Thursday, August 11, 2011

தமிழ் விக்கிப்பீடியா பேரா.செல்வா - மலேசியா வருகிறார்


தமிழ்க்கணிமைத் துறையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்களில் குரல்விட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒருவர் மதிப்புமிகு பேராசிரியர் செ.இரா.செல்வக்குமார் (C.R.Selvakumar).

தமிழ் விக்கிப்பீடியாவைச் செழிக்கச் செய்த - செழுமை செய்துகொண்டிருக்கும் முன்னோடிகளில் இவருக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு.

தமிழ்க்கூறு நல்லுலகம் காலத்திற்கும் நன்றியோடு நினைத்துப்பார்க்க வேண்டிய அளவுக்கு மிகப்பெரும் பங்களிப்பைத் தமிழுக்கு வழங்கியிருக்கும் கொடையாளர் இவர் எனில் மிகையன்று.

இப்படி இன்னும் அடுக்கிச் சொல்லும் அளவுக்குச் சிறப்பு வாய்ந்தோராகத் திகழும் பேரா.செல்வக்குமார் மலேசியா வருகின்றார். இவர் 11.08.2011 முதல் 21.08.2011 வரை மலேசியாவில் இருப்பார்.

ஆகத்துத் திங்கள் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களுக்கு, மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 'கற்றல் கற்பித்தல் பன்னாட்டு மாநாட்டில்' கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றுவதோடு, விக்கிப்பீடியா, வின்னசரி ஆகியவற்றில் பங்களிப்பது குறித்து செய்முறை பயிற்சிகளும் வழங்கவிருக்கிறார்.

பேரா.செல்வகுமார் அவர்களின் பணிகள்:-

*தமிழ்நாட்டில் பிறந்த இவர், தற்போது கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மின், கணினி இயல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

*தமிழ் விக்கிப்பீடியாவில் அதிக பங்களிப்புகள் செய்த முதல் 5-6 பேர்களில் ஒருவராக கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருகின்றார் பேரா.செல்வா அவர்கள். இதுவரையில், விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 700-800 கட்டுரைகள் தொடங்கி எழுதியுள்ளார். தமிழ் விக்சனரியிலும் பல்லாயிரக்கணக்கான சொற்கள் சேர பல வழிகளிலும் உதவி உள்ளார்.

*தமிழில் கலைச்சொற்கள் ஆக்குவதிலும் அறிவியல் பயன்முக அறிவியல் படைப்புகள் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர் இவர்.

படம்:- தமிழ் இணைய முன்னோடிகள் (இ-வ) பேரா.செல்வா, நாக இளங்கோவன், பாலா பிள்ளை, கல்யாண், மணிவண்ணன், எ. இளங்கோவன், நா.கண்ணன், முத்து நெடுமாறன் , இராம.கி ஐயா, பேரா.நாகராசன் (உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை. சூன் 26, 2010).

*தமிழ்க் கணிமை வரலாற்றில் திசுக்கி (TSCII) உருவாக்கத்தில் பங்கு கொண்டவர்களில் இவரும் ஒருவர். அதில், சில புதுமையான முன்வைப்புகள் கொடுத்திருந்தார். இப்பொழுது, தொடர்ந்து ஒருங்குறி நிறுவனத்தில் உறுப்பினராக இருந்து கணித்தமிழுக்கு அரிய பணிகள் ஆற்றிவருகின்றார்.

*மதுரைத் திட்டம் தொடங்கும் முன்னே நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை முதன்முதலாக மின்வடிவில் செய்தபோது அக்குழுவில் ஒருவராகப் பங்களித்துள்ளார்.

*தமிழ் மன்றம் என்னும் கூகுள் குழுமம் ஒன்றை நடத்தி வருகின்றார். அதில் பல புகழ்பெற்ற பேராசிரியர்களும் தமிழ் ஆர்வலர்களும் பங்கு கொள்கின்றார்கள்.

*தமிழ்வெளி என்னும் பெயரில் வலைப்பதிவு ஒன்றினைச் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்.

* முகநூலில் தமிழ்மொழி மொழிபெயர்ப்புகள் செய்ததில் இவருக்கும் பெரும் பங்குண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உருவாக்கிய முகநூல் தமிழ் மொழிப்பெயர்ப்பு கணித்திரை படிவு ஒன்றைக் கீழே காண்க:-


பேரா.செல்வா அவர்களைப் பற்றிய பிற விவரங்களை அறிய கீழ்க்காணும் தொடுப்புகளைச் சொடுக்குக:-

http://ece.uwaterloo.ca/~selvakum/biop.html

http://tawp.in/r/7rv


பேரா.செல்வா அவர்களின் மலேசிய வருகை, இங்குள்ள கணினி ஆர்வலர்களுக்கும் தமிழ்ப் பற்றாளர்களுக்கும், விக்கிப்பீடியா பயனாளர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாக அமைந்துள்ளது.

மலேசியாவில் இருக்கும் காலத்தில் இங்குள்ள தமிழ்க்கணினி ஆர்வலர்கள், வலைப்பதிவர்கள், முகநூல் அன்பர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேசவும் கருத்தாடவும் இவர் விருப்பம் கொண்டிருக்கிறார்.

அதற்கு ஏதுவாக, பெட்டாலிங் ஜெயா தாமரை உணவகம், பாரிட் புந்தார் தமிழியல் நடுவம் போன்ற இடங்களில் சிறப்புச் சந்திப்புக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும் எண்ணம் இருக்கின்றது. மற்ற ஊர்களில் இவ்வாறான சந்திப்புக் கூட்டங்களை நடத்த விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

மின்னஞ்சல்:- suba.nargunan@gmail.com
கைப்பேசி:- 012-4643401

@சுப.நற்குணன்

2 comments:

k.veni said...

unggal sevai inithey enrenrum todara vendum aiya.Nani nanru aiya.

செல்வா said...

அன்புள்ள சுப.நற்குணன்,

தாங்கள் மிகுந்த அன்புடன் பெருமையாக எழுதிதுள்ளதை இன்றே காண நேர்ந்தது. மிக்க நன்றி ஐயா1 தமிழர்களாகிய நாம் செய்ய வேண்டியன் மிகப்பல உள்ளன. உங்களை எல்லாம் நேரில் கண்டு அளவளாவும் நற்பாக்கியம் பெற்றேன். மறக்கொணா அன்புகூடல்! தமிழுணர்வு கூடல்! எனக்கும் பேச வாய்ப்பளித்தமைக்கும், செய்த எல்லா ஏற்பாட்டுக்கும் மிகவும் நன்றியுடையேன். தமிழர்கள் கூடி உழைத்தால் உலகின் முதல் 10 குமுகங்களுள் ஒன்றாக எல்லாவற்றிலும் இருத்தல் இயலும். வாழ்க நற்றமிழ்!

Blog Widget by LinkWithin