கோலாலம்பூர் செப் 24,
உலகத்தின் மூத்த மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழிக்கு 1000 அல்லது 1,500 ஆண்டுகளுக்கு உட்பட்ட மொழி எனக் கணக்கிட்டுச் ‘செம்மொழி’ எனும் தகுதியை இந்திய நடுவண்(மத்திய) அரசு வழங்கி இருப்பதும், அதனைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டிருப்பதும் வரலாற்றுப் பிழை என்று தமிழ்ச் ‘செம்மொழி அகவைத் திருத்த ஆய்வுக் குழு’ சுட்டிக்காட்டி இருக்கிறது.
இந்தப் பிழையைச் சுட்டிக்காட்டி, தமிழ்மொழி குறைந்தபட்சம் 3,000 (மூவாயிரம்) ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழியென்று வரையறுத்து, அந்தப் பிழையைத் திருத்தும்படி கோரும் மகஜர் ஒன்றை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் மேற்கொள்ளும் மலேசிய வருகையின்போது நேரில் வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தக் குழுவின் தலைவர் ஆறு.நாகப்பன் கூறினார்.
மலேசிய இந்தியப் பொது அமைப்புகளின் ஒருங்கிணைப்புப் பேரவையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இராஜரத்தினம் தலைமையில் இங்கு ஓர் உணவகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், அமைக்கப்பட்ட மேற்கண்ட குழுவின் தலைவராகப் பணியமர்த்தம் செய்யப்பட்ட ஆறு.நாகப்பன் மேற்கண்டவாறு விளக்கினார். அவர் தொடர்ந்து கூறியதாவது:-
சங்கம் வைத்து வளர்த்த தமிழ் என்பது வரலாறு. ஒரு சங்கம் அல்ல; இரண்டு சங்கங்கள் அல்ல. மூன்று சங்கங்களால் வளர்க்கப்பட்டது செம்மொழியாகியத் தமிழ்மொழி. ஒவ்வொரு சங்கமும் 4,000 முதல் 5,000 ஆண்டுகள் இருந்தது என்பதும் வரலாறுதான். இதன் மூலம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், எப்படியும் 10,000 (பத்தாயிரம்) ஆண்டுகளுக்கு முற்பட்டது தமிழ் என்பது தெரியவரும்.
இந்த ஆண்டு வரையறை மிகையானது என்று கூறுபவர்கள்கூட தமிழுக்கு இன்றுவரை தொடர்ந்து இருந்துவரும் இலக்கண நூலான ‘தொல்காப்பியம்’ கி.மு.3ஆம்நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பதை ஒப்பவே செய்வார்கள். அப்படியெனில், குறைந்தபட்சம் 2,300 ஆண்டுக்கு முற்பட்ட தமிழை 1,500 ஆண்டுகளுக்கு உட்பட்ட மொழி என்பதற்குள் அடக்கி, செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருப்பது அபத்தமான வரலாற்றுப் பிழையாகும்.
இதைத் திருத்தி, 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழியாகத் தமிழை வரையறுத்துச் செம்மொழி எனும் தகுதியை நிலைநிறுத்த வேண்டுமென்று இந்திய நடுவண் அரசிடம் இக்குழு கேட்டுக்கொள்ளும்.
அதற்கேற்ப மகஜர் தயாரிக்கப்பட்டு, அது முதலில் இங்குள்ள இந்தியத் தூதரகத்திடமும், தமிழ்நாடு அரசிடமும், யுனேஸ்கோ எனும் ஐ.நா நிறுவனத்திடமும் வழங்கப்படும். அதேவேளையில், அந்த மகஜர் கோலாலம்பூரில் ஜாலான் துன் சம்பந்தனில் அமைக்கப்பட்டுவரும் ‘லிட்டல் இந்தியா’ நகரைத் திறந்து வைக்க இந்தியப் பிரதமர் வரும்போது அவரிடம் நேரடியாகவே வழங்கப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதற்கும் முன்பதாக, அக்டோபர் மாதம் 24ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று தலைநகரில் தமிழ் செம்மொழி அகவை திருத்தக் ஆய்வுக் குழு சார்பில் மாநாடு ஒன்று நடத்தப்படும். இந்த மாநாட்டுக்குத் தமிழறிஞர் தமிழ்ச் செம்மொழிக் காவலர் மணவை முஸ்தப்பா சிறப்புச் சொற்பொழிவு ஆற்ற அழைப்பதெனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 27ஆம் நாளில் நடைபெறும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா திறப்புவிழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தங்களின் கோரிக்கை மகஜர் வழங்கப்படும்.
நன்றி: மலேசிய நண்பன் 24.9.2010
5 comments:
கூகிள் அட்சென்ஸ் மூலம் சம்பாதிப்பது எப்படி என நான் தமிழில் எழுதுகிறேன்.. விருப்பம் இருந்தால் பாருங்கள்
http://adsensetricksdon.blogspot.com/
ரொம்ப நல்லாவே இருக்கு!
அய்யா வணக்கம்! கடல் கடந்தும் தமிழ் மொழி வளர்க்கும் உங்களை தாயக தமிழன் பெருமையுடனும் சிறிய வெட்கத்துடனும் வணங்குகிறேன்
அன்புசால் திருத்தமிழ்த் தொண்டருக்கு
வணக்கம்.
தமிழ்ச் செம்மொழி அகவைத் திருத்த மாநாட்டுச் செய்தி, தீர்மானம், தூதர் சந்திப்பு, அவரது மறுமொழி முதலானவற்றைப் படித்தேன்.
தூதரின் கருத்து சரிதான்.
அரசு தமிழின் காலத்தை 1500 எனக் குறிக்கவில்லை. செம்மொழி வரையறைக் காலமாக 1500 ஆண்டுத் தொன்மை எனக் குறித்துள்ளது. இவை தொடர்பில் பின் வரும் கருத்துகளைத் தெரிவிக்க விழைகிறேன்.
1. செம்மொழி அகவை என்று குறிக்கக் கூடாது. மடியும் உயிரினங்களுக்கு மட்டுமே அகவை பொருந்தும். காலம் என்றே குறிக்க வேண்டும்.
2. தமிழ்ச் செம்மொழிக் காலத்தைக் குறித்த திருத்தம் கோரவில்லை. செம்மொழி என்னும் போர்வையில் கால வரையறையைக் குறைத்துச் செம்மொழி அல்லாத பிற மொழிகளையும் சேர்ப்பதற்காகச் செய்யப்பட்ட சதியே குறைவான காலவரையறை.
3. செம்மொழிக் கால வரையறைத் திருத்தக் குழு என்று குறிப்பிடுவதே பொருந்தும்.
4. கால வரையறையில் ஆண்டினைக் குறிப்பதை விடக் கி.மு, காலத்தைச் சேர்ந்த இலக்கிய வளம் மிக்க மொழி என்று சொல்லலாம். இவ்வாறு வரையறுத்தால் மட்டுமே செல்வாக்கானவர்கள் தமக்கு வேண்டிய மொழிகளை இப்பட்டியலில் சேர்த்துச் செம்மொழி என்பதைக் கேலிக்குரியதாக ஆக்குவதைத் தடுக்கலாம்.
5. கால வரையறையை 1000 ஆண்டு குறித்துப் பின்னர் எழுந்த கடுமையான எதிர்ப்பால் 1500 ஆண்டு என மாற்றியுள்ளது. இவ்வாறான தவறான வரையறைக்குத் தமிழக ஆட்சியாளர்களின் ஒப்புதலும் உள்ளது என்பதுதான் வருந்தத்தக்க செய்தி.
6. காலவரையறையைக் குறிப்பது இந்திய அரசின் அதிகாரம் எனத் தூதர் கூறுவது தவறான செய்தி. உலக மொழியின் காலவரையறையையும் மொழிகளின் செம்மைத் தன்மைக்கான கால வரையறையையும் இந்தியா மனம் போன போக்கில் குறிப்பிட இயலாது.
7. எனவே தங்கள் அமைப்பின் குழு கூடி மற்றொரு திருத்தத் தீர்மானத்தை இந்தியத்தூதரிடம் அளிக்கலாம். தமிழ் உலக மொழி என்பதாலும் சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக உள்ளதாலும் இக்கருத்தைத் தெரிவிக்கும் உரிமையும் தகுதியும் தங்களுக்கு உண்டு என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
தங்கள் வலைப்பூவில் நட்பூ (natpu.in) இணைய இதழில் வந்துள்ள
யாருக்கும் வெட்கமில்லை. (http://www.natpu.in/Pakudhikal/Mukappukkatturai/yarrukkum.php)
எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! (http://www.natpu.in/natpu/Pakudhikal/Ilakkiyam/ezlutthupor.php)
செம்மொழிக் குழுவில் முதல்வருக்கு எதிராகச் செயல்படுவோர் எவர்? ஏன்? (http://www.natpu.in/Pakudhikal/Mukappukkatturai/mudhalvarukkuethiranavargal.php)
தமிழைக் காக்க (http://www.natpu.in/natpu/Pakudhikal/Ilakkiyam/tamillaikakka.phpசெம்மொழி மாநாடும் எழுத்துப் பாதுகாப்புப் போரும்
((http://www.natpu.in/natpu/Pakudhikal/Ilakkiyam/illakkuvanar.php)
முதலிய என் படைப்புகளையும் தங்கள் வலைப்பூ நேயர்களுக்கு அளிக்க வேண்டுகின்றேன்.
நன்றி.
தங்கள் அன்புள்ள
இலக்குவனார் திருவள்ளுவன்
gud article.tamil people must read this blog.u have done a gud job sir
Post a Comment