இன்று 17.9.2008, பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் 130ஆம் ஆண்டு நினைவு நாள். அன்னாரின் நினைவாக இந்தக் இடுகை இடம்பெறுகிறது.
****************************************************
"தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக் குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்"
என்று சொன்னவர் பாவேந்தர் பாரதிதாசனார். சொந்த மண்ணிலேயே அடிமைப்பட்டு விலங்குகளைப் போல் நடத்தப்பட்ட பாமரத் தமிழரைத் தட்டி எழுப்பி; இழிவுகளை நீக்கி; விழிப்புணர்வு ஊட்டி; அறிவுப் புகட்டி; விடுதலையைக் காட்டி; வெற்றியை ஈட்டித் தந்த மாபெரும் போராட்ட வீரர்தாம் தந்தைப் பெரியார்.
ஈ.வெ.இராமசாமி என்ற இயற்பெயரைக் கொண்ட தந்தைப் பெரியார் 17.09.1879ஆம் ஆண்டில் பிறந்தவர். தம்முடைய சீர்திருத்தக் கருத்துகளால் மூடத்தனத்தில் மூழ்கிக் கிடந்த மக்களை திருத்தியவர்; பொதுவுடைமைச் சிந்தனைகளை விதைத்தவர்; தீண்டாமைக் கொள்கையை ஒழித்தவர்; கடவுளின் பெயரால் நடக்கும் மடத்தனங்களையும் அடிமைப்படுத்தங்களையும் அகற்றியவர்.
அவர் சொன்ன கருத்துகள்.. பேசிய உரைகள்.. எழுதிய எழுத்துகள் ஆயிரமாயிரம். ஒரு தலைமுறைக்குட்பட்ட ஓர் இனத்தின் சிந்தனைப் போக்கையே மாற்றியமைத்த பெரும் புரட்சியாளர். தமிழினத்தின் வாழ்வுரிமையை நிலைநாட்டியவர்.
அப்படி இருந்த போதிலும், தந்தைப் பெரியார் தம்முடைய கருத்துகளை எந்தக் காலத்திலும் எவர் மீதும் திணித்தது கிடையாது. அதனை தன்னுடைய விடுதலை ஏட்டில் (8.10.1951) அவரே கூறுகிறார் இப்படி:-
நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தாம் என்று சொல்வதோடு, நான் ஒரு சாதாரண மனிதன்தான். நான் எவ்விதத் தன்மையும் பொருந்திய ஒரு தீர்க்கதரிசியல்லன். ஆகையால், தனி மனிதன் என்கின்ற முறையில்தான் என்னுடைய அபிப்பிராயங்களையும் நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தான் அதிலும் எனக்குச் சரி என்று பட்டதைத்தான் உரைக்கின்றேன்.
ஒரு பெரியார் உரைத்துவிட்டார் என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடுவீர்களானால், அப்பொழுது நீங்கள் யாவரும் அடிமைகளே! நான் உரைப்பதை நீங்கள் நம்பாவிட்டால், பாவம் என்றாவது, தோஷம் என்றாவது அல்லது நரகத்துக்குத்தான் போவீர்கள் என்றாவது சொல்லிப் பயமுறுத்தவில்லை. யார் உரைப்பதையும் நாம் கேட்டு, வேத வாக்கு என அப்படியே நம்பிவிட்டதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கின்றோம்.
ஆகவே, நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்! உங்களுக்கு அவைகள் உண்மையென்று தோன்றினால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள். உண்மையெனப் புலப்படுமாகில், அவைகளை உண்மையென ஒப்புக் கொள்வ-தில் மட்டும் பிரயோசனம் இல்லை; அவைகளை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள். எனது சொநத் அனுபவங்களை நானறிந்து உங்களுக்கு உரைப்பதுதான் என்னுடைய விடுதலை. அவைகளை ஆராய்ந்து அறிவது, அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை.
- குறிப்பு: பெரியார் பயன்படுத்திய வடச்சொற்கள் அப்படியே இடம்பெற்றுள்ளன.
2 comments:
பெரியார் பற்றிய தங்களின் பதிவு மிகவும் அறிவுபூர்வமாக இருந்தது.
திருமன்றில் வலைப்பதிவுக்கு எமது வலைப்பதிவில் இணைப்புத் தந்துள்ளேன்.
நன்றி.
திருத்தமிழ் அன்பர் தமிழ் ஓவியா,
முதன் முறையாக என் வலைப்பதிவுக்கு வந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
//திருமன்றில் வலைப்பதிவுக்கு எமது வலைப்பதிவில் இணைப்புத் தந்துள்ளேன்.//
நன்றி ஓவியா.
இணையத்தில் இன்பத் தமிழை இணைந்து வளர்ப்போம்.
Post a Comment