Sunday, August 01, 2010

மலாயா பல்கலை தமிழ்த்துறை மறுமலர்ச்சி காணட்டும்


1-8-2010 முதற்கொண்டு இணைப்பேராசிரியர் முனைவர் சு.குமரன் அவர்கள் மீண்டும் தமிழ்த்துறை தலைவர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தால், நாட்டின் மிக உயரிய கல்வி நிறுவனத்தில் நமது கையைவிட்டுப் போன தாய்மொழி உரிமை மீண்டும் கையகமாகியுள்ளது.

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் முனைவர் சு.குமரன் ஐயா அவர்களுக்குத் திருத்தமிழ் தமது மனமார்ந்த நல்வாழ்த்தைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. ஓராண்டாய் சுற்றிச் சூழந்த கருமேகங்கள் களைந்து இன்று புத்தொளி பிறந்துள்ளது. இதுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கி இன்று புத்தெழுச்சி ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலம் நமது தமிழ்த்துறைக்குப் பொற்காலமாக அமைய வேண்டும். புதிய சிந்தனையோடு புதுப்புது இலக்குகளை இனி எட்ட வேண்டும்; புதுப்புது பாதைகளைத் தேடி பாதங்கள் பதிய வேண்டும். மலேசியாவில் தமிழும் தமிழரும் எழுச்சி பெற - ஏற்றம் காண மலாயா பலகலை தமிழத்துறை தக்கனவற்றைச் செய்ய வேண்டும்; தகுந்த நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

இத்தனைக்கும் மேலாக, அங்குப் பணியாற்றும் நமது மரியாதைக்குரிய கல்விமான்கள் அனைவரும் தனித்தனி விருப்பு வெறுப்புகளுக்கு இடங்கொடாமல்; மொழியின, சமுதாய நலம் என்ற ஒருமித்த சிந்தனையில் ஒருகுடையின் கீழ் ஒன்றுபட்டு; முனைவர் சு.குமரன் அவர்களின் தலைமைக் கரங்களை வலுப்படுத்தி வீறுகொண்டு எழவேண்டும் – வெற்றிகளைக் குவிக்க வேண்டும் எனத் திருத்தமிழ் வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.

மலேசியாவின் மூத்த பல்கலைக்கழகமாக விளங்குவதோடு, மலேசியத் தமிழர்களின் தாய்மொழிக்கும் தாய்மொழிக் கல்விக்கும் உரிமைச் சின்னமாக - உயரிய சின்னமாக இருக்கும் கல்வி நிறுவனம் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை என்றால் சாலப் பொருந்தும். தமிழவேள் கோ.சாரங்கபாணியின் தலைமையில் மலேசியத் தமிழர்கள் முன்னெடுத்த ‘தமிழ் எங்கள் உயிர்’ என்னும் மொழிப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியின் அடையாளச் சின்னமாக இந்தத் தமிழ்த்துறை வீற்றிருக்கிறது என்பது பெருமைக்குரிய வரலாறு.

கடந்த 2009இல் இத்துறையில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டது. இதனால் 2009 சூலைத் திங்கள் 2ஆம் நாள் இத்துறைக்கான தலைவரைப் பல்கலை நிருவாகம் பதவியிலிருந்து அகற்றியது. காலங்காலமாக நம்மவர்கள் அலங்கரித்த தலைவர் பதவிக்குத் தமிழரல்லாத வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார். அதுமட்டுமல்லாது, அத்துறையின் பெயரும் மாற்றப்படும் இக்கட்டான சூழல் உருவாகியது.

இத்தனை கசப்பான நெருக்கடிகள் நடந்து மலேசியத் தமிழர்கள் ஓராண்டு காலமாக வாட்டமுற்று இருந்த வேளையில், கைவிட்டுப் போன தமிழ்த்துறை தலைவர் பதவி இன்று மீண்டும் கிடைத்திருக்கிறது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இதற்கு, நமது சமுதாய அமைப்புகளின் போராட்டமும் மக்களின் கோரிக்கைகளுமே முகாமையான கரணியம் என்றால் மிகையாகாது. மலாயாப் பல்கலையில் தமிழுக்கு இடமில்லையா? என்று சமுதாயத்தில் ஏற்பட்ட மனவருத்தம்தான் இன்று அத்துறையையும் அதற்குரிய தலைமை பொறுப்பையும் மீட்டுக்கொடுத்திருக்கிறது. இதுதான் உண்மை.

ஆகவே, எப்போதும் – எந்தச் சூழலிலும் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்துத் தமிழை வாழவைக்க முன்னின்று போராடும் தமிழ் இயக்கங்களும் அதன் தலைவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். காணாமல் போகவிருந்த தமிழின் அரியணையைக் காப்பாற்றிக்கொடுத்த அவர்களுக்குச் சமுதாயமே நன்றிக்கடன் பட்டிருக்கிறது. இந்த உண்மை நிலையை உணர்ந்து தமிழ்த்துறை பணியாளர்கள் தங்கள் பணிகளை உளமாற ஆற்றுவார்கள் என்று சமுதாயம் மிகவும் நம்பிக்கையோடு காத்திருக்கிறது.

இந்த நம்பிக்கையைத்தான் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் பதிவு செய்திருகின்றனர். அதற்குப் பின்வரும் செய்திகளே சான்றாகும்.

1.டத்தோ சுப்ரா அவர்கள்
அரை நூற்றாண்டு காலப் பெருமை வாய்ந்த இந்திய ஆய்வியல் துறை ஒரு வரலாற்றுப்பூர்வமான அமைப்பு. தமிழ், தமிழ் இலக்கியம், மொழி, இனம், கலை, பண்பாடு ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு செயல்படும் மிகப் பெரிய நிறுவனமான இந்திய ஆய்வியல் துறைக்கென்று ஒரு வரலாற்றுப் பெருமை இருந்தது. அத்துறை சார்ந்த பொறுப்பாளர்கள் மீண்டும் ஒன்றிணைந்து மொழி வளர்ச்சிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும். (மக்கள் ஓசை 1.8.2010)

2.தான்ஸ்ரீ குமரன் அவர்கள்
நாடு முழுவதுமுள்ள தமிழர்களும் தமிழ் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் இதனைத் தங்களது தன்மானப் பிரச்சனையாக எடுத்துக்கொண்டு நடத்திய கூட்டு முயற்சிகளின் வழியாக ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் முனைவர் சு.குமரன் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுளார். இ.ஆ.துறையில் தகுதியும் திறமையும் கொண்ட கல்வியாளர்கள் பணியாற்றுகின்றனர் என்பதற்கு இது சான்றாகும். இ.ஆ.துறை கல்வியாளர்கள் அனைவரும் சமுதாய நலனை மனத்திற்கொண்டு, சமுதாய மையமாக அதனைச் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இ.ஆ.துறை வளர்ச்சியில் சமுதாயம் நம்பிக்கை கொண்டுள்ளது. பேராசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது. எனவே, இன்பத் தமிழுக்கு இணைந்து பாடுபடுவோம். (மலேசிய நண்பன் 1.8.2010)

3.சு.வை.லிங்கம் (தமிழ்க் காப்பகத் தலைவர்)
கடந்த ஓராண்டுக்கு மேலாக இழுபறியாக இருந்த ம.ப இந்திய ஆய்வியல் துறைத் தலைவர் பதவி மீண்டும் தமிழர் ஒருவருக்கே நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. சமூகத்தின் கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது. இ.ஆ.துறையைச் சார்ந்த விரிவுரையாளர்களின் ஒற்றுமையும் இதற்கு காரணமாகும். அனைவருடனும் இணைந்து செயலாற்றுவதில் முனைவர் சு.குமரன் வெற்றி பெறுவார் என நம்பிக்கை கொள்வோம். (மக்கள் ஓசை 1.8.2010)


4.இரெ.சு.முத்தையா (மலேசியத் திராவிடர் கழகத் தலைவர்)
புலம்பெயர் தமிழர்க்கெல்லாம் பெருமை சேர்த்த கல்விக் களமான மலாயாப் பல்கலைக்கழக தமிழாய்வியல் பிரிவின் மகுடம் ஓராட்ண்டு காலமாக ஒளியிழந்து காணப்பட்டது. இணைப் பேராசிரியர் முனைவர் சு.குமரன் மீண்டும் தமிழாய்வுப் பிரிவுக்குத் தலைமை ஏற்கிறார். இந்த நிலைக்காகப் பாடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி. (மலேசிய நண்பன் 1.8.2010)

நாட்டின் சிறந்த கல்விமானாக விளங்கும் மரியாதைக்குரிய முனைவர் சு.குமரன் ஐயா அவர்கள் சமுதாயத்தின் இந்த நம்பிக்கையை நிச்சியமாக உணர்ந்திருப்பார். வெகு அக்கறையோடும் மிக நேர்த்தியோடும் செயல்பட்டு சமுதாயத்தின் நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்பார் என நம்புவோம்; அவருக்குத் துணைநின்று தோளுரம் ஊட்டுவோம்; நமது தமிழ்த்துறையைச் மொழி – இன – சமுதாய நடுவமாக வளர்த்தெடுப்போம்.

3 comments:

மறைமலை இலக்குவனார் said...

அன்புமிக்க நற்குணன்,நல்ல செய்திஅயித் தந்துள்ளீர்கள்.நன்றி.பேராசிரியர் குமரன் அவர்களுக்கு என் நல்வாழ்த்துகள்.மலேயாத் தமிழ் ஆய்வு மேலும் சிறந்தோங்குக.புதிய திறனாய்வுக் கோட்பாடுகள் நன்கு புரிந்துகொள்ளப்பட்டு மரபு நிலைத்தூன்ற வழி பிறக்கட்டும்.வாழிய தமிழ் ஓங்குக தமிழர் ஒற்றுமை.
நட்புணர்வுடன்,
மறைமலை இலகுவனார்

சுப.நற்குணன்,மலேசியா. said...

பேரன்புடைய ஐயா,

தங்களின் மறுமொழியைப் பேரா.முனைவர் சு.குமரன் ஐயா அவர்களின் பார்வைக்குச் சேர்ப்பித்துள்ளேன்.

தங்கள் அன்புக்கு நன்றியுடையேன். செம்மொழி மாநாட்டில் தங்களைச் சந்தித்ததும் உரையாடியதும் மகிழ்ச்சியானது மட்டுமன்று நான் பெற்ற பேறும்கூட.

Ilakkuvanar Thiruvalluvan said...

நெடுநாட்களாக எதிர்பார்த்த செய்தியைத் தெரிவித்த திருத்தமிழ் ஊழியருக்கு நன்றி. தமிழாய்ந்த தமிழனாய்த் தமிழ்மொழித் துறைக்குப் பொறுப்பேற்கும் முனவைர் குமரன்அவர்களுக்குப் பாராட்டுகள். துறையின் பெயரைத் தமிழ்த்துறையும் பிற இந்தியப் பகுதி மொழித்துறையும் என மாற்றம் செய்ய வேண்டுகின்றேன. ஓராண்டாகச் செய்ய எண்ணி வாய்ப்பில்லாமல் போனவற்றைச் சீராக ஆற்றி வெற்றி காண வேண்டுகின்றேன். தங்களின் மின்வரியைத் தெரிவிக்க வேண்டுகின்றேன்.தங்கள் ஒருங்கிணைந்த பணியால் தமிழும் தமிழால் தாங்களும் சிறக்க வாழ்த்துகின்றேன். பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Blog Widget by LinkWithin