Showing posts with label தமிழ் மாநாடு. Show all posts
Showing posts with label தமிழ் மாநாடு. Show all posts

Wednesday, October 19, 2016

பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு : மலேசியாவில் நடக்கிறது




மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கொண்டாட்டத்தின் தொடர்பில் பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. எதிர்வரும் 20.10.2016 தொடங்கி 23.10.2016 வரையில் நான்கு நாள்களுக்கு ‘21ஆம் நூற்றாண்டில் தமிழ்க்கல்வி எனும் கருப்பொருளில் இம்மாநாடு நடைபெறும். கெடா மாநிலத்தில் அமைந்துள்ள எயிம்ஸ்ட் பல்கலைக்கழகம் இந்த மாநாட்டுக்குரிய இடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வித் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ ப.கமலநாதன் அவர்களின் தலைமையில் மாநாடு நடைபெறும். மலேசியச் சுகாதார அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர்.சுப்பிரமணியம் அவர்கள் இம்மாநாட்டினை அதிகாரப்படியாகத் தொடக்கி வைப்பார். மேலும் கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ மாட்சீர் காலிட் அவர்களும் கல்வி அமைச்சின் இயக்குநர்கள், உயர் அதிகாரிகள், விரிவுரையாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பொது இயக்க பொறுப்பாளர்கள் ஆகியோர் மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொள்வர். 

மாநாட்டுத்  தொடக்கவிழா 22.10.2016ஆம் நாள் மாலை மணி 2:00 தொடங்கி 5:00 வரையில் நடைபெறும். தொடக்க விழாவில் கலந்து சிறப்பிக்க பொதுமக்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். 

மலேசியாவிலிருந்து 250 தமிழாசிரியர்களும் கல்வி அதிகாரிகளும் உள்பட சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, அமெரிக்கா, பிரான்சு, சுவிசர்லாந்து, மியான்மார், தாய்லாந்து, மொரிசியஸ், ஆஸ்திரேலியா முதலான வெளிநாடுகளைச் சேர்த்த மொத்தம் 300 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் தமிழ்க்கல்வியின் வரலாறு, கலைத்திட்டம், கற்றல் கற்பித்தல், மதிப்பீடு, 21ஆம் நூற்றாண்டுக் கல்வி முதலான கோணங்களில் மாநாட்டில் அமர்வுகள் நடைபெறவுள்ளன. மலேசியத் தமிழாசிரியர்கள் 24 பேர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் மாநாட்டில் படைக்கப்படவுள்ளன. மேலும் தமிழ்க்கல்வியின் மேம்பாட்டுக்கு உரிய வழிவகைகளை ஆராய்வதற்கு 2 பட்டறைகளும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு வே.இளஞ்செழியன் தலைமையில் ஓர் ஏற்பாட்டுக்குழு அனைத்துப் பணிகளையும் செய்துவருகின்றது. இந்தக் குழுவில் கல்வி அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெறுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



மலேசியாவில் 200 ஆண்டுகளைக் கடந்துவந்துள்ள தமிழ்க்கல்வி 21ஆம் நூற்றாண்டிலும் மாணவர்களுக்குப் பொருத்தப்பாட்டைக் கொண்டிருப்பதோடு திறன்மிக்க மாந்த மூலதனத்தை உருவாக்குவதற்கு ஏற்புடையதாக அமைவதற்கு இந்த மாநாடு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு தொடர்பான மேல் விவரங்களை www.tamilkalvi.my என்ற இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

நன்றி:  www.tamilkalvi.my

Tuesday, August 27, 2013

என்ன சாதித்தது.. தமிழ் இணைய மாநாடு?

12ஆம் தமிழ் இணைய மாநாடு இம்முறை மலேசியத் தலைநகர் கோலாலும்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடந்தேறியது. ஆகத்து 15 - 18 வரையில் நடந்த இம்மாநாட்டிற்காகக் 'கையடக்கக் கருவிகளில் தமிழ்க் கணிமை' என்னும் கருப்பொருள் தெரிவு செய்யப்பட்டிருந்தது. மலேசியாவிலிருந்தும் பன்னாடுகளிலிருந்தும் ஏறக்குறைய 1000 பேராளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

கட்டுரைப் படைப்பு, கண்காட்சி, மக்கள் கூடம் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இம்மாநாடு, தமிழின் பெயரால் மலேசியாவில் நடைபெற்ற மற்றைய பற்பல மாநாடுகளைப் போல கூடினோம் களைந்தோம் என முடிந்து போனதா? அல்லது காலத்திற்குத் தேவையான மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளதா? இதனைச் சிறிது ஆராய்ந்து பார்ப்பதே இந்தப் பதிவின் நோக்கமாகும்.

அதற்கு முன்னர் இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளையும் முன்னெடுப்பு நடவடிக்கைகளையும் கண்ணோட்டமிடுவோம்.

#1 சி.ம.இளந்தமிழ் இந்தப் 12ஆம் உலகத் தமிழ் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராக உத்தமம் அமைப்பினால் நியமிக்கப்பட்டார்.

#2 சி.ம.இளந்தமிழ் தலைமையில் மலேசியாவில் மாநாட்டு வினைக்குழு அமைக்கப்பட்டது. மாநிலங்கள் தோறும் மாநிலத் தொடர்புக் குழு அமைக்கப்பட்டன.

#3 மலேசியாவில் உள்ள 6 ஆசிரியர் பயிற்சிக் கழகங்களில் 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டு தகவல் அறிதிறன் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

#4 பொது இயங்களின் உதவியோடு நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் மாநாடு தொடர்பான  பரப்புரையும் விளக்கக் கூட்டங்களும் நடத்தப்பெற்றன.

#5 மலேசியாவில் உள்ள 523 தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாநாடு தொடர்பான விளக்கக் கையேடுகள், அறிக்கைகள் அனுப்பப்பட்டன. சில தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர்களுக்குத் தமிழ்க் கணினி, இணையம், கட்டற்ற மென்பொருள் தொடர்பான பயில்மனைகள் நடைபெற்றன.

#6 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டை முன்னிட்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென அகப்பக்கம் உருவாக்கும் போட்டி, குறுஞ்செயலி போட்டி  இளையோர்களுக்கும் முகநூல் பயனர்களுக்கும் சிறப்புப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.

#7 வானொலி, தொலைக்காட்சி, இணையம், முகநூல், குறுஞ்செய்தி முதலான ஊடகங்கள் வழியாக 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாடு தொடர்பான அறிவிப்புகள், செய்திகள், தகவல்கள் பரப்பப்பட்டன.

#8 மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்த மாநாட்டை நடத்துவதற்குரிய அரங்கங்கள், கண்காட்சிக் கூடம், தங்குமிடம், விடுதி, உணவு, மாநாட்டுப் பை, நினைவுப் பரிசு, நிகழ்ச்சி நிரல் ஆகிய அனைத்து ஏற்பாடுகளும் மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டன.

இப்படியாக மேற்கொண்டு செய்யப்பட்ட பல்வேறு திட்டமிடல்கள் அனைத்தும் குறித்த நேரத்தில் சரியாக நடைபெற்றதால், 15.08.2013ஆம் நாள் இரவு மணி 7:30க்கு மலாயாப் பல்கலைக்கழகத்தின் பெர்டானா சிசுவா அரங்கத்தில் ஆயிரம் பேராளர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாடு வெகு கோலாகலமாகத் தொடங்கியது.


4 நாட்களாக நடைபெற்ற இம்மாநாடு என்ன செய்தது? என்ன சாதித்தது? இம்மாநாட்டின் விளைபயன்கள் என்ன? என்பவை மிக முக்கியமான கேள்விகளாகும். பெருமாண்டமாக மாநாடுகளை நடத்திவிட்டுப் போவதென்பது எல்லாராலும் செய்யக்கூடியதே. ஆனால், விளைபயன்மிக்க மாநாட்டை நடத்துவதே இன்றைய காலத்திற்குத் தேவையானதும் செய்யத் தகுந்ததும் ஆகும்.

அப்படிப் பார்க்கையில் 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டின் பயனாக அல்லது விளைவாகக் கீழ்க்காணும் சிலவற்றைப் பட்டியலிடலாம்:-

#1 மலேசியாவிலிருந்து 680 பேரும் அயலகத்திலிருந்து 150 பேரும் உட்பட ஏறக்குறைய 1000 பேராளர்களும் சிறப்பு அழைப்பாளர்களும், கட்டுரையாளர்களும் கலந்துகொண்ட மிகப்பெரும் மாநாடாக இது அமைந்திருந்தது.

#2 மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள், உயர்க்கல்விக் கழகங்கள் ஆகியவற்றிலிருந்து ஏறக்குறைய பத்தாயிரம் மாணவர்கள் பார்வையாளர்களாக வந்து கலந்துகொண்டு, தமிழ்க் கணிமை குறித்தும் தமிழில் தகவல் தொழில்நுட்பம் பற்றியும் விழிப்புணர்வு பெற்றனர்.

#3 ஏறக்குறைய ஐந்து இலக்கம் (500,000) மலேசியத் தமிழர்களுக்குத் தமிழ்க் கணிமை - தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் பற்றிய சிந்தனைத் தூண்டலுக்கு இம்மாநாடு வித்திட்டுள்ளது.

#4 கணினி, இணைய, தகவல் தொழில்நுட்ப உலகில் தமிழ்மொழி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ளது என்னும் உண்மையைப் பொதுமக்களுக்குக் குறிப்பாக, இளையோர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளது. இதன்வழியாகத் தகவல் தொழில்நுட்பத்தில் புதிய பார்வையையும் தேடலையும் உண்டாக்கியிருக்கிறது.

#5 கணினி, திறன்பேசி, தட்டை, திறன்கருவிகளின் இடைமுகத்தைத் தமிழுக்கு மாற்றிக்கொள்ளவும் தமிழில் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் விடுக்கவும், முகநூல், டுவீட்டரில் தமிழில் எழுதவும் கூடிய ஆர்வம் மேலோங்கி இருக்கின்றது.

#6 பொதுவாகவே தமிழ் சார்ந்த மாநாடுகளில் பெரியவர்களும் மூத்தவர்களுமே வருகைதரும் சூழலில், இந்தத் தமிழ் இணைய மாநாட்டில் 60%-க்கும் மேல் இளையோர்களை ஈர்த்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.


#7 அதிக அளவில் தமிழாசிரியர்களும் பயிற்சி ஆசிரியர்களும் கலந்துகொண்டிருப்பதால் அவர்களிடம் பயிலும் ஆயிரக்கணக்கிலான தமிழ் மாணவர்களுக்கு தமிழ்க் கணிமை தொடர்பான தகவலும் அறிவும் சென்று பரவுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

#8 அயலகத்தில் மட்டுமின்றி, மலேசியாவிலும் தகவல், தொழில்நுட்பம், கணினி, இணையம், கணிமை சார்ந்த துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிப் படைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த மாநாடு அடையாளம் காட்டி ஆர்வமூட்டியுள்ளது. இதன்வழி இத்துறைகள் தொடர்பான ஆய்வுப்பணிகளும் ஆக்கப்பணிகளும் நடைபெறுவதற்கு வலிகோலியுள்ளது.


#9 தமிழ்த் தகவல் தொழில் நுட்பவியல், தமிழ்க் கணிமை, கையடக்கக் கருவி, இயற்கை மொழி ஆய்வு, தமிழ் மென்பொருள்கள், குறுஞ்செயலி, கணினி மொழியியல், கல்வி தொடர்பிலான ஏறக்குறைய 100 அரிய கட்டுரைகள் அடங்கிய மாநாட்டு ஆய்வடங்கள் ஒன்று ஆவணமாக்கப்பட்டுள்ளது.

#10  இயற்கை மொழி ஆய்வியல் (Natural Language Processing [NLP] ) துறையில் தமிழ்க் கணிமைக்கு ஓர் இருக்கையை ஏற்படுத்தித் தர மலாயாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கொள்கையளவில் ஒப்புதல் வழங்கியுள்ளதோடு, இதன் தொடர்பில் மலேசியப் பிரதமரிடம் பேசி இசைவுபெறுவதற்கு ஆவனசெய்யப்படுமென தெரிவித்துள்ளார். இதுவே இம்மாநாட்டின் மிக உச்சமான வெற்றியாகக் கருதலாம்.


#11 இந்த உலகத் தமிழ் இணைய மாநாடு முக முக்கியமான மூன்று தீர்மானங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. அவையாவன:-
  • தமிழ் தகவல் தொழில்நுட்பத்துக்கும் மொழியியலுக்குமான பன்னாட்டு ஆராய்ச்சி இதழ் ஒன்றை உத்தமம் தொடங்கும்.
  • ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான மின் கல்வி இணையத் தளத்தை உத்தமம் தொடங்கும்.
  • தமிழ்க் கணிமை ஆராய்ச்சியாளர்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் உதவும் வகையில் ஊடாடல் அறிவுத்தளம் ஒன்றை உத்தமம் ஆரம்பிக்கும்.

முதலாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டைத் தொடக்கிவைத்த மலேசியா, ஒரு மாமாங்கம் முடிந்து 12-ஆவது மாநாட்டை நடத்தும் வேளையில் தமிழ்க் கணிமையும் தமிழ்த் தகவல் தொழில் நுட்பமும்  மிகப்பெரிய வளர்ச்சியையும் உச்சத்தையும் எட்டியுள்ளது என்பது மறுக்கவியலா உண்மையாகும். ஒவ்வொரு நொடியும் முன்னேறிக்கொண்டிருக்கும் மின்னுட்பவியல் உலகத்தில் நிலைபெறவும் வெற்றிபெறவும் கூடிய ஆற்றலும் நுட்பமும் தமிழுக்கு உண்டு என்பது மறைக்க முடியாத மெய்யாகும். தனித்தியங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்பது தகவல் தொழில்நுட்ப உலகத்திலும் நிறுவப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.

எனினும், அடுத்துவரும் ஊழியில் தமிழ் நிலைத்து நிற்கவும் மற்றைய உலக மொழிகளுக்கு நிகராக தலையெடுத்து நிற்கவும் வேண்டுமானால், தமிழில் உருவாக்கம்பெறும் தகவல் தொழில்நுட்பங்களை உள்வாங்கிக்கொண்டு உடனே அதனை பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் அறிவாண்மை பெற்ற இனமாகத் தமிழினம் உருமாற்றம் பெறவேண்டும்.


தகவல்தொழில்நுட்பம் வழி தமிழை முன்னெடுப்போம்!
 நுண்மான் நுட்பப்புலத் தமிழராய் எழுவோம்! வெல்வோம்!

பி.கு: 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டுப் படங்கள், ஆய்வுக் கட்டுரைகள்

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Wednesday, August 21, 2013

12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாடு * கோலாலம்பூர், மலேசியா

உத்தமம் எனப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப அமைப்பு, 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டைக் கோலாலும்பூரில் கோலாகலமாக நடத்தியுள்ளது. இம்மாநாடு கடந்த ஆகத்து 15 - 18 வரையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. 'கையடக்கக் கருவிகளில் தமிழ்க் கணிமை' எனும் கருப்பொருளுடன் நடந்த இம்மாநாட்டில் மலேசியாவிலிருந்து 680 பேராளர்களும் அயலக நாடுகளைச் சேர்ந்த 150 பேராளர்களும் கலந்து சிறப்பித்தனர். இதுவரையில் நடந்த தமிழ் இணைய மாநாடுகளில் மிகவும் வெற்றிகரமாக நடந்த மாநாடாக இது கருதப்படுகிறது. 

மாநாட்டின் தொடக்கவிழா 15.08.2013 வியாழன் இரவு 8:00 மணிக்குத் தொடங்கியது. மலேசியத் தகவல், பல்லூடக அமைச்சர் மாண்புமிகு சபரி சிக் மாநாட்டினை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார். 

மாநாட்டில் பேசிய மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சி.ம.இளந்தமிழ்,"இனிவரும் எதிர்காலம் எந்திரமயமாக இருக்கும். முழுக்க முழுக்க தகவல் தொழில்நுட்பமே எங்கும் எதிலும் அட்சி செய்யப் போகின்றது. வீட்டுக் வீடு எந்திர மனிதன் இருக்கப் போகின்றான். அந்த இயந்திய மனிதன் தமிழ் பேசவேண்டும் என்றால், இப்பொழுதே அதற்கான பணிகளை முடுக்கிவிட வேண்டும். மேலும், தமிழ்க் கணினி பயன்பாட்டைத் தமிழ் மக்கள் அதிகப்படுத்த வேண்டும்.  தமிழ் தகவல் தொழில் நுட்பத்தைத் உலகத்தரப்படுத்த வேன்டும். பன்னாட்டு நிறுவனங்களோடு இணைந்து தமிழுக்கான முன்னெடுப்புகளை முனைந்து செய்தல் வேண்டும். இந்த மாநாட்டின்வழி உத்தமம் அமைப்பு எதிர்காலத் தமிழுக்கு ஆக்கமான பணிகளையும் திட்டங்களையும் பற்றி சிந்திக்கும் மாநாடாக நடைபெறுகிறது" எனத் தெரிவித்தார்.

மலாயாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டான்ஶ்ரீ கவுத் பின் சேசுமான், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் மு.ஆனந்தகிருஷ்ணன் ஆகிய இருவரும் சிறப்புரை ஆற்றினர்.

இவர்களை அடுத்து, முரசு அஞ்சல் நிறுவநர் முத்து நெடுமாறன் முதன்மைப் பொழிவு நிகழ்த்தினார். இந்த முதன்மைப் பொழிவு அவையோர் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்ததோடு, கணினி இணைய உலகில் தமிழ்மொழியின் வளர்ச்சி அனைவருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.

"கணினி, மடிக்கணினி, இணையம் ஆகியவற்றில் தமிழ்மொழி இன்று மிக எளிதாகவும் இயல்பாகவும் இயங்கும் நிலைமை உருவாகிவிட்டது. இன்று மிகப்பரவலாகிவரும் தட்டைகள் (Tablets), திறன்பேசிகள் (Smart Phones), கைக் கருவிகள் (Mobile Devices), குறுஞ்செயலிகள் (Apps) ஆகியவற்றிலும் தமிழ் வளர்ச்சிகண்டுள்ளது. ஆங்கிலம் போலவே தமிழையும் மிக எளிதாகப் பயன்படுத்தும் நிலைமை உருவாகிவிட்டது. ஆண்டிரோய்டு, விண்டோசு தளங்களிலும் தமிழைப் படித்தலும் எழுதுதலும் பெருகிவருகின்றன. தமிழின் வளர்ச்சி மேலும் விரவாக நடைபெற தமிழ் மக்கள் தமிழ்க் கணிமையைப் பயன்படுத்துபவர்களாக மாற வேண்டும். தமிழ்க் கற்றவர்கள் தமிழ்க் கணிமை பயனர்களாக மாற வேண்டும். அதோடு, தரமான பயனர்களாகவும் தரமிக்க கைக்கருவிகளைப் பயன்படுத்த முன்வரவேண்டும்." என்றார் முத்து நெடுமாறன்.

கைக்கருவிகளில் தமிழ்க் கணிமை, தமிழ்க் குறுஞ்செயலிகள், திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல், தமிழ்க் கணினிச் சொல்லாக்கம், கணினிக்குத் தமிழ் இலக்கண அறிவூட்டல், தமிழ் இணைய வளர்ச்சி, தமிழ்ச் சொல்திருத்தி, இயந்திர மொழி மாற்றம், இயன்மொழிப் பகுப்பாய்வுப் பிழைதிருத்தி, கணினி இணையம் வழி தமிழ்க் கற்றல் கற்பித்தல் முதலான துறைகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன. மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள்  பத்ரி சேசாத்திரி பொறுப்பில் ஆய்வடங்கலாக வெளியிடப்பட்டது.

மாநாட்டையொட்டி கண்காட்சியும் மக்கள் கூடம் எனும் தமிழ்க் கணிமை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஏறக்குறைய 10,000க்கும் அதிகமான தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மாணவர்களும் இளையோர்களும் பொதுமக்களும் வந்திருந்து கலந்து பயன்பெற்றனர்.

மொத்தத்தில், இந்த உலகத் தமிழ் இணைய மாநாடு மலேசியத் தமிழ் மக்களிடையே குறிப்பாக மாணவர்களிடையேயும் இளையோர்கள் மத்தியிலும் தமிழ்க் கணிமை மீது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவதில் பெரும் வெற்றி பெற்றுள்ளது என்றால் மிகையாகாது.




மேலும் செய்திகள் விரைவில்...

Tuesday, June 04, 2013

உலகத் தமிழாசிரியர் மாநாடு 2013 - கோலாலும்பூர், மலேசியா

கோலாலம்பூர் பெர்ல் இண்டர்நேசனல் விடுதியில், உலகத் தமிழசிரியர் மாநாடு கோலாகலமாகக் தொடங்கி நடைபெறுகின்றது. இம்மாநாடு சூன் திங்கள் 3 - 5 வரை நடைபெறுகின்றது. "உலகத்தரக் கற்றல் கற்பித்தலை நோக்கி தமிழ் ஆசிரியர்கள்" எனும் கருப்பொருளில் நடைபெறும்  இம்மாநாட்டில் 10 நாடுகளைச் சேர்ந்த 500 பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


1992ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் தொடங்கிய 'உலகத் தமிழாசிரியர் மாநாட்டு" இடையறாது நடைபெற்று வருவது பாராட்டுக்குரியது. பெருமைக்குரிய நல்லார் சிலர் முயற்சியால், குறிப்பாக அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் பொதுச் செயலாளர் நல்லாசிரிய மாமணி ஈஸ்வரன் ஐயா அவர்கள், அனைத்துலக ஆசிரியர் பேரவைப் பேராளர் இராமநாதன் ஐயா, சிங்கை மாணிக்கம், சாமிக்கண்ணு, கோலாலம்பூர் கோ.இராதாகிருஷ்ணன், பேராசிரியர் முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன், மலேசியா ஏ.சகாதேவன், நாகரத்தினம், மொரிசியசு புஷ்பரதம், தென்னாப்பிரிக்கா முனுசாமி முதலான எண்ணற்ற ஆசிரியப் பெருந்தகைகளால் வளர்க்கப்பட்ட உலகத் தமிழாசிரியர் மாநாடு இன்று ஆல்போல் வளர்ந்து பரந்து விரிந்து பயந்தருவதைக் காண முடிகின்றது.

தொடர்ந்து 10 தடவை நடந்துவரும் இம்மாநாட்டின் விளைவாகப் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில ஐரோப்பிய நாடுகளில் பண்பாட்டு விழுமியங்கள், தமிழ்க் கல்வி கற்றல் கற்பித்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் - ஒன்றிய அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டு இன்று சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக,உலகத் தரத்தை நோக்கி தமிழ்க்கல்வியை உயர்த்தவும், கணினி தகவல் தொழில்நுட்பம் வழி தமிழ்க்கல்வி பயணிக்கவும் பல்வேறு ஆய்வுப்பணிகள் நடந்துவருகின்றன.

ஏற்கனவே 2ஆம், 6ஆம் மாநாடுகளை ஏற்று நடத்திய மலேசியாவில் இப்பொழுது 10ஆம் மாநாடு வெகு சிறப்புடன் நடைபெறுகின்றது. மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்பான புதிய சிந்தனைகள் மிளிரவும் தமிழ்க் கற்றல் கற்பித்தல் புதுப்பொழிவுடன் வளரவும் இம்மாநாடு உதவும் என நம்பப்படுகிறது.
மன்னர் மன்னன்

இன்று நம் தமிழ்மொழியும் தமிழ் ஆசிரியர்களும் தமிழ்க்கல்வியும் எதிர்கொள்ளும் வெல்விளிகள் மிகப் பெரியது. தமிழை முதன்மொழியாகக் கற்கும் காலம் மெல்லென தூர்ந்துகொண்டிருக்கிறது. தமிழர்களே தமிழை இரண்டாம் மொழியாகவோ அல்லது மூன்றாம் மொழியாகவோ கற்க வேண்டிய இக்கட்டான சூழல் உலகம் முழுவதும் உருவாகிக் கொண்டிருக்கிறது. மலேசியாவில் தமிழை முதன்மொழியாகக் கற்கும் வாய்ப்பு கடல்போல் விரிந்து இருந்தாலும், தமிழின் மீதான தமிழ் மக்களின் எண்ணப்போக்கும் எதிர்பார்ப்பும் எதிர்மறையாக இருப்பதைக் காண முடிகிறது. தமிழகத்தில் தமிழ்வழிக் கல்விக்கான வாய்ப்புகள் இந்தித் திணிப்பின் வழியாகவும் ஆங்கில வழிக்கல்வி தாக்கத்தினாலும் சிதைந்து கொண்டிருக்கிறது. இன்னுஞ்சில நாடுகளில் தமிழைப் பேச்சுமொழி என்னும் அளவில் கற்றுக்கொண்டாலே போதுமென்ற சிந்தனைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.




 
இப்படியான வெல்விளிகளுக்கு இடையிலும் நெருக்கடிகளுக்கு நடுவிலும் தமிழையும் தமிழ்க்கல்வியையும் வென்றெடுக்கும் தலைமையான திட்டங்களும் தூய்மையான பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதற்கு உலகத் தமிழாசிரியர் மாநாடு பெரும் பங்களிக்க முடியும். மேலும், பன்னாட்டுத் தமிழ்க் கல்வியாளர்களிடையே அணுக்கத் தொடர்பும் நுட்பத்திற ஒத்துழைப்பும் ஏற்பட இதுபோன்ற மாநாடுகள் உதவ முடியும். 













முனைவர்  மு.இளங்கோவன், மன்னர் மன்னன், முத்து நெடுமாறன்,  சுப.நற்குணன், இல.வாசுதேவன், கோவி.சந்திரன்     
விரிவுரைஞர் மன்னர் மன்னன் தலைமையில் அமைந்த ஏற்பாட்டுக் குழுவினர் இந்த மாநாட்டை நன்முறையில் நெறிபடுத்தியுள்ளனர். ஏற்பாட்டுக் குழுவினருக்கும் மாநாட்டுப் பேராளர்களுக்கும் 'திருத்தமிழ்' தன் நெஞ்சார்ந்த நல்வாழ்த்தினை அன்பளிக்கின்றது.

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Monday, March 04, 2013

12-ஆவது தமிழ் இணைய மாநாடு - கோலாலம்பூர், மலேசியா

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு 12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டை மலேசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துகிறது. மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழி மொழியியல் புலம், தகவல் தொழில்நுட்ப நடுவம் ஆகியவற்றுடன் இணைந்து 'திதியான் டிஜிட்டல்' திட்டத்தின் ஆதரவுடனும் இம்மாநாடு நடைப்பெறுகிறது

கணினி, இணையம் ஆகியன தொடர்பாகத் தமிழின் பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் உலகெங்கும் தமிழர்களிடையே பரவும் வகையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உத்தமம் அமைப்பு உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தி வருகிறது. உத்தமம் உலகத்தமிழர்களை இணையத்தின் வாயிலாக இணைப்பதில் வெற்றி கண்டுள்ளது.

இது வரை எட்டு மாநாடுகளை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, இந்தியா ஆகிய நாடுகளில் முன்னணிப் பல்கலைக் கழகங்களோடு இணைந்தும், தமிழகத்தில் மூன்று மாநாடுகளை தமிழக அரசின் முழு ஆதரவோடும் உத்தமம் நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஆண்டு மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மேலாண்மை கண்காணிப்பு நடுவத்தில், வரும் ஆகஸ்டு 15 முதல் 18 வரை “12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2013” நடத்த உத்தமத்தின் செயற்குழு முடிவெடுத்துள்ளது.  உத்தமத்தின் தலைவர் சி. ம. இளந்தமிழ் அவர்கள், மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமை தாங்கவிருக்கிறார். உத்தமம் அமைப்பின் மேனாள் தலைவர் திரு மணி மு. மணிவண்ணன் அவர்கள் மாநாட்டின் பன்னாட்டுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

முந்தைய இணைய மாநாடுகளைப் போலவே வரும் 2013 மாநாடும் கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் என்று மூன்று முனைகளில் செயல்படும். ஆய்வுக் கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு ஆகஸ்டு 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களில் நடக்கவிருக்கிறது.  கண்காட்சியும்  மக்கள் கூடமும் ஆகஸ்டு 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும். மாநாட்டுக்குப் பதிவு செய்த பேராளர்கள் மட்டுமே கருத்தரங்கு மற்றும் பயிலரங்கில் கலந்து கொள்ளலாம். கண்காட்சியிலும் மக்கள்கூடத்திலும் பொதுமக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம்.

கருத்தரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கணினித்தமிழ் குறித்த தங்களின் ஆய்வுகளை ஏனைய ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.  மாநாட்டின் கருத்தரங்கக் குழுவுக்கு  முனைவர் பத்ரி சேஷாத்திரிஅவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ளார்.  கருத்தரங்குக் குழு மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகளைத் தேர்வு செய்வதுடன், கருத்தரங்குகளைச் செவ்வனே நடத்தும் பொறுப்பையும் வகிக்கும். இவ்வாண்டின் கருத்தரங்கிற்கு “கையடக்கக் கணினிகளில் தமிழ்க் கணிமை”என்ற  தலைமைக் கருத்தை ஒட்டிய ஆய்வுக்கட்டுரைகளை வரவேற்கிறோம்.

இணைய மாநாடுகள் ஆய்வாளர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், மக்கள் கூடத்தின் மூலம் கணித்தமிழ் நுட்பங்களைப் பரப்புதல், கணித்தமிழ் மென்பொருட்கள் மற்றும் கருவிகளைக் கண்காட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வாண்டு மாநாட்டின் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் நுட்பங்களை இத்துறையின் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களிடையே பரப்புதல், பயிலரங்குகள் நடத்திக் கணித்தமிழின் நுட்பங்களைப் பயிற்றுவித்தல், கணினி வழியாகக் கற்கும் மற்றும் கற்பிக்கும் பல்வேறு முறைகளை ஆசிரியர்களிடம் பரப்புதல் போன்ற முயற்சிகளை எடுக்கவிருக்கிறோம். கடந்த ஆண்டுகளை போலவே இவ்வாண்டும் கணித்தமிழ்ச் சங்கம் கண்காட்சி அரங்கம் ஏற்பாடுகளில் பெரும்பங்கு வகிக்கும்.

கீழ்க்கண்ட தலைப்புகளில் கட்டுரைகளை வரவேற்கிறோம்:
  • செல்பேசிகள் மற்றும் பலகைக் கணினிகளில் முக்கியமாக ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல்.
  • மின் நூல்கள், மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவர உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.
  • ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு, விண்டோஸ் மற்றும் எச்.டி.எம்.எல் 5 குறுஞ்செயலிகள் (Apps).
  • திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல்.
  • இயன்மொழிப் பகுப்பாய்வு பிழைதிருத்தி,  தமிழ் எழுத்துரு பகுப்பி, ஒலி உணர்தல், தேடல்பொறிகள் , இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்றவை.
  • தமிழ் இணையத்தின் தற்போதைய நிலை: வலைப்பதிவு, சமூக வலைத்தளங்கள், விக்கிப்பீடியா, குரல் வலை போன்றவை.
  • தமிழ் தரவுத்தளங்கள்.
  • கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்
  • தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்.
  • கணினி வழி தமிழ்மொழி  பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றிய ஆய்வுகள்.
கட்டுரைகள் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பப்படவேண்டும். ஆய்வுச் சுருக்கங்களும் இறுதிக் கட்டுரையும் திருத்தக்கூடிய வடிவத்தில் மட்டுமே அனுப்பப்படவேண்டும். இவை உரைக் கோப்புகளாக, எச்.டி.எம்.எல் வடிவில், மைக்ரோசாஃப்ட் வேர்ட் அல்லது ஓப்பன் ஆஃபீஸ் கோப்புகளாக இருக்கலாம். பி.டி.எஃப் அல்லது அதுபோன்ற திருத்தமுடியாத வடிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படா. கட்டுரைகள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ அல்லது இரு மொழிகளும் கலந்த வகையிலோ இருக்கலாம். தமிழில் அல்லது இருமொழியில் இருந்தால், யூனிகோட் குறியீட்டில் மட்டுமே இருக்கலாம். பிற குறியீடுகளைக் கொண்டு அனுப்பப்படும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

மாநாட்டு இதழ் ஒன்று அச்சு வடிவிலும் மின் வடிவிலும் வெளியிடப்படும். ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாநாட்டில் நேராகப் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே மாநாட்டு இதழில் சேர்த்துக்கொள்ளப்படும். கட்டுரைகள் அனுப்புவோர் நேராக மாநாட்டுக்கு வந்து கட்டுரைகளைப் படிக்க ஒப்புக்கொள்கிறார் என்று புரிந்துகொள்ளப்படும்.

(ஏ4 அளவில்) இரு பக்கங்களுக்கு மிகாது கட்டுரைச் சுருக்கங்களை நிகழ்ச்சிகள் குழுவுக்கு cpc@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். கட்டுரை வந்து சேர்ந்தது குறித்து உடனடியாக உங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் கட்டுரைச் சுருக்கங்களை ti2013.infitt.org என்ற இணைய தளம் மூலமும் சமர்ப்பிக்கலாம். கட்டுரைச் சுருக்கங்களை  அனுப்பக் கடைசி தேதி மே 31, 2013 ஆகும்.

பேரா. மு. அனந்த கிருஷ்ணன் ஆய்வுக் கட்டுரைப் போட்டி:
மாநாட்டில் கலந்து கொள்ளும் ஆய்வாளர்களில் நான்கு (4) சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கு பே.ரா. மு. அனந்த கிருஷ்ணன் விருது வழங்கப்படும்.
 
தமிழ் குறுஞ்செயலி உலகப் போட்டி:
கையடக்கக் கணினிகளின் தொழில்நுட்பம் வளர்ந்து கொடுப்பதற்கு ஈடாகத் தமிழிலும் குறுஞ்செயலிகள் (Applets or Apps) வளர வேண்டும் என்பதை உணர்ந்தும் மேலும் பல நிரலாளர்களைத் (programmers) கணினித்தமிழுக்கு ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழுக்கான சிறந்த குறுஞ்செயலிப் போட்டி ஒன்றை அறிவிக்கிறோம். ஆப்பிள் ஐ-ஓஎஸ், ஆண்டிராய்டு, விண்டோஸ்8 தளங்களுக்கான  குறுஞ்செயலிகள் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு உத்தமத்தின் வலைத்தளம் ti2013.infitt.org அணுகவும்.  

மாநாடு குறித்த கூடுதல் விவரங்களுக்குக் கீழ்க்காணும் மின்முகவரிகளில் தொடர்பு கொள்ளவும்: ed@infitt.org மற்றும் chair@infitt.org

சி. ம. இளந்தமிழ்
தலைவர் உத்தமம், மலேசியா
செல்: 0060-12314390
chair@infitt.org


அ. இளங்கோவன்
செயல் இயக்குனர், உத்தமம், சென்னை, இந்தியா
செல்: 0091-98410 23223
ed@infitt.org

@நன்றி : உத்தமம் (infitt)



Thursday, February 21, 2013

கோலாலம்பூரில் "தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம்" உலகப் பரந்துரை மாநாடு-3


எதிர்வரும் 24-2-2013இல் தை முதல்நாளே தமிழாண்டுத் தொடக்கம் எனும் உலகப் பரந்துரை மாநாடு மலேசியத் தலைநரான கோலாலும்பூர், தான்சிறீ சோமா அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைப்பெறவுள்ளது.

இம்மாநாட்டின் ஏற்பாடுளை மலேசியாவின் மூன்று தேசிய அமைப்புகளான மலேசியத் தமிழ் இலக்கியக்கழகம், மலேசியத் தமிழ் நற்பணிக்கழகம், மலேசியத் திராவிடர்க் கழகம் ஆகியன செய்து வருகின்றன். மேலும் மலேசிய நாட்டில் இயங்கிவரும் 15க்கும் மேற்பட்ட தமிழுணர்வுக் கொண்ட அமைப்புகள் இம்மாநாடு சிறக்கத் துணைபுரிந்து வருகின்றன. 

மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம் “தை முதல்நாளே தமிழாண்டுத் தொடக்கம்” எனும் தமிழ் மக்களின் நீண்டகாலப் போராட்டம் வெற்றி பெறும் வகையில் கருத்துப் பரப்புரைகளைச் செய்து துணை நிற்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.

தமிழக அரசு, புதுவை அரசு, மலேசிய அரசு இன்னும் பிறநாடுகளிலிருந்து அவ்வந்த நாடுகளின் சார்பாகத் தமிழ் அறிஞர்கள் தமிழ் ஆய்வாளர்கள் இந்த உலகப் பரந்துரை மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.   


இம்மாநாட்டில் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கலை ஒட்டிய சிறப்புத் தீர்மானங்களும், தமிழக மற்றும் உலக அரசுகளின் செயற்பாட்டுக்கான பொதுத் தீர்மானங்களும், ஈழத் தமிழர் நலன் குறித்து உலக அரசுகளுக்கான வேண்டுரைகளும் நிறைவேற்றப்படவுள்ளன.

இம்மாநாடு காலை 8.00 மணிக்குத் தொடங்கி பகல் 2.00 மணிக்கு முடிவுறும். இம்மாநாட்டில் தமிழ்மறை ஓதப்பட்டு நிகழ்ச்சிகள் முறையாகத் தொடங்கும்
  
இம்மாநாட்டின் கருப்பொருளை ஒட்டி தமிழறிஞர்கள் தத்தம் கருத்துரைகளைச் சான்றுகளுடன் நிறுவர். பல அரிய கருத்துகளைத் தாங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டு மலர் வெளியீடு செய்யப்பெறும்.

இம்மாநாட்டைக்குறித்து உலக முழுவதும் உள்ள தமிழ்ச்செய்தி ஊடகங்கள் அனைத்தும் தமிழர்களின் எழுச்சிக் குறித்து கருத்துப் பரப்புரைகளைச் செய்வதற்கும் தாளிகைகள், மாதிகைகள், ஏடுகள் ஆனைத்தும் தமிழ்ப்புத்தாண்டு பொங்கள் மலரை வெளிக்கொணர்வதற்கும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.   

1921 ஆம் ஆண்டு தமிழகத்தில் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப்புலவர்கள் ஒன்றுக்கூடி திருவள்ளூவராண்டினை முடிவு செய்து தை முதல்நாளே தமிழாண்டுத் தொடக்கம் என அறிவிப்புச் செய்தனர்; இதனை உலகத் தமிழர்கள் ஏற்றுப் பின்பற்றவே வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மாநாடு நடைபெறுகின்றது.


இம்மாநாட்டில் தமிழர்கள் பெரும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

மிராக எழுதற்கும் து னி அடையாளம் பேணுதற்கும் 
"தை முதல்நாளே மிழாண்டுத் தொடக்கம்" என்தை உத்தின் செவிளில் அறைதற்கும் மிழர்கள் அனைரும் லையெதிளுவோம்.. வாரீர்..! வாரீர்..!!
 

Blog Widget by LinkWithin