தமிழர்கள் தனியாக ஓர் ஆண்டு மரபைக் கண்டிருக்கிறார்கள் என்ற உண்மை உலகத்திற்குச் சொல்லப்படாமலே இருக்கிறது. ஏனைய தமிழியல் விழுமியங்கள் மூடிமறைக்கப்பட்டது போல் – திருகித் திரிக்கப்பட்டது போல் - தமிழர் ஆண்டு மரபும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்டது. தமிழர் கண்ட வானியல் கலை(சோதிடம்) குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது.
அதனால்தான், இன்றும் தமிழர்கள் ஊரான்வீட்டு ஐந்திரத்தைக் (பஞ்சாங்கம்) கட்டி அழுகிறார்கள்; அன்னியரின் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள்; ஆரியனின் அடிமைகளாக வாழுகிறார்கள்; அறிவிருந்தும் அறியாமையில் கிடக்கிறார்கள்.
தமிழனுக்கு ஏற்பட்டுவிட்ட இந்த இழிநிலையை துடைத்தொழிக்க, 1921ஆம் ஆண்டிலேயே 500 தமிழறிஞர்கள் ஒன்றுகூடி திருவள்ளுவப் பேராசான் பெயரில் தமிழருக்கென்று தனியாக ஒரு தொடராண்டை அறிவித்தனர். அந்த அறிவிப்பு என்பது ஆண்டுகளாக ஏட்டளவில் மட்டுமே இருந்தது. கடந்த 2008இல் தான் தமிழக அரசாங்கம் நாட்டளவில் அமுல்படுத்தியது. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.
ஆனாலும், தமிழர்கள் கேட்பதாகத் தெரியவில்லை. காரணம், இந்த அறிவிப்புக்கான அடிப்படைகள் – ஆதாரங்கள் – சான்றுகள் – விளக்கங்கள் என எதுவுமே தமிழர்களுக்குச் சொல்லப்படவில்லை; பரப்பப்படவில்லை.
இந்த நிலையில், 'தமிழ் ஆண்டு' பற்றி தமிழருக்கு விளக்கமாகச் சொல்வதற்கு மலேசியத் திருநாட்டில் ஓர் அரிய கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
*தமிழரின் ஆண்டு முறை எது?
*தமிழ்ப் புத்தாண்டு தையா? சித்திரையா?
*60 ஆண்டு கணக்கு தமிழருக்குச் சொந்தமானதா?
*கிழமைப் பெயர்கள் – மாதப் பெயர்கள் எல்லாம் தமிழா?
*ஓரை(இராசி) எப்படி கணிக்கப்படுகிறது?
* 27 நாள்மீன்கள்(நட்சத்திரம்) என்ன? எப்படி?
*பக்கல்(திதி) என்றால் என்ன? அதனால் தீங்கு உண்டா?
*தமிழில் நாள்காட்டி உண்டா? எங்கே கிடைக்கும்?
இப்படி பற்பல செய்திகள் – விளக்கங்கள் – விவரங்கள் தெளிவாகவும் காட்சிப் படங்களின் துணையுடனும் வழங்கப்படும் இக்கருத்தரங்கு பின்வரும் வகையில் நடைபெறும்.
நாள்: 26-04-2009 (13 மேழம் 2040 ) ஞாயிறு
நேரம்: காலை மணி 8.00 முதல் பிற்பகல் 1.00 வரை
இடம்: ஆறுமுகம் பிள்ளை தொழிற்பயிற்சி கல்லூரி, நிபோங் திபால், பினாங்கு.
(ILP Arumugam Pillai, Nibong Tebal, Penang)
*காலை மணி 8.00 – 9.00 பதிவும் பசியாறலும்
கட்டணம்: ம.ரி. இருபது (RM20) மட்டும்
இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்பவர்களுக்குத் தமிழியல் அறிஞர் இர.திருச்செல்வம் எழுதியுள்ள 228 பக்கங்களைக் கொண்ட தமிழாண்டு நூலும், 2009ஆம் ஆண்டின் தமிழ் நாள்காட்டியும், நாள் வழிபாடு என்னும் நூலும் இலவயமாக வழங்கப்படும்.
தமிழ்ப் பற்றாளர்களும் – தமிழியல் முறையில் வாழ முனைபவர்களும் – தமிழராகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விழையும் உண்மைத் தமிழர்களும் – வானியல்(சோதிடம்) கலையில் ஈடுபாடு உள்ளவர்களும் – தமிழர் விழுமியங்களை அறியத் துடிப்பவர்களும் இந்தக் கருத்தரங்கில் தவறாமல் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
மேல் விளக்கத்திற்கும் தொடர்புக்கும்: ம.தமிழ்ச்செல்வன் (6013-4392016)
இந்தக் கருத்தரங்கம், தமிழ் ஆண்டு பற்றி என்றுமே இல்லாத அளவுக்குப் பாரிய விழிப்புணர்வைக் கண்டிப்பாக ஏற்படுத்தும் என்பது உண்மை.
கூடவே, தமிழர் என்ற பாரம்பரியச் சிறப்புமிக்க இனத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் திடமான தன்னம்பிக்கையை நிச்சியமாக ஏற்படுத்தும் என்பதும் உண்மை.
2 comments:
அன்புநிறைந்த நற்குணனுக்கு!
வணக்கம். தங்களின் இந்தத் திருத்தமிழ்ப் பதிவைப் பார்வையிடச் சந்தர்ப்பம் தந்த விக்னேஷ்வரனுக்கு முதல் நன்றிகள். இன்று கொஞ்சம் நேரமிருந்ததால் தமிழ்வெளியின் கட்டுரைகளை ஆறுதலாக வாசிக்க முயன்றேன். முதல் 20 பதிவுகளில் அவரது ஆண் விந்தில் எழுதப்பட்ட சரித்திரம் என்ற கட்டுரையைப் படிக்க அவரது வலைப்பதிவினுள் நுழைந்தேன்!
அவரது ஏப்ரல் இடுகைகள் 9 இனுள் இலங்கையைச் சாம்பலாக்கு என்ற கட்டரையை வாசித்துவிட்டு மீண்டும் அவரது பதிவை சற்று நோட்டமிட்டபோது அவரது நான் வாசிக்கும் பதிவுகளில் முதலாவதாகத் தென்பட்ட திருத்தமிழ் - தமிழ் ஆண்டு – ஓர் அறிவியல் விளக்கம் கருத்தரங்கம் என்ற கட்டுரையை பார்த்தேன் - வாசித்தேன். உடனேயே தமிழ்ச்செல்வனுடன் தொடர்பு கொண்டேன். தங்களையும் விசாரித்தேன். தற்போது 2 விடயங்களுக்காக இதை இடுகையிடுகிறேன். ஒன்று சுயநலம் - மற்றது பொது நலம். எனக்கு நீங்கள் உங்களிடமுள்ள சகல நூல்களின் பட்டியலைத் தெரியப்படுத்தவதோடு நாளை மறுதினம் நடைபெறவுள்ள கருத்தரங்கில் வெளியாகும் புத்தகங்களை அனுப்பி வைப்பது எனக்கு. அது எனது சுயநலம். மற்றது. தமிழ்வெளி போன்ற இணையத்தளங்களில் தெரியப் படுத்தி நல்ல விடயத்தை தெரியவைக்கலாம் என்பது இரண்டாவது பொது நலம். தேவையற்ற அறிவுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தப்படாத அரட்டை விடயங்களைக் காட்டிலும் இப்படியான அறிவுபூர்வமான கருத்துக்கள் என் போன்றவர்களுக்கு பெரும் உதவிபுரியும் என்கிற ஒரு பொது நலம்.
அதிகம் எழுதவில்லை. பின்னர் தொடர்கிறேன்.
என்றும் அன்புடன்
தங்க. முகுந்தன்.
வணக்கம் ஐயா,
கருத்தரங்கில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. தமிழ் ஆண்டு புத்தகத்தை தனியாக வாங்கிக் கொள்ள வசதிகள் உண்டா?
நீங்கள் அறிமுகம் செய்த தமிழ் நாள்காட்டியை பயன்படுத்தி வருகிறேன். தினமும் அதில் இருக்கும் சிறு சிறு குறிப்புகளை படிக்க மறப்பதில்லை. இது நல்லதோர் முயற்ச்சி. வருதமான விடயம் என்னவென்றால் பலரும் புரியவில்லை என்றே சொல்கிறார்கள். கொஞ்சமாகினும் தமிழறிவு உள்ளவர்களே விளங்கிக் கொள்ள முடிகிறது.
இறுதியாக தமிழர் திருநாள் பற்றி கூறி இருந்தீர்கள் இல்லையா. நம்மக்களிடையே அது நல்ல நகைச்சுவையாக தான் இருக்கிறது போங்கள். திருநாள், பெருநாள், புத்தாண்டு என நமது தரமான?! வனோலியும், தொலைக்காட்சியுமே போதுமான அளவுக்கு குழப்பிவிட்டுவிட்டது.
Post a Comment