மறைமலையடிகளார் தமிழ் மொழிக்கும் சிவ நெறிக்கும்(சைவ சமயம்) 100 ஆண்டுகளுக்கு முன்னர் அருந்தொண்டாற்றியப் பெருமகனார்.
தமிழ், ஆங்கிலம் மற்றும் வடமொழி ஆகிய முமொழிகளில் தலைசிறந்த புலவராவார்.
50 நூல்களை எழுதி தமிழுக்கு அரும்பணியாற்றியவர் மறைமலையடிகளார்.
அடிகளாரின் சிறந்த பணியினை நினைவு கூரும் நோக்கத்துடன் மறைமலையடிகளாரின் நிறைதமிழ் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மறைமலையடிகளாரின் நிறைதமிழ் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை 24.8.2008இல் கோலாலம்பூர் சோமா அரங்கம், விஸ்மா துன் சம்பந்தனில் நடைபெறும். இந்நிகழ்ச்சி காலை மணி 9.00 லிருந்து பிற்பகல் மணி 3.00 வரையில் நடைபெறும்.
இவ்விழா பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்ற ஏற்பாட்டில் நடைபெறுகிறது. தமிழ் மக்கள் பெருந்திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.
- தொடர்புக்கு: சி.ம. இளந்தமிழ் 012-3143910. elantamil@gmail.com
நன்றி:- மலேசியாஇன்று
**************************************************************************
இவர்தான் மறைமலை அடிகள்
தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரின் பிறந்த நாள் இந்நாள் (1876). தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படக் கூடியவர் - ஆரியத்தின் கடும் எதிரி - இந்து மதம் வேறு - தமிழர் சமயம் வேறு என்பதில் உறுதியாக இருந்தவர்.
சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் 1933 திசம்பர் 23, 24 ஆகிய நாள்களில் தமிழ் அன்பர் மாநாடு நடை பெற்றது. சென்னைப் புத்தகால யப் பிரச்சார சங்கத்தார் இம் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த னர். அதன் தலைவர் கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர், பொக்கிஷதார் எஸ். ராமஸ்வாமி அய்யர், வரவேற்புச் சபைத் தலைவர் உ.வே. சாமிநாதய்யர் மற்றும் பொறுப்பாளர்கள் எல்லாம் பார்ப்பனர்களே. அம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு மறை மலை அடிகளார் அவர்களுக்கு கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் 22.12.1933 இல் தந்தி ஒன்றை அனுப்பினார். அதற்கு மறைமலை அடிகள் அளித்த பதில்தான் மிகமிக முக்கியமானது.
கடிதங்கள், அழைப்புகள், தந்தி ஆகியவற்றிற்கெல்லாம் உங்களுக்கும், டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கு எமது மனம் இடந்தரவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பண்பட்ட பழைய மொழிகளெல்லாவற்றி லும் தமிழ்மொழி ஒன்றுதான் இன்னும் தன் பண்டை நலஞ் சார்ந்த புகழோடு வாழ்கின்றது. பிற மொழிக் கலப்பு அதன் தூய தன்மையினைக் கெடுக்குமென்றும், அதன் வளர்ச்சியினை குன்றச் செய்யும் என்றும் யாம் உறுதியாக நம்புகின்றோம். ஆதலால் எமது தனித்தமிழ்க் கொள்கையினைக் கடைபிடிக்காத உங்களுடைய மகாநாட்டிலே கலந்துகொள்ள முடியாமையினைப் பொறுத்துக் கொள்வீர்களாக! என்று பதில் எழுதியவர் தான் நமது போற்றுதலுக்கும், மதிப்புக்கும் உரிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் அவர்கள்.
சுவாமி வேதாசலம் என்ற தம் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டவர். சைவக் கொள்கையால் மாறு பட்டு இருந்தாலும்கூட, தந்தை பெரியார் அவர்களைப் பெரிதும் போற்றி மதித்தவர். இந்தி எதிர்ப் புக்களத்தில் தந்தை பெரியார் அவர்களுக்குத் துணை நின்றவர். தந்தை பெரியார் அவர்களைப் பல்லாவரத்துக்கு அழைத்துச் சென்று தாம் அரிதிற் சேர்த்துக் குவித்த நூல்கள் கொண்ட நூலகத்தைக் காட்டி மகிழ்ந்தவர். அவர் உடலால் மறைந்திருக்கலாம்; தமிழ் உணர்வால் நம்மோடு நிறைந்திருக்கிறார்.
இனம் எது - இனப் பகைவர் யார் என்பதை இனம் பிரித்துக் காட்டிய அந்தத் தமிழ்க் கடலின் நினைவைப் போற்றுவோம்!குறைந்தபட்சம் தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயரைச் சூட்டும் உணர்வு கிளர்ந்தெழட்டும் - அதுதான் அந்தப் பெருமகனாருக்கு தமிழர்கள் காட்டும் உண்மையான மதிப்பாகும்.
நன்றி:- மயிலாடன் அவர்கள் (விடுதலை" 15-7-2008 இதழ்)
1 comment:
மறைமலையடிகள் விழாவில் கண்டிப்பாகக் கலந்துகொள்வேன். இன்று நம்மிடம் இருக்கும் நல்ல தமிழைக் காப்பாற்றிக் கொடுத்த இந்தத் தமிழ்க் காவல் தெய்வத்தை தமிழர் நாம் கையெடுத்து வணங்குவோம்!
Post a Comment