Saturday, December 27, 2008

திருவள்ளுவராண்டு 2040 தமிழ் நாள்காட்டி


எதிர்வரும் தைத்திங்கள் முதலாம் நாள் (ஆங்கிலம் 14-1-2009) திருவள்ளுவராண்டு 2040 பிறக்கவுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டை முன்படுத்தி நாள்காட்டிகள் வெளியிடப்படுகின்ற மரபைப் போல, தமிழருகே உரிய தமிழ்ப் புத்தாண்டை முன்னிறுத்தி தமிழ் நாள்காட்டி வெளிவந்துள்ளது. இந்தத் தமிழ் நாள்காட்டி மூன்றாவது ஆண்டாக மலேசியாவில் வெளிவருகிறது.

ஏற்கனவே, 2007, 2008 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வெளிவந்து தமிழர்களின் பாராட்டுகளையும் மக்கள் தொலைக்காட்சியின் வாழ்த்தையும் பெற்ற இந்த நாள்காட்டியைத் தமிழியல் ஆய்வுக் களம் பெருமையோடு வெளியிட்டுள்ளது. மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் இந்த நாள்காட்டியை கட்டமைப்போடும் நேர்த்தியோடும் வடிவமைத்துள்ளார்.

தமிழ் நாள்காட்டி வரலாற்றில் தனிப்பெரும் சிறப்பாக இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, இந்த நாள்காட்டி முழுமையாகத் தமிழிலேயே வெளிவந்துள்ளது. தமிழ்க்கூறு நல்லுலகம் முதன்முறையாகக் கண்டிருக்கும் தனித்தமிழ் நாள்காட்டியென இதனைத் துணிந்து குறிப்பிடலாம்.

நாள்காட்டியின் உள்ளடக்கங்கள்

1)தேதியைக் குறிக்கும் எண்கள் தமிழ் எண்களாக உள்ளன. ஆங்கில எண்களுக்கு முதலாக சொல்லப்படும் அரபு எண்களுக்கே மூலமான தமிழ் எண்களை மீட்டெடுக்கும் உயரிய நோக்கத்தோடு இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. தமிழ் எண்களை அறியாதவர்களுக்கு உதவியாக (விவேகானந்தா நாள்காட்டி தமிழ் எண் அமைப்பில்) ஆங்கில எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

2)திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடு அமைந்துள்ளன. மேலும், ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்), பிறைநாள்(திதி) முதலானவையும் தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.

3)இதுவரையில் வந்துள்ள எந்தவொரு தமிழ் நாள்காட்டியிலும் இல்லாத அளவுக்கு 50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் பிறந்த நாள், நினைவு நாள்களோடு தமிழ் அருளாளர்களின் குருபூசை நாட்களும் இந்த நாள்காட்டியில் குறிக்கப்பட்டுள்ளன.

4)மலேசியா, தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட 30 தமிழ்ப் பெரியோர்கள் - சான்றோர்கள் - தலைவர்களின் உருவப்படங்கள் நாள்காட்டியில் இடம்பெற்றுள்ளன.

5)தமிழர்களின் வரலாற்றில் மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டுவிட்ட வானியல்(சோதிடக்) கலையை இந்த நாள்காட்டி மீண்டும் வெளிப்படுத்தி காட்டியுள்ளது.


6)குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணை இந்த நாள்காட்டியில் வழங்கப்பட்டுள்ளது. கிரந்த எழுத்துகள் அறவே கலவாமல் முழுமையாகத் தமிழ் எழுத்துகளையே கொண்டிருக்கும் தமிழ் முன்னோர்கள் கண்ட பெயர் எழுத்து அட்டவணை இதுவாகும்.

7)ஐந்திரக் குறிப்பு, நாள்காட்டிப் பயன்படுத்தும் முறை, பிறைநாள்(திதி), ஓரை(இராசி) பற்றிய விளக்கங்கள் ஆகியவை இரண்டு பக்கங்களில் நாள்காட்டியின் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன.


8)ஒவ்வொரு ஓரை(இராசி) பற்றிய படத்தோடு சமற்கிருதப் பெயர்களுக்கான தமிழ் வேர்ச்சொல் விளக்கமும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்வழி, சமற்கிருதப் பெயர்களுக்குத் தமிழே மூலமாக இருப்பதை அறிய முடிகிறது.

9)தமிழின வாழ்வியல் மூலவர்களான வள்ளுவர் வள்ளலார் ஆகிய இருவரின் உருவப்படத்தை முகப்பில் தாங்கி, முழு வண்ணத்தில் தரமாகவும் கவரும் வகையிலும் இந்நாள்காட்டி அமைந்திருக்கிறது.

10)கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தமிழ் நாள்காட்டிக்குத் தமிழர்கள் வழங்கிய மாபெரும் ஆதரவினைக் கருத்திற்கொண்டும், இவ்வாண்டில் மேலும் பல்லாயிரம் தமிழர்கள் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்திலும் ஒரு நாள்காட்டி ஐந்து மலேசிய வெள்ளி (RM5.00) விலையில் மட்டுமே விற்கப்படுகிறது.

தமிழை முன்னெடுக்கும் தமிழ் நாள்காட்டி

நாள்காட்டிகளில் வழக்கமாக இடம்பெறும் அனைத்து விவரங்களும் இந்தத் தமிழ் நாள்காட்டியிலும் இடம்பெற்றுள்ளன. மலேசியப் பொது விடுமுறைகள், பள்ளி விடுமுறைகள், சிறப்பு நாள்கள் என மலேசிய சூழலுக்கு ஏற்ப அமைந்துள்ளன. தமிழ்ப் புத்தாண்டாம் தை முதல் நாளில் தொடங்குகிற இந்த நாள்காட்டியில் ஆங்கில நாள்காட்டியும் உள்ளடங்கியுள்ளது.

உள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக முன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களும் ஆர்வலர்களும் இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்கலாம். எந்த ஒரு வணிக நோக்கமும் கிஞ்சிற்றும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு வெளிடப்படும் இந்த நாள்காட்டி தமிழ் மக்களிடையே சென்று சேரவேண்டும்.

இந்த நாள்காட்டியை வாங்கும் ஒவ்வொரு தமிழன்பரும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவுகின்றீர்கள்; தமிழ் எண்களை மீட்டு எடுக்கின்றீர்கள்; தமிழ்ச் சான்றோர், பெரியோர், தலைவர்களைப் போற்றுகின்றீர்கள்; தமிழ்ப் பண்பாட்டை பேணுகின்றீர்கள்; தமிழர் கண்ட வானியல் கலையை மதிக்கின்றீர்கள்; தமிழரின் இயற்கை அறிவாண்மையைப் போற்றுகின்றீர்கள்.

மேல் விளக்கத்திற்கும் தொடர்புக்கும்:-
தமிழியல் ஆய்வுக் களம் – Persatuan Pengajian Kesusasteraan Tamil
No.17, Lorong Merbah 2, Taman Merbah,
14300 Nibong Tebal, SPS, Pulau Pinang. Malaysia.

கைப்பேசி:- ம.தமிழ்ச்செல்வன் (6013-4392016) / சுப.நற்குணன் (6012-4643401)
மின்னஞ்சல்:- suba.nargunan@gmail.com
  • இவற்றையும் காண்க:-

12 comments:

Esywara said...

Definitely its a great effort.

But i have some doubts regarding the origins of some of name. For example:

1. pirathimai : its the first tithi, therefore its was named such. Now according to Devaneya Pavanar's word analysis the word puranam, puraathaanam actually has the Tamil origin. The same term is used in English as 'pre', or 'pro' as in predecessor. So i think that piratihmai is still a Tamil word.

2. Thiruvonam in sanskrit is Srvana ,Thiruvathirai is Ardra, Kettai is Jyestha. Somehow I think it has the root from Tamil too.

3. The day Puthan (wednesday) has become Arivan. Maybe it is because puthan has the same origin as the word putthi, whick refers to knowledge. In Astrology ,Puthan is the planet for learning. It is said that Puthan self taught him about the vedas and so and so. So most probably, Arivan was derived from Arivu.

Again in Pavanar's work putthi had the Tamil origin.

Well I am not sure about the title of the book, but I certainly remember it was from one of his word analysis books.

I am not sure that how well or to what extend is Pavanar's studies are authorised, and recognised by the linguist.

But, I just want to alert that in the efford to find new tamil word for anything , we should not loose the the existing tamil word mistaking them for foreign origin.

Anonymous said...

தமிழகத்தில் உள்ளோர் இதை பெறுவது எப்படி?

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் திரு.ஈசுவரா,

உங்கள் பாராட்டுரைக்கு மிக்க நன்றி. மேலும், வானியல் தொடர்பில் சில ஐயங்களை எழுப்பியுள்ளீர்கள். உங்கள் வினாக்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும். இங்கே இடம் போதா என்பதால் சற்று சுருக்கமாகவே எழுதுகிறேன்.

1.பிரதமை என்பதன் அடிச்சொல் 'பரம்'. பரம் + அம் > பரமம். பரம் + அன் > பரமன். பரமன் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபுதான் வடச்சொல்லாகிய பிரம்மம். இதற்குத் தலையானது; முதலானது; பெரிதானது என பொருள். இதன் அடிப்படையில் உருவான சொல்தான் 'பிரதமை'. அதாவது முதல் பிறைநாள்(திதி). அதனைத் தமிழில் 'முதன்மி' என்கிறோம்.

ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் வழங்கும் Prime, Primal, Prima, Primary, Pri-mate, Primer, Primitive, Principle, Prior, Priority, Pre, Previous, President, Prefix முதலான சொற்களுக்கும்..

பிராகிருதம், பிராசீனம் போன்ற வடசொற்களுக்கும் வேராக இருக்கின்றது.

2.1.திருவோணம்:- உவணம் என்றால் பருந்து, கழுகு என்று பொருள். உவணம் என்பது ஓணம் என்று திரிந்தது. திரு + ஓணம் > திருவோணம். இந்த நாள்மீன்(நட்சத்திரம்) சிறகு விரிந்த பருந்துபோல காட்சியளிப்பதால் திருவோணம் என பெயர் பெற்றது.

மேலும், இதுவே மூன்று நாள்மீன்களால் ஆனதால் இதற்கு முக்கோல் என்ற பெயரும் உண்டு.

2.2.திருவாதிரை:- ஆது + இரை > ஆதிரை. ஆதிரை = மூதிரை ஒரே பொருள் கொண்டவை. ஆதிரையைத் திருவாதிரை என்பது வழக்கு. திருவாதிரை தமிழே.

2.3.கேட்டை:- இதுவும் தமிழ்ச்சொல் தான். வடமொழியில் ஜ்யேஷ்ட என்பர். கிள் என்றால் ஒளி, ஒளிர், ஒளிவிடு என்று பொருள். கிள் > கெள் > கேள் என மாறி, கேள் + தை > கேட்டை என்றானது. "கேட்டை நான்கும் ஈட்டி போல" என்ற ஒரு நூற்பா உண்டு. இந்த நாள்மீன் மோதிரம் போல் காட்சியளிக்கும். இதனைக் குறிக்கும் மற்றொரு சொல் 'துளங்கொளி' என்பதாகும்.

3.புதன் நல்ல தமிழ்ச்சொல்லே. அறிஞர் கால்டுவெல் புதனும் சனியும் தமிழல்ல என்று சொன்னார். அதனால், பலரும் புதனை வடமொழி எனக் கருதியதால் மாற்றாக அறிவன் என பெயரிட்டனர். தவிர பணிடிதன், புலவன், மேதை ஆகியவையும் இதே பொருள் கொண்டவையே. மற்றபடி புதன் பற்றி நீங்கள் சொல்லியுள்ள
//Maybe it is because puthan has the same origin as the word putthi, whick refers to knowledge. In Astrology ,Puthan is the planet for learning. It is said that Puthan self taught him about the vedas and so and so. So most probably, Arivan was derived from Arivu. // அனைத்தும் சரியானவை.

//I just want to alert that in the efford to find new tamil word for anything , we should not loose the the existing tamil word mistaking them for foreign origin.//

என்ற உங்கள் கருத்து மிகச் சரி. ஏற்கனவே நல்ல சொல் இருக்கும் நிலையில் புதிதாக வேறு சொல்லை உருவாக்கத் தேவையில்லை. ஆனால், அதே வேளையில் பல சொற்கள் இருந்தால் அவற்றுள் மிகச் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பதும் தவறல்ல.

தவிர, பல சொற்கள் இருந்தாலும் ஏதாவது ஒன்றுதான் மக்கள் வழக்கில் நிலைத்துவிடுவதும் இயல்பான இன்றுதான்.

மேற்கோள் நூல்கள்:-
மலேசியாவைச் சேர்ந்த தமிழியல் ஆய்வறிஞர் இர.திருச்செல்வம் அவர்கள் எழுதிய
1.சொல் அறிவியல்-1
2.தமிழ் ஆண்டு

நல்லதொரு ஆய்வுக்கு இடமளித்த உங்கள் மறுமொழிக்கு நன்றி ஐயா!

தொடர்ந்து வாருங்கள்..!

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் கி.அருள்,

அஞ்சலில் விடுக்க முடியும். உங்கள் முகவரியை எனக்கு மின்னஞ்சல் செய்யவும். நாள்காட்டி விலையாகிய மலேசிய வெள்ளி 5.00க்கும் அஞ்சல் செலவுக்குமான தொகையை அமெரிக்க வெள்ளிப் பணவிடையாக அனுப்பலாம்.

தமிழ்நாட்டினர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய நாள்காட்டி.

கடந்த ஆண்டில் தமிழ்மண் பதிப்பகம் வழியாகத் தமிழ் நாள்காட்டியைத் தமிழகத்தில் பரப்பினோம்.

Esywara said...

Thank you so much for your in -depth reply.
I appreciate it very much

sury siva said...

பலமுறை பல பதிவுகளில் தங்கள் கருத்துக்களெனைக்கவர்ந்திழுத்தபோதிலுமின்றுதானிங்குவரும் வழி நற்றமிழ்
நாட்காட்டிமூலம் கிடைத்தது குறித்து பெரு மகிழ்வடைகிறேன்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்ற பாரதியின் பாடல் மேலும்
சொல்லும்:

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம்; ஒரு சொற்கேளீர், சேமமுற வேண்டுமெனில்
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்

செம்மொழியாம் தமிழின் பெருமைதனை உலகிற்கறிவிக்கத் தாங்களெடுத்துக்கொண்டிருக்கும் முயற்சி, சிந்தும்
வியர்வை வீண்போகாது. இது திண்ணம்.

தமிழ் வலைப்பதிவாளர் பலர் தமிழ் நாட்டில் குறிப்பாக சென்னையில் உள்ளர். அவர் எல்லோருக்கும்
இந்நாட்காட்டி கிடைத்திடல் வேண்டும். அவரில் யாரேனும் பொறுப்பெடுத்து எல்லோரிடமும் ஐந்து வெள்ளி வசூலித்து
மொத்தமாக அனுப்பி, நாட்காட்டி பிரதிகளைப் பெறுதல் சாத்தியமே.

யாரேனும் முன் வரின் அவர் தம் பெயர், விலாசந்தனைத் தவறாது தங்கள் பதிவில் தரவும்.



சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் சுப்பு ரத்தினம்,

தங்கள் மேலான வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி.

//செம்மொழியாம் தமிழின் பெருமைதனை உலகிற்கறிவிக்கத் தாங்களெடுத்துக்கொண்டிருக்கும் முயற்சி, சிந்தும்
வியர்வை வீண்போகாது. இது திண்ணம். //

நெகிழச்செய்தன இவ்வரிகள்..!

சென்னைக்கு மொத்தமாக அனுப்பி வைக்க அணியமாக(தயார்) இருக்கிறோம் ஐயா! அதற்கான பணிகளைத் தாங்களே முன்னெடுக்கலாம்.

அகரம் அமுதா said...

இக்கட்டுரையைப் படித்தவுடன் எனக்கு சிலநிமிடங்கள் புல்லரித்தது உடம்பு. ஆஃகா! தமிழகமே நீ இன்னமும் விழித்துக்கொள்ளாமல் நீடுதுயில் கொள்வாயானால் நாளை நானிலம் உன்முகத்தில் காரி உமிழும் என்பதைதவிர வேறொன்னும் நிகழப்போவதில்லை. இப்பொழுதாவது விழித்துக்கொள்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் அகரம்.அமுதா,

தமிழகத்தில் எதுவுமே நடக்கவில்லை என்று சொல்வதை அடியேன் ஒப்பமாட்டேன். தமிழை மீட்டெடுக்கும் பணிகள் இன்று உலகம் முழுவதும் எழுச்சிபெற்று வருவதற்கு அடிப்படை தோற்றுவாய் தமிழகமும் தமிழகத் தமிழ் அறிஞர்களும்தான்.

நால்வர் முதற்கொண்டு சித்தர்கள், அருளாளர்கள், வள்ளற்பெருமான், பரிதிமாற்கலைஞர் மறைமலையடிகளார், பாவாணர், பெருஞ்சித்திரனார், பெரியார் என பல்லாயிரப் பெருமக்கள்தாம் நமக்கும் நமக்குப் பின்னர் தமிழை முன்னெடுக்கப்போகும் அத்தனைப் பேருக்கும் முன்னோடிகள்.

இவ்வாறு வாழையடி வாழையென வந்தத் தமிழ்த்திருக்கூட்ட மரபினர் இன்றும் தமிழக மண்ணில் இருந்து அயராது பணிசெய்து வருகின்றனர் என்பது உண்மை..!

அப்பணிக்காக அவர்கள் சொல்லொனா இடர்களைக் தாங்க வேண்டியுள்ளது.. மாபெரும் தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது.. சூழ்ச்சிகளைக் கடக்க வேண்டியுள்ளது.. கொடுமைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது..!

இருந்தும் தளராது தமிழுக்காய் பணிசெய்துவரும் தமிழ்ப் பெரியோர்களை நினைத்து கைத்தொழுவோம் வாரீர்..!

நம்புங்கள்..!
தமிழனால் முடிந்தால்
தமிழால் முடியும்!
மெல்லத் தமிழினி வெல்லும்!!

தாய்மொழி said...

தமிழ் நாள் காட்டியின் பயன்களை நன்றாக விவரித்தமைக்கு நன்றி.......

அகரம் அமுதா said...

தங்கள் கூற்றை வழிமொழிகிறேன். ஆயினும் அங்கொன்றும் இங்கொன்றும் என்று அறிஞர்கள் தோன்றிப் பணிசெய்தல் சிறப்பெனினும் தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சியுற்று மாற்றம் காண வேண்டுமென்பதே என் தீராத அவா! மேலும் இங்கு கடாரத்திலும் (மலேசியா) அங்கு ஈழத்திலும் தமிழினம் இடர்படுவது கண்டும் பொங்காத் தமிழன் தமிழகமெங்கும் நிறைந்திருக்கிறார்கள். அதுபோல் பேச்சிலும் எழுத்திலும் தமிழ்பொல் மொழிச்சிதைவுறும் ஓர் மொழி உலகில் இல்லை. இப்படி மானமற்று தமிழன் வாழ்வதாலேயே சிலபோழ்துகளில் வெகுளி என்னையும் மீறிப் பேசவைத்துவிடுகிறது.

/////நம்புங்கள்..!
தமிழனால் முடிந்தால்
தமிழால் முடியும்!
மெல்லத் தமிழினி வெல்லும்!!////

ஆஃகா! தேன் வந்து பாயுதென் காதினிலே! வாழ்த்துகள் அய்யா!

Lenin said...

தமிழகத்திலுள்ளோர் தென்மொழி நாட்காட்டியினை வாங்கலாம். சென்னையில் நடைபெறும் புத்தக சந்தையில் தென்மொழி வெளியீட்டகத்தில் கிடைக்கும். மேலும் www.thamizham.net தளத்திலிருந்தும் எடுத்துக்கொள்ளலாம்

Blog Widget by LinkWithin