பேரா, சுங்கை
சிப்புட்டில் கடந்த 2-12-2012ஆம்
நாள் ஞாயிறு பிற்பகல் மணி 2:00 தொடங்கி 4:30 வரையில் சிறுகதைப் பட்டறையை
வழிநடத்தினேன். தமிழ் இலக்கியக் கழகம், சுங்கை சிப்புட் வட்டாரக் கிளை இந்தப் பட்டறைக்கு ஏற்பாடு
செய்திருந்தது.
25 பேர் கலந்துகொண்ட இந்தப் பட்டறையில்
சிறுகதை ஆர்வலர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள் ஆகியோர் இருந்தனர். அவர்களில் எவரும் இதுவரை சிறுகதை எழுதிய பட்டறிவு இல்லாதவர்கள். இருந்தாலும், சிறுகதை வாசகர்களாகவும் சிறுகதை எழுதும் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருந்தனர்.
இவர்களிடையே என்னை மிகவும் கவர்ந்த தனிச்சிறப்பு என்னவெனில்
தமிழ்மொழியின் மீது ஆழந்த பற்றுதல் கொண்டவர்களாக இருந்தனர். மேலும், தமிழ்ப்
படைப்பிலக்கியத்தில் பிறமொழிக் கலப்புகளை அறவே விரும்பாதவர்களாக இருந்தனர். பிறமொழிக் கலந்து தமிழைச் சிதைத்து படைப்பிலக்கியம் செய்பவர்கள்
மீது கண்டனப் பார்வை கொண்டவர்களாவும் இவர்களைக் காண முடிந்தது.
பட்டறையின் தொடக்கத்தில் தமிழியல் ஆய்வுக் களத்தின் தலைவர்
தமிழ்த்திரு இர.திருச்செல்வம் அவர்கள் என்னை
அறிமுகப்படுத்திப் பேசினார். பின்னர், சிறுகதைப் பட்டறையை நான் தொடர்ந்து வழிநடத்தினேன். எனது விளக்கம் கீழ்க்காணும் கோணங்களில் அமைந்தது.
1. சிறுகதை என்றால் என்ன?
2. எவை சிறுகதை ஆகலாம்?
3. சிறுகதையின் கூறுகள் :- கரு, பாத்திரப் படைப்பு, பின்புலம், கதைப்
பின்னல், போராட்டம், கதை அமைப்பு, ஒருமைப்பாடு, உரையாடல், வருணனை, தலைப்பு
இற்றை நிலையில் சிறுகதை இலக்கியம் பல்வேறு பரிணாமங்களைக்
கண்டு வளர்ந்திருக்கிறது. கதையின்
கரு, பாத்திரப்படைப்பு, போராட்டம், வருணனை, உரையாடல் ஆகியவற்றில் பல மாற்றங்களையும்
புதுமைகளையும் காணமுடிகிறது. மாற்றங்களும்
புதுமைகளும் வரவேற்கப்பட வேண்டும். மேலும், இன்றையக் காலச் சூழலுக்கு ஏற்ப கதைக் களங்களும் புதிய கோணத்தில் அமைந்தால்தான் சிறுகதைகள் வெற்றிபெறும்.
திருவாட்டி சு.நாகேசுவரி, இர.திருச்செல்வம், ம.இ.கா தொகுதித் தலைவர் திரு. கணேசன், சுப.நற்குணன், இறையருள் |
மாற்றங்களுக்கும் புதுமைகளுக்கும் வரவேற்பு கூறும் அதே வேளையில்
அவை நமது மொழிநலத்தைச் சிதைக்காமல் இருக்க வேண்டும். மொழிநலத்தைக் கெடுத்து; மொழிவளத்தைச் சிதைத்துச் செய்யப்படும் படைப்புகள் சிறந்த
படைப்புகள் ஆகா. ஒரு மொழியின் படைப்பு அந்த மொழியின் தன்மைகளை எதிரொலிக்க வேண்டும்.
யதார்த்தம் என்னும் பெயரில் பச்சைகளையும்,
கொச்சைகளையும் அளவுக்கு அதிகமான பிறமொழிப்
பிச்சைகளையும் கலந்து
எழுதி தமிழைச் சிதைக்கும் போக்குத் தடுக்கப்பட வேண்டும். மலேசியாவில் எழுதப்படும் சிறுகத்தகளில் அதிகமான மலாய்ச் சொற்களைத் திணிக்கிறார்கள்; சிங்கப்பூரில் ஆங்கிலம் தலைவிரித்து ஆடுகிறது; தமிழகச் சிறுகதைகளில் வட்டார வழக்குகள்
மேலோங்கி இருக்கின்றன; அதைவிட அதிகமாக அம்மாமித் தமிழின் ஆக்கிரமிப்பு கொடிகட்டிப் பறக்கிறது; புலம்பெயர் ஈழத்தமிழரின் படைப்புகளில் ஈழமணம் விரவிக்கிடக்கிறது. இந்த நிலமையில் தமிழ்ச் சிறுகதைகளைப் பார்ப்பதும் சிறுகதையில்
தமிழைப் பார்ப்பதும் அரிதாகிக்கொண்டே போகிறது.
அதிகமான பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதி அதனை ‘யதார்த்தம்’ என்று சொல்லியும்; கதை
காலத்திற்கு ஏற்ப இருக்கிறது என்று புகழ்ந்தும்; மிகச் சிறந்த தமிழ்ச் சிறுகதை என்று பாராட்டிப் பரிசு வழங்குவதும் சகித்துக்கொள்ள
இயலாத செயல்களாகும். பொதுவாகவே, படைப்பிலக்கியத்தில் மொழித்தூய்மையைப் புறக்கணிக்கும் நிலைமை
இன்று மிக இயல்பான ஒன்றாகிவிட்டது. இதனை
தடுத்துநிறுத்தாவிடில் காலப்போக்கில் நிலைமை மிக மோசமாகிவிடும். தமிழின் நிலைமை மிகக் கவலைக்குரியதாகிவிடும்.
இலக்கியம் பற்றி கூறுகையில், “இலக்கியம்
இரண்டு வகை, நல்ல இலக்கியம், நச்சு இலக்கியம். எந்த உணர்வோடு நாம்
எழுதுகிறோமோ, அந்த உணர்வு வாசகன் மனதில் பதிந்தால் அது
இலக்கியம். நல்ல உணர்வு பதிந்தால் அது நல்ல இலக்கியம். நச்சு உணர்வு பதிந்தால் அது
நச்சு இலக்கியம்.” என்று கூறுகிறார் லியோ தால்சுடாய்.
ஆகவே, எந்த
ஓர் இலக்கியமும் நல்ல நோக்கத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும். மக்கள் மனதையும் உணர்வையும் கெடுக்காததாக இருக்க வேண்டும். நம் நாட்டில் மகிழுந்து பழுதுபார்க்கும் பட்டறைக்குச் சென்று ஒரு மாற்றுப்பாகத்தை (Sparepart) மாற்ற விரும்பினால், கடைக்காரன் கேட்கும் முதல் கேள்வி “உங்களுக்கு உண்மையானது
(Original) வேண்டுமா? அல்லது
போலியானது (Local) வேண்டுமா?” என்பதுதான். தரத்தை விரும்புபவர்களும் மகிழுந்தின் பாதுகாப்பை விரும்புபவர்களும் உண்மையான
மாற்றுப்பாகத்தைப் பொருத்திக்கொள்கிறார்கள். மற்றவர்கள் போலியான மாற்றுப்பாகத்தைப் பொறுத்தச் சொல்கிறார்கள். போலியானவை தரத்தில் தாழ்ந்தவை; விலையில் மலிவானவை; பாதுகாப்பு
குறைந்தவை; விரைவில் கெடக்கூடியவை என்பதை
எல்லாம் நன்றாக அறிந்தும் இந்தத் தவற்றைப் பலர் செய்கிறார்கள்.
அப்படித்தான் இலக்கியத்திலும். நல்ல இலக்கியத்தைவிட நச்சு இலக்கியத்தைதான் பலரும் விரும்புகிறார்கள், இதற்கான காரணம் மிக எளிமையானதுதான்; இயல்பானதுதான். உள்ளத்தாலும் உணர்வாலும் தரமற்ற மனிதர்கள் தரமற்றதைத் தானே விரும்புவார்கள்.
நீங்கள் தரமான உள்ளம் படைத்தவரா? தரமிக்க உணர்வு கொண்டவரா? நல்ல
இலக்கியத்தை விரும்புபவரா? அப்படியானால்
நல்ல இலக்கியத்தைத் தேடிப் படியுங்கள்! நல்ல இலக்கியத்தைப் படையுங்கள்! நச்சு இலக்கியங்களைப்
புறக்கணியுங்கள்! வாசகர்கள் தரமானாவர்களாக மாறினால் இலக்கியப் படைப்புகளும் தரமானதாக
இருக்கும். என்று கூறி எனது பட்டறையை நிறைவு செய்தேன்.
இந்த நிகழ்ச்சியில் சுங்கை சிப்புட் ம.இ.கா தொகுதித் தலைவர்
திரு.கணேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பங்கேற்பாளர்களுக்கு நற்சான்றிதழ்களை
வழங்கினார். இலக்கியக் கழகப் பொறுப்பாளர் திருவாட்டி நாகேசுவரி நன்றியுரை என்ற பெயரில்
அனைவரின் மனதையும் நெகிழச்செய்யும் அளவுக்கு உரையாற்றினார். மேலும், நம் நாட்டில் நல்ல
தமிழில் நல்ல இலக்கியப் படைப்புகள் வெளிவர தமிழ்ப்பற்றாளர்கள் எழுத்துத்துறைக்கு வரவேண்டும்
எனக் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியை தம்முடைய கவிதைத் தமிழில் மிகச் செப்பமாக
வழநடத்தி அனைவருடைய உள்ளத்தையும் கவர்ந்தார் பாலசுப்பிரமணியம்.
@சுப.நற்குணன், திருத்தமிழ்
No comments:
Post a Comment