Saturday, March 06, 2010

எழுத்துச் சீர்மை; தேவையற்ற வேலை: புலவர் இரா.இளங்குமரனார்

தமிழ்ப் பேரறிஞர், செந்தமிழ் அந்தணர், தமிழ்க்கடல் புலவர் ஐயா இரா.இளங்குமரனார் தற்போது மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டுள்ளார். மலேசியா முழுவதும் பல ஊர்களில் அவருடைய உரைப்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வரிசையில் 5-3-2010 வெள்ளிக்கிழமை பேரா மாநிலத்தில் உள்ள பாரிட் புந்தார் எனும் ஊரில் புலவர் ஐயாவின் பேருரை நிகழ்ச்சி நடந்தது. பேரா மாநிலத் தமிழியல் ஆய்வுக் களமும், பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்கமும் கூட்டாக இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ‘தமிழினத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் அருமைப் பேருரை நிகழ்த்திய புலவர் ஐயா, தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் தொடர்பாகவும் ஆழமான செய்திகளைப் பேசினார். எழுத்துச் சீர்மை பற்றி அவர் பேசியதாவது;

இப்போது தமிழ்நாட்டில் சிலர் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்யப்போவதாக புறப்பட்டு உள்ளனர். அவர்கள் இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்து வரிசைகளில் உள்ள 72 உயிர்மெய் எழுத்துகளில் சீர்மை தேவை என வலியுறுத்தி வருகிறார்கள்.

உண்மையில் சொல்ல வேண்டுமானால், இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்து வரிசை மட்டுமல்ல தமிழுக்கு எந்தச் சீர்த்திருத்தமும் தேவையில்லை. தமிழ் எழுத்துகள் மிகவும் செப்பமாக இருக்கின்றன; படிக்கவும் எழுதவும் தட்டச்சவும் கணினியில் பதியவும் எளிமையாக இருக்கின்றன.


“எழுத்தெனப் படுப
அகர முதல னகர இறுவாய்
முப்பஃது என்ப”
என்று தொல்காப்பியம் சுட்டும்போது தமிழில் 247 எழுத்துகள் என சொல்லுவது பேதமைத்தனம்.

தமிழ் எழுத்துகளை இப்படி விரித்துக் காட்டி மருட்டுபவர்கள் ஆங்கில ரோமன் எழுத்துகளை உண்மையில் 26உடன் 4ஐ பெருக்கிக்கொள்ள வேண்டும். ரோமன் எழுத்துகளை 26 என்று சுருக்கிக் காட்டிவிட்டு தமிழ் எழுத்துகளை அதிகமாக்கிக் காட்டுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.

தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் என்பது சிலருடைய மூளைக் கோளாற்றின் வெளிப்பாடு.

மொழியைப் பரப்புவதற்கும் வளர்ப்பதற்கும் என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ அதனைப் பார்க்க வேண்டும். மொழியை ஒழிக்கும் வேலையைப் பார்க்கக் கூடாது.

குழந்தை கருவில் இருக்கும்போதே தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆங்கிலவழிப் பள்ளியில் இலட்சங்களைக் கொடுத்து பதிவு செய்கிறார்கள்.

முதல் வகுப்புக்குப் போகும் குழந்தை எல்லாப் பாடங்களையும் தமிழ் படிக்க முடிகிறதா? தமிழ்க் கல்வி நாட்டில் நன்றாக இருக்கிறதா?

ஒரு பள்ளியில் தவறி விழுந்த குழந்தை “அம்மா” என்று கத்திவிட்டதற்காக கன்னத்தில் அறைகிறார்கள்; தலையைப் பிடித்து சுவரில் முட்டுகிறார்கள்; பள்ளியைச் சுற்றி முழங்காலிட்டு நடக்க வைக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு நாட்டில் தமிழைக் கற்பதற்குரிய வழிகளைக் காணமாட்டாமல், எழுத்தைச் சீர்த்திருத்தி தமிழை வளர்க்கப் போகிறோம் என்பது நகைப்புக்குரியதாகும்.

இறுதியாக ஒன்றைச் சொல்கிறேன். என்னைப் பெற்ற அம்மா மூச்சுவிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள். என் உயிர்; என் உடல்; என் வாழ்வு; என் வளம்; என் நலம்; என் தெய்வம்; என் மொழி எல்லாமே என் அம்மா. மருத்துவரிடம் காட்டுகிறேன். ஐயா என் அம்மாவைக் காப்பாற்றுங்கள் என்கிறேன். அதற்கு அந்த மருத்துவன் சொல்கிறான் “உன் அம்மாவைக் காப்பாற்றுவதற்கு முன் அவருடைய முதுகில் ஒரு எலும்பு வளைத்திருக்கிறது. அதை முதலில் சரி செய்கிறேன் என்றானாம்.

அப்படித்தான் இருக்கிறது தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ் எழுத்தைச் சீர்த்திருத்தம் செய்கிறோம் என்று செயல்படுவது.

இவ்வாறு, புலவர் ஐயா தமது எழுச்சிமிகு உரையில் பேசினார்.



இதே நிகழ்ச்சியில், தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தத்தை மறுத்தும் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், எழுத்துச் சீர்மை தேவையில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் இணையத்தில் வெளிவந்த பலருடைய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு (சுப.நற்குணன் தொகுத்தது) ஒன்றினைத் தமிழியல் ஆய்வுக் களத்தின் தலைவர் இர.திருச்செல்வனார் புலவர் ஐயாவிடம் வழங்கினார்.

புலவர் ஐயாவின் உரை தொடங்குவதற்கு முன்னதாக, ஏற்பாட்டுக்குழுச் செயலர் சுப.நற்குணன் எழுத்துச் சீர்மை தொடர்பான ஒளிக்காட்சித் தொகுப்பினைக் காட்டி விளக்கமளித்தார்.

இந்த அருமை நிகழ்ச்சியை தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் தலைவர் க.முருகையன் வழிநடத்தினார். எழுத்துச் சீர்மையால் தமிழுக்கு ஏற்படப்போகும் சிதைவுகளையும் விளைவுகளையும் தீர்மானமாக வாசித்துக் காட்டினார்.

மலேசியத் தமிழ்நெறிக் கழகப் பொறுப்பாளர்கள் அருள்முனைவனார், மாரியப்பனார், கு.மு.துரையனார் முதலியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், மகளிர், மாணவர்கள் எனப் பல தரப்பினரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பி.கு: எழுத்துச் சீர்மை குறித்த திருத்தமிழ் பதிவுகளைப் படிக்க இங்குச் சொடுக்கவும்

8 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் என்பது சிலருடைய மூளைக் கோளாற்றின் வெளிப்பாடு//

:)

//ஒரு பள்ளியில் தவறி விழுந்த குழந்தை “அம்மா” என்று கத்திவிட்டதற்காக கன்னத்தில் அறைகிறார்கள்; தலையைப் பிடித்து சுவரில் முட்டுகிறார்கள்; பள்ளியைச் சுற்றி முழங்காலிட்டு நடக்க வைக்கிறார்கள்.//

:(

நிகழ்வு பற்றிய தகவலுக்கு நன்றி. ஐயாவைப் போன்ற அறிஞர்களிடம் இருந்து நாம் கற்றுத் தேர நிறைய இருக்கிறது.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அண்மையில், தமிழ் அடிப்படை சேவைகள் செய்வதாக சொல்லிக் கொள்ளும் முன்னணி "தொண்டு" நிறுவனம் ஒன்றின் உறுப்பினர், தமிழை ஏன் உரோம எழுத்துகளில் எழுதிச் சீர்திருத்தம் செய்யலாகாது என்று என்னிடம் கருத்து கேட்டார் ! :(

தமிழை ஒழிக்காமல் விட மாட்டோம் என்று படை கிளம்பி இருக்கிறது போல..

மறைமலை இலக்குவனார் said...

மகிழ்ச்சி.மலேசியா எங்கும் இப் பணி தொடர்க.அனைத்துத் தமிழ் மன்றங்களும்
எழுத்துச் சீர்திருத்ததைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றுக.
இளங்குமரனாரின் பொழிவை ஒலியலை வடிவில் இணையத்தில் வெளியிடுக.
நன்றி.
மறைமலை

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் ரவிசங்கர்,

//தமிழை ஒழிக்காமல் விட மாட்டோம் என்று படை கிளம்பி இருக்கிறது போல..//

இதனை மறுப்பதற்கு இல்லை.

தமிழுருவில் தமிழ்ப்பகைவர்
இருக்கின்றார்; - அவர்
தமிழர்களின் தாலிகளை
அறுக்கின்றார்..!!

சுப.நற்குணன்,மலேசியா. said...

>அன்பின் ஐயா,

//இளங்குமரனாரின் பொழிவை ஒலியலை வடிவில் இணையத்தில் வெளியிடுக.//

ஆவன செய்கிறோம்.

Tamilvanan said...

சுப.நற்குணன்,மொழியின் வ‌ள‌ர்ச்சிக்கு தாங்க‌ள் ஆற்றிடும் தொண்டுக்கு வாழ்த்தையும் ஆதர‌வையும் உரித்தாக்குகிறேன்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,

மிக்க மகிழ்ச்சி. நனிநன்றி நண்பரே.

நீங்கள் தவறாமல் திருத்தமிழ் படிப்பதும் ஆக்கமான மறுமொழிகள் - கருத்தாடல்கள் புரிவதும் ஊக்கமூட்டுவனவாக இருக்கின்றன.

தமிழுக்குப் பணிசெய்வதில் நீங்கள் மட்டும் சளைத்தவரா என்ன? உங்களுக்கும் பாராட்டுகள் நண்பரே!

இறையரசன் said...

அன்பார்ந்தீர்! வணக்கம்.
எழுத்துச் சீர்திருத்தம் கணினிக்குப் பயன்தரும் என்ற நோக்கில் நான் தஞ்சையில் மாநாடே நடத்தியுள்ளேன். இப்போது கணினியில் முழுப்பயன்பாடுக்குத் தமிழ் வந்துவிட்டது.இந்நிலையில் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை.
தங்கள் அன்பிலே,
முனைவர் பா.இறையரசன்
Dr.B.ERAIYARASAN,M.A.,M.Phil.,Ph.D.,
93,வ.உ.சி.தெரு, பாவேந்தர் நகர்,
V.O.C. street,Pavendar nagar ,
காட்டுப் பாக்கம், சென்னை
Kattu pakkam,CHENNAI-600056.
044-24767888,9840416727
iraiarasan@gmail.com
http://iraiarasu.blogspot.com
http://aaivuththamizh.blogspot.com
http://thamizhppeyarhal.blogspot.com

Blog Widget by LinkWithin