"நான் ஒரு சில வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறேன். அங்குத் தமிழர்கள் தங்கள் கலை, பண்பாட்டோடு வாழ்வதைப் பார்த்தேன். நம்மைப் போலவே உடை உடுத்துகிறார்கள். நமது உணவுகளைச் சமைக்கிறார்கள். நம்மைப் போலவே வழிபாடு செய்கிறார்கள். அவர்களின் பெயர்கள் தமிழில் இருக்கின்றன. ஆனால், அவர்களுக்குத் தமிழ்ப் பேச தெரியவில்லை. அவர்கள் வீட்டில் தமிழ் இல்லை; குழந்தைகளுக்குத் தமிழ் தெரியவில்லை. இதனைப் பார்க்கும்பொழுது மனம் வேதனையாக இருந்தது. அவர்களும்கூட தமிழ் தெரியவில்லையே; படிக்கவில்லையே; தமிழ்ப்படிக்க வழியில்லையே என்று வருத்தப்படுகிறார்கள். ஆனால், நம் மலேசிய நாட்டில் அப்படியில்லை. தமிழ்ப் படிக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. தமிழ் இலக்கியம் படிக்க அரசாங்கம் வாய்ப்பு கொடுத்துள்ளது. தமிழில் நன்றாகப் பேச முடிகின்றது. அப்படி இருக்கையில் நம் மாணவர்கள் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். நமது தாய்மொழியை நாம் படிக்காவிட்டால் காலப்போக்கில் நாமும் மியான்மார், இந்தோனேசியா, மொரிசியசு நாட்டுத் தமிழர்கள் போல ஆகிவிடுவோம். பிறகு, நமது அடுத்த தலைமுறை சொந்த அடையாளத்தைத் தொலைத்துவிட்ட இனமாக ஆகிவிடும்" என்று அவர் மேலும் தமதுரையில் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய, தமிழியல் ஆய்வுக் களத் தலைவர் இர.திருச்செல்வம் "எசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடத்தில் வைக்கப்பட்டுள்ள மூன்று நூல்களும் மிக அருமையானவை. மலேசியக் கவிதைக் களஞ்சியத்திலிருந்து மிக அருமையான கவிதைகளைத் தொகுத்து தந்துள்ளார்கள். மேலும், ஒவ்வொரு கவிஞரின் வாழ்க்கைக் குறிப்பைப் அவர்களின் படத்துடன் பதிவுசெய்து ஆவணப்படுத்தியுள்ளார்கள். அந்தக் கவிதைகளைப் படித்தால் மாணவர்கள் மிக சிறந்த பண்புடனும் நெறியுடனும் திகழ முடியும். அதேபோல், தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த காப்பியமான சிலப்பதிகாரத்தைப் பாடமாகப் படிப்பதன்வழி தமிழின் சுவையையும் தமிழ் நாடகத்தின் அமைப்பு, சிறப்பு ஆகியவற்றையும் அறிந்துகொள்ள முடியும். கலைஞர் மு.கருணாநிதியின் சிலப்பதிகார நாடகக் காப்பியத்தைப் படிப்பதோடு நின்றுவிடாமல் சிலப்பதிகார மூலக்கதையைப் படித்து உணரவேண்டும். தமிழ் இலக்கியம் படிப்பதால் மாணவர் மனங்கள் பண்படுவதோடு, இளம் வயதிலேயே நல்ல உணர்வுகளும் எண்ணங்களும் பதிவாகும். தமிழ்மொழ்யின் மீது பற்றுதல் ஏற்படும். பாரிட் புந்தார் வட்டாரத்தில் உள்ள மாணவர்களின் நலனுக்காக இந்த இலக்கிய வகுப்பை நடத்திவரும் ஆசிரியர் சுப.நற்குணன் அவர்களிடம் நீங்கள் அனைவரும் நிறைய படித்துக்கொள்ள முடியும். அவர் மிகச் சிறப்பாகப் பாடம் நடத்தக்கூடியவர். ஆகவே, மாணவர்கள் அனைவரும் நல்லமுறையில் பயின்று சிறந்த தேர்ச்சியைப் பெற வேண்டும்" என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் இலக்கிய வகுப்பில் பயிலும் 25 மாணவர்களுக்கு 'இலக்கியக்களம்' வழிகாட்டி நூல் வழங்கப்பட்டது. விக்னேசுவரன் தண்ணீர்மலை இந்த நூல்களை அன்பளிப்புச் செய்ததோடு மாணவர்களுக்கு எடுத்து வழங்கினார்.
தூய உள்ளத்தோடும் நல்ல எண்ணத்தோடும் மாணவர்களுக்கு நூல்களை அன்பளிப்புச் செய்த விக்னேசுவரன் தண்ணீர்மலை அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய சுப.நற்குணன், "இவரைப் போன்ற நல்லோர்களை அடையாளங்கண்டு மதிக்க வேண்டும். தமிழ்மொழி நலனுக்காக மனமுவந்து நன்கொடைகள் வழங்கி உதவும் நல்ல உள்ளங்கள் நம்மிடையே பலர் உள்ளனர். அவர்களின் உதவியச் சரியாகப் பயன்படுத்தி நல்ல தமிழ்ப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, மாணவர்களிடையே தமிழ்மொழி அறிவையும் தமிழ் இலக்கிய ஆர்வத்தையும் உருவாக்குவதற்கு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். தமிழ் இலக்கியப் பாடத்தை நம் தமிழ் மாணவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். இல்லையேல், எசுபிஎம் தேர்விலிருந்து தமிழ் இலக்கியம் நீக்கப்படலாம். இப்படி ஒரு கவலைக்கிடமான நிலைமை நம் தமிழுக்கு ஏற்படக்கூடாது; அதுவும் நாமே அன்த நிலையை ஏற்படுத்தக்கூடாது" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழியல் நடுவ இலக்கிய வகுப்பு மாணவர்கள், நடுவப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
@சுப.நற்குணன், திருத்தமிழ்