Saturday, October 24, 2009

தொல்.திருமாவளவனுக்கு மலேசியத் திருமாவளவன் கேள்வி



மதிப்பிற்குரிய விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தமிழ்த்திரு தொல் திருமாவளவன் அவர்களுக்கு, வணக்கம்.

அண்மையில் தாங்கள் இலங்கைக்குச் சென்று இலங்கை கொலை வெறி அரசால் வன்னி மண்ணில் படுகொலை செய்யப்பெற்று சொல்லொணா துன்பத்திற்கு ஆளான தமிழ் மக்களில் எஞ்சியவரைக் கொத்தடிமைக் கொட்டடிக்குள் சந்தித்து உரையாடி வந்தமையினை ஊடகங்கள் வாயிலாக படித்தறிந்தேன்.



தமிழின வீரத்தின் மொத்த வடிவமாகவும் தமிழினத்திற்குக் காலம் கொடுத்த அருங்கொடையாகவும் வாய்க்கப் பெற்ற அரும்பெறல் தலைவர் மேதகு பிரபாகரன் கரங்களைக் குலுக்கிய கைகள் தமிழனின் குருதிக் கறைகள் படிந்த கொலை வெறியன் மகிந்தவின் கரங்களைக் குலுக்கியதையும் அவனோடு சிரித்து மகிழ்ந்து உணவுண்டதையும் ஊடகங்களில் கண்டு மனம் நொந்து போன தமிழுள்ளங்களில் நானும் ஒருவன்.
தமிழீழ மக்களுக்காக குரல் கொடுத்த கரணியத்திற்காகவும் தங்கள் இயக்கத் தொண்டர்கள் பலருக்குத் தூயதமிழ் பெயர் சூட்டியமைக்காகவும் மேலும் பல்வேறு மொழி நலன் செயற்பாடுகளுக்காகவும் தங்கள் மீது எனக்கு உயர்ந்த மதிப்பிருந்தது.
  • அதனால், மலேசியாவிற்குத் தங்களை முதன்முறையாக பல்வேறு எதிர்ப்பிற்கிடையே அழைத்து நாடு தழுவிய அளவில் நிகழ்ச்சிகளை நடத்தினேன். இதனைத் தாங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதுகின்றேன்.
ஆனால், அண்மை காலமாக தங்களின் செயற்பாடுகளில் பிறழ்ச்சி நிலை தென்படுவது தங்களின் மேல் உலகத் தமிழர்கள் வைத்துள்ள மதிப்பை பாதித்துள்ளது என்பதைத் தாங்கள் அறிவீர்களா?

ஈழ மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடு இணை சொல்ல முடியாத அளவில் வீரஞ்செறிந்த போர் புரிந்து கொண்டிருந்த வேளையில் அதனை முறியடிக்கும் நோக்கில் சிங்கள் இன வெறி அரசுக்கு முட்டு கொடுத்த இந்திய காங்கிரசு கூட்டணிக்குத் தாங்கள் முட்டு கொடுத்தீர்கள். அக்கால் தமிழீழ மக்களைக் குறிவைத்து சிங்களப் படை கொலை வெறி தண்டவம் ஆடியது. ஈழத் தமிழ் மக்கள் அவலக் குரல் எழுப்பினர். கதறினர். காப்பாற்றக் கோரி இந்தியாவை நோக்கிக் கெஞ்சினர்.

உங்கள் அன்பு முதல்வர் நாற்பது ஆண்டுகால போர் நான்கு நாள்களில் நின்று விடுமா என்று கேட்டார். எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என சட்ட மன்றத்திலேயே அறிவித்தனர். இந்திய நடுவண் அரசின் நிலைப்பாடே எங்களுடைய நிலைப்பாடும் என உங்கள் முதல்வர் திட்டவட்டமாகவே அறிவித்துவிட்டார். மற்றொரு பக்கம் ஈழத் தமிழ் மக்களுக்காக என்னையே நான் தியாகம் செய்யத் துணிந்து விட்டேன் என்று ஒரு நாள் நோன்பிருந்தார். கொடிய தாக்குதல் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப் படுகையிலேயே போர் நிறுத்தம் வந்து விட்டது என்று கூறினார்.

இவை எல்லாம் யாரோ கூறுபவை அல்ல. உங்கள் தமிழகத் தலைவர்களாலேயே பதிப்பிக்கப் பட்டவை. ஏடுகளில் வந்தவை. காட்சிகளில் பதிவானவை. கொலை வேறி சிங்களவனுக்கு எல்லா வகையாலும் ஒத்தாசை வழங்கி விட்டு,

"அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் அங்கே தலைவிரித்தாடுகின்றன. முகாம்களில் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஈழத் தேசமே ராணுவத்தின் கெடுபிடிக்குள் சிக்கிச் சிதைந்து வருகிறது.

மக்களிடையே மன அழுத்தங்களும் அச்சமும் பீதியும் மேலோங்கி நிற்கின்றன.
தமிழ் மக்களிடையே அச்சத்தாலான அடிமைத்தனமும் பரவுவதை அவர்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காகக் கையேந்தி நிற்கும் நிலைமைகளிலிருந்து அறிய முடிகிறது.

மெலிந்த உடல்களிலிருந்து ஏக்கப் பெருமூச்சுகளும், முனகல்களும் மட்டுமே வெளிப்படுகின்றன. நாவிலிருந்து வார்த்தைகள் வராமல் விழிகளிலிருந்து தாரை தாரையாய் நீர் கொட்டுவதை காண முடிகிறது.

2 பேர் மட்டுமே வசிக்கக்கூடிய கூடாரங்களில் 8 பேர், 10 பேர்களை அடைத்து வைத்திருக்கும் மனிதநேயமற்ற கொடுமைகள் திணிக்கப்பட்டுள்ளன. இந்த மனித அவலங்களை மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. "

என்று தாங்கள் அறிக்கை விட்டிருப்பதைக் கண்டு நாங்கள் யாரிடம் சொல்லி அழ? இவற்றுக் கெல்லாம் ஏதொவொரு வகையில் தாங்களும் துணையாகி விட்டீர்களே! அதை உங்கள் மனச்சான்றிலிருந்து மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா?

"நல்ல வேளை நீங்கள் பிராபாகரனோடு அன்று இல்லை. இருந்திருந்தால் நீங்களும் செத்திருப்பீர்கள்" என்று இந்திய நாடாளுமன்ற குழுவில் தங்களைப் பார்த்து அந்தக் கொலை வெறியன் கேளி செய்தானே! அதைக் கண்டு என் நெஞ்சம் கொதித்தது. ஆனால் அது தங்களுக்கு நகைச்சுவையாகப் பட்டது.

பிரபாகரன் என்கின்ற தமிழினத்தின் உயர் தலைவனின் பக்கத்தில் நின்று உரையாடியவர் தாங்கள். விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தாங்கள்.
கொஞ்சமாவது அந்த வீரத்தின் வாடை வீசியிருக்க வேண்டாவா?

ஆனால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தக் கொடுமைகளை எப்படி வேடிக்கை பார்க்கின்றன என்பது தான் பெரும் கொடுமையாக உள்ளது. இந்திய அரசு ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக மேலும் ரூ.500 கோடி வழங்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது நீங்கள் வெளியிட்ட அறிக்கையில் உள்ள குறிப்பு. இது என்ன இந்தியா புதிதாக செய்கின்ற வேலையா? அன்று களத்தில் நின்ற தமிழனைக் கொல்ல துணை நின்ற இந்தியா, இன்று கொத்தடிமைக் கொட்டடிக்குள் கிடக்கும் தமிழனை அழிக்க உதவுகிறது. அப்படிப் பட்ட கூட்டணி தானே உங்கள் கூட்டணி.

அடங்க மறு திருப்பி அடி என்பதெல்லாம் ஏட்டளவில் இருந்தால் போதுமா?

உண்மையான அப்பழுக்கில்லாத உணர்வு மிக்க செயல் வீரம் கொண்ட தமிழனாகவே தங்களை உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஐயா பழ நெடுமாறன் மலேசியா வந்த பொழுது ஒரு கருத்தைக் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பங்காற்ற கூடிய முழு பொறுப்புக்குரியவர்கள் முந்தைய தலைமுறையோ பிந்திய தலைமுறையோ அல்ல. இன்றைய தலைமுறையினராகிய நாம் தான். நாம் நம்முடைய கடமையை சரிவர ஆற்றத் தவறி விட்டால் வரலாற்றுப் பழிப்பிலிருந்து தப்ப முடியாது.

உங்கள் முதல்வர் இன்று பொறுப்பிலிருக்கின்ற இக்கால்தான் ஆயிரக்கணக்கான் தமிழீழத் தமிழர்கள் சிங்களக் காடையர்களால் ஊரறிய உலகறிய பச்சைப் படுகொலை செய்யப் பட்டார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒடுக்கப் பட்டிருக்கிறது. இலக்கக் கணக்கான தமிழ் மக்கள் முள்வேலிக் கம்பிகளுக்குள் அடைக்கப் பட்டு வதைப் படுத்தப்படுகின்றனர்.

இவற்றை எல்லாம் தடுப்பதற்கு ஆட்சியிலிருக்கும் உங்கள் கூட்டணிக்கு எண்ணம் இல்லையே?

தமிழினத்தை அழிக்கும் இந்திய அழிப்பாற்றலுக்குக் கைகொடுத்துக் கொண்டு ஒப்பாரி வைப்பது வேடிக்கையாக இல்லையா?


இக்கண்;
இரா.திருமாவளவன்,
மலேசியா.




12 comments:

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

உறைத்தால் சரி.

Anonymous said...

unmaiyil naangal kedka vendiyavatrai valavan keddirukkiraar.meesaiyai murukkuvathu mandiyidaththaan enpathu thelivu.-raavan rajhkumar-jaffna

ttpian said...

nari pari aakum!
siruththai punai aakum

Anonymous said...

இவர்களை எல்லாம் நம்பி ஏமாந்த சோனகிரித் ஈழத் தமிழனை என்னவென்று சொல்வது. வெட்கம் மானம் சூடு சொரணை கொஞ்சமாவது இருந்திருந்தால் அந்த கொலை வெறியனின் தமிழர் இரத்த்ம தோய்ந்த கைகளை பிடித்துக் குலுக்கியிருப்பாரா? அல்லது அந்த அரக்கன் கூறியதற்கு வாய் மூடி மெளனித்திருப்பாரா? இவர்கள் எல்லாம் அட்டைக் கத்தி சினிமா வீரர்கள். மனதிற்கு வேதனை அளிக்கின்றது. இன்னும் எவ்வளவு தூரம் ஈழத்தமிழரை ஏமாற்றி அவர்கள் கணணீரில் துன்பத்தில் அரசியல் நடத்தப் போகின்றார்களோ. பார்ப்போம்.

ஜனா

சீ.பிரபாகரன் said...

“திருமா” அவர்கள் தன்மானமுள்ள தமிழன் என்று நம்பி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். இதற்கு மேல் அவரைப்பற்றி பேச விரும்பவில்லை...

Anonymous said...

வணக்கம் நண்பரே

உங்களின் இக்கட்டுரையை உங்கள் அனுமதியின்றி இங்கே இணைத்துள்ளோம்.

http://www.meenagam.org/?p=14290

பொறுத்தருள்வீர்கள் என்று எண்ணுகிறோம்.

நன்றி
---

kalai said...

முட்டாள் தனமாக இருக்கிறது உங்களது எதிர்பார்ப்புகள். இராஜபக்சேவை திருமாவளவன் என்ன செய்ய முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள்.

தமிழ்தேசிய தலைவராலேயே ஒன்றும் செய்துவிட முடியாத போது திருமாவால் என்ன செய்யமுடியும். நீங்கள் கூட முட்டாள் தனமாக(மண்ணிக்கவும்) எழுதுவது வேதனையாக உள்ளது.

திருமாவேனும் பரவாயில்லை. அவர் ஆளும் கட்சியில் இருந்துகொண்டே ஆர்பாட்டங்களையும், கூட்டங்களையும் நடத்துகிறார்.

ஆனால் நாம் எல்லாம் இன்னும் நம்பும் வைகோ நெடுமாறன் போன்றோர் என்ன செய்கிறார்கள்???

திருமாவை மட்டும் குறை சொல்பவர்கள் நிச்சயம் அறிவிலிகளாக இருப்பார்கள். என்பதே இனையதளங்களில் எழுதிகிழிப்பவர்களை பார்த்தால் தெரிகிறது.

இங்கு எழுதி கிழிக்கும் இவர்கள் ஏதேனும் சிறு புடுங்களை கூட ஈழத்திற்காக செய்திருக்க மாட்டார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

இப்படி குறைசொல்லி சொல்லியே நாம் அழிவில் நிற்கிறோம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

Anonymous said...

இது ஒரு மானங்கேட்ட நாடகக்குழு ,இவர்களிடம் இருந்து நாம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும் .மானங்கேட்ட (மன்னிக்கவும் )அது இருந்தால் தானே இவர்களுக்கு கெடுவது . சி.நா.மணியன்.

Admin said...

தமிழகத் தலைவர்களை நம்பி தமிழன் ஏமாந்த காலம் போய்விட்டது. என்றோ ஒருநாள் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கும் காலம் வரும் என்று நம்பிக்கை கொள்வோம்.

Admin said...

//kalai said...
முட்டாள் தனமாக இருக்கிறது உங்களது எதிர்பார்ப்புகள். இராஜபக்சேவை திருமாவளவன் என்ன செய்ய முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள்.

தமிழ்தேசிய தலைவராலேயே ஒன்றும் செய்துவிட முடியாத போது திருமாவால் என்ன செய்யமுடியும். நீங்கள் கூட முட்டாள் தனமாக(மண்ணிக்கவும்) எழுதுவது வேதனையாக உள்ளது.

திருமாவேனும் பரவாயில்லை. அவர் ஆளும் கட்சியில் இருந்துகொண்டே ஆர்பாட்டங்களையும், கூட்டங்களையும் நடத்துகிறார்.

ஆனால் நாம் எல்லாம் இன்னும் நம்பும் வைகோ நெடுமாறன் போன்றோர் என்ன செய்கிறார்கள்???

திருமாவை மட்டும் குறை சொல்பவர்கள் நிச்சயம் அறிவிலிகளாக இருப்பார்கள். என்பதே இனையதளங்களில் எழுதிகிழிப்பவர்களை பார்த்தால் தெரிகிறது.

இங்கு எழுதி கிழிக்கும் இவர்கள் ஏதேனும் சிறு புடுங்களை கூட ஈழத்திற்காக செய்திருக்க மாட்டார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

இப்படி குறைசொல்லி சொல்லியே நாம் அழிவில் நிற்கிறோம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.//


இலங்கை தமிழ் மக்கள் தமிழகத் தலைவர்களின் ஆதவினை வேண்டி நின்றபோது தமிழக அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள் என்று உங்களிடம் கேட்கின்றேன்.


நம்பியிருந்த தமிழக தலைவர்களே கைவிரிக்கும்போது. எங்களால் அவர்களிடம் கேள்விகேட்கத்தான் முடியும் எமது குரல்களே நசிக்கப்பட்டுவிட்டன.

Barari said...

i repeat mr kalai.

Anonymous said...

வணக்கம்,

நான் ராம்,
திரைப்பட இயக்குநர் சென்னையிலிருந்து.
கற்றது தமிழ் நான் எடுத்தத் திரைப்படம்.
ம்லேசியத்தமிழர்கள் நிலை குறித்து
உங்களோடு பேசலாம் என்று நினைக்கிறேன்,
என்னு்டைய மின்ஞ்ச்ல்
droppeth@gmail.com
ராம்.

Blog Widget by LinkWithin