Saturday, October 10, 2009

நோபல் தமிழர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்

பெரும்பாலும் மேலை நாட்டுத் தலைவர்களையும் அறிஞர்களையும் அறிவியலாளர்களையும் எப்போதுமே தேடிச் செல்லும் நோபல் பரிசு, இந்த 2009இல் ஒரு தமிழரைக் கட்டித் தழுவியிருக்கிறது. இதன்வழி தமிழ் இனத்திற்கே பெருமை வந்து குழுமியிருக்கிறது.


தமிழகம், சிதம்பரத்தில் பிறந்து; அமெரிக்காவில் குடியிருந்து; இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்சு நகரில் உயிரியல் ஆய்வாளராகப் பணியாற்றும் முனைவர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் (வயது 57) அவர்கள் இவ்வாண்டுக்கான நோபல் பரிசு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இப்படியொரு சாதனையை நிகழ்த்திக் காட்டியிருப்பவர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேதியல் துறைக்கான (Chemistry) இந்தப் பரிசு வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் அவர்களுக்கும், இவருடன் இணைந்து ஆய்வினை மேற்கொண்ட அமெரிக்கர் தாமசு ஏ. இஸ்டெல்ட்ஸ் (Thomas A. Steitz), இசுரேல் நாட்டைச் சேர்ந்த பெண் அறிவியலாளரான ஆடா இ யோனத் (Ada E. Yonath) ஆகிய மூவருக்கும் வழங்கப்படுகிறது.

இவர்கள் மேற்கொண்ட ஆய்வு என்பது மிகவும் நுட்பமானது. மனிதனுக்கும் மற்றைய உயிரினங்களுக்கும் உடலில் புரதம் (Protein) என்று இருக்கிறது. இதனை நாம் அறிவோம். புரதம் உடலில் நிகழும் வேதியல் மாற்றங்களைக் கட்டுப்படுத்துகிறது. இந்தப் புரதத்தை உருவாக்கும் ‘ரிபோசம்’ (Ribosome) என்கிற அணுக்களின் செயல்பாடுகளை இவர்கள் ஆராய்ந்துள்ளனர்.

‘ரிபோசம்’ 25நானோ மீட்டர் அளவு கொண்ட ஒரு நுண்மையான அணு. 25 நானோ மீட்டர் என்பது ஒரு மில்லி மீட்டரைப் பத்து இலக்கம்(இலட்சம்) பங்காகப் பிரித்தால் அதில் உருவாகும் ஒரு பகுதி அளவினது. (1 மில்லி மீட்டரை 100,000ஆல் வகுத்தல்).




இவ்வளவு நுண்மையான ஒரு பொருளைக் கண்டுபிடித்து – அதன் செயல்பாட்டைத் துல்லியமாகக் கண்டறிந்து சொன்னதோடு மட்டுமல்லாமல், அதனைப்பற்றி முப்பரிமாணப் படத்தையும் உருவாக்கி மாபெரும் சாதனை படைத்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு மருந்துகளை புதிய நுட்பங்களோடு உருவாக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது உலக மாந்த இனத்திற்கே பெரும் நன்மையளிக்கும் என கருதப்படுகிறது.

வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் 1952இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.யூ.சி படிப்பும் குசராத் பரோடா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி –யும் படித்தவர். பிறகு, ஓகாயோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் முனைவர் (பி.எச்.டி) பட்டம் பெற்றார். கலிபோர்னியா பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், யாத் பல்கலைக்கழகம், புரூக்கெலன் தேசிய ஆய்வுக்கூடம் ஆகிய இடங்களில் பேராசிரியராகவும் ஆய்வாளராகவும் பணியாறினார்.

1999ஆம் ஆண்டில் இங்கிலாந்து கேம்பிரிட்சு பல்கலைகழகத்தில் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அதில் ஒன்றுதான் ‘ரிபோசம்’ தொடர்பானது. இந்த ஆராய்ச்சியில் அவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார். தம்முடைய ஆய்வுகளைப் பற்றி இதுவரை 95 ஆய்வேடுகளை இவர் எழுதியுள்ளார். தற்போது இவருக்கு நோபல் விருதைப் பெற்றுக்கொடுத்துள்ள ‘ரிபோசம்’ பற்றி மட்டும் மூன்று ஆய்வுக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.


உலகத்திலேயே மிக உயரிய விருதாகப் போற்றப்படுவது நோபல் பரிசு. சுவிடன் நாட்டின் அறிவியலாளர், மறைந்த ஆல்பிரட் நோபல் என்பாரின் நினைவாக நிறுவப்பட்டுள்ள நோபல் பரிசு தேர்வுக் குழு, ஒவ்வொரு ஆண்டும் இந்த மாபெரும் பரிசை வழங்கி வருகிறது.


வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் அவர்களையும் சேர்த்து, இதுவரையில் மூன்று தமிழர்களுக்கு இந்த நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. 1930ஆம் ஆண்டில் இயற்பியல் துறைக்காக சர்.சி.வி.இராமன், 1988இல் அதே இயற்பியலுக்காக சந்திரசேகர் சுப்பிரமணியன் ஆகிய இரு தமிழர்கள் ஏற்கனவே நோபல் விருதைப் பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோபல் விருது பெற்றுள்ள, வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் அவர்கள் தமிழினத்தில் பிறந்ததினால் தமிழராகப் பிறந்த அனைவருக்குமே பெருமைதான்.

8 comments:

வஜ்ரா said...

வெங்கி ராமகிருஷ்ணன் ரைபோசோமைக் கண்டுபிடிக்கவில்லை.
அவர் அதன் மூலக்கூறு வடிவத்தைக் கண்டுபிடித்தார். இது 1990 களில் செய்யப்பட்ட ஆராய்ச்சி.

ஜார்ஜ் பலேட் (George Palade) என்பவரால் முதல் முதலில் காண்டறியப்பட்டது. ரிச்சர்ட் ராபர்ட்ஸ் (Richard B. Roberts) என்பவரால் ரைபோசோம் எனும் பெயர் வழங்கப்பட்டது. இதெல்லாம் 1950 களில் செய்யப்பட்டது.

வஜ்ரா said...

வெங்கி ராமகிருஷ்ணன், ஒரு அமேரிக்கக் குடிமகன். பிறப்பினால் மட்டும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் வஜ்ரா,

முதன்முறையாகத் தங்களைத் திருத்தமிழில் காண்கிறேன். மிக்க மகிழ்ச்சி. வருக!

'ரிபோசம்' பற்றிய தங்களின் தகவல்களுக்கு மிக்க நன்றி.

வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் "எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே" அல்லவா?

இந்தியாவுக்கும் குறிப்பாகத் தமிழகத்திற்கும் தமிழருக்கும் இவரால் பெருமைதானே..!

மனோவியம் said...

சில தமிழர்கள் தான் தமிழன் என்பதை அடைமொழி இடுவதில்லை.தமிழன் என்று பறைச்சாற்றுவதும் இல்லை.தன்னை தமிழனாக நினைப்பதும் இல்லை தமிழனை மதிப்பதும் இல்லை ஐயா.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருஷ்ணன்,

உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.

ஆனால், அவர்கள் என்னதான் 'டெத்தோல்' போட்டுக் கழுவினாலும், அமிலத்தில் (அசிட்) முக்குளித்தாளும் தமிழன் என்ற மரபணுவை மாற்றிக்கொள்ள முடியாது.

இவர்கள் தமிழன் என்ற அடையாளத்தை மறைத்து வெள்ளையன்போல வேடம் போட்டாலும்... பிற இனத்தார் இவனைத் தமிழன் என்றே சுட்டுவார்கள்.. சொல்லுவார்கள்.

தமிழன் என்று சொல்லிக்கொள்வதில் தமிழர் அனைவரும் பெருமைகொள்ளும் நாளே.. தமிழினத்திற்கு உண்மையான விடுதலை நாள்..!

Anonymous said...

He mentioned in an interview that he never studied in annamalai university. Where did you get this info?

சுப.நற்குணன்,மலேசியா. said...

>பெயரில்லாத் திருத்தமிழ் அன்பரே,

//He mentioned in an interview that he never studied in annamalai university. Where did you get this info?//

எல்லா பத்திரிகைகளும் இப்படித்தான் சொன்னதாக அறிகிறேன். விக்கிபீடியாவிலும் இந்தத் தகவல் உள்ளது.

தவறாக இருப்பின் சுட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி அன்பரே.

அடுத்தமுறை பெயரோடு வாருங்களேன்.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

http://www.indianexpress.com/news/venki-ramakrishnan-miffed-at-emails-from-india/528591/

Blog Widget by LinkWithin