தமிழ் உலகின் மூத்த மொழி என்பது இன்றைய உலகம் ஒப்புக்கொண்ட உண்மையாகும். தமிழ் இயற்கையோடு இயைந்து தோன்றிய மொழியாகும். மாந்த இனம் முயன்று உருவாக்கிக் கொண்ட முதல் மொழியாக இருப்பதற்கான சான்றுகளும் தடையங்களும் தமிழில் நிறையவே உண்டு. அதனால்தான் மாந்தனின் முதல் அறிவியல் வழிபட்ட கண்டுபிடிப்பு தமிழ்மொழி என சொல்லப்பெறுகிறது.
உலகின் மற்ற மொழிகளைப்போல் அல்லாமல் தமிழ் மிக செப்பமாக அமைந்துள்ளது. மிகவும் நுட்பமான முறையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழின் அடிப்படை அமைப்பியல் முறை மிகவும் திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளது. அதன் செம்மாந்த அமைப்பும் செவ்வியல் தன்மையும் நம்மை வியக்கச்செய்கிறது.
தமிழ் 'உயர்தனிச் செம்மொழி' என்று அறிஞர் பெருமக்கள் கூறுவர். தமிழ் உயர்ந்த மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பதே இதன் பொருள். தமிழ் என்பதற்கு மொழி என்பதோடு அழகு, இனிமை, வீரம், இறைமை, வேந்தர், நாடு எனவும் பொருள்கள் உண்டு. உலகில் மொழியைக் குறிக்கும் எந்த சொல்லுக்கும் இவ்வாறு பல பொருள்கள் இல்லை.
தமிழ் எழுத்துக்கள் மூவகைப்படும். அவை வல்லினம் மெய்யினம் இடையினம் எனப்படும். இவை மூன்றிலிருமிருந்து ஒவ்வொரு எழுத்தாக எடுத்து மொழிக்குப் பெயர் வைத்திருக்கும் நம் முன்னோர்களின் திறம்வியந்து போற்றாமல் இருக்க முடியாது. (த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம்) தமிழ் என்பதை தம்-இழ் எனப் பிரித்து, தம்மிடத்தில் 'ழ்' ழை உடையது எனப் பொருள் கூறுவாரும் உள்ளனர்.
தமிழில் 12 உயிர்ரெழுத்துகள் உள்ளன. இவற்றுள் குறில் ஐந்தும் நெடில் ஐந்துமாக அமைந்துள்ள முறைமையும் குறிலுக்குப் பின் நெடியில் என்ற வைப்புமுறையும் வேறு எம்மொழியிலும் இல்லை. (ஐ, ஔ இரண்டும் கூட்டொலிகள்). 12 உயிரெழுத்துகளின் அடிப்படை ஒலிகளாக இருப்பவை அ, இ, உ ஆகிய மூன்று குற்றொலிகள்தாம். இம்மூன்று ஒலிகளும் மனிதனின் வாயிலிருந்து மிகமிக இயல்பாகப் பிறக்கும் ஒலிகளாகும். உலகின் எல்லா மொழிகளிலும் இந்த அடிப்படை ஒலிகள் இருப்பினும் தமிழில் மட்டும்தான் அதன் உண்மையான பயன்பாடும் வெளிப்பாடும் காணப்பெறுகிறது. சான்றாக, தமிழில் உள்ள 75% சொற்கள் 'உ' என்ற ஒலியிலிருந்து தோன்றியவை என்று தேவநேயப் பாவாணர் போன்ற மொழியறிஞர்கள் நிறுவியுள்ளனர்.
அடுத்து, 18 மெய்யெழுத்துகள் வல்லினம்(க்ச்ட்த்ப்ற்), மெல்லினம்(ங்ஞ்ண்நன), இடையினம்(ய்ரல்வ்ழ்ள்) என மூவையாகப் பிரிக்கப்பட்டு முறையாக வைக்கப்பட்டிருப்பது மற்றுமொரு வியப்பான செய்தியாகும். அதாவது 6 வல்லின எழுத்துகளின் பின் 6 மெல்லின எழுத்துகளையும் அவற்றுக்கு இடையில் 6 இடையின எழுத்துகளையும் முறைப்படுத்தி வைத்திருக்கும் நம் முன்னோர்களின் அறிவாற்றல் எண்ணி எண்ணி மகிழத்தக்கது.
காண்க: க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
தமிழுக்கு 'முத்தமிழ்' எனவும் பெயருண்டு. இது இயல், இசை, நாடகம் என்றாகும். எண்ணமும் துணிவும் இன்றி எச்செயலும் நடவாது என்பது உளவியல் கோட்பாடாகும். அதற்கு இணங்க இயல்(எண்ணம்), இசை(துணிவு), நாடகம்(செயல்) என தமிழையும் நம் முன்னோர்கள் முத்தமிழ் என அழைத்திருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
No comments:
Post a Comment