Friday, April 27, 2007

சொல் அறிவியல் - Tamil Etimology

பாவாணர் வழியில் மலேசிய மண்ணிலிருந்து..
தமிழ் வேர்ச்சொல் ஆய்வு நூல்கள்
நூலாசிரியர் : தமிழியல் ஆய்வறிஞர் இர.திருச்செல்வம்


 மலேசிய வரலாற்றில் முதன் முறையாக வெளிவரும் வேர்ச்சொல் ஆய்வுநூல்.
 மொழிஞாயிறு பாவாணர் நிறுவிய சொல்லாய்வு வழியில் அமைந்த அரியநூல்.
 தமிழ் மொழியின் ஆழத்தையும் உச்சத்தையும் ஒருசேர விளக்கும் அருமைநூல்.
 தமிழின் தலைமையையும் தகுதியையும் சான்றுகளோடு நிறுவும் அறிவுநூல்.
 தமிழுக்கும் உலக மொழிகளுக்கும் உள்ள உறவுகளைக் காட்டும் உயர்நூல்

தனியொருவராக ‏இருந்து தம் வாழ்நாளில் ஐம்பது ஆண்டுகளை ஈகம்செய்து சொல்லாய்வுத் துறையில் முழுமையாகவும் முறையாகவும் ஈடுபட்டுச் செழிக்கச் செய்த மொழிஞாயிறு பாவாணரிடமிருந்து புறப்பட்ட இர.திருச்செல்வம்(நூலாசிரியர்) என்னும் கதிரவக்கீற்று ‏மலேசிய நாட்டிலும் தமிழ்கூறு நல்லுலகிலும் பெரிதான ஒரு வீச்சை எற்படுத்தக் கதிர்த்துக் காத்திருக்கிறது எ‎ன்ற உண்மைக்கு ‏இந்நூல் நல்லதொரு சான்று.

இந்நூலைப் படித்து முடிக்கி‎ன்ற உள்ளங்களில் தமிழைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்; தமிழுணர்வு ஏற்படும். தமிழ்மீது இருந்துவந்த தாழ்வுணர்ச்சி மறைந்து நம்பிக்கை ஏற்படும். தமிழ்மீது ஏற்படும் நம்பிக்கை த‎ன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.

தமிழியல் வாழ்வையும் வளர்ச்சியையும் மட்டுமே இலக்காகக் கொண்டு, எந்தவொரு வணிக நோக்கமும், ஈட்டமும் கருதாமல் தூய்மை எண்ணத்தோடு வெளியிடப்பெற்றுள்ள இந்நூலைப் படித்துப் பயன்பெறுமாறு பிறந்த இனத்தால் அமைந்த உறவால் அன்போடு வேண்டுகிறோம்.

தொடர்புக்கு : தமிழியல் ஆய்வுக் களம்,
No.4, Lorong Bunga Kantan 10,Taman Kerian, 34200 Parit Buntar, Perak, Malaysia.
Tel : 6012-5645171 / 6012-4643401 / 605-7160967

தமிழின் பொருள் - 2

உலக மொழிகளில் எதற்குமே இல்லாத அளவுக்குத் 'தமிழ்' மட்டும் பல்வேறு பொருள்களை உணர்த்தி நிற்கிறது. இக்கட்டுரையின் முதலாம் தொடரில் 'தமிழ்' என்பதற்கான நான்கு பொருள்களை இலக்கியச் சான்றுகளோடு கண்டோம். அதே அணுகுமுறையில் கட்டுரை மேலும் தொடர்கிறது.
5. தமிழ் = இறைமை : திருமந்திரம் தமிழரின் ஒப்பற்ற நூல்களுள் ஒன்று. அதில், "என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே" என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன. இங்கே தமிழ் என்பது கடவுள் தன்மை – இறைமை என்ற பொருளைத் தருகிறது.

6. தமிழ் = சைவ சமயம் : திருஞானசம்பந்தர் நாயன்மார்களில் ஒருவர். சைவ சமயத்திற்குப் புத்துயிர் தந்த மூவரில் ஒருவர். இவர் சமயத்தோடு தமிழையும் வளர்த்தார்; தமிழிசையையும் வளர்த்தார். இவரை "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்" என்று போற்றினார்கள். இங்கே தமிழ் என்பது 'சைவ சமயம்' என்ற பொருளைக் காட்டி நிற்கின்றது.

7. தமிழ் = படை வீரர் / மறவர் : தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், பாண்டிய பெருமன்னர்களுள் ஒருவன். அவன் தலையாலங்கானம் என்னும் இடத்தில் தன் பகைவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றான். அவனைக் குடபுலவியனார் என்ற புலவர் பாடினார். "தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து" என்று அப்புலவர் குறிப்பிடுகிறார். இதில், தமிழ் என்ற சொல் படை வீரர் / மறவர் என்ற பொருளைப் பெறுகின்றது.

8. தமிழ் = நாடு : கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி என்பவன் ஒரு பாண்டிய மன்னன். அவனை ஐயூர் முடவனார் என்ற புலவர் பாடியுள்ளார். "சினப்போர் வழுதி தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன்" (புறம்:51) என்று மன்னனைப் போற்றினார். "தமிழ் வரம்பறுத்த தண்புனல் நன்னாட்டு" என்று சிலப்பதிகாரப் பாடலொன்று இயம்புகிறது. "தண்டமிழ் வினைஞர்" (மணி:19-109) என்றொரு பாடல் உள்ளது. இங்கெல்லாம் வந்துள்ள தமிழ் என்ற சொல் நாட்டைக் குறிக்கிறது.

9. தமிழ் = வேந்தர் : சேரன் செங்குட்டுவன் காலத்தில் வடநாட்டு அரசர்களான கனக வியசர் தமிழ்நாட்டு வேந்தர்களை இகழ்ந்தனர். "தண்டமிழ் இகழந்த ஆரிய மன்னரின்" (சிலப்:28-153) என்று இதனை இளங்கோவடிகள் தம் நூலில் பதிவு செய்துள்ளார். இத்தொடரில் தமிழ் என்பது வேந்தரைக் குறிக்கின்றது.

10. தமிழ் = தமிழர் - தமிழ்நூல் : தமிழ் என்பது பொதுவாகத் தமிழரையும் தமிழ் நூல்களையும் குறிக்கும். (தமிழ் இலெக்சிகன் 3:1756).

இவ்வாறு தமிழ் என்ற சொல், மொழி, இனிமை, நீர்மை, அகப்பொருள், வீரம், இறைமை, சைவ சமயம், படைவீரர், மறவர், நாடு, வேந்தர், தமிழர், தமிழ்நூல் ஆகிய பல பொருள்களைத் தருகின்றது. உலகில் மொழியைக் குறிக்கும் எந்தச் சொல்லும் இத்துணைப் பொருள்கள் பெற்றிருக்கவில்லை. தமிழுக்கு இருக்கின்ற எண்ணற்ற சிறப்புகளுள் இதுவும் ஒன்றாகும்.
இத்துணைச் சிறப்பு வாய்ந்த மொழியைப் பெறுவதற்குத் தமிழர்கள் தவம் செய்திருக்க வேண்டும். எனவே, தாய் தமிழ்மொழியைப் போற்றி வாழ்வோம்.
மூலம்:தமிழும் தமிழரும்

தமிழின் பொருள் - 1

தற்போது உலகத்தில் 6800 மொழிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மொழிகளுள் சில தொன்மையானவை. சில புதியவை. சிலவற்றுக்கு இலக்கிய வளம் உண்டு. சிலவற்றுக்கு எழுத்துகூட கிடையாது. சில மொழிகள் நெடுங்காலம் வாழக்கூடிய நலமான நிலையைப் பெற்றுள்ளன. ஒரு சில மொழிகள் அழிவின் விளிம்பில் நிலை தடுமாறிக்கொண்டிருக்கின்றன.

உலக மொழிகள் எதற்கும் இல்லாத தனிச்சிறப்புகள் தமிழ்மொழிக்கு உண்டு. கிரேக்க நாட்டு மொழி கிரேக்கம். இங்கிலாந்து நாட்டின் மொழி இங்கிலீசு(ஆங்கிலம்). கிரேக்கம், இங்கிலீசு என்ற சொற்கள் மொழியை மட்டுமே சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் தமிழ் என்ற சொல், மொழி என்பதோடு சேர்த்துப் பதினொரு பொருளைத் தருகிறது. இப்படிப்பட்ட சிறப்பு உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லவே இல்லை.

1. தமிழ் = இனிமை : சீவகசிந்தாமணி ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இதில் "தமிழ் தழீஇய சாயலவர்" என்ற தொடர் வருகிறது. இதற்கு இனிமை தழுவிய சாயலை உடையவர் என்று பொருள். இங்கே தமிழ் என்பது இனிமை என்ற பொருள் தருகிறது. "வண்டு தமிழ்ப் பாட்டிசைக்கும் தாமரையே" என்ற கம்பராமாயணப் பாட்டின் தொடரிலும் 'தமிழ்' இனிமை என்ற பொருளில் வந்துள்ளது.

2. தமிழ் = நீர்மை : "இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்" என்று பிங்கல நிகண்டு தெளிவாகக் கூறுகிறது. எனவே தமிழுக்கு நீர்மை என்ற பொருள் உள்ளது.

3. தமிழ் = அகப்பொருள் : பிரகந்தன் என்பவன் ஓர் ஆரிய அரசன். அவன் சங்க காலத்தில் வாழ்ந்தவன். அவன் தமிழரின் வாழ்வைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினான். அவன் கபிலர் என்ற புலவரின் உதவியை நாடினான். அவனுக்காக புலவர் 'குறிஞ்சிப் பாட்டு' என்ற நூலைப் பாடினார். அது தமிழரின் இல்வாழ்வை - அகப்பொருளைப் பற்றிச் சொல்லும் நூல். அதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் "ஆரிய அரசன் பிரகந்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு" என்று குறித்துள்ளார். இங்குத் தமிழ் என்பதற்கு, 'அகப்பொருள்' என்ற பொருள் அமைகின்றது.

4. தமிழ் = வீரம் : சேரன் செங்குட்டுவன் வடநாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். கண்ணகி சிலைக்குக் கல் எடுத்து வருவதும் தமிழ் வேந்தர்களை இகழ்ந்து பேசிய ஆரிய அரசர்களைத் தண்டிப்பதும் அவனுடைய நோக்கமாகும். "அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கெனச் சீற்றம் கொண்டு இச்சேனை செல்வது" என்று அம்மன்னன் அறிவிக்கின்றான். இங்கே தமிழ் என்பது வீரம் என்று பொருள் பெறுகின்றது.
"வடதிசை மருங்கின் மன்னவ ரெல்லாம்
தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாமென" என்ற சிலப்பதிகாரத் தொடரிலும் 'தமிழ்' என்பது வீரம் என்னும் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. (தொடரும்..)

Saturday, January 20, 2007

தமிழ் நாள்காட்டி (Tamil Calender)



தமிழை முன்னெடுக்கும் தனித்தமிழ் நாள்காட்டி

தமிழ் நாள்காட்டி வரலாற்றில் தனிப்பெரும் சிறப்பாக இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, முழுமையாகத் தமிழிலேயே நாள்காட்டி வெளிவந்துள்ளது. தமிழ் மொழி, இன, சமய, பண்பாடு சார்ந்த தமிழியல் மீட்பு, மேம்பாட்டுப் பணிகளை அமைதியாகவும் ஆக்ககரமாகவும் ஆற்றிவருகின்ற தமிழியல் ஆய்வுக் களம் இந்தத் தமிழ் நாள்காட்டியை வெளியிட்டுள்ளது.

தமிழ்க்கூறு நல்லுலகம் முதன்முறையாகக் கண்டிருக்கும் தனித்தமிழ் நாள்காட்டியென இதனைத் துணிந்து குறிப்பிடலாம். இப்படியொரு அரிய சாதனை மலேசியத் திருநாட்டில் நிகழ்ந்திருக்கிறது என்பது மலேசியத் தமிழர்களுக்குப் பெருமையளிக்கும் செய்தியாகும். முற்றும் முழுவதுமாகத் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ள இந்த நாள்காட்டி தமிழர்கள் இல்லங்கள்தோறும் கண்டிப்பாக இடம்பெறவேண்டும்.

தமிழ் நாள்காட்டியின் தனிச்சிறப்புகள்

தமிழ் நாள்காட்டி என்ற அடையாளத்திற்கு ஏற்றவாறு முழுமையாகத் தமிழிலேயே இந்த நாள்காட்டி வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடும் தமிழ் எண்களைப் பயன் படுத்தியும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்), பிறைநாள்(திதி) முதலானவையும் தமிழில் குறிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், ஆங்கில நாள்காட்டியை உள்ளடிக்கியதோடு, தேவையான அளவு சமற்கிருதத் துணைவிளக்கங்களும் கொடுக்கப் பட்டுள்ளன.

பழந்தமிழர்களின் கண்டுபிடிப்பான ஐந்திரம்(சோதிடம்) தொடர்பான ஓரை, நாள்மீன், பிறைநாள் முதலான வானியல் கூறுகள் சமற்கிருத மயமாகிப்போய்விட்ட நிலையில், அவற்றை மீட்டெடுக்கும் பெரும்பாட்டை இந்த நாள்காட்டியில் காணமுடிகிறது. தமிழர்களின் வரலாற்றில் மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டுவிட்ட வானியல் கலையை இந்த நாள்காட்டி மீண்டும் வெளிப்படுத்தி காட்டியுள்ளது. இப்படியொரு அரிய முயற்சி தமிழ் நாள்காட்டி வரலாற்றிலேயே இப்போதுதான் முதன்முறையாக நிகழ்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமற்கிருதக் கோரப்பிடியுள் சிக்குண்டு தமிழர்களின் வாழ்வியல் கூறுகளில் தலைக்கீழ் மாறுதல்களை ஏற்படுத்திவிட்ட ஐந்திர(சோதிட)க் கலை தொடக்கக் காலத்தில் தமிழர்களுக்கே சொந்தமானது என்பது வரலாற்று உண்மை. வெறும் பேச்சளவிலும் எழுத்தளவிலும் இருந்த இவ்வுண்மையை இந்த நாள்காட்டி நடைமுறை வாழ்க்கைக்குக் கொண்டுவந்திருக்கிறது. மீட்டெடுக்க முடியாத அளவுக்கு முழுக்க முழுக்க சமற்கிருதத்திற்கே சொந்தமாகிப்போய்விட்ட வானியல் கலைக்கூறுகளைத் தமிழில் வெளிப்படுத்தி பெரும் புரட்சிக்கு வித்திட்டிருக்கும் இந்த நாள்காட்டியைத் தமிழ் அன்பர்கள் கண்டிப்பாகப் பார்வையிட வேண்டும்.

இன்றையக் காலக்கட்டத்தில் தமிழ்க்குழந்தைகளின் பெயர்கள் தமிழில் வைக்கப்படுவதில்லை என்ற மாபெரும் குறையைக் களைவதற்கு இந்த நாள்காட்டி பெரும் துணையாக இருக்கும் என்றால் அது மிகையாகாது. குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணையும் நாள்காட்டியின் பின்னிணைப்பாக வழங்கப்பட்டிருப்பது மற்றுமொரு குறிப்பிடத்தக்கச் சிறப்பாகும். பெயர் எழுத்து அட்டவணையில் பின்னாளில் மிகச்சூழ்ச்சியாகச் செய்யப்பட்ட சமற்கிருத எழுத்து ஊடுருவல்களை இந்த நாள்காட்டி வெளிப்படுத்திக்காட்டி உண்மை நிலையை எடுத்துகாட்டுகிறது. அதோடு, பின்னிணைப்பில் வழங்கப்பட்டிருக்கும் விரிவான விளக்கங்களும் ஐந்திரக் குறிப்புகளும் நாள்காட்டியை எளிதாகப் புரிந்துகொள்வதற்குப் பயனாக உள்ளது.

இதுவரையில் வந்துள்ள எந்தவொரு தமிழ் நாள்காட்டியிலும் இல்லாத அளவுக்கு தமிழ் அருளாளர்கள், சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் சிறப்பு நாட்கள் இதில் குறிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் அவர்களின் உருவப்படங்களும் இடம்பெற்றுள்ளன என்பது மேலுமொரு தனிச்சிறப்பு.

தவிர, நாள்காட்டிகளில் வழக்கமாக இடம்பெருகின்ற பொதுவிடுமுறை நாட்கள், விழா நாட்கள், பள்ளி விடுமுறை நாட்கள் முதலான விவரங்களும் இந்தத் தமிழ் நாள்காட்டியில் வழங்கப்பட்டுள்ளன. முழு வண்ணத்தில் தரமாகவும் வள்ளுவர் வள்ளலார் இணைந்திருக்கும் அட்டைப் படத்தோடு கவரும் வகையிலும் அமைந்திருக்கிறது.

மொத்தத்தில், தமிழியல் முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விளைவோருக்கும் இனி வாழ முயல்வோருக்கும் வழிகாட்டியாக வரலாற்றுச் சான்றுகளுடனும் விளத்தங்களுடனும் இந்நாள்காட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

உள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக முன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களையும் ஆர்வலர்களையும் இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்குமாறு தமிழியல் ஆய்வுக் களம் கேட்டுக்கொள்கிறது.

தொடர்புக்கு : தமிழியல் ஆய்வுக் களம்
Persatuan Pengajian Kesusasteraan Tamil Perak
No.4, Lorong Bunga Kantan 10,Taman Kerian,
34200 Parit Buntar, Perak, Malaysia.
Tel : 6012-5645171 / 6012-4643401 / 605-7160967
email : suba_nargunan@yahoo.com.my / engunan@tm.net.my

Friday, September 01, 2006

தொடர் 8 : இணையமும் இனியத் தமிழும்

இ‎ன்றைய உலகம் கணினி உலகம் எனில் யாரும் எவ்வித மறுப்பும் கூறமுடியாது. கணினியை விட்டுவிட்டு எந்தத் துறையும் தப்பமுடியாத அளவுக்கு அத‎ன் ஆதிக்கம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகி‎றது எ‎ன்றால் மிகையல்ல. உலகி‎ன் எல்லா பெருமொழிகளையும் சார்ந்த மக்கள் தங்கள் மொழிகளைக் கணினிக்குள் ஏற்றிவிடவேண்டும் எ‎ன்ற முனைப்புட‎ன் செயலாற்றிவருகி‎ன்ற நிலையில் நம் தமிழ்மொழி கணினி உலகிலும் இணைய வெளியிலும் பெரும் பீடுட‎ன் நடைபயி‎ன்று வருகி‎ன்றது எ‎ன்பது பெருமைக்குரிய செய்தியாகும்.

கடற்கோளைக் கடந்து கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, காகிதம், அச்சுக்கலை என பல்வேறு கால வளர்ச்சிக்கு ஏற்ப திறம்படைத்த தமிழ்; மறவர்கள் துணையோடு தன்னை நிலைப்படுத்தி வந்த தமிழ்; கணினி மின்னியல் காலத்திலும் தளர்ந்து விடவில்லை; மாறாக எழுந்து நின்றது.

இந்திய மொழிகளில் கணினிக்குள் தடம்பதித்த முதல்மொழியாகவும் இணையத்தில் ஆங்கிலத்திற்கு நிகராக நடையிடும் மொழியாகவும் ந‎ம் தமிழ்மொழி சிறப்புப்பெற்றிருப்பதை எண்ணித் தமிழர்கள் பெருமிதம் கொள்ளலாம். கணினியில் ஆங்கிலத்தில் செய்யக்கூடிய எல்லாவற்றையும் தற்போது தமிழிலும் செய்யலாம் எ‎ன்பது மெய்ப்பிக்கப்பட்டுவிட்ட உண்மையாகும்.

தட்டச்சு செய்தல் - திருத்துதல், பதிவு செய்தல், வடிவமைத்தல், தொகுத்தல், சேமித்தல், தேடுதல், வரைதல், ஒலி ஒளி அமைத்தல், மி‎ன்னஞ்சல் அணியம்(தயார்) செய்தல் - அனுப்புதல் - பெறுதல், வாசித்தல், இணையத்தளங்களை வடிவமைதல், தேடுதளங்களை உருவாக்குதல், முதற்பக்கம் அமைத்தல், மி‎ன்னிதழ்கள் அல்லது இணைய இதழ்கள் வெளியிடுதல், இணைய வானொலி தொலைக்காட்சி நடத்துதல் முதலான அனைத்தையும் தமிழிலேயே செய்துகொள்ளமுடியும் எ‎ன்ற நிலைமை தற்போது உருவாகி ‏இருக்கிறது.

'யாகூ', 'கூகல்' போ‎ன்ற தேடுதளங்களில் தமிழ் தொடர்பான செய்திகளை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தேடிய காலம்போய் இப்போது தமிழிலேயே தேடும் காலம் மலர்ந்துள்ளது. மேலும், கோப்புப் பெயர்கள்(File Name), இணைய முகவரிகள் (Web Address) ஆகியவற்றைத் தமிழ் எழுத்துருக்களைப் பய‎ன்படுத்தித் தமிழிலேயே வைத்துக்கொள்ளும் நிலைமை சாத்தியமாகியுள்ளது. இணையப்பக்கம் போலவே செயல்படும் புதிய தொழில்நுட்பமாகிய வலைப்பூ (Blogger) என்பதும் முழுவதுமாகத் தமிழிலேயே செயல்படுகின்றது. தமிழ் வலையகங்களைப் பார்க்க தமிழ் எழுத்துருக்களை பதிவிறக்கம்(Download) செய்யவேண்டிய நிலைமாறி தானிறங்கி எழுத்துமுறை(Dynamic Font) இப்போது வந்துவிட்டது.

ஓப்ப‎ன் ஆபிசு(Open Office) எ‎ன்று சொல்லப்படும் பொதுப் பணியகம் ஆங்கிலத்தில் இயங்குவது போலவே முழுக்க முழுக்கத் தமிழிலும் இயங்குகிறது. 'மைக்ரோசாப்ட்டு' உதவி வலைப்பக்கம் (Microsoft Help Website) முழுவதுமாகத் தமிழில் இயங்குகிறது.

கணினி இணைய உலகில் தமிழின் வளர்ச்சி இத்தோடு நின்றுவிடவில்லை. பி.பி.சி (பிரிட்டிசு ஒலிபரப்புக் கழகம்) போ‎ன்ற அனைத்துலக செய்தி நிறுவனங்கள் தமிழிலும் தங்கள் ஒலிபரப்பையும் இணையத்தளங்களையும் நடத்துகி‎ன்றன. தமிழ் ஈழம், தமிழ் நாடு, கனடா, டென்மார்க்கு, அசுத்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, சிங்கை, மலேசியா என உலகின் மூலை முடுக்களிலிருந்து தமிழ் இணையப்பக்கங்கள், வலைத்தளங்கள், செய்தி இதழ்கள், வலைப்பூக்கள், இணைய வானொலி தொலைக்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

தற்சமயம் இணையத்தில் 75,000 தமிழ்சார்ந்த வலைத்தலங்கள் இருப்பதாகக் கணிக்கப்படுகி‎ன்றது. இதில் 25,000 தலங்கள் முற்றும் முழுவதுமாகத் தமிழையே பய‎ன்படுத்தி ஆக்கப்பட்டுள்ளன. உலகி‎ன் முதல் தாய்மொழி எ‎‎ன்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றுள்ள செம்மொழியாம் நம் தமிழ்மொழி, இணையத்தில் தோ‎ன்றி உலகை உலாவந்த முதல் இந்திய மொழி எ‎ன்ற பெருமையையும், மிக அதிகமான இணையத்தலங்களைக் கொண்ட ஒரே இந்திய மொழி எ‎‎ன்ற பெருமையையும், ஆங்கிலத்தைப் பய‎ன்படுத்தி செய்யக்கூடிய அனைத்தையும் செய்யவல்ல ஒரே இந்திய மொழி எ‎‎ன்ற பெருமையையும் ஒருசேர பெற்றுள்ளது.

மொத்தத்தில், இ‎ன்றைய தகவல் தொடர்பு தொழில் நுட்ப ஊழியில்(யுகம்) மற்றைய மொழிகளுக்கு இணையாகத் தமிழ்மொழியும் தலைநிமிர்ந்து நிற்கிறது எ‎ன்றால் மிகையாகாது.

கணினி, இணைய உலகில் தமிழ்மொழி அடைந்துள்ள வெற்றிகளை வைத்துப் பார்க்குமிடத்து, உலகம் ஒருநாள் தமிழை நிச்சயமாகத் திரும்பிப்பார்க்கும் என நம்பலாம். தமிழ்மொழியில் புதைந்துள்ள எண்ணிலடங்காச் சிறப்புகளும் உண்மைகளும் மெய்ம்மங்களும் வெளிப்பட்டுத் தோன்றும் காலம் விரைவிலேயே மலரும் என்ற நம்பிக்கை நம்மிடையே பிறக்கிறது. உலக வரலாற்றின் ஒரு சிறுமுனையளவு பகுதி ஆனால் முகாமையான பகுதியைத் தம்முள் கொண்டுள்ள தமிழ்மொழியானது வெல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை என்ற தன்னம்பிக்கை துளிர்க்கிறது.

தொடர் 7 : அடிமையனாலும் அழியாத தமிழ்

உலக மொழிகளில் தமிழுக்கு ஏற்பட்ட இன்னல்களும் இடர்களும் வேறு எந்தமொழிக்கும் ஏற்படவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு தமிழுக்கு இயற்கையாலும், எதிரிகளாலும், அன்னியர்களாலும் ஏன் சொந்த இனத்துக்காரர்களாலும் காலங்காலமாகத் தொல்லைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

குமரிக்கண்டத்தில் நடந்த மூன்று கடற்கோள்களாலும் அதன் பின்னர் 'கைபர் கணவாய்' வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவிய ஆரியர்களாலும் பெரும் தாழ்ச்சிநிலைக்குச் சென்றுவிட்ட தமிழுக்கு அடுத்து இன்னும் பல போராட்டங்கள் காத்திருந்தன.

தமிழ் நிலத்தின் எல்லைகள் சுருங்கிப் போய்விட்ட நிலையில் கி.பி.மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் (1700 ஆண்டுகளுக்கு முன்) களப்பிரர் என்போர் தமிழகத்திற்குள் நுழைந்தனர். பாண்டிய மன்னர்களை முறியடித்து வெற்றிபெற்ற இவர்களின் ஆட்சி கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரையில் தமிழகத்தில் இருந்தது. களப்பிரர் காலத்தில்தான் முதன் முதலாக 'சமணம்' என்ற புதிய மதநம்பிக்கை தோன்றியது. பின்னர், புத்த சமயம் சமணத்திற்கு எதிராகத் தோன்றி வளர்ச்சிப்பெற்றது.

களப்பிரருக்குப் பின் தமிழ்மண் பல்லவர்களின் கையில் வீழ்ந்தது. பல்லவ மன்னர்களின் ஆட்சி கி.பி.பத்தாம் நூற்றாண்டு வரை நீடித்தது. பல்லவ ஆட்சியாளர்கள் வடமொழியையே போற்றியுள்ளனர். அடுத்து, சோழப் பேரரசின் ஆதிக்கம் இந்தியாவின் தென் பகுதியில் எழுச்சிப்பெற்றது. பல்லவ ஆட்சியாளர்களை வீழ்த்திவிட்டு சோழ மரபினர் ஆட்சியை அமைத்தனர். இவர்களின் ஆட்சி சுமார் நானூறு ஆண்டுகள் தென் இந்தியாவில் நிலைப்பெற்றிருந்தது.

14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (700 ஆண்டுகளுக்கு முன்), தமிழ் நாட்டிற்கு கெட்ட காலம் உருவாகிவிட்டது எனலாம். மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிகள் நிலைகுலைந்து போகவே, கி.பி.1327இல் தில்லி மன்னன் முகம்மது துக்ளக் தமிழக ஆட்சியைக் கைப்பற்றினான். அதுதொடங்கி, கி.பி.1376ஆம் ஆண்டு வரை தமிழ் நாட்டில் முசுலிம் ஆட்சி நடைபெற்றது
.
இதனைத் தொடர்ந்து, அரிகரன், புக்கன் என்னும் இரண்டு சகோதரர்கள் நிறுவிய விசய நகர அரசு தமிழகத்தில் இருந்த முகம்மதியர் ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. கி.பி.1555 ஆம் ஆண்டு வரையில் தமிழகத்தில் விசயநகர ஆட்சி நீடித்தது. இதற்கிடையில், நாயக்கர் ஆட்சியும், மாராட்டியர் ஆட்சியும் முகம்மதியர் ஆட்சியும் மாறிமாறி தமிழகத்தில் இக்காலத்தில் இருந்துள்ளன. இப்படியாக, 14, 15, 16, 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் வேற்று மொழி, இனத்தாரின் ஆட்சிகள் நடைபெற்றுள்ளன.

இத்தனையையும் அடுத்து, 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர் ஆட்சி தமிழகத்திற்குள் நுழையத் தொடங்கியது. இவ்வாட்சி தமிழகத்திற்கு வெளியே இருந்துகொண்டு செயல்பட்டுத் தமிழ்நாட்டின் நிலங்களைப் பெருமளவில் கைப்பற்றிக்கொண்டது.
ஆக, மேற்குறிப்பிட்ட பல ஆட்சிகளின் கீழ் பல நூற்றாண்டு காலமாக அடிமைபட்டிருந்த தமிழும் தமிழரும் எதிர்நோக்கிய சிக்கல்களும் சிரமங்களும் எண்ணிலடங்காதவை. கடந்த 20 நூற்றாண்டுகளாக பிற ஆட்சியாளருக்கும், பிற இனத்தவருக்கும், பிற மொழியினருக்கும், பிற மதத்தினருக்கும் ஆட்பட்டும் அடிமைப்பட்டும் கிடக்கவேண்டிய பரிதாபத்திற்குரிய நிலைமை தமிழுக்கும் தமிழருக்கும் ஏற்பட்டுள்ளது. இப்படியரு நெருக்கடி உலகில் வேறு எந்த மொழிக்கும் எந்த இனத்தார்க்கும் ஏற்பட்டிருக்கவில்லை.

தமிழ் கடந்து வந்துள்ள பாதை மிகவும் கரடு முரடானது; கல்லும் முள்ளும் நிறைந்தது; கண்ணீரும் செந்நீரும் நிறைந்தது. தமிழ் மற்ற மொழிகளைப் போல் அரசுகளாலோ ஆட்சியாளராலோ செல்வச் சீமான்களாலோ வளர்க்கப்பட்ட மொழி கிடையாது. மாறாக, பல நூற்றாண்டுகளாகத் தாங்கமுடியாத கொடுமைகளுக்கு ஆளாகி, எளிய மக்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட மொழியாகும். தமிழின் இந்த வரலாற்றை அறிந்தால் ஒவ்வொரு தமிழ் உள்ளமும் நிச்சயமாக உருகிப்போகும்; தமிழை உணர்ந்துகொள்ளும்.

தொடர் 6 : ஆரியத் தீயிலும் அழியாத தமிழ்

குமரிக்கண்ட அழிவுக்குப் பின்னர் எஞ்சியிருந்த நிலப்பரப்பான இன்றைய இந்தியத் துணைக்கண்ட நிலப்பகுதியில் தமிழ் மக்கள் குடியேறினர். அப்போது அந்த துணைக்கண்டத்தின் பெயர் நாவலம் என்பதாகும். நாவலம் என்ற இந்தியா முழுவதும் தமிழ் மக்கள் நிரம்பியிருந்த காலக்கட்டம் ஒன்று அப்போது இருந்ததை ஆய்வாளர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்.

இவ்வாறு, தமிழ் மக்கள் நிரம்பியிருந்த பகுதிதான் வட இந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் இருந்த சிந்துவெளி பரப்பு. நாகரிக உலகின் பிறப்பிடமாகக் கூறப்படும் சிந்துவெளி நாகரிகம் (மொகஞ்சதாரோ - அராப்பா), பழந்தமிழ்ப் பாண்டிய அரசின் நாகரிகத்தோடு பெருமளவில் ஒத்திருப்பது ஒன்றே சிந்துவெளி நாகரிகம் தமிழருடையது என்பதற்கான சான்றாக அமைந்திருக்கிறது.

வடக்கில் இமயம் முதல் தெற்கில் கடலில் மூழ்கிப்போன குமரி வரையில் பரந்துவிரிந்து ஆட்சிசெய்த தமிழ், காலத்தின் கட்டாயத்தினால் சிறுகச் சிறுகக் குறுகிப்போனது. தெற்கில் கடற்கோளால் தமிழ் நிலம் மூழ்கிப்போனது; வடக்கில் ஆரியர் என்ற இனத்தாரின் வருகையால் தமிழ்நிலம் சுருங்கிப் போனது. கடற்கோளுக்கு அடுத்த நிலையில் தமிழுக்குப் பெரும் கேடுகள் நடந்தது ஆரியர்களால்தாம் என்றால் பொய்யில்லை.

ஆரியர்கள், பாரசீகத்திலிருந்து 'கைபர் கணவாய்' வழியாக இந்தியத் துணைக்கண்டத்திற்குள் நுழைந்தார்கள் என்பது வரலாற்று ஆசிரியர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்ட செய்தியாகும். அவர்கள் சிந்துவெளியில் குடியேறிய காலம் கி.மு.1500 முதல் 1200க்குள் இருக்கலாம். இவர்கள், காலங்காலமாகத் தமிழ்மக்கள் பின்பற்றிவந்த மொழி, சமய, பண்பாட்டுக் கூறுகளில் மிகப்பெரும் மாற்றங்களையும் தலைகீழ்த் திரிபுகளையும் ஏற்படுத்தினர். தமிழ்ச் சமுதாயத்தில் ஊடுருவி ஆதிக்கம் செய்யத் தொடங்கினர்.

ஆரியர் வருகையினால் பெருமளவில் பாதிப்புக்குள்ளான தமிழ் தன்னை மீண்டும் நிலைப்படுத்திக் கொள்ள பல நூற்றாண்டுகளை விலையாகக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. ஆனாலும், இன்றளவும் ஆரியத் தாக்கத்திலிருந்து தமிழால் முழு விடுதலை பெறமுடியாத நிலையே இருந்து வருகின்றது. தமிழின் அடித்தளமாக இருக்கும் மொழி, இன, சமய, பண்பாட்டு, வாழ்வியல், வரலாற்றுக் கூறுகளில் அழிக்க முடியாத அளவுக்கு ஆரியக்கலப்புகள் ஏற்பட்டுவிட்டதும்; அந்தக் கலப்புநிலைக்குச் சமுதாய அங்கீகாரம் கிடைத்துவிட்டதுமே இதற்கு முக்கியக் காரணங்கள் எனலாம்.

மறைந்த குமரிக்கண்டத்தில் ஏற்பட்ட மூன்று கடற்கோள்களும் அதன் பிறகு ஏற்பட்ட ஆரியச் சூழ்ச்சிகளும் தமிழில் மறுக்கவோ மறைக்கவோ முடியாத பெரும் சேதங்களை ஏற்படுத்திவிட்டன என்பது உண்மை. இருந்தபோதிலும், தமிழ்மொழி மட்டும் மண்ணைவிட்டு மறைந்துவிடவில்லை என்பதே இதில் எண்ணிப்பார்க்கத்தக்கச் செய்தியாகும். கடல்போல் இருந்த தமிழ் கடுகுபோல் சிறுத்து போய் விட்டது என்பது உண்மை. ஆயினும் காரத்தை மட்டும் இழந்துவிடவில்லை.
Blog Widget by LinkWithin