உலகின் பல நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி பயிலப்பட்டு வருகின்றது என்பது தமிழர்களில் பலரும் அறியாத செய்தியாக உள்ளது. தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி அரசின் அதிகாரத்தோடு நடைபெறுகிறது. இந்நிலையில், பிரான்சு போன்ற நாடுகளிலும் தமிழ்மொழிக் கல்விக்குத் தகுந்த வாய்ப்பு இருக்கிறது என்பதை அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
(தேர்வெழுதும் பிரான்சு தமிழ் மாணவர்கள்)
தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் அனைத்துலக அளவிலாக நடாத்தப்படுகிற தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 27.06.2009 சனிக்கிழமை 02.00 மணிக்கு பிரான்சில் நடைபெற்றது. பிரான்சில் இயங்கிவரும் 59 தமிழ்ச்சோலைப் பள்ளிகளையும் ஒருங்கிணைக்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் பிரான்சில் நடைபெற்ற தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒழுங்கமைத்திருந்தது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 3134 மாணவர்களில் 2979 மாணவர்கள் தேர்வுக்கு அமர்ந்தனர். 163 ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்களாகவும். தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் 65 பேர் மண்டப ஒழுங்கமைப்பாளர்களாகவும். தமிழ்ச்சோலை உறுப்பினர்கள் 14 பேர் கண்காணிப்பாளர்களாகவும், 7 தலைமைப்பணியக நிருவாகிகள் மண்டப பொறுப்பாளர்களாகவும் கடமையாற்றினர்.
(தேர்வை வழிநடத்தும் பொறுப்பாசிரியர்கள்)
பாரிசும் அதன் புறநகர்ப் பகுதியையும் சேர்ந்த 2987 மாணவர்கள் LA PLACE என்னும் பகுதியில் அமைந்த Maison des Examens என்னும் ஒரே தேர்வு மண்டபத்தில் தோற்றியிருந்தனர். ஏனைய 147 மாணவர்கள் Mulhouse, Toulouse, Montauban, Strasbourg, Rennes, Nice, Lyon, Tours ஆகிய எட்டு மாநிலங்களில் உள்ள தேர்வு மண்டபங்களில் கூடியிருந்தனர்.
கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு பெருமளவான மாணவர்கள் தேர்வில் அமர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
(மண்டபத்திற்கு வெளியில் திரண்டிருக்கும் பெற்றோர்கள்)
மேலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மிகவும் சிரத்தையோடு அவர்களுக்கான நல்ல வாழ்க்கைப் பாதையையும் எதிர்காலத்தையும் ஏற்படுத்துவதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் தமிழ் மக்களின் வாழ்வோடு ஒன்றிணைந்த வளமான கல்வியையும், பண்பாட்டையும் தமிழ்ச்சோலைகள் வழங்கி வருகின்றது.
மேலும் பிரான்சின் கல்வி முறையில் உயர்க்கல்விக்காகத் தமிழ் மொழிக்கல்வியின் தேர்ச்சியும் இணைத்துக்கொள்ளப்படுவதால் உயர் கல்வி கற்கும் மாணவர்கள் பெரும் பயனடைகிறார்கள். தற்போது விடுமுறை விடப்பட்டுள்து.
1 comment:
நினைக்க நினைக்க பெருமையாக இருக்கிறது
Post a Comment