(முக்கிய அறிவிப்பு:- இந்தக் கட்டுரை சற்று நீண்டிருக்கும். இருந்தாலும், தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி, தாய்மொழி ஆகியவற்றின் எதிர்கால நலன் கருதி தயவுகூர்ந்து பொறுமையுடன் படித்து முடிக்க திருத்தமிழ் அன்பர்களை வேண்டுகிறேன்.)
கணிதம், அறிவியல் ஆகிய இரு பாடங்கள் தமிழ்ப்பள்ளிகளில் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2003 தொடங்கி 2008 வரையில் ஆறு ஆண்டுகளாக இது நடைமுறையில் இருந்து வருகிறது.
இதனை மேலும் தொடருவதா? அல்லது மீண்டும் முன்பு இருந்ததைப் போல தமிழுக்கு திரும்புவதா? அல்லது ஆங்கிலம் தமிழ் என்ற இருமொழிகளில் மாற்றுவதா? என்ற விவாதங்கள் தற்சமயம் மிகச் சூடாக நடந்து வருகின்றன.
இதன் தொடர்பில், கடந்த 5.12.2008ஆம் நாள் தமிழ்ப்பள்ளி தேசிய நடவடிக்கை மன்றம் ஓர் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளது. ம.இ.கா தேசியத் தலைவர் மதிப்புமிகு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்களின் தலைமையில் இந்தக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிப்புமிகு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு, "கணிதம் அறிவியல் பாடங்களுக்கான பயிற்றுமொழியை முடிவு செய்வதற்கு எதிர்வரும் 14.12.2008ஆம் நாள் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு அதில் முடிவு செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மாபெரும் கூட்டத்தில் ம.இ.கா அரசியல் தலைவர்களோடு, தமிழ்ப்பள்ளி தொடர்புள்ள உயர் அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள், பெற்றோர்கள் ஆகிய தரப்பினர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தத் தீர்மானக் கூட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என தமிழ், தமிழர், தமிழ்க்கல்வி சார்ந்த பொது இயக்கங்களும் கோரிக்கை எழுப்பி வருகின்றன.
அடுத்து வருகின்ற ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளில் கணிதம் அறிவியல் ஆகிய பாடங்களின் நிலையோடு சேர்த்து ஒட்டுமொத்தத் தமிழ்ப்பள்ளிகளின் தலைவிதியை முடிவு செய்யும் மிக முக்கியமான கூட்டமாக இந்தத் தீர்மானக் கூட்டம் அமையவுள்ளது.
இதேபோல்தான் கடந்த 2002ஆம் ஆண்டில் ஒரு தீர்மானக் கூட்டம் நடந்தது. கூட்டம் நடந்த அரங்கத்திற்கு வெளியில் "கணிதமும் அறிவியலும் தொடர்ந்து தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும்' என்று பல பொது இயக்கங்கள் ஒன்றுகூடி முழங்கிய வேளையில், அரங்கத்திற்கு உள்ளே "கணிதமும் அறிவியலும் முழுமையாக ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட வேண்டும்" என முடிவு செய்யப்பட்டது.
பின்னர் அம்முடிவு ஒட்டுமொத்த சமுதாயத்தின் முடிவாக வெளியறிவிப்புச் செய்யப்பட்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அரசாங்கமும் அம்முடிவை தலைமேல் ஏற்று 2003 தொடங்கி இதனைச் செயல்படுத்தியது.
கடந்த ஆறு ஆண்டுகள் கணிதம் அறிவியல் பாடங்களை முழுமையாக ஆங்கிலத்தில் படித்த தமிழ்ப்பள்ளி மாணவர்களோடு சேர்த்து தேசியப்பள்ளி, சீனப்பள்ளி மாணவர்கள் இவ்வாண்டில் யு.பி.எஸ்.ஆர் தேர்வு எழுதினர். அதன் அடைவுநிலை பெரிதாக மகிழத்தக்க வகையில் அமையவில்லை என்பது கசப்பான உண்மை.
அப்படியானால், கணிதம் அறிவியல் பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதால் பெரிய பயன் எதுவும் ஏற்படவில்லை என்பது உண்மையாகிறது. கூடவே, ஆங்கிலமும் புரியாமல் தமிழிலும் படிக்க முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள் என்பதும் தெளிவாகிறது.
கணிதம் அறிவியல் பாடங்களைக் கற்பிக்கும் திறன்பெறாமல் ஆசிரியர்கள் குறைவாக இருப்பது, அப்பாடங்களுக்கான கலைச்சொற்கள் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குச் சிரமமாக இருப்பது; கணித அறிவியல் கோட்பாடுகளைத் தெளிவாக விளங்கிக்கொள்ளாமல் இருப்பது; ஆங்கிலத்தில் கேள்விகளைப் படித்துப் புரிந்து அதற்கேற்ற சரியான விடையெழுத முடியால் இருப்பது ஆகியவை இந்தப் பின்னடைவிற்குக் காரணமாக இருக்கலாம்.
இவ்வாண்டுக்கான தேர்வுத் தாள்கள் ஆங்கிலம் தாய்மொழி என இருமொழிகளில் அச்சிடப்பட்டு இருந்தாலும் அதனால் மாணவர்கள் பெரும் பயனை அடையவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரிகிறது.
தவிர, கணித அறிவியல் பாடங்களில் மாணவர்களுக்கு வீட்டில் வழிகாட்டவும் உதவிகள் செய்யவும் பெரும்பாலான பெற்றோர்களால் இயலாமல் போய்விட்டது என்பதையும் இங்கே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
ஆகவே, கணிதமும் அறிவியலும் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும் அல்லது சீனப்பள்ளிகளைப் போன்று இருமொழிகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்ற பெரும்பாலாரின் கருத்தில் அடிப்படை உண்மையும் வலுவும் இருக்கிறது.
இதன்வழி, தமிழ் மாணவர்கள் மட்டுமின்றி தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்ச் சமுதாயமும் குறுகியகால நன்மைகளையும் நீண்ட காலத்திற்கான நன்மைகளையும் ஒருசேர அடையமுடியும் என்ற கருத்து ஆழ்ந்து எண்ணிப்பார்க்கத்தக்கது.
இந்த நிலையில், இப்போது மீண்டும் அதே 2003இன் பழைய வரலாறு திரும்பியுள்ளது. மீண்டும் ஒரு தீர்மானக் கூட்டம் நடைபெறவுள்ளது. மீண்டும் ஒருமுறை முடிவு செய்யப்பட உள்ளது.
மீண்டும் அதே பழைய முடிவு நிலைநிறுத்தப்படுமா? அல்லது தமிழுக்கு மாற்றப்படுமா? அல்லது இருமொழிகளில் கற்பிக்க முடிவு செய்யப்படுமா? என்ற கேள்விக்குறி எல்லாருடைய மனத்திலும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், இப்போது மீண்டும் அதே 2003இன் பழைய வரலாறு திரும்பியுள்ளது. மீண்டும் ஒரு தீர்மானக் கூட்டம் நடைபெறவுள்ளது. மீண்டும் ஒருமுறை முடிவு செய்யப்பட உள்ளது.
மீண்டும் அதே பழைய முடிவு நிலைநிறுத்தப்படுமா? அல்லது தமிழுக்கு மாற்றப்படுமா? அல்லது இருமொழிகளில் கற்பிக்க முடிவு செய்யப்படுமா? என்ற கேள்விக்குறி எல்லாருடைய மனத்திலும் எழுந்துள்ளது.
வரலாற்றில் இடம்பெறப் போகும் இந்த முடிவைச் செய்யும்முன், கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் சிலவற்றை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்: ஆய்வு நோக்கோடு சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். அவையாவன:-
1.தமிழ்ப்பள்ளிகள் இந்த நாட்டில் தொடர்ந்து நிலைபெற்றிருக்க வேண்டும்.
2.தமிழ்ப்பள்ளிகள் தனித்தன்மையோடும் தனி அடையாளத்தோடும் இருக்க வேண்டும்.
3.தமிழ்ப்பள்ளிகள் தமிழ் மக்களின் பண்பாட்டு நடுவமாகத் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
4.தமிழ்ப்பள்ளிகள் தமிழ்மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் முக்கிய இடமாக நிலைத்திருக்க வேண்டும்.
5.தமிழ்ப்பள்ளிகள் (523)துறைத்தலைவர்கள் (Head Of Department) நியமனம் பெறக்கூடிய இடங்களாக எதிர்காலத்திலும் இருந்திட வேண்டும்.
6.தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழியாக (Teaching & Learning Language) இருக்கவேண்டுமே தவிர ஒரு பாடமொழியாக (Subject) மட்டுமே ஆகிவிடக் கூடாது.
7.நமக்குப்பின் வரும் அடுத்த தலைமுறை தமிழ்ப்பள்ளிக்காவும் தமிழ்க்கல்விக்காகவும் போராட வேண்டிய நெருக்கடியை இன்று ஏற்படுத்திவிடக் கூடாது.
8.தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி சார்ந்த சமுதாயப் பணிகளுக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இடையூறுகள் ஏற்பட்டுவிடக் கூடாது.
9.உலகின் பல நாடுகளில் தமிழ்ப்பள்ளிக்காகவும் தமிழ்க்கல்விக்காகவும் தமிழர் உரிமைக்காகவும் காலங்கடந்து தமிழர்கள் போராடிக்கொண்டிருக்கும் நிலைமை எதிர்காலத்தில் நமது குழந்தைகளுக்கு வரக்கூடாது.
10.உலக மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகிய தாய்மொழி உரிமையானது மலேசியத் தமிழர்களுக்கு இன்றும் இனி என்றும் நிலையாக இருந்திட வேண்டும்.
எனவே, வரும் 14.12.2008ஆம் நாள் நடைபெறவுள்ள தீர்மானக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் அனைத்துத் தரப்பினரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் தன்னலக் கருத்துகளையும் அறவே ஒதுக்கிவைத்துவிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும்!
பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் நலனையும் தமிழ்மொழியின் நலனையும் தமிழ்ப்பள்ளிகளின் நல்வாழ்வையும் நன்கு எண்ணிப்பார்த்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்!
நாளைய சமுதாயம் நம்மைப் பார்த்து கைநீட்டி கேள்வி கேட்கும்படியாக இல்லாமல், நெஞ்சை உயர்த்திப் பாராட்டும்படியாக நல்ல முடிவை எடுக்க வேண்டும்!
பி.கு: இந்தச் செய்தியை மலேசியா இன்று வலைமனையில் காண்க.
12 comments:
தமிழிலே இவ்விரு பாடங்களையும் கற்பிப்ப்து பல வகையிலும் பயன்...
வணக்கம் வாழ்க
இவ்விரு பாடங்களும் தாய் தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும் என்பது நமது அவா. தாய்மொழியில் கற்பிக்கின்ற போது அப்பாடங்கள் எளிதில் மாணவர்களுக்குப் புரியும் என்பது பட்டறிவு தந்த பாடம்.
வணக்கம்
இவ்விரு பாடங்களும் ஆங்கிலத்தில் போதித்தால் அப்பாடங்களைப் போதிப்பதற்கு பிற இனத்தவர்கள் வரக்கூடும். நம் இன ஆசிரியர்களின் வேலைக்கு ஆப்பு அடிக்கப்படும்.மீண்டும் ஒரு வரலாற்று தவறினை செய்திடல் கூடாது. நன்கு சிந்தியுங்கள்
அன்புடன்
தமிழாசிரியன்
சொகூர்
முற்றிலும் கல்விமான்களைக் கொண்டே நடந்திருக்க வேண்டிய ஆய்வு கூட்டத்தில் தேவையில்லாமல் அரசியல்வாதிகளை தலைமைத் தாங்க வைத்தது, வேடிக்கையான ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது.
இந்த மண்டோர்களா தமிழ்ப் பள்ளியை வாழ வைக்கப் போகிறவர்கள்!
இனிவருங்காலங்களில் தமிழ் மொழி, தமிழ்ப் பள்ளி குறித்து நடைப்பெறும் எந்தவொரு ஆய்வுக் கருத்தரங்குகளிலும் அரசியல்வாதிகளை உள்ளே நுழைய விடக் கூடாது!
தமிழ்ப் பள்ளி விவகாரம் குறித்து நேரடியாக கல்வி அமைச்சு அதிகாரிகள் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுடனும் தமிழர் அமைப்புகளுடனும் கலந்துரையாடி முடிவெடுப்பது நலம்.
ஆங்கிலமா தமிழா என நாம் கூட்டம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறோம்.. ஆனால் சீனர்கள்...?
அறிவியல், கணிதம் தாய்மொழிக்கு மாற்றப்படாவிட்டால் நாங்கள் மறியல் நடத்துவோம் என சீனர்களின் மொழி காப்பகம் ‘டோங் சியோ சோங்'அறிவித்துள்ளது. இதற்கு ஒட்டுமொத்த சீனர்களின் வரவேற்பு இருக்கின்றது. இவர்களல்லவோ பாராட்டிற்குரியவர்கள்!
நாமும் நம் பங்கிற்கு ஏதேனும் செய்ய வேண்டும்! இல்லையெனில் படிப்படியாக மீண்டும் நம் உரிமைகளை இழக்க வேண்டி வரும்!
பதிவர் சதீசு குமார் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.
பெயரில்லா திருத்தமிழ் அன்பர்கள் இருவரின் வருகைக்கும் மறுமொழி தருகைகைக்கும் நன்றி.
*****
திருத்தமிழ் அன்பர் சதீசு குமார்,
அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவு சரியாக இருக்காது என்பது எவ்வளவு உண்மையோ அந்த அளவுக்கு அரசு அதிகாரிகளும் ஆசிரியர்களும் எடுக்கும் முடிவும் சரிபட்டு வராது.
காரணம், அரசு ஊழியர்கள் அரசின் கொள்கைகளுக்கு எதிராக முடிவெடுக்க மாட்டார்கள் - அஞ்சுவார்கள்.
ஆகவே, ஒட்டுமொத்த சமுதாயமும் இதற்குக் குரல் எழுப்ப வேண்டும்.
//நாமும் நம் பங்கிற்கு ஏதேனும் செய்ய வேண்டும்! இல்லையெனில் படிப்படியாக மீண்டும் நம் உரிமைகளை இழக்க வேண்டி வரும்//
இந்த உண்மை இன்னும் பலருக்குப் புரியவேயில்லை. புரிந்தவர்களும் எதுவும் செய்யாமல் - செய்ய முடியாமல் வாழாவிருக்கின்றனர்.
*****
திருத்தமிழ் அன்பர் அகரம் அமுதா,
பாருங்கள்.. எங்கள் நாட்டில் தமிழைத் தற்காக்க எங்கள் தமிழ்த் தலைவர்களிடமே போராட வேண்டியுள்ளது. என்ன கொடுமை!!
அதிகப் பெரும்பான்மை தமிழ் மக்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்கள், தமிழுக்கும், தமிழர் உரிமைக்கும் போராடாமல் இருக்கின்ற கொஞ்சநஞ்ச உரிமைகளையும் அரசிடம் அடகுவைக்கப் பார்க்கின்றனர்
திருத்தமிழ் அன்பர் கோவி மதிவரன்,
தங்கள் தமிழ் ஆலயம் வலைப்பதிவிலும் கணிதம் அறிவியல் பாடச் சிக்கல் தொடர்பாக எழுதியிருக்கிறீர்கள், பார்த்தேன்.
நன்றாகத் தொகுத்து இருக்கிறீர்கள். பாராட்டுகள்.
அன்புடன்,
திருத்தமிழ் ஊழியன்
சுப.நற்குணன்
//அறிவியல், கணிதம் தாய்மொழிக்கு மாற்றப்படாவிட்டால் நாங்கள் மறியல் நடத்துவோம் என சீனர்களின் மொழி காப்பகம் ‘டோங் சியோ சோங்'அறிவித்துள்ளது. இதற்கு ஒட்டுமொத்த சீனர்களின் வரவேற்பு இருக்கின்றது. இவர்களல்லவோ பாராட்டிற்குரியவர்கள்!//
நமக்கும் ஒரு காப்பகம் தேவை.
தாய்மொழிப் பற்றையும் தமிழர்களின் உரிமைகளையும் எதிரொலிக்கும் ஒரு கருவியாக இது விளங்க வேண்டும்.
திருத்தமிழ் அன்பர் மு.வேலன்,
//நமக்கும் ஒரு காப்பகம் தேவை.
தாய்மொழிப் பற்றையும் தமிழர்களின் உரிமைகளையும் எதிரொலிக்கும் ஒரு கருவியாக இது விளங்க வேண்டும்.//
தமிழ்க் காப்பகம் என்ற ஓர் கூட்டமைப்பு இவ்வாண்டில் நம் நாட்டில் தொடங்கப்பட்டது. அவர்கள் சில சீரிய பணிகளைத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தச் சிக்கலில் அவர்களின் பங்களிப்பு என்ன என்பது நமக்குத் தெரியவில்லை. இருந்தாலும், தமிழ்க் காப்பகம் முன்னின்று இதற்கு தக்க நடவடிக்கைகளை எடுக்குமென எதிர்பார்க்கிறேன்.
////திருத்தமிழ் அன்பர் அகரம் அமுதா,
பாருங்கள்.. எங்கள் நாட்டில் தமிழைத் தற்காக்க எங்கள் தமிழ்த் தலைவர்களிடமே போராட வேண்டியுள்ளது. என்ன கொடுமை!!
அதிகப் பெரும்பான்மை தமிழ் மக்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்கள், தமிழுக்கும், தமிழர் உரிமைக்கும் போராடாமல் இருக்கின்ற கொஞ்சநஞ்ச உரிமைகளையும் அரசிடம் அடகுவைக்கப் பார்க்கின்றனர்////
பொராடிப் பெறவேண்டிய வற்றைப் போராடிப்பெற்றால்தான் அதன்அருமை பின்தலைமுறையினருக்குத் தெரியவரும் அய்யா! சிங்கையும் மலேசியாவும் விழித்துக்கொண்டது பற்றி மகிழ்ச்சி. எம்தமிழ் நாடு இன்னும் ஆழ்துயிலிலேயே கிடந்தொழிகிறதே. அவர்களைத் தட்டியெழுப்ப ஓர்தனிப்பெரும் தமிழினத்தலைவன் தோன்றவில்லையே எனும்பொது வருத்தமாக உள்ளது.
முற்றிலும் கல்விமான்களைக் கொண்டே நடந்திருக்க வேண்டிய ஆய்வு கூட்டத்தில் தேவையில்லாமல் அரசியல்வாதிகளை தலைமைத் தாங்க வைத்தது, வேடிக்கையான ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது.
அன்பர் சதீசு அவர்களின் கருத்தே என்னுடையதும். பரமசிவன் களுத்திலிருந்த பாம்பு கொஞ்சம் இறங்கி வந்தால் என்னாகும்?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்துக் கொண்டால் எல்லாம் சௌக்கியமே.
இப்பொழுது அரசாங்கம் எதை முன்னேற்றப் பார்க்கிறது? ஆங்கிலத்தையா?
பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை.
திருத்தமிழ் அன்பர் திருமூர்த்தி,
தங்கள் கருத்தில் எனக்கும் முழு உடன்பாடுதான். அரிசியில் கல்லைக் கலப்பதும், கல்வியில் அரசியலைக் கலப்பதும் மிக மிக ஆபத்தான செயலாகும்.
கல்வியைக் கல்வியாகவும் கல்வியாளர்களிடமும் விட்டுவிடுவதே சாலச் சிறந்தது.
அரசியலை செல்வாக்கைக் காட்டி கல்வியாளர்களை அடக்கிவைப்பது என்பது கல்விக்கும் நல்ல சிந்தனைக்கும் முட்டுக்கட்டை போடுவதற்கு ஒப்பாகும்.
அதேவேளையில், கல்வியாளர்களும் தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் கல்வியியல் முறைமையில் (Academicallly) சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
வருகைக்கும் மறுமொழி தருகைகைக்கும் நன்றி ஐயா.
Post a Comment