Saturday, November 19, 2011

ஆசிரியர்கள் உழைப்பில் குளிர்காயும் தனியார் நிறுவனங்கள்




2011ஆம் ஆண்டுக்கான யுபிஎசார் முடிவுகள் வெளியாகிவிட்டன. இவ்வாண்டில் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 1191 மாணவர்கள் அனைத்து ஏழு பாடங்களிலும் ‘ஏ’ பெற்று (7ஏ) சாதனை படைத்துள்ளனர். யுபிஎசார் வரலாற்றிலேயே தமிழ்ப்பள்ளி மாணவர்களின் 7ஏ தேர்ச்சி விகிதம் ஆயிரத்தை தாண்டியிருப்பது இதுவே முதன் முறையாகும்.

இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பின்னணியில் பலர் இருக்கலாம்; பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், வேறு யாரையும் விட; வேறு எந்தக் காரணத்தையும் விட இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணமானவர்கள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்தாம் என்பது மறுக்கவியலாத உண்மையாகும். ஆசிரியர்களின் அயராத உழைப்பும் ஈகமும் ஒன்றுசேர்ந்ததால் தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது என்றால் மிகையன்று.
 
ஆசிரியர்களை அடுத்து பெற்றோர்களின் பங்களிப்பும் அக்கறையும் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கிறது என்றால் மிகையன்று. ஏனெனில், குழந்தை பிறந்தது முதற்கொண்டு அக்குழந்தை ஆறாம் ஆண்டில் யுபிஎசார் தேர்வு எழுதுகின்ற வரையில் உடனிருந்து கவனித்து வளர்த்தெடுத்து வழிகாட்டியவர்கள் பெற்றோர்களே ஆவர்.

ஆனால், ஆசிரியர்களின் உழைப்பை மறுதளிக்கும் வகையிலும், பெற்றோரின் கவனிப்பை ஏளனப்படுத்தும் வகையிலும் நாளிதழ்களில் சில செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. அதாவது, சில கல்வி நிறுவனங்களும் தனிக்கற்கை (Tuition) வகுப்புகளும் முண்டியடித்துக் கொண்டு இந்த வெற்றிக்காகச் சொந்தம் கொண்டாடுகின்றன. தங்கள் நிறுவனத்தில் அல்லது வகுப்பில் படித்த இத்தனை மாணவர்கள் 7ஏ எடுத்தார்கள்; அத்தனை மாணவர்கள் 5ஏ எடுத்தார்கள் என்றெல்லாம் செய்தி போட்டு (மலிவு)விளம்பரம் தேடுகிறார்கள்.

  • முதலாம் ஆண்டு தொடங்கி ஆறாம் ஆண்டு வரையில், 6 ஆண்டுகள் மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்றல் கற்பித்தை முறையாக நடத்தியவர்கள் ஆசிரியர்கள்.
  • 6 ஆண்டுகள் பயிற்சிகளைக் கொடுத்தும், அவற்றைத் திருத்தியும், பிழைதிருத்தம் செய்ய வலியுறுத்தியும், வீட்டுப் பாடங்கள் கொடுத்தும் மாணவர்களின் ஆற்றலை வளர்த்தெடுத்தவர்கள் ஆசிரியர்கள்.
  • 6 ஆண்டுகள் குறைதீர் நடவடிக்கை, திடப்படுத்தும் நடவடிக்கை, வளப்படுத்தும் நடவடிக்கை எனப் பல்வேறு வழிகளில் கற்றல் கற்பித்தலைச் செய்தவர்கள் ஆசிரியர்கள்.
  • 6 ஆண்டுகள் நேரம் காலம் பாராமல் கூடுதல் வகுப்பு, சிறப்பு வகுப்பு, விடுமுறை கால வகுப்பு என நடத்தி மாணவர்களை உருவாக்கியவர்கள் ஆசிரியர்கள்.
  • 6 ஆண்டுகள் பல்வேறு தேர்வுகளை நடத்தி மாணவர்களின் கல்வி வளர்ச்சியை முறையாகக் கவனித்து முன்னேற்றியவர்கள் ஆசிரியர்கள்.
  • 6 ஆண்டுகளாக மாணவர்களின் உடனிருந்து அரவணைத்து அவர்கள் துவண்டு விழும்போதெல்லாம் தூக்கி நிறுத்தி, தன்னம்பிக்கை ஊட்டி, ஊக்கப்படுத்தியவர்கள்   ஆசிரியர்கள்.
  • ஆறாம் ஆண்டில் மாணவர்களுக்குப் பல வழிகாட்டிக் கருத்தரங்குகள் நடத்தி, தேர்வு அணுகுமுறைகளைக் கற்பித்து, வினாக்களுக்கு விடையெழுதும் நுட்பங்களைக் கற்றுக்கொடுத்து வழிகாட்டியவர்கள் ஆசிரியர்கள்.
  • யுபிஎசார் தேர்வு நாட்களில் தேர்வு மண்டப வாசலில் நின்று மாணவர்களின் தோள்களில் தட்டிக்கொடுத்து, ஊக்கமூட்டி வழியனுப்பி வைத்தவர்கள் ஆசிரியர்கள்.
  • அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புகள், சமுதாயம் ஆகிய தரப்பினரின் அழுத்தங்களுக்கு இடையில் அயராமல் அல்லும் பகலும் உழைத்தவர்கள் ஆசிரியர்கள்.

மேலே சொன்ன எல்லாவற்றையும் மறுதளிக்கும் வகையில்; இருட்டடிப்புச் செய்யும் வகையில் சில கல்வி நிறுவனங்கள் செயல்படுவது வருத்தமளிக்கிறது. ஒட்டுமொத்த தமிழ் ஆசிரியர்களின் உள்ளத்தையும் வேதனையில் ஆழ்த்துகிறது.

ஆறாம் ஆண்டில் மட்டும் சில மாதங்களுக்கு வகுப்புகளை நடத்திவிட்டு, கல்வி விரதம், கல்வி புரட்சி என்றெல்லாம் படம் காட்டிவிட்டு மாணவர்களின் வெற்றிக்கும் தேர்ச்சிக்கும் தாங்களே முழுக் காரணம் என உரிமை கொண்டாடுவதும் நாளிதழ்களில் பக்கம் பக்கமாகச் செய்திகள் போடுவதும் விளம்பரம் போடுவதும் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு செய்கின்ற கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் பயின்ற தமிழ்ப்பள்ளிகளைப் பற்றி செய்தியில் எதுவும் குறிப்பிடுவதே இல்லை. மாறாக, ஏதோ அந்த நிறுவனத்திலேயே மாணவர்கள் படித்து தேர்வு எழுதியதைப் போன்ற தோற்றத்தைப் பெரிதுபடுத்திக் காட்டுகிறார்கள்.

அதுமட்டுமல்லாது, இவர்களின் செய்தியிலும் விளம்பரத்திலும் 5ஏ பெற்ற தேசியப் பள்ளி மாணவர்கள் பற்றியும் கொட்டை எழுத்துகளில் போட்டுக்கொள்கிறார்கள். இதனால், தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கின்ற பெற்றோர்களின் மனநிலையில் தடுமாற்றம் ஏற்படுகின்றது. இதன் விளைவாக, தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டுப் பதிவு குறைந்து போகலாம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

இந்த விடயத்தில் தனியார் கல்வி நிறுவங்களை மட்டும் குறைசொல்வதில் பயனில்லை. நமது தமிழ் நாளிதழ்கள் குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் செய்திகளுக்கு முதலிடம் கொடுத்து விளம்பரப்படுத்துகின்றன. இவ்வாறான செய்திகளால் காலப்போக்கில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏற்படப்போகின்ற விளைவுகளைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் செயல்படுகின்றனர். ஆகவே, தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்துவரும் நமது தமிழ் நாளிதழ்கள் இதுபோன்ற செய்திகளைத் தவிர்ப்பது நல்லது.

தனியார் கல்வி நிறுவனகளும், தனிக்கற்கை வகுப்புகளும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் உழைப்பில் குளிர்காய்வதை உடனடியாக நிறுத்திகொள்ள வேண்டும். ஆசிரியர்களின் ஈகத்தைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு ஈட்டத்தைத் தேடிக்கொள்ளும் தன்னலப் போக்கைக் கைவிட வேண்டும். இயலுமானால், அவர்கள் தங்கள் பங்களிப்பை சமுதாய உணர்வோடு செய்ய முன்வர வேண்டும். இங்குச் சொல்லப்பட்ட கருத்துகள் அவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டவை என நினைக்காமல், தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி, சமுதாய நலன் ஆகியவற்றின் அடிப்படையில் சொல்லப்பட்டவை என பொறுப்புணர்வுடன் எண்ணிப்பார்க்க வேண்டும்.

  • பி.கு:- இந்தச் செய்தி மலேசியாவில் வெளிவரும் மூன்று நாளிதழ்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

@சுப.நற்குணன்

5 comments:

nadesmani said...

உங்கள் கருத்துக்கு நான் உடன் படுகிறேன். தாங்கள் குறிப்பிட்டுள்ள அந்த நிறுவனம் இலவசமாக ஏதையும் செய்துவிடவில்லை. எல்லாம் பணம் வாங்கிக் கொண்டுதான் இந்த வகுப்பினை நடத்தி வருகிறார்கள். பணமும் விளம்பரமும் தான் அவர்களது குறிக்கோள். இதில் சில அரசியல் தலைவர்களும் அடங்குவார்கள். இப்படியும் பெற்றோர்கள் சுரண்டும் குள்ளநரிகளுக்கு சரியான சாட்டையாடி கொடுக்க வேண்டும்.

MUNIANDY RAJ said...

தங்கள் கருத்து முற்றிலும் உண்மை. 6 ஆண்டுகள் கற்பித்த ஆசிரியர்களின் உழைப்பு, வியர்வை எல்லாம் பணத்துக்காக கல்வியை விற்கும் தனிக்கற்கை நிலையங்களினால் களவாடப்படுவது வேதனைதான்....யாரிடம் சொல்வது..பல மாணவர்களை வறுபுறுத்தி தங்கள் தனிக்கற்கை மையங்களைப் பற்றிப் பேச சொல்வது அதைவிட வேதனை. தங்கள் பதிப்பு அவர்களுக்கு உறைக்குமோ என்னவோ...

VIKNESHWARAN ADAKKALAM said...

அருமையான இடுகை... நாளிகைகள் உங்கள் கருத்தினை நிச்சயம் வெளியிட வேண்டும்... இந்த விரத புரட்சிக் குழுக்கள் நான் பால் புட்டிலோடு அலைந்த காலம் தெட்டே அட்டகாசம் செய்துக் கொண்டுதான் உள்ளன... சில ஆசிரியர்கள் அவற்றில் சேரவும் பிள்ளைகளுக்கு பரிந்துரைக்கிறார்கள்...

eswar said...

VANAKAM. UNGGA KARUTTHAI VELIPADUTTHIATHARKU NANDRI. AASIYARKALAANA NANGAL PADUM BADU,UZHAPPU ENNIL ADANGA...

pesum karanggal said...

எங்களைப் போன்ற ஆசிரியர்களின் ஆதங்கத்தை வெளி கொண்டு வந்ததற்கு நன்றி. உங்கள் குரல்...... தமிழனின் குரல்

Blog Widget by LinkWithin