் உலகமயமாதல் சூழலைக் கவனத்தில் கொண்டும் நம்மில் எத்தனை கல்வியாளர்கள் அடுத்த தலைமுறை தமிழோடு வாழவும் தமிழராக வாழவும் திட்டமிட்டுச் செயல்படுகின்றோம்? தொலைநோக்கோடு திட்டமிடுகின்றோம்?

உணர்ச்சிவயப்படாமல் அறிவுவயமாகச் சிந்திக்க வேண்டிய வினாக்கள் இவை...!


இத்தகைய ஆசிரியர்கள், கல்வியாளர்கள் யாருமே இல்லை எனச் சொல்வது மிகப் பெரிய பொய். கண்டிப்பாகச் சில நூறு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். சில பத்து விரிவுரைஞர், பேராசிரியர், முனைவர் ஆகிய கல்வியாளர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை! உண்மை! அவர்கள் அனைவரும் வணக்கத்திற்கு உரியவர்கள்; போற்றுதலுக்கு உரியவர்கள் எனில் மிகையன்று.

ஆனால், சில நூறு ஆசிரியர்களும். சில பத்து விரிவுரைஞர், பேராசிரியர், முனைவர் ஆகிய கல்வியாளர் மட்டும் போதுமா?

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளில் 8000 ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். இடைநிலைப்பள்ளிகளில் 3000 தமிழாசிரியர்கள் இருக்கின்றார்கள். 100 விரிவுரைஞர்கள், பேராசிரியர்கள் இருக்கிறார்கள். 50 முனைவர்கள் இருக்கிறார்கள். ஆக, ஏறக்குறைய 11,000 தமிழ்க் கல்வியாளர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் மனதுவைத்தால்.. இவர்கள் அனைவரும் மனமாற்றம் பெற்றால்.. இவர்கள் அனைவரும் உணர்வுபெற்று எழுந்தால்.. இவர்கள் அனைவரும் தமிழிய உள்ளத்தோடும் உணர்வோடும் உழைத்தால்..

எதிர்காலத்தில் உலகத் தமிழர்களுக்கே வழிகாட்டும் வெற்றித் தமிழர்களாக மலேசியத் தமிழ் மாணவர்கள் திகழ முடியும்!

வருங்காலத்தில் உலகத் தமிழினத்திற்கே தலைமையேற்கும் தகைமைசான்ற தமிழினம் மலேசியாவில் உருவாக முடியும்!

மலேசியத் தமிழ் ஆசிரியர்களே.. கல்வியாளர்களே வாருங்கள்..

தமிழால் ஒன்றுபடுவோம்!
தமிழராக ஒன்றுபடுவோம்! 
தமிழுக்காக ஒன்றுபடுவோம்!
@சுப.நற்குணன், திருத்தமிழ்

No comments:

Blog Widget by LinkWithin