அன்னாரின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியும், 'இர.ந.வீரப்பனார் வாழ்வும் வரலாறும்' நூல் வெளியீடும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா.பழ.நெடுமாறனார் தலைமையில் கோலாலம்பூரில் மாபெரும் எழுச்சியோடு நடைபெற உள்ளது.
தம் வாழ்நாளில் 33 அரிய நூல்களை எழுதி வெளியிட்டு, மலேசியத் தமிழர்களுக்கே பெருமை தேடிக் கொடுத்தவர் – உலகத் தமிழரிடையே மலேசியத் தமிழையும் தமிழரையும் அறிமுகம் செய்துவைத்தவர். உலகத் தமிழர்களையும் அவர்களின் அயலக வாழ்வையும் மலேசியத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டியவர்.
ஐயா.இர.ந.வீரப்பன் அவர்கள் 8.6.1930இல் கண்டி நுவரேலியா தோட்டம், இலங்கையில் பிறந்தவர். இருந்தாலும், அவர் வாழிடமாக நமது மலேசியாவைத் தேர்ந்து கொண்டார். இவருடைய பெற்றோர்கள் நடேசன் – இரத்தினம் வாழ்விணையர். இவர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து பின்னர் மலேசியாவில் குடியேறினார்.
மலேசியாவையே தாய்நாடக ஏற்றுக்கொண்டு மலேசியத் தமிழருக்காகவே தம் வாழ்நாள் முழுவதையும் ஒப்புக்கொடுத்தார். தொடக்கத்தில், பல தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றி ஆசிரியப் பணியை இறைப்பணியாகவே மேற்கொண்டிருந்தார்.
1953இல் ஈச்ச மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கி தொடர்ந்து தென்னை மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளி, இரசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான் மிட்லேண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பந்திங் சுங்கை சோ தமிழ்ப்பள்ளி, காப்பார் நகரத் தமிழ்ப்பள்ளி என பணியாற்றி 1985இல் ஓய்வு பெற்றார். அதன் பின்னர், 1990 வரையில் கிள்ளான் அப்துல் சமாட் இடைநிலைப்பள்ளியில் தமிழ்மொழி கற்பித்துள்ளார்.
மற்றவர்களைப் போல அவரவர் பொறுப்பை அவரவர் செய்வர் என்று அமைதி கொள்பவரல்லர் இவர். எந்தச் செயலானும், அதில் தாமும் ஈடுபட்டு பிறருக்கும் செயலூக்கம் ஊட்டுவதில் வல்லவராக இருந்தார். செயல்படாதவர்களைத் துணிந்து அகற்றுவதிலும் இவர் தயக்கம் காட்டியதும் இல்லை.
மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தமிழ் இலக்கியக் கழகம் முதலான அமைப்புகளை மலேசியாவில் தோற்றுவித்தவர் ஐயா வீரப்பனார்தான். இன்றும் இவ்விரு இயக்கங்களும் தமிழுக்கு ஆக்கமான பணிகளை அமைதியாகச் செய்து வருகின்றன.
சிறுகதை, ஆராய்ச்சிக் கட்டுரை, ஆய்வுப் பணிகள், இலக்கிய நாடகம் நடத்துதல், மொழிப் போராட்டம், உலகளாவிய தமிழ்ப் பண்பாட்டுத் தொடர்புகள் என பல துறைகளில் ஈடுபட்டு காலத்தால் எண்ணத்தக்க அரிய தொண்டாற்றிய ஐயா இர.ந.வீரப்பனார் 3.9.1999இல் இறைவனடி சேர்ந்தார்.
தமிழனின் மண் – இனம் – மொழி – பண்பாடு காக்கப்பட வேண்டும் என்று காலமெல்லாம் முழங்கியவர் மட்டுமன்று, அதற்குரிய ஆக்கமான பணிகளை நிலைபடச் செய்தவரும் கூட. இதற்குச் சில சான்றுகளையும் அடுக்கிக் கூறலாம்.
ஆரிய மேலாண்மையும் ஆணாதிக்கச் சிந்தனையும் சூழ்ந்திருந்த தமிழ் மக்களிடம் பெண்மையைப் போற்றுதலே தமிழர் மரபு என்பதை வலியுறுத்தும் வண்ணம் தம் பெயருக்குரிய தலையெழுத்தாக முதலில் தாயின் பெயரையும் அடுத்ததாக தந்தையின் பெயரையும் இணைத்துக் கொண்டார்.
தாம் கைக்கொண்ட தமிழியச் சிந்தனைகளை தம்முடைய குழந்தைகளுக்கும் ஊட்டி வளர்த்தெடுத்தார். அவர்களுக்கு திருமேனி, பொன்னி, அருணன், முல்லை என்று அழகுதமிழ்ப் பெயர்ச்சூட்டி தமிழ் உணர்வூட்டி ஆளாக்கியிருக்கிறார். அன்னாரின் மகளார் வீ.முல்லை இன்று நாடறிந்த எழுத்தாளராகவும் தமிழியச் சிந்தனையாளராகவும் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐயா அவர்களின் அரும்பணிகளை ஒவ்வொரு மலேசியத் தமிழரும் போற்றிக்கொள்ள வேண்டியன. அன்னாரின் செயற்பாடுகள் மிகவும் அளப்பரியன என்பதற்கு, இன்றையத் தலைமுறையைச் சேர்ந்த எம்போன்றோர் மனங்களில் அவர் இடம்பிடித்திருப்பதே தக்க சான்றாகும். அதுமட்டுமல்லாது, தமிழகப் பாவலர் ஐயா கதிர் முத்தையனார், இலண்டனைச் சேர்ந்த ஐயா சுரதா முருகையனார் முதலானோர் இர.ந.வீரப்பனாரைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படியான பெருமைக்குரிய அந்தத் தமிழறிஞருக்குக் கோலாலம்பூரில் பத்தாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அத்துடன், அன்னாரின் அருமை மகளார் திருமதி வீ.முல்லை நாகராசு எழுதிய ‘இர.ந.வீரப்பனார் வாழ்வும் வரலாறும்’ எனும் நூல் வெளியீடும் நடக்கவுள்ளது.
நாள்:- 6-9-2009 (ஞாயிறு)
நேரம்:- பிற்பகல் 2.30
இடம்:- டத்தோ கே.ஆர் சோமா அரங்கம், விசுமா துன் சம்பந்தன், கோலாலம்பூர்
நம்மிடையே இன்று தமிழும் – தமிழ்ப் பண்பாடும் – தமிழ் விழுமியங்களும் செழித்து இருப்பதற்கு ஊற்றாகவும் உரமாகவும் இருந்து மறைந்த தமிழின முன்னோர்களை நன்றியோடு நினைவுகூருவோம்! அவர்களின் அடியொற்றி மொழி – இன – சமய – பண்பாட்டு மரபுகளைக் காத்துநிற்போம்!
2 comments:
ஐயா.இர.ந.வீரப்பனார், இவரப் பற்றி என் தாத்தா அதிகம் விவரித்துள்ளார்.
//தம் வாழ்நாளில் 33 அரிய நூல்களை எழுதி வெளியிட்டு, மலேசியத் தமிழர்களுக்கே பெருமை தேடிக் கொடுத்தவர்//
மேலும் பல தகவல் அளித்தமைக்கு நன்றி.
>திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment