Wednesday, February 20, 2013

கோலாலம்பூரில் உலகத் தாய்மொழி நாள்

அனைத்துலகத் தாய்மொழி நாள்  ஒவ்வோர் ஆண்டும் பிப்பிரவரி மாதம் 21 ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது.

மலேசியாவில் நாளை (பிப்பிரவரி 21, 2013) கோலாலம்பூரில் மலாயா பல்கலைக்கழகத்தில் உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்படவிருக்கிறது.

இவ்விழாவை மலேசிய செயல் கூட்டமைப்பின் (Gabungan Bertindak Malaysia) ஆதரவுடன் தமிழ் அறவாரியம் மலேசியா, லிம் லியன் கியோக் பண்பாட்டு மையம், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி ஆல் மற்றும் மலாயா பல்கலைக்கழகத்தின் மேம்பாடு மையமும் கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன.

ஐநாவின் யுனெசுகோ பிப்பிரவரி 21 ஆம் தேதியை அனைத்துலக தாய்மொழி நாளாக 1999 ஆம் ஆண்டில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2000 ஆண்டிலிருந்து அனைத்துலகத் தாய்மொழி நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகத் தாய்மொழி நாள் வரலாறு

தங்களுடைய தாய்மொழியான வங்காள மொழியை வங்காளத்தின் (அன்றைய கிழக்கு பாக்கிசுதான்) தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி பிப்பிரவரி 1952 இல் கிழக்கு பாக்கிசுதான் முழுவதும் போராட்டம் நடந்தது. அப்போராட்டத்தில் பங்கேற்ற டாக்கா பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் – அப்துல் சலாம், ரபிக் உடின், அப்துல் பர்காத், அப்துல் ஜபார் – போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இறுதியில், வங்காள தேசம் என்ற தனிநாடு 1971 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிப்பிரவரி 21 ஆம் நாள்தான் அனைத்துலகத் தாய்மொழி நாளாக நினைவுக்கூரப்பட்டு வருகிறது.

நாளை நடைபெறவிருக்கும் அனைத்துலகத் தாய்மொழி நாள் நிகழ்ச்சியில் பல்லின கலை நிகழ்ச்சிகளோடு மலாயா பல்கலைக்கழத்தின் வருகை பேராசிரியர் டாக்டர் கே. கருணாகரன் “தாய்மொழியின் முக்கியத்துவம்” குறித்து உரையாற்றுவார்.

மேலும், இக்ராம் அமைப்பின் தலைமைச் செயலாளர் ஜைட் கமாருடின், தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி. பசுபதி, லிம் லியன் கியோக் மையத்தின் தலைவர் டாக்டர் தோ கின் வூன், ஜோஆஸ் பிரதிநிதி ராமன் பாதுயின் (சுக்கு கவும் செமாய்) மற்றும் தமிழ் அறவாரியத்தின் துணைத் தலைவர் சி.எம். திரவியம் ஆகியோரும் உரையாற்றுவார்கள்.

இந்நிகழ்ச்சி குறித்த விபரங்கள்:
இடம் : Dewan Kuliah Angsana, Faculty of Langugage and Linguistics, Perisiaran Bernas, University of Malaya.
நாள் : பிப்பிரவரி 21, 2013 (வியாழக்கிழமை)
நேரம் : மாலை மணி 6.00 லிருந்து இரவு மணி 8.30 வரையில்.

இந்நிகழச்சியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

நன்றி:செம்பருத்தி.காம்

 தொடர்பான இடுகைகள்:-

பிப்பிரவரி 21 - அனைத்துலகத் தாய்மொழி நாள்

அனைத்துலகத் தாய்மொழி நாள் (21-2-2009)

 

No comments:

Blog Widget by LinkWithin