Thursday, September 06, 2012

சிவா ஐயாதுரை: முதன்முதலில் மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழன்




இன்று உலக மக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு முகவரி இருக்கிறது. அவரவர் வீட்டு முகவரி என நினைத்துவிடாதீர்கள். ஒரே வீட்டில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு முகவரி இருக்கிறது. அதுதான் மின்னஞ்சல்(e-mail) முகவரி. இன்றைய நவின காலத்தில் எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் மின்னஞ்சல் கண்டிப்பாகத் தேவை என்று ஆகிவிட்டது.

இந்த மின்னஞ்சலைக் கண்டுபிடித்தவர் ஒரு ‘தமிழன்’ என அறியும்போது ‘தமிழன் என்று சொல்லடா; தலைநிமிர்ந்து நில்லடா’ என்று நெற்றிப் புருவம் மேலே ஏறுகின்றது! நரம்புகளில் ஏதோ ஓர் உணர்வு முறுக்கேறுகின்றது.

வெள்ளைத் தாளில் தூவலைப்(பேனா)  பிடித்து கடிதம் எழுதிய பாரம்பரிய முறையை மாற்றிப்போட்டு மின்னியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்மடல் எழுதும் புதிய பரிணாமம்தான் இந்த மின்னஞ்சல். ஆனால், இன்றோ அதனுடைய பயன்பாடு பல்வகைப்பட்டதாக மாறிவிட்டது. நவின உலகத்தில் மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ முடியாதோ அப்படி ஆகிவிட்டது இந்த மின்னஞ்சல். இ-மெயில் எனப்படும் மின்னஞ்சல் இல்லாமல் இன்றைய உலகத்தில் வாழ முடியாது என்னும் நிலைமை வந்துவிட்டது.   

ஆகக் கடைசியாக வந்திருக்கும் முகநூல் (Facebook), டுவிட்டர் (Twitter), கூகிள் + (g+) யூ டியூப் (You Tube) என்று எந்தத் தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டாலும் இந்த மின்னஞ்சல் இல்லாமல் எதுவும் செயல்படாது; எதிலும் நாம் செயல்பட முடியாது.

அந்த அளவுக்கு முகமைத்தன்மை வாய்ந்த மின்னஞ்சலை முதன் முதலாகக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கிய அறிவியலாளர் - தொழில்நுட்பர் வி.ஏ.சிவா ஐயாதுரை என்பவராவார். மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததற்கான காப்புரிமையையும் (copyright) இவர் பெற்றிருக்கிறார். இவர் தமிழ்நாட்டில், தமிழ்க் குடும்பத்தில் பிறந்து பின்னர் அமெரிக்காவில் குடியேறிய தமிழர். 

இளவயதில் சிவா ஐயாதுரை
தற்பொழுது 49 அகவை நிரம்பிய சிவா ஐயாதுரை, மின்னஞ்சலைக் கண்டுபிடித்த பொழுது 14 வயது இளைஞராக இருந்தார் என்னும் செய்தியை அறியும்போது நமக்குப் பெரும் வியப்பும் பெருமிதமும் ஏற்படுகிறது.

30 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பொழுது அதனை அமெரிக்க அரசாங்கம் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ இவருக்கு உரிய உறுதிபாட்டையும் காப்புரிமையையும் கொடுக்கவில்லை. இதனால், மின்னஞ்சலுக்குப் பலரும் சொந்தம் கொண்டாடினர்.

ஆனாலும், 4 ஆண்டுகள் கழித்து 1982ஆம் ஆண்டு ஆகத்து 30ஆம் நாள் சிவா ஐயாதுரையின் அரிய கண்டுபிடிப்புக்கு உரிய உறுதிப்பாடும் மின்னஞ்சல் காப்புரிமையும் (e-mail copyright)  வழங்கப்பட்டது.
காப்புரிமை ஆவணம்

இ-மெயில் (e-mail) என்ற பெயரை உருவாக்கியவரும் இவர்தான். அதோடு, மின்னஞ்சலின் உள்ளடக்கங்கள் (inbox, outbox, draft), செயல்முறைகள் (reply, forward, attachment, broadcasting), குறிப்பான்கள் (to, from, subject, Cc, Bcc, Date, Body) ஆகிய எல்லாவற்றையும் உருவாக்கியவரும் பெயரிட்டவரும் இவரேதான்.

சிவா ஐயாதுரை தற்பொழுது அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி பல்கலையில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். முன்பு மாணவனாக இருந்தபொழுது தன்னுடைய கண்டுபிடிப்புக்கு சரியான உறுதிப்பாடு கிடைக்காமல் போனதால் மிகவும் மனமுடைந்து போனதன் காரணமாக, தன்னைப்போல் எந்தவொரு மாணவரும் உரிய மதிப்பு கிடைக்காமல் வருத்தமடைய கூடாது என்னும் எண்ணத்தில் இன்னோவேசன் கார்ப்சு (Innovation Corps) என்ற ஒரு நிறுவனத்தை நிறுவியுள்ளார். இந்த நிறுவனம் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தவும் அவற்றைத் தொழில்படுத்தவும் உதவும் என அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நோவார்க்கு நகர உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு இலக்கம் அமெரிக்க டாலர் (USD100,000) பரிசுத் தொகையை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க நாளிகை செய்தி - 30.10.1980

சிவா ஐயாத்துரையின் கண்டுபிடிப்பு இன்று உலகத்தையே கட்டிப்போட்டுத் தன் வயப்படுத்தி இருக்கிறது. தமிழனால் முடியும்! தமிழன் சாதிக்கப் பிறந்தவன்! என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் சாதனைத் தமிழன் சிவா ஐயாதுரை.

சிவா ஐயாதுரை பேசுகிறார்:-

 

சிவா ஐயாதுரை பற்றி மேலும் அறிய பின்வரும் தொடுப்புகளைச் சொடுக்கவும்.




@சுப.நற்குணன், திருத்தமிழ்


No comments:

Blog Widget by LinkWithin