Wednesday, July 15, 2009

புத்திலக்கியவாணர்களுக்குத் தமிழும் தெரியாது; தமிழுணர்வும் கிடையாது


“புத்திலக்கியம் (நவின இலக்கியம்) என்ற பெயரில் தமிழ்நாட்டிலும் சரி, மலேசியா, சிங்கை முதலான நாடுகளிலும் சரி எழுதிவருகின்ற புத்திலக்கியவாணர்கள் எவருக்கும் தமிழும் தெரியாது; தமிழுணர்வும் கிடையாது” என்று மலேசியாவுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டு வந்துள்ள பேராசிரியர் ஐயா மறைமலை இலக்குவனார் கூறினார்.

கடந்த 11-7-2009இல் பேரா மாநிலம், பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் நடைபெற்ற பொழிவுரை நிகழ்ச்சியில் பேராசிரியர் ஐயா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மாந்தவியல் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் செம்மாந்த இலக்கைக் கொண்டமைவதே இலக்கியம் எனப்படுவது. அத்தகைய உயரிய இலக்கைக் கொண்டிருக்கும் உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ் இலக்கியம்.
தமிழ் இலக்கியமானது மிக நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. உலகில் வேறு எந்த இலக்கியத்திற்கும் இல்லாத மிகச் செம்மையான செழுமையான கட்டமைப்பைக் கொண்டது.

இந்த அடிப்படை உண்மையை உணர்ந்துகொள்ளாமல் - மேற்குலகில் கருக்கொண்டு வளர்ந்த புத்திலக்கியத்தின் வரலாற்றையும் அறிந்துகொள்ளாமல் குருட்டாம் போக்கில் இலக்கியம் படைக்க புறப்பட்டவர்கள் புத்திலக்கியவாணர்கள் என்று ‘பின்நவினத்துத்துவம்’ பற்றி ஆய்வுசெய்தவரும் பல்கலைக்கழகத்தில் கற்பித்தவருமாகிய அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழின் மாண்பையும் தமிழ் இலக்கியத்தின் மேன்மையையும் கண்டு பொறுக்க முடியாத சிலர் ‘நவின இலக்கியத்தை’ படைக்கத் தொடங்கினர்.

தமிழ் இலக்கியத்தின் உச்சங்களை எட்டித்தொட முடியாத இந்த இலக்கிய முடவர்கள் எந்த வரைமுறையும் இல்லாத - எந்தவகை இலக்கணமும் இல்லாத - எந்தவகை கட்டமைப்பும் இல்லாத - எந்தவிதத்திலும் மாந்த உய்வுக்கு உதவாத நவின இலக்கியத்தை ‘நவினத்துவம்’, ‘பின்நவினத்துவம்’ என்றெல்லாம் எழுத முனைந்தனர் என்பதுதான் உண்மை.

தமிழுக்கு எதிராக இப்படியொரு இலக்கிய வடிவத்தைப் புகுத்தி இரண்டகம் புரிந்தவர்களில் சி.சு.செல்லப்பா, எசு.துரைசாமி(நகுலன்) போன்றோர் முன்னோடிகளாவர். இவர்களின் அடியொற்றி, இன்று தமிழகத்தில் புத்திலக்கியம் என்ற பெயரில் பதர்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்தப் பதர்களை மேய்ந்துவிட்டு மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் சிலர் வாந்தியெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தச் சூழலில், மலேசியா வந்திருக்கும் பேராசிரியர் ஐயா, புத்திலக்கியம் பற்றிய தோற்றம் - வரலாறு - வளர்ச்சி பற்றி மிக விரிவாகத் தெளிவுபட விளக்கினார். இவ்வகைப் படைப்புகள் தமிழுக்குள் புகுந்து தமிழ் மக்களின் குடும்பப் பண்பாட்டு நெறிகளில் குழப்பங்களை ஏற்படுத்துவதையும் குறிப்பிட்டு விளக்கினார்.

‘நவினத்துவம்’ என்பதைப் பற்றி விளக்கிய அவர், மேலை நாடுகளில் சீர்கெட்டுச் சின்னபின்னமாகிய வாழ்க்கை முறையில் பிறந்த ஒரு வடிவம் இது. தொழில் புரட்சியின் காரணமாக, மேற்குலகத்தாரிடையே ஏற்பட்ட மனச்சிதைவுகள், மனமுறிவுகள், மணமுறிவுகள், பாலியல் வன்கொடுமைகள், பெண்ணிய வன்முறைகள், சிறார் கொடுமைகள், குடும்பவியல் சிதைவுகள் முதலான குமுகாயக் கொடுங்கேடுகளின் வெளிப்பாடாக முளைத்ததுதான் புத்திலக்கியம்.

மேலை நாட்டவரிடையே தோன்றி, மேற்குலகப் பண்பாட்டில் வளர்ந்த ‘நவினத்துவத்தை’ தமிழுக்குள் கொண்டுவருவது, நம்முடைய செவ்வியல் இலக்கிய மரபுக்கு எதிரானது மட்டுமன்று; நீண்ட காலத்தில் தமிழ் இலக்கியத்தின் கட்டமைப்பையும் வரலாற்றுச் சிறப்பையும் வேரோடு தகர்த்துவிடும்.

புத்திலக்கியத்தின் ஒரு கூறாக இருக்கும் ‘சொற்களின் மீதான வன்முறை’ (Violation On Sintaks) தமிழின் மொழியியல் கோட்பாடுகளையும் இலக்கண வரன்முறைகளையும் சிதறடிக்கக்கூடியது. ஆங்கிலம் போன்ற கலவைமொழிகளுக்கு வேண்டுமானால் ‘சொற்களின் மீதான வன்முறை’ சிறப்பு சேர்க்கலாம். ஆனால், தமிழின் வளமும் வனப்பும் இதனால் சீரழிந்து போய்விடும்.

நவின இலக்கியத்தில் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படும் பல்வேறு உத்திமுறைகள், மூவாயிரம் ஆண்டுக்கும் முன்பே முறுக்கேறி நிற்கும் தமிழ் இலக்கியத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதைப் புத்திலக்கியவாணர்கள் அறிந்திருக்கவில்லை. தமிழ் இலக்கியத்தில் என்ன இருக்கிறது என்று துளிகூட அறிந்துகொள்ளாமல் நவின இலக்கியத்தை உச்சாணிக்கொம்பில் ஏற்றிக் கொண்டாடுவதை அறியாமை என்று சொல்லாமல் இருக்க முடியாது. புதுமைகள் என்பது பழமையை மறுதளிக்காமல் இருக்க வேண்டும். தொன்மைகளின் தொடர்ச்சியாக முகிழ்க்கும் புதுமைகளில்தாம் உயிர்ப்பும் உயர்வும் காணமுடியும்.

அனைத்திற்கும் மேலாக, 'நவினத்துவம்' எழுதும் புத்திலக்கியவாணர்கள் எவருக்கும் தமிழே தெரியாது; தமிழுணர்வும் கிடையாது. அதனால்தான், தொன்மைச் சிறப்புபெற்ற தமிழைச் சிதைத்தேனும் தங்களை முன்படுத்திக்கொள்ள முயன்று முயன்று எழுதுகிறார்கள். புத்திலக்கியத்தை நிலைநிறுத்திவிட ஆளாய்ப் பறக்கிறார்கள்.

ஒட்டுமொத்தச் சமுதாயமும் சீர்கெட்டுச் சிதைந்துபோன ஐரோப்பிய நாட்டுப் பண்பாட்டில் உருவாகிய ‘நவினத்துவம்’, இன்னமும் கட்டுக்குலையாமல் இருக்கும் தமிழியப் பண்பாட்டைச் சின்னபின்னப்படுத்துவதற்கு எந்த விதத்திலும் வழிவிட முடியாது - கூடாது.

உள்ளதை உள்ளவாறு சொல்லுவது அல்ல கலை; உணர்ந்தவாறு சொல்லுவது. இப்படி அமைவதே சிறந்த இலக்கியமாகும். கலை கலைக்காக என்பது பிறர் பண்பாடு; கலை வாழ்க்கைக்காக என்பது தமிழ்ப் பண்பாடு. மாந்த வாழ்வை ஒருபடி உயர்த்தப் பயன்படுவது மட்டுமே நல்ல இலக்கிய வடிவம். மாறாக, மனித மனங்களில் ‘வக்கிர’ எண்ணங்களையும் ‘உக்கிர’ உணர்சிகளையும் ஏற்படுத்துகின்ற எதுவும் இலக்கியம் ஆகமாட்டா.

உணர்வைப் பக்குவப்படுத்தி, உணர்ச்சியைச் சமன்படுத்தி, மனிதனை மேம்படுத்துவதே இலக்கியமாக இருக்க வேண்டும். இதற்கு மாறானதைக் குப்பையில் வீசுவது தமிழனின் கடமையல்ல.. மனிதனாகப் பிறந்தவனின் கடமை.

இவ்வாறு பேசிய பேராசிரியர் ஐயா, இடையிடையில் தமிழகத்திலும் மலேசியாவிலும் எழுதப்பட்ட சில நவினத்துவப் படைப்புகளை மேற்கோள்காட்டி விளக்கமளித்தார். இது நிகழ்ச்சிக்கு வந்திருந்த கூட்டத்தினரைப் பாரிய சிரிப்பலைக்குள் தள்ளியது மட்டுமல்ல, தமிழ்ப் பண்பாட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் புத்திலக்கியவாணர்கள் மீது கடும் சீற்றத்தையும் ஏற்படுத்தியது.

13 comments:

Anonymous said...

ஒரு புதிய வகை விமானம் தயாரிக்க, பொரியியலாளர் வேண்டும்; அதற்குப் பொரியியல் படிக்க வேண்டும். அதில் பழைய விமானம் தயாரிக்கப் பட்ட முறைகள் பற்றிக் கற்றுத்தேற வேண்டும். அப்போதுதான் சரியான, பறக்கும் நிலையிலான,பாதுகாப்பான நல்ல, ஒரு புதுவகை விமானம் உருவாகும்.

அட ஏன்.. ஒரு சாதாரண பட்டம் செய்ய கூட பட்டம் எப்படி செய்யப்பட வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டியது அவசியம் இல்லையா?

இதற்கே இப்படி என்றால்.. ஒரு குமுகாயத்தின் வரலாற்றை, வாழ்ந்த வனப்பைக் குறிக்கப்போகும் இலக்கியம் படைக்க எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும்?

இது எப்படி இருக்கிறது தெரியுமா? அ,ஆ,இ,ஈ தெரியாதவன் ஆசிரியன் ஆக ஆவானாம்..?

மேற்சொன்ன யாவும் மறைமலை சொல்லியும் மண்டையில் ஏறாதவனுக்கு மட்டும்..

அன்புடன்,
இனியன்,
பினாங்கு.

Anonymous said...

வணக்கம்

இன்றைய புத்திலக்கியவாணர்கள் என்று கூறிக்கொள்ளும் பலர் எதையெதையோ எழுதி தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.. எது நமது பண்பாட்டை கெடுக்க வல்லதோ அதை எழுதுவதும், எதை எழுதக்கூடாதோ அதை எழுதுவதும் இலக்கியம் என்கின்றர். இவர்கள் புத்திலக்கிய வாணர்களா அல்லது புத்தியிலாத வாணர்களா

அன்புடன்
கு.முருகன்
கடாரம்

சுப.நற்குணன்,மலேசியா. said...

>இனியன்,

தங்களின் தொடர் வருகைக்கு நன்றி.

//இது எப்படி இருக்கிறது தெரியுமா? அ,ஆ,இ,ஈ தெரியாதவன் ஆசிரியன் ஆக ஆவானாம்..?//

நல்ல எடுத்துக்காட்டு!

இந்த நவினத்துவ எழுத்தாளர்கள் கேட்கும் முரட்டுக் கேள்விகளில் ஒன்று,
"மரபுகளைப் படித்துவிட்டுத்தான் எழுதவேண்டும் என்றால் எழுதுவதற்குள் வயதாகிவிடும்" என்பது.

தமிழ் மரபிலக்கணத்தை முதலில் பாருங்கள்.. படியுங்கள்.. என்று நம்மைப் போன்றோர் சொல்வதை எப்படி புரிந்துகொள்கிறார்கள் பாருங்கள்.

தன் சொந்த மொழிமரபை அறியாமல்.. இனமரபு அறியாமல்.. எந்த மண்ணாங்கட்டியும் தெரியாமல் இருப்பதுதான் நவினத்துவம் படைப்பதற்கான அடிப்படைத் தகுதியோ என்னவோ?

"நடக்க மாட்டாதவன் சித்தப்பன் பெண்ணைக் கட்டினானாம்". அதுபோல, மரபிலக்கணத்தின் ஆழ அகலங்களை அறிந்துகொள்ள அறிவுச்சோம்பல் கொண்டுள்ளனர். என்னமோ நவினத்துவம்தான் இலக்கியத்தையே தூக்கி நிமிர்த்தப் போகிறது என்பதுபோல இவர்கள் அடிக்கும் கொட்டம் சகித்துக்கொள்ள முடியாதது.

தமிழ்நாட்டில் பார்ப்பான் ஊடகங்களும் எழுத்தாளர்களும் தமிழுக்கு எதிராக மிக தத்திரமாகக் கையாளும் நவினத்துவத்தை நமது 'கறுப்புப் பார்பான்களும்' தூக்கி வைத்து ஆடுவது என்னே மடமை!

தன் தலையிலேயே மண்ணைப் போட்டுக்கொள்ளும் இவர்களின் அறியாமையை என்னவென்பது?

சுப.நற்குணன்,மலேசியா. said...

>கு.முருகன்,

முதன்முறையாக உங்கள் மறுமொழியைத் திருத்தமிழில் காண்கிறேன். வருகைக்க்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி.

//எது நமது பண்பாட்டை கெடுக்க வல்லதோ அதை எழுதுவதும், எதை எழுதக்கூடாதோ அதை எழுதுவதும் இலக்கியம் என்கின்றனர். இவர்கள் புத்திலக்கிய வாணர்களா அல்லது புத்தியிலாத வாணர்களா?//

உங்கள் வினாவுக்கு நவினத்துவ நாயகர்கள் யாரேனும் பதில் சொல்கிறார்களா என்று பார்ப்போம்.

-நாலு கெட்ட வார்த்தைகள்,
-அரைகுறை தமிழ்க் கல்வி,
-சுழியநிலை இலக்கிய அறிவு,
-அதனைவிட மோசமான இலக்கண அறிவு,
-குமுகாயத்தின் மீது முரன்பாடு
இப்படி சில அடிப்படைகள் தகுதிகள் இருந்தால் நீங்களும் நானும்கூட நவினத்துவம்.. பின்நவினத்துவம்.. பின்பின்நவினத்துவம்.. முன்நவினத்துவம்.. என்று எழுதி குவிக்கலாம் தெரியுமோ!!

Anonymous said...

பெரும்பாலும் இலக்கிய சர்ச்சை ஏன் தனி மனித தாக்குதல்களில் வந்து முடிகின்றன?

இதனால்தான் பலர் இலக்கியவாதிகளிடம் வெறுப்பு கொள்வதற்கு காரணமாகின்றது. எதற்கெடுத்தாலும் கோபத்துடனும் காழ்ப்புணர்வுடனுமே பதில்கள் வருகின்றன. நட்பை கையாளலாமே. இலக்கியத்தில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், தனி மனித தாக்குதல்களை இனிமேலாவது தவிர்க்க வேண்டும். இது தமிழறிஞர்களுக்கும் நவீனத்துவவாதிகளுக்கும் பொருந்தும்.

-மணியம்-
சுங்கை, பேராக்

வலைப்பதிவாளர் said...

புத்திலக்கியவாணர்களுக்கு இதைப் படித்த பிறகாவது 'புத்தி' வருமா?? என்றுதான் என் மனதில் தோன்றுகிறது. புதுக்கவிதை எழுதுகிறோம் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் அவர்களைப் புத்திலக்கியவாணர்கள் என்று சொல்லக் கூடாதாம். நவீன இலக்கியவாதிகள் என்றுதான் அழைக்க வேண்டுமாம். அப்படியென்றால் அவர்கள் எழுதும் கவிதைக்கும் இனிமேல் 'நவீன கவிதை' என்றுதானே சொல்ல வேண்டும்?? புத்திலக்கிய படைப்பாளன் என்று சொல்வதற்குக் கூட இவர்களுக்குத் தமிழ் உணர்வு இல்லாதபோழ்து, இவர்கள் என்ன இலக்கியத்தை வளர்க்கப் போகின்றனர்? யாருக்கு எழுதப் போகின்றனர்? நமது நாட்டு புத்திலக்கியவாணர்களில் ஒருவரான கே. பாலமுருகன் போன்றோர் மண்டையில் ஏறினால் நன்மை கிட்டும்.

மதிவாணன்
கூலிம்.கடாரம்.

கே.பாலமுருகன் said...

தமிழைக் கற்பதற்கு வயதும் வரம்பும் கிடையாது. ஒரு 30-40 மரபுக் கவிதைகளை எழுதிவிட்டால் எல்லோரும் மரபைக் கற்ற ஞானிகளாகிவிட மாட்டார்கள்.

இத்தனை அகவையைச் செலவீட்டு மரபைக் கற்றால்தான் பரிபூரணம் அடைய முடியும் என்றெல்லாம் சொல்வது எத்துனை வன்முறையான வரையறை? 4 வருடம் படித்தால்தான் பட்டம் வாங்க முடியும் என்று மிரட்டுவது போல இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை தமிழ் வெறும் கற்கக்கூடிய கல்வி மட்டுமல்ல. கற்றுக் கொள்வதும் சிறந்த முயற்சி. எங்கள் பள்ளிகளில் தமிழ் இலக்கியங்கள் எல்லாமே பாடமாகக் கொடுக்கப்பட்டு வகுக்கப்பட்டு திணிக்கப்பட்டவை.
தமிழ் இலக்கியம் படித்த எல்லாம் மாணவர்களும் என்ன இலக்கியவாதியாக ஆகிவிட்டார்களா? அல்லது தமிழ் இலக்கியம் படித்தவன்தான் இலக்கியவாதியென தகுதி பெறுவானா? ஒரு தமிழ் படைப்பாளி மரபு இலக்கியங்களைத் தேடி படிப்பது வரவேற்கத்தக்க விசயம் என்றுதான் சொல்கிறேன் தவிர மரபைக் கற்காமல் இலக்கியவாதியாகிவிடலாம் என்றல்ல. அப்படிப் பார்த்தால் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கல்லூரியில் இலக்கியம் படிக்கும் எல்லாமும் எழுத்தாளர்களாகவும் இலக்கியவாதிகளாகும் ஆகியிருக்க வேண்டுமே? தமிழ் இலக்கியங்களை வெறும் பாடமாகவே மட்டும் படித்துவிட்டு வெளியில் வரும்போது அதை மறந்துவிட்டு அல்லது சோதனையில் வாந்தியெடுத்துவிட்டு போய்விடுவார்கள். அதையெல்லாம் மீறி எழுதும் ஒருவனைக் கொண்டாட வேண்டாம், குறைந்தது தமிழ் மரபைக் காட்டி வாத்தியார் போல கையில் பிரம்பெடுத்து மிரட்டாமல் இருந்தாலே தமிழ்கூறும் நல்லுலகம் அவர்களை மெச்சும்.

மணிமேகலை, மகாபாரதம், இராமாயணம் சிலப்பதிகாரம், புறநாணுறு, அகநாணுறு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம் என்று நாங்களும் கற்றுக் கொண்டுத்தான் இருக்கிறோம். சும்மா ஜாலிக்காக எழுதிக் கொண்டிருக்கவில்லை. எல்லோரையும் வெறுமனே மாடு புல்லை அசை போடுவது போல போட்டுக் கொள்ள வேண்டாம். நான் சொல்ல வருவது இதையெல்லாம் வெறும் பாடமாக மட்டும்தான் கற்றுக் கொள்ள வேண்டுமா? பிறகு கற்றுக் கொண்டு எழுத தொடங்க வேண்டுமா?

நீச்சல் வகுப்புக்குச் சென்று முறையாக பழகி, பணம் கட்டி, பயிற்சி எடுக்கும் ஒருவனுக்கும் தனது வீட்டின் அருகாமையில் உள்ள ஆற்றில் சுயமாக முயன்று நீச்சலடித்து வாழ்வின் ஒரு தருணமாக அதைக் கொண்டாடி, பழகும் ஒரு எளிமையானவனுக்கும் என்ன வித்தியாசம் அன்புமிக்க பேராசியர் பெருந்தைகைளே? இருவரும் அடிக்கப் போவது நீச்சல்தானோ?

கே.பாலமுருகன்

சுப.நற்குணன்,மலேசியா. said...

>மணியம்,

தங்கள் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வருக.. மறுமொழி தருக.

//தனி மனித தாக்குதல்களை இனிமேலாவது தவிர்க்க வேண்டும//

பெரும்பாலும், எழுதிய கருத்தைப் பார்க்காமல் எழுதியவரைத் தேடுகின்ற ஆவலின் வெளிப்பாடுதான் 'தனிமனிதத் தாக்குதல்'ஆக வெளிப்படுகிறது.

சில சமயங்களின், சில கருத்துகளை மறுக்கின்ற போதும் அல்லது கருத்துகளை இடித்துரைக்கும் போதும்
'தனிமனிதத் தாக்குதல்' ஆக தொனிப்பதும் உண்டு. இது தவிர்க்க இயலாததாகிறது.

தனிமனிதத் தாக்குதலுக்காக மிகவும் வருந்துகின்றவர்கள், காலங்காலமாய் பிறந்த இனத்தின் உயிர்மூச்சாக இருக்கும் 'தமிழ்த் தாக்குதலை'க் கண்டு எந்த வித வருத்தமும் கொள்ளாதது தகுமா?

தனக்கு இழுக்கு நேர்வதைத் தாங்கமாட்டாதவர், தன்னையும் தமிழ் இனத்தையும் தாங்கிநிற்கும் தமிழுக்கு இழுக்கு நேர்வதைக் கண்டு கொஞ்சமும் கவலைபடாதது சரிதானா?

தனக்கு வந்தால் 'தாக்குதல்' என்று குதிப்பவர்கள் தமிழைத் தாக்கியளிக்க நினைப்பது முறையா?

தனிமனிதத் தாக்குதலை நானும் ஆதரிக்கவில்லை. அதேவேளையில், தமிழுக்கு முன்னால் எவனும் பெரியவனில்லை என்று நினைக்கிறேன்.

தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே என்பது வெறியுணர்ச்சி அல்ல; அன்புணர்ச்சி.

அறத்திற்கே அன்பு சார்பென்பர் அறியார்; மறத்திற்கும் அஃதே துணை. (திருவள்ளுவர் வாக்கு)

கே.பாலமுருகன் said...

//இவர்கள் புத்திலக்கிய வாணர்களா அல்லது புத்தியிலாத வாணர்களா//

சரி முருகன், பண்பாடு பற்றி மேற்கோள் காட்டி பேசும் தாங்கள், பண்பாடில்லாத வார்த்தையை உபயோகிக்க எந்த பண்பாடு கற்றுக் கொடுத்திருக்கிறது?

//தமிழ் மரபிலக்கணத்தை முதலில் பாருங்கள்.. படியுங்கள்.. என்று நம்மைப் போன்றோர் சொல்வதை எப்படி புரிந்துகொள்கிறார்கள் பாருங்கள்.//

இறுக்ககமாக எல்லாவற்றையும் பார்க்கத் துவங்கிவிட்டால் பிரச்சனைத்தான். இன்றுவரை தமிழ் மரபிலக்கனத்தைக் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்.அது ஒரு கடல் போல, வயது வரம்பின்றி நீந்தக்கூடியது.அவற்றைக்
மரபிலக்கணத்தைக் கற்கும் அதே சமயத்தில் இளம்வயதிலேயே எழுந்துவிட்ட படைப்பு மனதைக் கொலை செய்ய முடியாது. ஆழ்ந்த வாசிப்பும் வாழ்வு குறித்தான தேடலும் எழுத முனைப்பாக இருந்தது. படைப்பாளியை எந்தக் காரணம் காட்டியும் நிறுத்த முடியாது.

மரபிலக்கியத்தை யாரும் புறகணிக்கவும் வெறுக்கவும் கிடையாது. தொன்ம இலக்கியங்களைக் காட்டி அரைகுறை நாட்டாமைகள் செய்யும் அழிச்சாட்டியமும் வரையறைகளும்தான் மலேசிய இலக்கியத்தை அடுத்தகட்ட நகர்வுக்குள் நுழையவிடாமல் தடுத்து மரபென்ற வடிவத்தின் வாயிலாக கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. நவீனம் என்பது வடிவ மாற்றமும் சிந்தனை மாற்றமும்தான். இன்னும் சிலப்பதிகாரத்தையே சிறந்து புகழ்பாடி கொண்டிருந்தால், நாம் என்ன செத்த மூளைகளா? வீட்டில் உபயோகிக்கும் பொருள் முதல் சாப்பிடும் உணவுவரை எல்லாவற்றிலும் கலப்படத்தையும் அவசரத்தையும் ஏற்றுக் கொண்டு விட்டு, இப்பொழுது மரபு பண்பாடு என்று பேசிக் கொண்டிருப்பவர்களை என்னவென்று சொல்வது?

நான் முதலில் எழுதி தேசிய பல்கலைக்கழகத்தில் முதல் பரிசு பெற்ற சிறுகதையான “நடந்துகொண்டிருக்கிறார்கள்”, 2007-ல் எழுதியது. அதுவரை எனக்கும் நவீனத்துவம் பின்நவீனத்துவம் குறித்து எந்தத் தகவலும் வாசிப்பும் கிடையாது. அதனை விமர்சனம் செய்த பேராசிரியர் முல்லை இராமையா, இந்தக் கதையில் நவீனத்துவ அம்சங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டினார். ஆகையால் எல்லாம் படைப்பாளிகளும் மேலையிலிருந்து இசங்களை உறுவிக் கொண்டு வந்து எழுதவில்லை. புதிய முயற்சிகள் செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆவலில் எழுந்த படைப்புத்தான் அதைத் தேசிய அளவில் நவீனத்துவம் பின்நவீனத்துவம் என்று விமர்சகர்களாலும் வாசகர்களாலும் அடையாளப்படுத்தப்படுகிறது.

//நமது நாட்டு புத்திலக்கியவாணர்களில் ஒருவரான கே. பாலமுருகன் போன்றோர் மண்டையில் ஏறினால் நன்மை கிட்டும்.//


உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் என் வலைப்பதிவில் பதிலளித்துவிட்டேன். ஆகையால் மீண்டும் உங்களுக்குப் பதில் சொல்வதில் சலிப்பு தட்டுகிறதே. இருந்தாலும் ஒன்று சொல்கிறேன், தமிழ் சமகாலத்து இலக்கியத்தில் நீங்கள் புதிய முயற்சிகளை விரும்பாதவர்கள். எத்தனை புத்திலகிய நாவல்களைப் படித்துவிட்டீர்கள்? டால்ஸ்டாய் எழுதிய போரும் வாழ்வும் படித்ததுண்டா? ஜெயமோகன் எழுதிய காடு படித்ததுண்டா? சீ.முத்துசாமி எழுதிய மண்புழுக்கள் படித்தத்துண்டா? அய்யப்பன் மாதவன் எழுதிய நிசிஅகவல் படித்தத்துண்டா? இல்லையா? படித்துப் பாருங்கள். அதன் நேர்மையும் நவீனமும் தெரிய வரும்.

தமிழில் புத்திலக்கியம்(நவீன இலக்கியம்) தனக்கேயுரிய தனித்துவங்களுடன் வளரும். அதில் தடங்களில்லை. தமிழைத் தொன்மம் தொன்மம் என்று வளரவிடாமல் செய்துவிடாதீர்கள்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி

சுப.நற்குணன்,மலேசியா. said...

>மதிவாணன்,

தங்கள் வரவேற்கிறேன்.

//அவர்களைப் புத்திலக்கியவாணர்கள் என்று சொல்லக் கூடாதாம். நவீன இலக்கியவாதிகள் என்றுதான் அழைக்க வேண்டுமாம். அப்படியென்றால் அவர்கள் எழுதும் கவிதைக்கும் இனிமேல் 'நவீன கவிதை' என்றுதானே சொல்ல வேண்டும்??//

சரியான - நியாயமான கேள்வி. அவர்களில் யாரேனும் பதில் சொல்லட்டும்.

'காண மயிலாட கண்டிருந்த வான்கோழி' என்ற செய்யுளில் சொன்னது போல சொந்த அடையாளத்தோடு வெளிப்பட முடியாமல் 'கவிதை' என்று நிலைபெற்றுவிட்ட ஒன்றில் ஒட்டிக்கொண்டு குளிர்காய்கின்ற இந்த 'சப்பாணி' வேலையைப் பார்த்து சிரிக்கத் தோன்றுகிறது.

//புத்திலக்கிய படைப்பாளன் என்று சொல்வதற்குக் கூட இவர்களுக்குத் தமிழ் உணர்வு இல்லாதபோழ்து, இவர்கள் என்ன இலக்கியத்தை வளர்க்கப் போகின்றனர்? யாருக்கு எழுதப் போகின்றனர்?//

எனக்குத் தெரிந்தவரை இவர்கள் 'யோ' இலக்கியத்தை வளர்க்கப் போகிறார்கள்.

அவர்களின் செல்லக் குழந்தைகளுக்கும், அவர்களின் தங்கைமார்களுக்கும், அவர்களைச் சுற்றியுள்ள மன அரிப்புக்கொண்ட ஒரு 'எதார்த்த' கூட்டத்திற்கும், கடந்த காலத்தில் ஏதோ வகையில் ஆழ்மனப் பாதிப்புக்கு ஆட்பட்ட ஒரு இளைஞர் கூட்டத்திற்கும், வக்கிர புத்திக்கொண்ட சில மூத்தவர் கூட்டத்திற்குமாக எழுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.

//நமது நாட்டு புத்திலக்கியவாணர்களில் ஒருவரான கே. பாலமுருகன் போன்றோர் மண்டையில் ஏறினால் நன்மை கிட்டும்.//

இவரைப் பற்றி ஊடகம் வழி அறிமுகம் மட்டுமே எனக்குண்டு.

நேரடியாக இவரைத் தாக்குவதிலும் முழுப் பயனில்லை.

இவருக்குப் முன்னமே இந்த நாட்டில் 'புத்திலக்கியத்திற்கு' வித்திட்டோர் பலர். அவர்கள் போட்ட கோட்டில் இப்போது சில இளையோர்கள் 'மேம்பாலமே' கட்டுகிறார்கள். இதில், பெண்கள் சிலரும் அடக்கம்.

'புதுமைப் பெண்களடி பூமிக்குக் கண்களடி' என்று மெய்பிக்க இவர்களுக்குக் கிடைத்துள்ள புதிய ஆயுதம் தான்'புத்திலக்கியம்'.

அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தத் தெரியாமல் தமிழையும் தமிழ் மரபையும் தமிழ் பண்பாட்டையும் காயப்படுத்தி... பாவம் தங்களையும் காயப்படுத்திக்கொள்கிறார்கள்.

இவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது. அதைவிட அதிகமாக, கற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்க வேண்டும்.

அதற்கு, மண்டையில் இருக்கும் கணத்தை கொஞ்சம் இறக்கிவைக்க அவர்களும், மரபில் இருக்கின்ற மாண்பை அவர்களுக்குப் புரியும்படி எடுத்துரைக்க அறிஞர்களும் அணியமாக இருக்க வேண்டும்.

Anonymous said...

வணக்கம் சுப.நற்குணன்,

நான் திருத்தமிழ் வலைப்பூவை தொடர்ந்து வாசித்தாலும் இப்போதுதான் மறுமொழி எழுதுகிறேன்.

இன்றைய படைப்பிலக்கியவாதிகள் எதை எழுதித் தொலைக்கிறார்கள்? கண்டதையெல்லாம் எழுதுவதால் அது சிறந்த படைப்பாகி விடுமா என்ன? செக்ஸ் உணர்ச்சியைத் தட்டுவது போல் எழுதுவதும் யோ இலக்கியம் டேய் இலக்கியம் என பலபெயர்களில் எழுதி நமது இனப்பெருமையை குழி தோண்டிப் புதைக்கின்றனர்.
இந்தக் குப்பைகளையெல்லாம் பார்த்துப் படித்து வளருகின்ற குழந்தை எப்படி நல்ல குழந்தையாக வளரும். இதைப்பற்றி பேசினால் இவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகின்றது. மானங்கெட்ட பிறவிகளான இவர்களை இனப்பாவிகள் என்று சொல்வதில் தப்பேதுமில்லை.

மிகுந்த வருத்தத்துடன்
மணியம்
காஜாங்

சுப.நற்குணன்,மலேசியா. said...

>கே.பாலமுருகன்,

வாருங்கள்.வணக்கம். முதன் முறையாக திருத்தமிழுக்கு வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன்.

வீட்டுக்கு வந்தவரை வாசலில் நிற்கவைத்து கேள்வி கேட்பதாக இதனை எண்ணாமல் தொடரவும்.

//தமிழைக் கற்பதற்கு வயதும் வரம்பும் கிடையாது. ஒரு 30-40 மரபுக் கவிதைகளை எழுதிவிட்டால் எல்லோரும் மரபைக் கற்ற ஞானிகளாகிவிட மாட்டார்கள்.//

உண்மைதான். ஞானிகள் ஆகாவிட்டாலும் உற்ற தாய்போன்ற பெற்ற தமிழை - தமிழ்ப் பண்பாட்டை எந்தக் கணத்திலும் சிதைத்திட - சின்னபின்னப் படுத்திட கனவிலும் நினைக்க மாட்டார்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

//அதையெல்லாம் மீறி எழுதும் ஒருவனைக் கொண்டாட வேண்டாம், குறைந்தது தமிழ் மரபைக் காட்டி வாத்தியார் போல கையில் பிரம்பெடுத்து மிரட்டாமல் இருந்தாலே தமிழ்கூறும் நல்லுலகம் அவர்களை மெச்சும்.//

மரபு என்பதை இலக்கியம் மட்டுமே என்ற வட்டத்துக்குள் சுருக்கிவைத்து பார்க்கின்ற மனப்பான்மை உங்களை உண்மையை அறிய விடாமல் தடுக்கிறது.

தம்பி வந்தால் 'Yonger brother Coming', 'Adik Datang'..

அப்பா வந்தால் 'Father Coming', 'Bapa Datang'..

பிரதமர் வந்தால் 'Prime Minister C0ming', 'Perdana Menteri Datang'..

ஒரு நாய் வந்தால் 'The dog coming', 'Anjing datang'..

யார் வந்தாலும்.. எது வந்தாலும் அனைத்துக்கும் 'Coming', 'Datang' என்ற அன்னியர் மரபு எங்கே..

தம்பி 'வந்தான்'
அப்பாவுக்கு 'வந்தார்'
தலைவர் 'வந்தார்கள்'
நாய் 'வந்தது'

என்று சொற்களுக்குள்ளேயே பண்பாட்டையும்.. ஒழுங்கையும் ஒளித்து வைத்திருக்கும் நமது தாய்த்தமிழின் மரபு எங்கே...!!!

மரபு.. மரபு.. 'பேராசிரியர் பெருமக்கள்' கத்துவதை இந்தக் கோணத்தில் கொஞ்சம் பார்க்க முயன்று பாருங்கள்.

இயல்பாகவே தமிழின் மீது உங்களுக்கு இருக்கின்ற 'அன்புணர்ச்சி' இன்னும் ஆழமாகும்.. அடர்த்தியாகும்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>கே.பாலமுருகன்,

தங்களின் மற்றொரு மறுமொழி கண்டேன். மகிழ்ச்சி.

தமிழ் மரபிலக்கணத்தில் தாங்கள் உளமாற பற்றுக் கொண்டிருந்தால் அதற்காக மகிழ்கிறேன்.

//நவீனம் என்பது வடிவ மாற்றமும் சிந்தனை மாற்றமும்தான்.//

இது உண்மை எனில், காலங்காலமாக கட்டிக்காத்த பண்பாட்டு - நாகரிக - மரபியல் விழுமியங்களை தலைகீழ் மாற்றத்திற்கு உள்ளாக்குவதை எப்படி ஏற்றுக்கொள்வது.

எந்த மாற்றமும் மாந்த இனத்தின் மறுமலர்ச்சிக்குத் துணைநிற்க வேண்டுமல்லவா?

புத்திலக்கியம் என்ற மாற்று வடிவத்தை புத்திலக்கியவாணர்கள் குமுகாய சிந்தனை மாற்றத்திற்கும் மாட்சிக்கும் பயன்படுத்த வேண்டும். அதனை விட்டுவிட்டு, பாலியல் சார்ந்த கருவிலும் களத்திலும் மட்டுமே பெரும்பாலும் அடைத்துவைப்பதும் வட்டமடிப்பதுமாகவே இருக்கின்றனர்.

புதியன எதுவும் தொன்மைகளின் தொடர்ச்சிகள்தாம். இன்றைய புதிய வகை கைப்பேசிகள் பல புதுப்புது செயல்முறைகளைக் கொண்டிருக்கின்றன என்பதற்காக 'கிரகாம்பெல்' கண்டுபிடிப்பை இருட்டடிப்பு செய்வதில் நேர்மை இருக்கிறதா?

//வீட்டில் உபயோகிக்கும் பொருள் முதல் சாப்பிடும் உணவுவரை எல்லாவற்றிலும் கலப்படத்தையும் அவசரத்தையும் ஏற்றுக் கொண்டு விட்டு, இப்பொழுது மரபு பண்பாடு என்று பேசிக் கொண்டிருப்பவர்களை என்னவென்று சொல்வது?//

புறநிலைகளில் ஏற்பட்டுவிட்ட மாற்றங்களைக் காரணம்காட்டி அண்ணனுன் தங்கையும் மணம்புரிந்துகொள்ள முடியுமா என்ன?

ஆளானப்பட்ட மேற்கத்தியன்கூட இதனை ஏற்றுக்கொள்ள மாட்டான். எங்கேயோ ஒரு மூலையில் நடக்கும் கண்ணுக்குத் தெரியாத எள்மூக்கு அளவிலான ஒரு நிகழ்வைக் கொண்டுவந்து பூதக்கண்ணாடி போட்டு உலகப் பொதுவுக்கே பொருத்தமானதாகக் காட்டுவது ஏற்க முடியாதது.

விதிவிலக்குகள் என்றுமே விதிகளாக மாட்டா!

//தமிழைத் தொன்மம் தொன்மம் என்று வளரவிடாமல் செய்துவிடாதீர்கள்.//

மிகவும் தவறான நம்பிக்கை. தொன்மங்கள்தாம் தமிழை இன்றுவரையில் அழியவிடாமல் உங்கள் 'புத்திலக்கியக்' கரங்களில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

நீங்கள், தயவுசெய்து 'புதுமை - நவினம்' என்று வகைதொகை தெரியாமல் வளர்த்தெடுத்து அன்னைத் தமிழை அடுத்த தலைமுறை அறிந்துகொள்ள முடியாத ஒரு ஆபத்தை தயவுசெய்து ஏற்படுத்திவிடாதீர்கள் என்பது என் அன்பு வேண்டுகை.

Blog Widget by LinkWithin