Sunday, August 21, 2016

மலேசியாவில் தமிழ்க்கல்வி 200ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்

மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டு இந்த 2016ஆம் ஆண்டோடு 200 ஆண்டுகள் நிறைவை அடைகின்றது.


இரண்டு நூற்றாண்டு காலத்திற்கு மலேசியாவில் தமிழ்மொழியும் தமிழ்க்கல்வியும் நிலைத்து நீடித்து வருவது பெருமைக்குரிய செய்தி என்றால் மிகையாகாது.

1816ஆம் ஆண்டில் பினாங்கில் இயங்கிய இலவயப் பள்ளியில் (Penang Free School) தமிழ் வகுப்பு ஒன்று தொடங்கப்பட்டது. இதுவே மலேசியாவில் தமிழ்க்கல்விக்காகப் போடப்பட்ட முதல் விதையும் வித்தும் ஆகும். ஒரு வகுப்பில் தொடங்கிய தமிழ்க்கல்வி இருநூறு ஆண்டுகள் கடந்து இன்று மலேசியாவில் ஆலமரமாக ஆழ்ந்து வேரூன்றி அடர்ந்து வளர்ந்து நிற்கின்றது.

இந்த 200 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்பு மலேசியத் தமிழர்களால் பெருமையோடு கொண்டாடவுள்ளது. 

அதற்காக, மலேசியக் கல்வி அமைச்சின் சார்பில் கல்வித் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ கமலநாதன் அவர்களின் தலைமையில் மலேசியத் தமிழ்க்கல்வி 200ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளுடன் நடைபெறவுள்ளது.

200ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் சிறப்பு இலச்சினை ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. இலச்சினை உருவாக்கும் போட்டி நடத்தபெற்று அதிலிருந்து சிறந்த இலச்சினை ஒன்று தெரிவு செய்யப்பட்டது. இஃது 200ஆம் ஆண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அனைத்திலும் பயன்படுத்தப்படும் எனக் கல்வித் துணை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அனைத்துத் தரப்பினரும் இந்த இலச்சினையைப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மலேசியத் தமிழ்க்கல்வி 200ஆம் ஆண்டுக் கொண்டாட்ட இலச்சினை



 மலேசியத் தமிழ்க்கல்வி 200ஆம் ஆண்டுக் கொண்டாட்ட இலச்சினை 
அறிமுக விழா

மலேசியக் கல்வி அமைச்சரும் கல்வித் துணை அமைச்சரும்


மலேசியாவில் 200 ஆண்டுத் தமிழ்க்கல்வி வரலாற்றை நினைவுக்கூரும் வகையில் நாட்டில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் பளிங்குவெட்டு (Pluque) பொறிக்கப்படவுள்ளது. இப்பளிங்குவெட்டு இனிவரும் காலத்திற்குத் தமிழ்க்கல்வியின் வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கும்.

மலேசியத் தமிழ்க்கல்வி 200ஆம் ஆண்டுக் கொண்டாட்டப்
பளிங்குவெட்டு (Pluque) 
 

200 ஆண்டுத் தமிழ்க்கல்வி வரலாற்றுப் பயணத்தை மாணவர்களிடையே அறிமுகப்படுத்தும் வகையில் மலேசியக் கல்வி அமைச்சு ஒரே மலேசியா தமிழ்மொழிப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் குழுவாக இப்போட்டியில் கலந்துகொள்வர். அதாவது, ஒவ்வொரு குழுவிலும் ஒரு தமிழ் மாணவர், ஒரு மலாய் மாணவர், ஒரு சீன மாணவர் என மூவர் இடம்பெற்றிருப்பர். அவர்கள் மூவரும் தமிழ்மொழி, தமிழ்க்கல்வி, மலேசியத் தமிழர் வரலாறு தொடர்புடைய செய்திகளைக் மின்னியல் காட்சிப் படங்களோடு படைக்கும் வகையில் இப்போட்டி அமைக்கப்பட்டுள்ளது.



இந்தக் கொண்டாட்டத்தில் தமிழ் ஆசிரியர்களையும் இணைத்துக்கொள்ளும் வகையில் தமிழ்க்கல்வி மாநாடுகள் நடைபெறவுள்ளன.தென் மண்டலம், நடு மண்டலம், வட மண்டலம் என 3 மாநாடுகள் நடைபெறவுள்ளன. வட மண்டல மாநாடு எயிம்சுட் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இதே இடத்தில் அனைத்துலக தமிழ்க்கல்வி மாநாடும் ஒருசேர நடைபெறவுள்ளது. அதற்காக, கல்வி அதிகாரிகளும் ஆசிரியர்களும் அடங்கிய ஏற்பாட்டுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    
தமிழ்க்கல்வி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர்

இந்த மாநாடுகளுக்கு ஆதரவாகச் செயலாற்றுவதற்கு அரசு சாரா அமைப்புகளும் ஊடக நிறுவனங்களும் முன்வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்க்கல்வி மாநாட்டு ஆதரவுக் குழுவினர்

இதனிடையே, 200 ஆண்டைத் தொடும் மலேசியத் தமிழ்க்கல்வியின் வரலாற்றை நாடு தழுவிய நிலையில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை அரசு சார்பற்ற இயக்கமாகிய மலேசியத் தமிழ் அறவாரியமும் மிகவும் சிறப்பாகச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் தமிழ்க்கல்வி 200ஆம் ஆண்டு  வரலாற்றுக் கொண்டாட்டம் ஒரு தமிழ்க்கல்வி மாநாட்டின் வழி தொடங்கப்பட்டது. அக்டோபர் 31, 2015 இல் மலாயாப் பல்கலைக்கழகத்தில் காலை மணி 9.00 லிருந்து மாலை மணி 5.00 வரையில் தமிழ்க்கல்வி மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் அனைத்து  ஏற்பாடுகளையும் மலேசியத் தமிழ் அறவாரியம் முன்நின்று செய்தது. மலேசியத் தமிழ்கல்வி மீதான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர் பெருமக்கள் படைத்தனர். மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 500 க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். 


அடுத்ததாக, தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே தமிழ்க்கல்வியின் மேன்மையை உணர்த்தவும் தமிழ் மக்களிடையே தமிழ்க்கல்வி - தமிழ்ப்பள்ளியின் மீது நன்மதிப்பை ஏற்படுத்தவும் நமது முன்னோடிகளுக்கு நன்றி நவிலும் நிகழ்வாகவும்  தமிழ்ப்பள்ளிகளில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியைத் தமிழ் அறவாரியம் ஏற்பாடு செய்தது.



மேலும், மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வி நிலைத்திருப்பதைப் பெருமைபடுத்தும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சி 18.08.2016ஆம் நாள் மலேசியத் தமிழ் அறவாரியத்தினால் நடத்தப்பெற்றது.



தமிழ்க்கல்வி சிறப்பு அஞ்சல் தலை

மலேசியாவில் செயல்படும் மற்றொரு அரசு சார்பற்ற இயக்கமாகிய 'டிரா மலேசியா'வும் இந்த 200ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு தமிழர் திருநாள் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது.



1816 முதல் 2016 வரையில் 200 ஆண்டுகள் பெரும் இடர்கள், நெருக்கடிகள், அரசியல் பூசல்கள், பொருளியல் வெல்விளிகள், சமுதாயச் சிக்கல்கள், சிந்தனைப் போராட்டங்கள், ஏற்றத் தாழ்வுகள் எனப் பல்வேறு பரிணாமங்களைக் கடந்து வெற்றிக் கண்டிருக்கும் மலேசியத் தமிழ்க்கல்வி அடுத்துவரும் 200 அல்ல 2000 ஆண்டுகளுக்கு இந்த நாட்டில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதே மலேசியத் தமிழர்களின் ஆவலாக இருக்கின்றது.

இந்த மகத்தான ஆவலை நிறைவு செய்யும் வகையில் மலேசியத் தமிழ்க்கல்வி  200ஆம் ஆண்டுக் கொண்டாட்டமும் விழாக்களும் தொடர் நிகழ்ச்சிகளும் போட்டிகளும் அமைந்திட வேண்டும். அரசாங்கம், கல்வி அமைச்சு, பொது இயக்கங்கள், தமிழ்ப்பள்ளிகள், மலேசியத் தமிழ் மக்கள் என அனைத்துத் தரப்பினரும் அடுத்த நூற்றாண்டுக்குத் தமிழ்க்கல்வியைக் கொண்டுசெல்லும் வகையில் இந்த 200ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
@சுப.நற்குணன்

2 comments:

நித்தீஷ்( Nithish) said...

சிறப்பான கட்டுரை ஐயா...பல புதிய தமிழ்ச் சொற்களை நான் அறிந்து கொண்டேன். உதாரணத்திற்குப் பொருளியல் வெல்விளிகள், பளிங்குவெட்டு (Pluque) போன்றவை. மலேசியாவில் தமிழ்க்கல்வி ஒரு நீண்ட நெடிய பயணத்தைக் கடந்து வந்துள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். மலேசியாவில் தமிழ்மொழி உயிரோட்டமாகத் தழைத்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ந.சுந்தரராசன் மூவர்கோட்டை said...

வாழ்த்துகள்....மலேசியத் தமிழர்களின் தமிழ்த்தொண்டை பாராட்ட சொற்களே இல்லை...அந்த அளவிற்கு தமிழ்மொழியை பேணிபாதுகாத்து வருகின்றீர்கள் பாராட்டுகள்

Blog Widget by LinkWithin