Monday, October 29, 2012

11ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு - 2012


உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பின் சார்பில் இந்த ஆண்டின் இறுதியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் உயராய்வு மையத்தோடு இணைந்து பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2012 நடக்கவிருக்கிறது என்னும் செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்வுகொள்கிறோம். உத்தம நிறுவனம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு பன்னாட்டு அமைப்பு ஆகும்.

கணினி, இணையம் ஆகியன தொடர்பாகத் தமிழின் பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் உலகெங்கிலும் தமிழர்களிடையே பரவும் வகையில் உலகத் தமிழ் இணைய மாநாடுகளைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உத்தம நிறுவனம் நடத்திவருகிறது என்னும் தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறோம். உத்தம நிறுவனம் உலகத் தமிழர்களைக் கணினி வாயிலாக இணைப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றால் அது மிகையாகாது.

இது வரை ஏழு மாநாடுகளை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, ஆகிய நாடுகளில் முன்னனிப் பல்கலைக் கழகங்களோடு இணைந்தும், தமிழகத்தில் மூன்று மாநாடுகளைத் தமிழக அரசின் முழு ஆதரவோடும் உத்தம நிறுவனம் நடந்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.. தமிழ்த் தொடர்பான கணினி சார் மொழியியல் துறையில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் உயராய்வு மையத்தில் வரும் டிசம்பர் 28 முதல் 30 வரை “உலகத் தமிழ் இணைய மாநாடு 2012-ஐ நடத்த உத்தமத்தின் செயற்குழு முடிவெடுத்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக் கழக மொழியியல் பேராசிரியர் மா. கணேசன் அவர்கள், மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமை தாங்கவிருக்கிறார். உத்தமம் அமைப்பின் துணைத்தலைவர் திரு. இளந்தமிழ் அவர்கள் மாநாட்டின் பன்னாட்டுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.முந்தைய இணைய மாநாடுகளைப் போலவே வரும் 2012 மாநாடும் கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் என்று மூன்று முனைகளில் செயல்படும். ஆய்வுக் கருத்தரங்கு நிகழ்வுகள் டிசம்பர் 28,29 ஆகிய இரண்டு நாட்களில் நடக்கவிருக்கிறது. கண்காட்சியும் மக்கள் கூடமும் டிசம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும். மாநாட்டுக்குப் பதிவு செய்த பேராளர்கள் மட்டுமே கருத்தரங்கு மற்றும் பயிலரங்கில் கலந்து கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். [மேலும் படிக்க..]


                                                                                                                                                          @சுப.நற்குணன், திருத்தமிழ்

No comments:

Blog Widget by LinkWithin