Saturday, August 15, 2009

பண்பாட்டை வரலாற்றை உள்ளிக்கொடு; சொரணை படுமாறு கிள்ளிக்கொடு

  • மனதைத் தொட்ட மரபுக்கவிதை - 1

மலேசியத் திருநாட்டின் மூத்த - முன்னணிப் பாவலர்களுள் ஒருவர்; தம் மரபுக் கவிதைகளால் மலேசிய இலக்கியத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றுவரையில் நீரூற்றி வருபவர். மலேசியத் தமிழர்களின் பிற்போக்கு எண்ணங்கள், கொடுங்கேடுகள், மனச்சிதைவுகள், மரபுமீறல்கள் முதலியவற்றைக் கண்டு ‘கணைகளாகப்’ பாய்ந்தவர் – இன்றும் அதே வீறோடு நிமிர்ந்து நிற்பவர். ஆழந்த மொழிப் பற்றும் குழுகாய நோக்கும் கொண்டவர். தமிழர்தம் மரபியல் விழுமியங்களைக் காப்பதற்காக முன்னின்று குரல் கொடுப்பவர். இப்படி இன்னும் அடுக்கிச் சொல்லத்தக்கவர்; மரபுக்கவிதைத் துறையில் தனியொரு சாதனையை நிகழ்த்திக் காட்டியவர் கவிச்சுடர் காரைக்கிழார்.

அவர் எழுதி அண்மையில் நாளிகையொன்றில் வந்த மரபுக் கவிதை என் மனதைத் தொட்டது – உணர்வுகளைத் தட்டியது. அவ்வுணர்வுகளைப் பதிவாக்கும் முயற்சியில் மலர்ந்துதான் இந்தப் படைப்பு.

பொன்னென்றும் பூவென்றும் புதுப்பாட்டுத் தேனென்றும்
பொழுதெல்லாம் பாடிநிற்பான் – அவன்
புகழ்க்கூட்டம் கூடிநிற்பான் – அந்தத்
திண்ணென்ற தடியன்தான் திறம்கெட்டத் தமிழன்தான்
திசையெங்கும் மோடிவைப்பான் – தாய்க்கு
வசையெங்கும் தேடிவைப்பான்

என்று எடுத்த எடுப்பிலேயே, புதுமை - நவினம் என்ற பெயரில் புழுக்கறைகளைப் படைப்புகளாக வழங்கிவரும் திறங்கெட்டவர்களை நையப்புடைக்கிறார். வெறும் விளம்பரத்திற்கும் பணத்திற்கும் புகழுக்கும் மயங்கி அலையும் இந்தப் போக்கற்றப் படைப்பாளிகள் தாய்(மொழி)க்கு வசைதேடி வைப்பவர்கள் என்று சாடுகின்றார்.

இப்படிச் சாடும் அளவுக்குப் புதுமைப் படைப்பாளிகள் என்னதான் செய்துவிட்டார்கள்? என்று நாம் சிந்திக்கத் தொடங்கும் அடுத்த கணமே அவர்களின் கெடுபுத்திகளைப் பட்டியலாகப் பாட்டில் சொல்லுகிறார் இப்படி:-

கனியென்ற மணியிங்கே அணிசெய்தல் நனிகண்டும்
காய்நாடிக் கலக்கம்செய்வான் – மொழிக்
கலப்புக்கோர் உலக்கம்செய்வான் – இந்தப்
பிணியாளன் நாவெங்கும் புண்ணாகிப் புரையாகிப்
பிறசொல்லே புழக்கம்செய்வான் – அவனே
பித்தன் போல் முழக்கம்செய்வான்


இவ்வாறு, தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலந்து படைப்புகளை ஆக்குகிறார்கள். தமிழ்க் கலை இலக்கிய மரபுக்குள் அன்னியப் பண்பாடுகளைக் கலந்து தருகிறார்கள். தான் பெரிய ஆளாவதற்குத் தமிழையே அழிக்கும் அவலச்செயலைச் செய்கிறார்கள். இப்படியான கேடுகளை எல்லாம் நீட்டி முழக்கி நியாயப்படுத்தும் இவர்களைப் பிணியாளன் – பித்தன் எனப் பறைசாற்றுகிறார் கவிஞர்.

மொழிமானங்கெட்ட இவர்களை என்னசெய்யலாம்? என்று வழியும் சொல்லுகிறார்; கூடவே களுக்கென்று சிரிக்கவும் வைக்கிறார் அடுத்த கண்ணியில்.

எடுப்பார்கைப் பிள்ளைபோல் இருக்கின்றான் இவனாலே
இங்கிலீசு கூத்தாடுது – தமிழ்
இதுகண்டு வேர்த்தாடுது – உதை
கொடுப்பார்கள் கொடுத்தால்தான் குரங்காட்டம் நிற்குமெனில்
கொடுப்போமே எத்தாவது – ஓங்கிக்
கொடுப்போமே குத்தாவது!

எத்தும் குத்தும் விட்டால் போதுமா? இல்லை, அவர்களுக்கு நமது மரபு - வரலாறு – வாழ்வியல் – பண்பாடு பற்றி தகுந்த தெளிவுகளைச் சொல்லி வழிகாட்டவும் வேண்டும் என்கிறார். என்னதான் கேடுகளை அவர்கள் செய்தபோதும் தமிழினத்தில் பிறந்துவிட்ட உறவை எண்ணி தாயன்போடு அரவணைப்பும் செய்கின்றார் கவிஞர்.

தமிழ்மானம் மறைத்தானாம் தரங்கெட்ட வடநாட்டான்
தலைமீது கல்லேற்றினான்! – தென்னன்
தலைதூக்கச் சொல்லேற்றினான் – அந்தத்
தமிழ்வீரம் மணியாரம் தரிக்கும்நம் தமிழன்னை
தலைமீது முள்ளேற்றினான் – அடஓ!
தாங்காத சுள்ளேற்றினான்

பசிகண்டு பால்தந்த தாய்தன்னை இகழ்கின்ற
பதடியாய் இருக்கலாமா? – இந்தப்
பாரும்தான் பொறுக்கலாமா? – கண்ணில்
கசிகின்ற நீர்கண்டு மகனேநீ உன்தாயைக்
காப்பாற்ற மறுக்கலாமா? பகையைக்
கழுவேற்ற மறக்கலாமா?

புதுமை – நவினம் என்ற மாயைக்குள் சிக்குண்டு மனம்தடுமாறும் தமிழர்க்குக் குறிப்பாக இன்றைய இளையோருக்கு வழிகாட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் தக்காருக்கு உள்ளது. யாரின் கருத்தையும் சொற்பேச்சையும் கேட்பதற்குக்கூட முரண்டுபிடிக்கும் வன்மத்தை மண்டைக்குள் ஏற்றிக்கொண்டு தலைக்கணம் பிடித்தலையும் இளையப் படைபாளிகள் இதனைக் கேட்பார்களா என்பது கேள்விக்குறியே. இருந்தாலும், சொல்லவேண்டியதைப் பதமாகவோ தேவைப்பட்டால் கடிந்தோ சொல்லித்தானே ஆகவேண்டும்.

வீட்டுக்குள் விளைகின்ற பயிர்போலும் பிள்ளைக்கு
வீரத்தைச் சொல்லிக்கொடு – தமிழின்
விவரத்தை அள்ளிக்கொடு – பத்துப்
பாட்டுக்குள் வருகின்ற பண்பாட்டை வரலாற்றைப்
பதமாக உள்ளிக்கொடு – சொரணை
படுமாறு கிள்ளிக்கொடு!

சொல்லியும் கேட்காத மூடர்களாக - முரட்டுப்புத்தியராக - மக்கட்பதடிகளாக இருப்பார்களேயானால் அதற்கும் வழி சொல்லுகிறார்; அதனை வலியுறுத்தியும் சொல்லுகிறார் கவிஞர்.

வீணைபோல் நாதமொழி தமிழைநீ – படிஎன்றே
விரட்டுகிறேன் ஏடா! தப்பா? – இதிலே
விட்டுவைத்தல் கூடாதப்பா? – நெஞ்சில்
விருப்பத்தால் குழைந்தாலும் தானாக
மாணஓரு மயிலிறகு போடாதப்பா! – ஒட்ட
வாலறுப்போம் வாடாகுப்பா!

இன்றையச் சூழலில், தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளையும் தாக்குறவுகளையும் இக்கவிதை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. பெரியவர்களுக்கு – பண்பாளர்களுக்கு – பட்டறிவுள்ள நல்லோர்களுக்கு நமது தாய்மொழியும் மரபும் கலைபண்பாடும் அடைந்திருக்கும் இனி அடையப் போகும் நலிவும் நலக்கேடும் தெள்ளென தெரிகிறது. அதனால், மனம் அஞ்சுகின்றனர் – அழுகின்றனர் – ஆபத்தைத் தடுக்க ஆவன செய்கின்றனர்.

ஆனால், இளங்கன்று பயமறியாது எனச் சொன்னதுபோல, இளம் படைப்பாளர்களோ கலை, கவிதை, இசை, நடனம், எழுத்து, இலக்கியம், திரைப்படம், சின்னத்திரை என எந்தவகை படைப்பாக இருந்தாலும் மதம்பிடித்த யானையொன்று கரும்புத் தோட்டத்துள் புகுந்தது போல அழித்தொழிக்கின்றனர்; நமது மரபியல் விழுமியங்களைச் சிதைத்தொழிக்கின்றனர்.

  • மரபுக்கவிதை இன்னும் வரும்..

8 comments:

ந.தமிழ்வாணன் said...

வணக்கம்.
அற்புதமான கவிதை ஒன்றினை இங்கே அருமையாகக் கருத்துரைத்தமைக்கு நன்றி.
இன்றைய இளைஞர்கள் கண்டிப்பாக வாசிக்க, சுவாசிக்க வேண்டிய கவிதை இது.

Prapa said...

நம்ம பக்கமும் ஒரு தடவ பார்வைய செலுத்துறது !!!!! நேரம் இல்லன்ன பிரச்னை இல்ல விடுங்க பிறகு ஆறுதலாக் வாங்க, அனுமதி இலவசம் ,,,கதவுகள் பூட்டப்படுவதே இல்ல.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் ந.தமிழ்வாணன் ஐயா (Pers.Guru Tamil SM Johor),

தங்கள் வருகையில் மகிழ்கிறேன். தொடர்ந்து வருக. உங்கள் கருத்துகளை எழுதுக!

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் பிரபா,

வாருங்கள். உங்கள் அறிமுகத்தில் மகிழ்கிறேன். உங்கள் வலைப்பதிவைப் பார்வையிட்டேன். மறுமொழியும் போட்டுள்ளேன்.

தொடர்ந்து வருக.

Anonymous said...

வணக்கம்.

//மதம்பிடித்த யானையொன்று கரும்புத் தோட்டத்துள் புகுந்தது போல அழித்தொழிக்கின்றனர்; நமது மரபியல் விழுமியங்களைச் சிதைத்தொழிக்கின்றனர்//.

உண்மையை எடுத்துரைத்திருப்பது மிகவும் நன்று. ஐயா காரைக்கிழார் அவர்கள் கூறிய கருத்துக்களை இளைய எழுத்தாளர்கள் மனத்தில் நிறுத்துதல் வேண்டும். 'யானைக்கு மதம் பிடித்தால் தன் தலையில் தானே மண்னை வாரிக் கொட்டிக்கொள்ளுமாம்' அதுபோல் மதம் பிடித்த மலேசிய இளைய எழுத்தாளர்கள் சிலர் தங்கள் தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர்!!

நன்றி.
மு.மதிவாணன்
கூலிம்

Tamilvanan said...

//இளம் படைப்பாளர்களோ கலை, கவிதை, இசை, நடனம், எழுத்து, இலக்கியம், திரைப்படம், சின்னத்திரை என எந்தவகை படைப்பாக இருந்தாலும் மதம்பிடித்த யானையொன்று கரும்புத் தோட்டத்துள் புகுந்தது போல அழித்தொழிக்கின்றனர்;//

வெறும் 6ம் வகுப்பு ,SRP,SPM தேர்வுக்காக தமி்ழை வாரம் சில மணிகளில் படித்து, தான் கற்ற மொழி வளத்தைக்கொண்டு கலை, கவிதை, இசை, நடனம், எழுத்து, இலக்கியம், திரைப்படம், சின்னத்திரை படைக்கும் இளம் படைப்பாளர்களிடம் உங்கள் வீர தீரத்தை காட்டுவதை விடுத்து

தமி்ழ் மக்களின் பணத்திலே கோயில் கட்டி தமி்ழ் தெய்வங்களுக்கு தமி்ழர் சடங்கிற்கு விழாக்களுக்கு தமி்ழை பயன்படுத்தாமல் புறக்கணிக்கும் ஆலய நிர்வாகங்களுக்கு அர்ச்சகர்களுக்கு எதிராக கொடி பிடியுங்கள். ஏன் பணக்கார ஆலயங்கள் (ஆ) சாமி்கள் கண்ணை குத்தும் என்ற பயமோ?

அல்லது

நமது தமி்ழை தாராளமாகவே கொலை செய்யும் தமி்ழ் வாசகர்களின் பணத்திலே வாழும் 3 தினசரி பத்திரிக்கைகளுக்கு எதிராக உங்கள் போராட்டத்தை தொடங்களாமே? முடியுமாயின் தமி்ழ் மரபை மறக்கும் மறைக்கும் தமி்ழ் தினசரிகளை புறக்கணிக்கச் சொல்வோமா?

உண்மையான தமி்ழ் ஆண்மையும் தமி்ழ்மொழி மீது அக்கறையும் இருந்தால், மரபு காக்கப்பட வேண்டும் அக்கறையும் இருந்தால் முதலில் தமி்ழ் மக்களின் பணத்திலே உயர்ந்திட்ட ஆலயங்கள் பத்திரிக்கைகளுக்கு எதிராக போர் தொடுங்கள். சாதாரண இளம் படைப்பாளர்கள் மீது கல் எறியாதீர்கள். வலிக்கின்றது.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,

//வெறும் 6ம் வகுப்பு ,SRP,SPM தேர்வுக்காக தமி்ழை வாரம் சில மணிகளில் படித்து, தான் கற்ற மொழி வளத்தைக்கொண்டு கலை, கவிதை, இசை, நடனம், எழுத்து, இலக்கியம், திரைப்படம், சின்னத்திரை படைக்கும் இளம் படைப்பாளர்களிடம் உங்கள் வீர தீரத்தை காட்டுவதை விடுத்து//

ஆக, இளம் எழுத்தாளர்கள் வளம் குறைந்தவர்கள் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள் அல்லவா?

இதைத்தான் நாமும் சொல்கிறோம். அவர்கள் கற்க வேண்டியன - அறிய வேண்டியன நிறைய இருக்கின்றன.

இளம் படைப்பாளிகளின் ஆர்வத்தை நாம் கண்டிப்பாக வரவேற்கிறோம். நமது மொழி, இலக்கியத்தின் நீடுநிலவலுக்கு இளையோரின் பங்கு தேவை.

ஆனால், இளையோரின் படைப்புகள் நமது தொன்மையின் தொடர்ச்சிகளாக இருக்க வேண்டுமே தவிர,

தொன்மையின் கொப்புள்கொடியை அறுப்பதாக இருக்கலாமா?

இதற்காகத்தானே நாம் வருந்துகிறோம் - வேண்டாம் என்கிறோம்.

தவறுகளைச் எடுத்துச் சொல்வதும், தேவையென்றால் இடித்துச் சொல்வதும் தவறா? 'இது நல்லது; இது கெட்டது' என்று சொல்லுவது கூடாதா?

நீங்கள் தந்தையாக இருந்தால்
வழிமாறும் உங்கள் மகனுக்கு...

நீங்கள் அண்ணனாக இருந்தால்
தடம்மாறும் உங்கள் தம்பிக்கு...

நீங்கள் ஆசிரியராக இருந்தால்
தவறுசெய்யும் உங்கள் மாணவனுக்கு...

நல்லதை - சரியானதை - தேவையானதை - செய்யத்தக்கதை - செய்யத் தகாததைச் சுட்டிக்காட்ட மாட்டீர்களா?

சுட்டிக்காட்டுவதால் நீங்கள் அவர்களின் எதிரியா? அல்லது அவர்கள் மீதும் அவர்கள் செய்யும் காரியத்தின் மீதும் அக்கறையுள்ளவரா?

//தமிழ் மரபை மறக்கும் மறைக்கும் தமி்ழ் தினசரிகளை புறக்கணிக்கச் சொல்வோமா?//

இப்படி ஒன்று நாட்டில் நடக்கிறது; நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறியாமல் இருக்கிறீர்கள் ஐயா!

முடிந்தால் இத்துணை உணர்வுமிக்க நீங்களும் உங்கள் நண்பர்களும் இதில் கலந்துகொள்ளலாம். (விவரம் அறிய எனது பழைய இடுகைகளில் தேடிப்பார்க்கலாம்)

//உண்மையான தமி்ழ் ஆண்மையும் தமி்ழ்மொழி மீது அக்கறையும் இருந்தால், மரபு காக்கப்பட வேண்டும் அக்கறையும் இருந்தால் முதலில் தமி்ழ் மக்களின் பணத்திலே உயர்ந்திட்ட ஆலயங்கள் பத்திரிக்கைகளுக்கு எதிராக போர் தொடுங்கள். சாதாரண இளம் படைப்பாளர்கள் மீது கல் எறியாதீர்கள். வலிக்கின்றது.//

ஆலயங்கள் பத்திரிகைகள் சரியில்லை என்பதை நீங்கள் உண்மையிலேயே உணர்ந்திருந்தால் 'யாரோ செய்யட்டும்' என்று எவரையோ எதிர்பார்த்து நீங்கள் வாளாவிருக்கலாமா?

வாருங்கள் போராடுவோம் என்றல்லவா அழைத்திருக்க வேண்டும்!!

அல்லது, என்ன செய்கிறீர்கள் என்று கேட்டறிந்து நானும் வருகிறேன் என்று ஓடிவந்திருக்க வேண்டும்!!

நாம் வீசும் சொல்லடிகளை கல்லடிகளாக நினையாமல், ஒவ்வொன்றையும் கருத்தோடு சேகரித்து கல்லடுக்குகளாகக் கட்டுங்கள். பிறகு பாருங்கள்..

நீங்களும்கூட பாரதி போல.. அப்துல் ரகுமான் போல், மு.மேத்தா போல, காசி ஆனந்தன் போல.. அறிவுமதி போல.. அழகான.. ஆழமான.. அடர்த்தியான புதுமைப் படைப்புகளைக் கொடுக்க முடியும்.

மனதை தொட்ட மரபுக்கவிதை போல.. நெஞ்சத்தைத் தொட்ட நவினக் கவிதை என்று ஒரு பதிவை எழுதுவதற்கு உங்கள் மறுமொழி 'அக்கினிக்குஞ்சாக என் மனக்காட்டுப் பொந்திடை' விழுந்துள்ளது.

அதற்கு நன்றி, தமிழ்வாணன்.

அதனை விரைவில் எழுதுவேன்..!

(பி.கு:ஒரே மறுமொழியை பலமுறை அனுப்ப வேண்டாம். 'அமுக்கிப் போடுவேன்' என அச்சமும் வேண்டாம் நண்பரே! உங்களின் ஆக்கமான விவாதத்தை வரவேற்கிறேன்)

VIINAI SAADUVOM said...

சொறணை அற்ற தமிழனுக்கு சூடு வைத்த (வைக்கும்) கவிதை. தொடரட்டும் உங்கள் சேவை.

Blog Widget by LinkWithin