மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை – தெளிவான அறிக்கை தேவை என்று தலைப்பிட்டு 9.9.2009ஆம் நாள் ‘மலேசிய நண்பன்’ நாளேடு வெளியிட்டுள்ள செய்தி இது. இந்திய ஆய்வியல் துறை சிக்கல் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலையில் சிந்தனைக்குரிய சில விடயங்களை இச்செய்தி முன்வைக்கிறது.
மலாயாப் பல்கலைகழக இந்திய ஆய்வியல் துறை பெயர் மாற்றம் காணப்படும் என்றும் அத்துறையின் தலைவராக தமிழ் புலமைபெற்ற தமிழராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் சில மாதங்களுக்கு முன் அறிக்கை விடுத்திருந்தார் அதன் துணைவேந்தர்.
இந்திய ஆய்வியல் துறை என்று பெயரிடப்பட்டிருந்தாலும், அந்த துறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் அனைத்தும் தொடக்கக் காலம் முதல் தமிழ்மொழியில் மட்டுமே இருந்து வந்திருக்கின்றன.
இதற்குக் காரணம், தமிழர்களால் (தெலுங்கர், மலையாளிகள் உள்ளிட்ட) தமிழ்மொழி மாண்பு நிலைபெற உருவாக்கப்பட்ட ஆய்வுப் பிரிவு இது. ஒவ்வொரு தமிழனுக்கும் இதில் பங்குண்டு.
‘தமிழ் எங்கள் உயிர்’ என்று நிதி ஆரம்பிக்கப்பட்டு, அதன்மூலம் திரட்டப்பட்ட பணத்தைக்கொண்டுதான் இந்த ஆய்வியல் துறை உருவாக்கப்பட்டது.
மலாயாப் பல்கலைகழகப் பொறுப்பில் உள்ளவர்களும், உயர்க்கல்வி அமைச்சும் இந்த அவரலாற்றைத் தெரிந்துகொள்வது நல்லது. இந்தத் துறை மாற்றப்பட வேண்டுமா வேண்டாமா என்பதைத் தமிழர்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும்.
இந்திய ஆய்வியல் துறை என்றிருப்பதை தென்னாசிய ஆய்வியல் துறை என்று மாற்றி, தமிழுக்குரிய அங்கீகாரத்தைக் குறைத்துவிடும் நோக்கத்தில் முன்மொழியப்பட்ட கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், இதுவரை இழுத்தடித்தது தவறு.
இச்செயலைக் கண்டிக்கும் முகத்தான், தமிழ்மொழியின்பால் அக்கறை கொண்ட சுமார் 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றுகூடி, துணைவேந்தரின் தகாத கருத்துக்கு மறுப்பு தெரிவித்து துணைவேந்தரிடமும் அரசாங்கத்திடமும் அறிக்கை கொடுத்தனர். இருப்பினும், இரண்டு தரப்பினரும் இதுவரை எழுத்துப்பூர்வமான பதில் தரவில்லை. என்றாலும், துணைவேந்தர் தன்னுடைய மாற்றுத் திட்டத்தில் பிடிவாதமாய் இருந்தார்.
கடைசியாக அமைச்சரவையில் பேசப்பட்டு, இந்திய ஆய்வியல் துறை மாற்றம் பெறாது என்றும், இந்தியர் ஒருவரே தலைவராய் நியமிக்கப்படுவார் என்றும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக, மனிதவள அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் அறிக்கை விடுத்திருந்தார். அதனால், நமக்கு மன ஆறுதல் ஏற்பட்டது.
இருப்பினும், அமைச்சரின் அறிக்கை தெளிவாக இல்லை. அமைச்சரவையில் பேசப்பட்ட முழு விவரமும் வெளியிடப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட உயர்க்கல்வி அமைச்சரும் இதுவரை மௌனமாக இருக்கிறார்.
தமிழ்மொழியை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வுத்துறை சம்பந்தமான எந்த மாற்றமும் தமிழர்களின் ஒப்புதல் இல்லாமல் நடைபெறாது என்ற உறுதிமொழி வேண்டும்.
மற்றொன்று, இந்திய ஆய்வியல் துறை என்று பெயர் வைத்திருப்பதால், இந்தியர் என்ற பெயரில் எவரும் எவரையேனும் கொண்டு அந்தத் துறையின் தலைவர் பொறுப்பு கொடுக்கப்படலாம் என்று துணைவேந்தர் போன்றவர்கள் எண்ணிவிடுகின்றனர்.
அந்த தப்பான எண்ணத்திலிருந்து விடுபட வேண்டுமானால், இப்போது ஏற்பட்டிருக்கும் குழப்பத்தையும் தெளிவுபடுத்த வேண்டும். அதற்குரிய ஒரே வழி, ‘இந்திய ஆய்வியல் துறை’ என்பதை அகற்றிவிட்டு ‘தமிழ் ஆய்வியல் துறை’ என்று பெயரிடப்பட வேண்டும்.
மேலும், தமிழ்மொழியில் மேற்கொள்ளப்படும் ஆய்வுத் துறைக்கு தமிழ்மொழியில் புலமைபெற்ற தலைவரைத்தான் நியமிக்க வேண்டும்.
மலாயாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உருவாக்கிய வேண்டப்படாத சிக்கலுக்குச் சரியான விடையைத் தெளிந்து சொல்லவும், இங்கு சொல்லப்பட்ட கருத்துகள் மீது விவாதம் செய்யவும் ‘கருத்துப் பரிமாற்றக் கூட்டத்திற்கு’ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
நாள்:- 11-9-2009 (வெள்ளி)
நேரம்:- மாலை மணி 6.00
இடம்:- கே.ஆர்.சோமா அரங்கம், விசுமா துன் சம்பந்தன், கோலாலம்பூர்
இக்கூட்டம், வழக்கறிஞர் பொன்முகம் தலைமையில் நடைபெறும். கல்விமான்களும், தமிழ்மொழியின்பால் அக்கறையுள்ள அமைப்புகளும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
- நன்றி: மலேசிய நண்பன் (9.9.09)
8 comments:
இது போற்றுதுலுக்குறிய முயற்சி. வெற்றி பெறும்.
பரந்த மனதில் எதயும் இந்தீயன்,இந்தியா என்று சொல்லி நாம் அன்னியப்பட்டுவிட்டோம்.சீக்கியனை தனித் இனமாக் நோக்கும் போது தமிழனை மட்டும் ஏன இந்திய இனமாக பார்க்க வேண்டும்? இந்தியன் என்ற அடைமொழிய்ல் நாம் இழந்தது தான் அதிகம். தமிழை உயிராய் கொண்டு போராடுவோம்.தங்களின் திருத்தமிழுக்கு ந்ன்றி.வாழ்த்துக்கள்
>திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,
இந்த முயற்சி வெற்றிபெற வேண்டும் என்பதே உண்மை உணர்வாளர்கள் அனைவருடைய விருப்பமும் ஆகும்.
நம் தமிழுக்கு நாமே அரண்!
>திருத்தமிழ் அன்பர் மனோகரன்,
//இந்தியன் என்ற அடைமொழிய்ல் நாம் இழந்தது தான் அதிகம்.//
உங்கள் கருத்து மிகச் சரி. அதுதான் வரலாற்றில் நாம் காணும் உண்மையும் கூட.
இந்தியம் என்பதற்கோ அல்லது இந்திய தேசியம் என்பதற்கோ நாம் எதிரானவர்கள் அல்லர். அந்த இந்தியத்தை தமிழராகிய நம்மீது திணிப்பதைத்தான் வன்மையாக எதிர்க்க வேண்டியுள்ளது.
இது அடிப்படை மனித உரிமை மீறல் என்றால் பொய்யில்லை.
மாற்றான் திணிப்பது ஒருபுறம் இருக்க, நம் தமிழர்களே தங்கள் மண்டைக்குள் இந்த நஞ்சைத் திணித்துக்கொண்டு.. பிறப்பால் வாய்த்த தமிழையும் தமிழியத்தையும் எதிர்ப்பது கொடுமையிலும் கொடுமையான செயலாகும்.
உலகின் எந்த ஒரு தனி இனமும் செய்யத் துணியாத 'தற்கொலை'க்கு ஒப்பான செயலாகும்.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி. தொடர்ந்து வருக. நல்ல கருத்துகள் தருக.
உங்கள் வலைப்பதிவிலும் மொழி, இன நலம் சார்ந்த நல்ல இடுகைகள் எழுதுங்கள் நண்பரே.
வணக்கம் சுப.ந அவர்களே
தமிழுக்கும் தமிழருக்கும்
எப்பொழுதுமே போராட்டம் தான்....முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்....
தமிழ் வாழும் !வெல்லும் !
>திருத்தமிழ் அன்பர் முனைவர் சே.கல்பனா அவர்களே,
தமிழ் எப்போது வீழ்ந்ததோ அப்போதிருந்து இப்போதுவரை நமக்கு போராட்டம்.. போராட்டம்.. போராட்டம்தான்!
தமிழன் விடுதலையாக முதலில் தமிழ் விடுதலை வேண்டும். சரிதானே?
//முனைவர் கல்பனாசேக்கிழார் said...
வணக்கம் சுப.ந அவர்களே
தமிழுக்கும் தமிழருக்கும்
எப்பொழுதுமே போராட்டம் தான்....முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்....
தமிழ் வாழும் !வெல்லும் !//
முற்றிலும் உண்மைதான்....
இன்று எங்குமே தமிழரையும் தமிழ் மொழியையும் அழிப்பதற்கு பலர் பலர் முயற்சி செய்து வருகின்றனர். தமிழர், தமிழ்மொழி என்றாலே போராட்டம்தான்.
தமிழருக்கும், தமிழ்மொழிக்கும் விடிவு கிடைக்கும் என்பதே உண்மை.
உங்கள் தமிழ்ப்பணி பாராட்டப்பட வேண்டியது வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.
>திருத்தமிழ் அன்பர் சந்ரு,
//தமிழருக்கும், தமிழ்மொழிக்கும் விடிவு கிடைக்கும் என்பதே உண்மை.//
இந்த நம்பிக்கை ஒவ்வொரு தமிழனுக்கும் தேவை.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகமெங்கிலும் சிதறியிருந்த.. சொந்த மொழி, கலை, பண்பாட்டை மறந்திருந்த யூத இனம் தலையெடுக்கும் - தனிநாடு சமைக்கும் - தன் தாய்மொழியாம் ஈப்ருவை மீட்டெடுக்கும் என்று எவரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.
ஆனால், அதுதான் நடத்திருக்கும் உண்மை. இதேபோல், தமிழும் தமிழரும் தமிழருக்கான தனிநாடும் கண்டிப்பாக எழும் - வாழும் - ஆளும்!
நம்புங்கள்,
தமிழனால் முடிந்தால்
தமிழால் முடியும்.
உங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.
Post a Comment