உத்தமம் எனப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப அமைப்பு, 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டைக் கோலாலும்பூரில் கோலாகலமாக நடத்தியுள்ளது. இம்மாநாடு கடந்த ஆகத்து 15 - 18 வரையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. 'கையடக்கக் கருவிகளில் தமிழ்க் கணிமை' எனும் கருப்பொருளுடன் நடந்த இம்மாநாட்டில் மலேசியாவிலிருந்து 680 பேராளர்களும் அயலக நாடுகளைச் சேர்ந்த 150 பேராளர்களும் கலந்து சிறப்பித்தனர். இதுவரையில் நடந்த தமிழ் இணைய மாநாடுகளில் மிகவும் வெற்றிகரமாக நடந்த மாநாடாக இது கருதப்படுகிறது.
மாநாட்டின் தொடக்கவிழா 15.08.2013 வியாழன் இரவு 8:00 மணிக்குத் தொடங்கியது. மலேசியத் தகவல், பல்லூடக அமைச்சர் மாண்புமிகு சபரி சிக் மாநாட்டினை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார்.
மாநாட்டில் பேசிய மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சி.ம.இளந்தமிழ்,"இனிவரும் எதிர்காலம் எந்திரமயமாக இருக்கும். முழுக்க முழுக்க தகவல் தொழில்நுட்பமே எங்கும் எதிலும் அட்சி செய்யப் போகின்றது. வீட்டுக் வீடு எந்திர மனிதன் இருக்கப் போகின்றான். அந்த இயந்திய மனிதன் தமிழ் பேசவேண்டும் என்றால், இப்பொழுதே அதற்கான பணிகளை முடுக்கிவிட வேண்டும். மேலும், தமிழ்க் கணினி பயன்பாட்டைத் தமிழ் மக்கள் அதிகப்படுத்த வேண்டும். தமிழ் தகவல் தொழில் நுட்பத்தைத் உலகத்தரப்படுத்த வேன்டும். பன்னாட்டு நிறுவனங்களோடு இணைந்து தமிழுக்கான முன்னெடுப்புகளை முனைந்து செய்தல் வேண்டும். இந்த மாநாட்டின்வழி உத்தமம் அமைப்பு எதிர்காலத் தமிழுக்கு ஆக்கமான பணிகளையும் திட்டங்களையும் பற்றி சிந்திக்கும் மாநாடாக நடைபெறுகிறது" எனத் தெரிவித்தார்.
மலாயாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டான்ஶ்ரீ கவுத் பின் சேசுமான், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் மு.ஆனந்தகிருஷ்ணன் ஆகிய இருவரும் சிறப்புரை ஆற்றினர்.
இவர்களை அடுத்து, முரசு அஞ்சல் நிறுவநர் முத்து நெடுமாறன் முதன்மைப் பொழிவு நிகழ்த்தினார். இந்த முதன்மைப் பொழிவு அவையோர் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்ததோடு, கணினி இணைய உலகில் தமிழ்மொழியின் வளர்ச்சி அனைவருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.
"கணினி, மடிக்கணினி, இணையம் ஆகியவற்றில் தமிழ்மொழி இன்று மிக எளிதாகவும் இயல்பாகவும் இயங்கும் நிலைமை உருவாகிவிட்டது. இன்று மிகப்பரவலாகிவரும் தட்டைகள் (Tablets), திறன்பேசிகள் (Smart Phones), கைக் கருவிகள் (Mobile Devices), குறுஞ்செயலிகள் (Apps) ஆகியவற்றிலும் தமிழ் வளர்ச்சிகண்டுள்ளது. ஆங்கிலம் போலவே தமிழையும் மிக எளிதாகப் பயன்படுத்தும் நிலைமை உருவாகிவிட்டது. ஆண்டிரோய்டு, விண்டோசு தளங்களிலும் தமிழைப் படித்தலும் எழுதுதலும் பெருகிவருகின்றன. தமிழின் வளர்ச்சி மேலும் விரவாக நடைபெற தமிழ் மக்கள் தமிழ்க் கணிமையைப் பயன்படுத்துபவர்களாக மாற வேண்டும். தமிழ்க் கற்றவர்கள் தமிழ்க் கணிமை பயனர்களாக மாற வேண்டும். அதோடு, தரமான பயனர்களாகவும் தரமிக்க கைக்கருவிகளைப் பயன்படுத்த முன்வரவேண்டும்." என்றார் முத்து நெடுமாறன்.
கைக்கருவிகளில் தமிழ்க் கணிமை, தமிழ்க் குறுஞ்செயலிகள், திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல், தமிழ்க் கணினிச் சொல்லாக்கம், கணினிக்குத் தமிழ் இலக்கண அறிவூட்டல், தமிழ் இணைய வளர்ச்சி, தமிழ்ச் சொல்திருத்தி, இயந்திர மொழி மாற்றம், இயன்மொழிப் பகுப்பாய்வுப் பிழைதிருத்தி, கணினி இணையம் வழி தமிழ்க் கற்றல் கற்பித்தல் முதலான துறைகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன. மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள் பத்ரி சேசாத்திரி பொறுப்பில் ஆய்வடங்கலாக வெளியிடப்பட்டது.
மாநாட்டையொட்டி கண்காட்சியும் மக்கள் கூடம் எனும் தமிழ்க் கணிமை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஏறக்குறைய 10,000க்கும் அதிகமான தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மாணவர்களும் இளையோர்களும் பொதுமக்களும் வந்திருந்து கலந்து பயன்பெற்றனர்.
மொத்தத்தில், இந்த உலகத் தமிழ் இணைய மாநாடு மலேசியத் தமிழ் மக்களிடையே குறிப்பாக மாணவர்களிடையேயும் இளையோர்கள் மத்தியிலும் தமிழ்க் கணிமை மீது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவதில் பெரும் வெற்றி பெற்றுள்ளது என்றால் மிகையாகாது.
மேலும் செய்திகள் விரைவில்...
No comments:
Post a Comment