Monday, January 04, 2010

தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (1)


தற்போது நடப்பில் இருக்கும் தமிழ் எழுத்துகளை மாற்றி அமைப்பதற்குச் சிலர் புறக்கதவு வழியாகத் தீவிரமாக முயன்று வருவதாகச் செய்திகள் அடிபடுகின்றன.

“இவ்வாண்டு சூன் 23-27 வரை தமிழகம், கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில் இது குறித்த ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. கலைஞர் கருணாநிதி புதிய எழுத்துச் சீர்திருத்தம் பற்றி அறிவிப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் ஓசையின்றி நடக்கின்றன.” என்றெல்லாம் தகவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்துகொண்டிருக்கின்றன.

செம்மொழி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் சிலர் தங்களின் ஆளுமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி தமிழ் எழுத்துகளில் புதிய மாற்றங்களைச் செய்ய முனைவதாகவும் கேள்விப்படுகிறோம்.

இவர்களின் இந்தத் தனிப்பட்ட நிகழ்ப்பு (Personal Agenda) பல ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இருந்தாலும், நற்றமிழ் அறிஞர் பெருமக்கள் சிலருடைய கண்டிப்பான எதிர்ப்புகளினால் தமிழ் எழுத்தை மாற்றும் முயற்சி மண்ணைக் கௌவிக்கொண்டு இருக்கிறது.

ஆனால், இப்போது தமிழ் செம்மொழி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் இவர்கள் இடபெற்றுவிட்ட நிலையில்..; தமிழக முதல்வருக்கு மிகவும் அணுக்கமானவர்கள் ஆகிவிட்ட நிலையில்.. வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல, மெல்ல மெல்ல தமிழ் எழுத்துச் சீர்த்திருத்த நிகழ்ப்பை மீண்டும் தூசுதட்டி கையில் எடுத்துள்ளனர்.

இதனை முன்கூட்டியே அறிந்துகொண்ட நல்லறிஞர்கள் இந்தப் புல்லறிவுத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கத் துணிந்துவிட்டனர். இந்தச் சிக்கல் இன்னும் பெரிதாக வெடிக்காவிட்டாலும் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கிறது.

இது இம்மாட்டில் நிற்க, இந்தப் புதிய எழுத்து மாற்றம் என்பது என்ன? எதை மாற்றப் போகிறார்கள்? ஏன் மாற்றப் பார்க்கிறார்கள்? தமிழ் எழுத்து மாற்றம் தமிழைச் சீர்படுத்துமா? அல்லது சீரழிக்குமா? என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இன்று தமிழில் நாம் பயன்படுத்திவரும் 247 எழுத்துகளில், ஏற்கனவே பல காலக்கட்டங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வீரமாமுனிவர் காலத்திலும் பின்னர் அண்மை நூற்றாண்டில், பெரியார் காலத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது வரலாறு.


ஆனால் இப்போது, சிலர் புதிதாகச் செய்ய விரும்பும் மாற்றங்கள் தமிழ் எழுத்து அமைப்பில் பூதாகரமான சிதைவை ஏற்படுத்துகின்றன என்று நற்றமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர். அதனைப் படிப்படியாகக் காண்போமா?

இப்போது சீர்த்திருத்தம் என்ற பெயரில் மாற்றப்பட வேண்டிய எழுத்துகளாக இகர - ஈகார, உகர – ஊகார எழுத்துகள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

காரணம், இவை நான்கும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறதாம். குறிப்பாக, உகர ஊகார எழுத்துகளை எழுதுவதற்கு நிறைய குறியீடுகளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமாம்.

கவனிக்க:-

1)கு, டு, மு, ரு, ழு, ளு –இந்த 6 உகரங்களில் கீழ்நோக்கிச் சுழிக்க வேண்டும்.

2)ங, சு, பு, யு, வு –இந்த 5 எழுத்துகளில் கீழ்நோக்கி ஒரு கால் இட வேண்டும்.

3)ஞு, ணு, து, நு, லு, று, னு –இந்த 7 உகரங்களில் கீழே அரை சுற்றுவந்து மேல்நோக்கி கோடு ஏற்ற வேண்டும்.

இப்படியாக உகர எழுத்துகள் ஒரு சீர்மையில் இல்லாமல், பல்வகைப்பட்டு இருக்கின்றனவாம். ஊகாரமும் இப்படியேதானாம். ஆகவேதான், இவற்றைச் சீரமைத்து ஒரே அமைப்பில் எழுத வேண்டுமாம். அதற்காகக் கீழே உள்ளது போன்ற குறியீடுகளை பயன்படுத்த வேண்டுமாம்.

மேலே படத்தில் காட்டப்பட்ட குறியீடுகளைப் பயன்படுத்தினால், அதிகமான எழுத்து வடிவங்களை நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போகுமாம். குழந்தைகள் வெகு எளிதாகத் தமிழ் எழுத்துகளைப் படித்துக்கொள்வார்களாம். தமிழ் எழுத்துகளை எழுதப் பயன்படும் குறியீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிடலாமாம்.

எப்படி என்கிறீர்களா? இதோ இப்படித்தானாம்.

(மாற்றி அமைக்கப்பட்ட இகர, ஈகார உகர, ஊகாரங்கள்)


இந்தப் புதிய மாற்றத்தினால், தமிழ்மொழிக்குப் பெரிதாக ஏதும் பயனுண்டா என்று கேட்டால் இல்லை! இல்லை! இல்லை! என்பதே பதில். ஆனால், இதனால் மேலே சொன்னது போன்ற சில நன்மைகள் உண்டு என்று சிலர் வாதிடுகின்றனர். அவர்களுடைய வாதங்கள் ஏற்புடையதாகத் இல்லை என்பது மட்டுமல்ல அறிவுடைமையானதும் அல்ல.

அவர்களின் வாதங்களுக்கு நாம் சில எதிர்வாதங்களை வைக்க முடியும்.

1)அதிகமான எழுத்து வடிவங்களை நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.

=>இத்தனை காலமும் அடிப்படை எழுத்துகளாக தமிழில் 30 மட்டுமே இருந்தாலும், நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துகளையும், அவற்றுக்குரிய வடிவங்களையும் பல்லாயிரம் கோடி தமிழ் மக்கள் எந்தவொரு சிறு சிக்கலும் இன்றி படித்தும் எழுதியும் நினைவில் வைத்தும் வந்திருக்கிறோமே எப்படி?

=>பிற்பட்ட காலத்து மக்களே இவற்றைப் படிக்கவும் எழுதவும் நினைவில் வைத்துக்கொள்ளவும் முடிந்திருக்கிறது என்றால், அறிவும் ஆற்றலும் நுட்பமும் நிரம்ப இருக்கும் தற்கால மக்களாலும் எதிர்கால மக்களாலும் முடியாதா என்ன?

2)குழந்தைகள் வெகு எளிதாகத் தமிழ் எழுத்துகளைப் படித்துக்கொள்வார்கள்.

=>எளிதாகப் படித்துக்கொள்ளுதல் என்பது கற்பித்தலையும் கற்றலையும் சார்ந்ததே அன்றி எழுத்துகளைச் சார்ந்திருப்பது அல்ல. அப்படிப் பார்த்தால், தமிழைவிட அதிகமான எழுத்துகளை வைத்திருக்கும் சீனர்களும், கொரியர்களும், சப்பானியர்களும் கல்வியில் தமிழர்களை விடவும் பின்தங்கி இருக்க வேண்டும் அல்லவா?

=>சீனர்களும் கொரியர்களும் சப்பனியர்களும், தமிழறிஞர்கள் என்று சொல்லிக்கொண்டு தமிழைச் சீர்படுத்த துடியாய் துடிப்பவர்களைவிட பல மடங்கு துடிதுடித்து அவர்கள் மொழியைத் திருத்தியிருக்க வேண்டுமல்லவா?

3)தமிழ் எழுத்துகளை எழுதப் பயன்படும் குறியீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிடலாம்.

=>இற்றைக் காலத் தொழிநுட்பத்தின் குழந்தையாகிய கணினியிலும் கைப்பேசியிலும் தமிழ்க் எழுத்துகளை எழுதுவதில் பாரிய சிக்கல் ஏதுமில்லை என்ற சூழலில் எழுத்துக் குறியீடுகளைக் குறைக்க வேண்டியதன் தேவையும் அவசியமும் என்ன?

=>குறியீடுகளைக் குறைப்பதனால் தமிழ்மொழியில் ஏற்படப் போகும் ஆக்கங்கள் – வளர்ச்சிகள் என்னென்ன?

=>குறியீடுகளைக் குறைக்கிறோம் என்று சொல்லி, தமிழ் எழுத்துகளின் தனித்த அடையாளத்தைச் சிதைப்பது முறைதானா?

=>எழுத்துகளை மாற்றி அமைத்துவிட்டால் அதனை மக்கள் உடனே புரிந்துகொண்டு சரளமாகப் படித்துவிடவோ அல்லது எழுதிவிடவோ முடியுமா?

=>எழுத்துகளை மாற்றி அமைத்துவிட்ட பிறகு, பழைய எழுத்து முறையில் எழுதப்பட்ட அறிவுக் களஞ்சியங்களைப் படிப்பது எப்படி?

=>கணினி, கைப்பேசி தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய எழுத்து வடிவங்களைச் செய்வது யார்? எப்படி? எப்போது?

இப்படியாக பல கேள்விகளுக்கு எழுத்துச் சீர்திருத்த மேதைகள் இன்னும் பதில்கள் சொல்லியப்பாடில்லை. ஆனால், பாத்திரமே இல்லாமல் பாலைக் காய்ச்சத் துடிக்கிறார்கள்.

இப்போதைக்கு இந்த மட்டில் நிறுத்தலாம் என எண்ணுகிறேன். தமிழ் எழுத்து மாற்றம் குறித்து என்னுடைய புரிதலை இங்கு நினைக்கிறேன். இதில், மேலும் தெளிவு வேண்டின் விளக்குவதற்கு அணியமாக(தயார்) உள்ளேன். இதில், மாற்றுக் கருத்துகள் உடையவர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

இதுபற்றி எழுத இன்னும் செய்திகள் கிடக்கின்றன. அவை நமக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன. ஆய்வு என்ற பெயரில் அப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்கள்.

அதைப்பற்றி, அடுத்த இடுகையில் இன்னும் தொடர்வேன்.

தொடர்பான இடுகை:-

17 comments:

கோவி.மதிவரன் said...

வணக்கம் வாழ்க

இத்தனை காலம் இவர்கள் படித்த தமிழ் என்ன படித்த மேதைகளான இவர்களுக்குப் புரியவில்லையா ? எதற்கு தேவையற்ற எழுத்துச் சீர்திருத்தம்? செம்மொழி தகுதிப் பெற்ற தமிழை இவையெல்லாம் மெல்ல-மெல்ல அழித்துவிடும் என்பது எனது கருத்து.
தமிழைக் காப்போம்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் கோவி.மதிவரன்.

தமிழ் நலத்தைவிட தன்னலத்தைப் பெரியதாக நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் இதுவேதான் வேலையாக இருக்கும்.

தமிழைச் சிதைத்து அன்னியரிடம் நல்ல பேர் வாங்குவதற்கு ஏன்தான் இப்படி அலைகிறார்களோ சிலர்...!!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இது ஒரு மாதிரியான வடிவமைப்பு நண்பரே.., இதைப் பெரிது படுத்தத் தேவையில்லை. ஏற்கனவே ரகசியச் செய்திகளை அனுப்ப ஒவ்வொரு எழுத்துக்கும் வித்தியாசமான ஒரு வடிவம் வைத்திருப்பார்கள். அந்த எழுத்துக்களைப் பயன்படுத்தி வரும் கடிதங்களுக்கு அந்த வடிவங்களுக்கு உரிய சரியான எழுத்துக்களைப் பயன்படுத்தி மீண்டும் எழுதி பின்னர் பொருள் கொள்வார்கள். சில நேரங்களில் இதற்கான அகராதி காகிதத்துடனும் சுற்றுவதுண்டு. ரகசிய மொழிகளில் தகவல் பரிமாற்றம் செய்பவர்கள் வழக்கமாக கையாளும் முறைதான். ஒரு பரபரப்புக்காக இவ்வாறு செய்திருப்பார்கள்.

==============================

இவ்வாறு எல்லா எழுத்துக்களையும் திடீரென மாற்றினால் தமிழில் எழுத்துவத்தினை உலகில் உள்ள எல்லாத் தமிழர்களுக்கும் வேற்றுமொழியில் தமிழ் கற்றோருக்கும் புதிதாக கற்றுக் கொடுப்பது அவசியமாகும். நாம் புதிதாக தெலுங்கு, மலையாளம் எழுதக் கற்றுக் கொள்வது போல சிரமமான காரியம்தான் அது.

==============================

தமிழில் எழுத்து வடிவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருக்கின்றனவே தவிர தீடீரென மாறிவிடவில்லை.

===============================

இவர்கள் கொடுத்துள்ள வடிவங்களைவிட தெலுங்கு எழுத்துக்கள் ஜிலேபி வடிவத்தில் அழகாக இருக்கும். குழந்தைகளுக்கும் இனிப்பு பிடிக்கும். அதனால் கற்றல் எளிமையாக இருக்கும். அதிலும் அ,ஆ,இ,ஈ எல்லாம் இருக்கும் அல்லவா!

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் சுரேஷ்,

முதன் முறையாக உங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி.

வருகைக்கும் மறுமொழி தருகைக்கும் நன்றி.

//இதைப் பெரிது படுத்தத் தேவையில்லை. //

//ஒரு பரபரப்புக்காக இவ்வாறு செய்திருப்பார்கள்.//

அப்படி நினைக்க முடியவில்லை நண்பரே. கடந்த 10 - 15 ஆண்டுகளாக இதற்காக ஒற்றைக் காலிலேயே நிற்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சும்மா ஒரு பரபரப்புக்காகவா இருக்கும்??

இதைச் செய்பவர்களும் குப்பனோ சுப்பனோ கிடையாது.

இப்போது சொல்லுங்கள் நண்பரே.. பெரிது படுத்தலாமா? வேண்டாமா?

subra said...

தமிழை ஆட்சி மொழியாக்க முடியாத ,தமிழ் நாட்டில்
தமிழ் அதிகார பூர்வ கல்வி என்ற இல்லாத நிலையில்
தமிழ் பேசினால் அபராதம் என்ற கேவலமான நிலையில்
இவருக்கு இது ஒரு கேடு ,அடிவருடிகள் போடும் இந்த
கூத்துக்கு ,உண்மையான ....உண்மையான தமிழன் துணை
போக மாட்டன் .

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் சுப்ரா,

//அடிவருடிகள் போடும் இந்த
கூத்துக்கு ,உண்மையான ....உண்மையான தமிழன் துணை
போக மாட்டன் .//

இம்மாதிரி அடிவருடிகளுக்குதான் இது காலம். அவர்களுக்குதான் மேலிடங்களில் மதிப்பு - மரியாதை - பாராட்டு - விருது - பதவி எல்லாம்.

நக்கிப் பிழைப்பதில் இருக்கின்ற இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடி அலைகிறார்கள்.

அதற்காக, மொழிமானம், இனமானம் ஆகியவற்றோடு தன்மானத்தையும் காற்றில் பறக்கவிடுவதற்கும் இவர்களூக்குத் தடையேதும் இல்லை.

காலம் இப்படி மாறிக் கிடக்கிறது. என்ன செய்வது அன்பரே..!

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

//இத்தனை காலமும் அடிப்படை எழுத்துகளாக தமிழில் 30 மட்டுமே இருந்தாலும், நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துகளையும், அவற்றுக்குரிய வடிவங்களையும் பல்லாயிரம் கோடி தமிழ் மக்கள் எந்தவொரு சிறு சிக்கலும் இன்றி படித்தும் எழுதியும் நினைவில் வைத்தும் வந்திருக்கிறோமே எப்படி?//
உண்மைதான் சுப.ந அவர்களே.சில சக்திகள் தமிழ் எழுத்துருக்களை மாற்றும் வீண் வேலையைச் செய்து கொண்டுள்ளன.ஆக்கத்திற்கு வழிவகுப்பதைவிடுத்து...சிதைப்பதற்குமுற்படுகின்றன.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் முனைவர் அவர்களே,

மீண்டும் உங்கள் மறுமொழி கண்டதில் மிக்க மகிழ்ச்சி.

//சில சக்திகள் தமிழ் எழுத்துருக்களை மாற்றும் வீண் வேலையைச் செய்து கொண்டுள்ளன.ஆக்கத்திற்கு வழிவகுப்பதைவிடுத்து...
சிதைப்பதற்கு முற்படுகின்றன//

அதுமட்டுமா? தமிழைச் சிதைதேனும் வரலாற்றில் பெயர் பதிக்க எண்ணுகிறார்கள்.

ஆனால், காலத்திற்கும் எட்டப்பன் குட்டப்படுவதுபோல இவர்களும் திட்டப்படுவார்கள் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள் போலும்.

imayavaramban said...

அனைவருக்கும் வணக்கம், எழுத்து சீர்திருத்தம் என்பது, இன்று நேற்று வந்ததல்ல.
காலம் காலமாய் வரி வடிவம் மாறிக்கொண்டேதான் இருக்கிறது.
நாம் இன்று எழுதும் நடை பத்தாம் நூற்றாண்டு வாக்கில் தொட‌ங்கி பனையோலையில் எழுதுகையில் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் மாறி இன்றைய நிலையை எட்டியுள்ளது.

ஒரு விடயம் கவனிக்க வேண்டும், முதல் நூற்றாண்டு தமிழ் எழுத்தின் எளிமை இன்று இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.
மேலும் எழுத்து மாற்றம் என்பது எதிர் வரும் சந்ததி எளிமையாய் மொழி க‌ற்க‌த்தானே ஒழிய நன்றாக கற்றுக்கொண்ட நமக்காக அன்று.
மேலும் எழுத்து எளிமையாக‌ இருந்தால் தான் பிற மொழி மக்கள் நம் மொழி கற்க எளிமையாய் இருக்கும், பிற மொழியாளர் நம் மொழி கற்பது எளிதானால் நம் பண்பாடு பாரினில் பரவ வழிகோலும்.

ஆகவே எப்படி எளிமைப்படுத்துவது என்பதில் நமக்கு போட்டியும் விவாதமும் இருக்கலாமே தவிர, எழுத்து மாற்றம் கூடாது என்பதில் விவாதம் கூடாது என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.

இமயவரம்பன்
தமிழ் நாடு

கோவி.கண்ணன் said...

தற்போதைய நடை முறையை மாற்றுவது வேண்டாத வேலை. அவர்கள் பரிந்துரைக்கும் எழுத்துக்குப் பதிலாக மலாய் மொழியின் எழுத்துக்களைப் போல் ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தினால் இன்னும் எளிது. :)

ஒரு மொழியின் சிறப்பே அந்த மொழியின் எழுத்துகள் தான். ஒவ்வொரு ஒலிக்கும் ஓர் எழுத்து இருந்தால் கணிணி வழி தட்டச்சில் எந்த கெடுதலும் நிகழ்ந்துவிடாது. பெரியாரின் பரிந்துரை அச்சு கோர்ப்பு காலத்திற்கானது. கணிணி காலத்தில் எழுத்துக் குறைப்புக்கான தேவை இருப்பது போல் தெரியவில்லை. தற்போதைய நடைமுறையை தொடருவதே மொழிக்கு நல்லது.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் இமயவரம்பன்,

தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் முதலில் நன்றி மொழிகின்றேன்.

காலந்தோறும் தமிழ் எழுத்துகள் மாறியே வந்திருக்கின்றன என்பதில் எனக்கும் மாறுபாடு கிடையாது.

ஆனால், இப்போது சொல்லப்படுகின்ற புதிய மாற்றமானது, தமிழ் வரிவடிவத்தில் பெரும் சிதைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதற்கு முன்பு ஏற்பட்ட எழுத்துச் சீர்திருத்தங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விட, இப்போது மிகப் பாரிய பாதகங்கள் ஏற்படக்கூடும்.

காரணம், தமிழ் இன்று கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, காகிதம் என கடந்து மின்னியல், இலக்கயியல் என்று பயணித்துக்கொண்டிருக்கும் சூழலில் இந்த மாற்றமானது தடைக்கல்லாக மாறிவிடக்கூடும்.

மீட்க முடியாத அல்லது மீட்பதற்கு மிகவும் சிரமமான - சிக்கலான சூழலுக்கு தமிழ்மொழி தள்ளப்படலாம்.

//மேலும் எழுத்து மாற்றம் என்பது எதிர் வரும் சந்ததி எளிமையாய் மொழி க‌ற்க‌த்தானே ஒழிய நன்றாக கற்றுக்கொண்ட நமக்காக அன்று.//

எளிமையாய் தமிழைக் கற்பதற்கு எழுத்துகளை மாற்றுவதைக் காட்டிலும், புதிய வகை கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகளைக் கண்டுபிடித்து செயல்படுத்துவதே அறிவுடைமையானதாக இருக்குமென நினைக்கிறேன்.

//எழுத்து எளிமையாக‌ இருந்தால் தான் பிற மொழி மக்கள் நம் மொழி கற்க எளிமையாய் இருக்கும், பிற மொழியாளர் நம் மொழி கற்பது எளிதானால் நம் பண்பாடு பாரினில் பரவ வழிகோலும். //

பிறம்மொழிக்காரன் தமிழைப் படிக்க வேண்டும் என்பது இருக்கட்டும்.

முதலில், தமிழன் எல்லாரும் தமிழ் படிக்க வேண்டும் என்ற நிலையை தமிழக அரசோ அல்லது எழுத்தை மாற்ற விரும்பும் அறிஞர்களோ ஏற்படுத்தினால் நல்லது.

குறிப்பாக, தமிழ் நாட்டு எல்லாப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயமாக்குவார்களா?

Jeyapalan said...

எழுத்துச் சீர்திருத்தம் கூடாது என்பதே என் வாதம். ஒரு மொழியின் சிறப்பென்பது அதன் தொன்மையில் மட்டும் தங்கியில்லை அதன் தொடர்ச்சியிலும் தான் தங்கியுள்ளது என்பது ஒரு வாதம். இது மிகச் சரியான ஒரு வாதம். மொழியின் தொடர்ச்சி பேணப்படுவதற்கு, அதன் வரி வடிவம் மாறாதிருக்க வேண்டும். பழைய கல்வெட்டுகளைப் படிக்கும் சிக்கல் இப்பொழுது ஏன் இருக்கிறது என்று சிந்திக்க வேண்டும். இப்படி மாற்றிக் கொண்டு போனால், மொழி தொலைந்து விடும்.
மலையாளிகள் தமிழ் மொழியின் வரி வடிவங்களில் மாற்றம் செய்து தான் மலையாளம் என்ற மொழி தோன்றக் காரணமானார்கள். இப்பொழுது அவர்களில் சிலர் பழைய மலையாள நூல்கள் என்று சொல்லிப் புரட்டிப் பார்ப்பது பழைய தமிழ் நூல்களையே. இந்த நிலை இப்பொழுது இருக்கும் தமிழுக்கு வந்து விடக் கூடாது. இதை நிறுத்தவேண்டும்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் கோவி.கண்ணன்,

//கணிணி காலத்தில் எழுத்துக் குறைப்புக்கான தேவை இருப்பது போல் தெரியவில்லை. //

இதைப் பற்றியெல்லாம் எழுத்து மாற்றத்தை முன்மொழியும் அறிஞர்கள் மூச்சு பரியவில்லை.

படிக்க எளிமை; குழந்தைகள் மனனம் செய்ய எளிது; குறைவான குறியீடுகள் எனப் பேசும் அவர்கள்,

எழுதுவது பற்றியோ, கணினியில் தட்டச்சு செய்வது பற்றியோ எதுவும் சொல்வதாக இல்லை.

மொழியில் இவ்வளவு பெரிய மாற்றத்தைச் செய்பவர்கள் இப்படி ஒரு பக்கச் சார்பாக செயல்படலாமா?

இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் செயபால்,

தங்கள் வருகைக்கும் சிந்தனைக்குரிய மறுமொழிக்கும் நனிநன்றி.

//இப்படி மாற்றிக் கொண்டு போனால், மொழி தொலைந்து விடும்.
மலையாளிகள் தமிழ் மொழியின் வரி வடிவங்களில் மாற்றம் செய்து தான் மலையாளம் என்ற மொழி தோன்றக் காரணமானார்கள். //

இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

மரபு திரிபின் பிறிது பிறிதாகும் என்ற தொல்காப்பியப் பாடத்தை இவர்கள் படித்தறிந்தது இல்லையோ?

Unknown said...

நீங்கள் உண்மையிலேயே தமிழ் மீது பற்று உள்ளவராயின், தமிழிலே இடைச்செறுகலாக்கப்பட்ட நச்சுப்போன்ற எழுத்துகளான-- ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ--இவைகளை நீக்கப்போராடுங்கள்.

அகரம் அமுதா said...

ஒருவழியாக ஈழத்தில் தமிழர்களை அழித்தாகிவிட்டது. தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தமிழன் வாழவேண்டும் என்ற நோக்கிலா தமிழைச் சிதைப்பதன் மூலம் தமிழனை அழிக்கப் பார்க்கிறார்கள்?

எழுத்துச் சிதைவை முன்னிருத்தும் தமிழழிப்பாளர்களைத் தங்களோடு சேர்ந்து நானும் வன்மையாக எதிர்க்கிறேன்.

vels-erode said...

மொத்தமாக இந்த விஷயத்தில் பயப்படுவது தேவையில்லாதது என நினக்கிரேன்.
தகுதி இல்லாத்து தப்புமா?

Blog Widget by LinkWithin