Showing posts with label தமிழ்ப்பள்ளி. Show all posts
Showing posts with label தமிழ்ப்பள்ளி. Show all posts

Wednesday, October 19, 2016

பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு : மலேசியாவில் நடக்கிறது




மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கொண்டாட்டத்தின் தொடர்பில் பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. எதிர்வரும் 20.10.2016 தொடங்கி 23.10.2016 வரையில் நான்கு நாள்களுக்கு ‘21ஆம் நூற்றாண்டில் தமிழ்க்கல்வி எனும் கருப்பொருளில் இம்மாநாடு நடைபெறும். கெடா மாநிலத்தில் அமைந்துள்ள எயிம்ஸ்ட் பல்கலைக்கழகம் இந்த மாநாட்டுக்குரிய இடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வித் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ ப.கமலநாதன் அவர்களின் தலைமையில் மாநாடு நடைபெறும். மலேசியச் சுகாதார அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர்.சுப்பிரமணியம் அவர்கள் இம்மாநாட்டினை அதிகாரப்படியாகத் தொடக்கி வைப்பார். மேலும் கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ மாட்சீர் காலிட் அவர்களும் கல்வி அமைச்சின் இயக்குநர்கள், உயர் அதிகாரிகள், விரிவுரையாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பொது இயக்க பொறுப்பாளர்கள் ஆகியோர் மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொள்வர். 

மாநாட்டுத்  தொடக்கவிழா 22.10.2016ஆம் நாள் மாலை மணி 2:00 தொடங்கி 5:00 வரையில் நடைபெறும். தொடக்க விழாவில் கலந்து சிறப்பிக்க பொதுமக்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். 

மலேசியாவிலிருந்து 250 தமிழாசிரியர்களும் கல்வி அதிகாரிகளும் உள்பட சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, அமெரிக்கா, பிரான்சு, சுவிசர்லாந்து, மியான்மார், தாய்லாந்து, மொரிசியஸ், ஆஸ்திரேலியா முதலான வெளிநாடுகளைச் சேர்த்த மொத்தம் 300 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் தமிழ்க்கல்வியின் வரலாறு, கலைத்திட்டம், கற்றல் கற்பித்தல், மதிப்பீடு, 21ஆம் நூற்றாண்டுக் கல்வி முதலான கோணங்களில் மாநாட்டில் அமர்வுகள் நடைபெறவுள்ளன. மலேசியத் தமிழாசிரியர்கள் 24 பேர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் மாநாட்டில் படைக்கப்படவுள்ளன. மேலும் தமிழ்க்கல்வியின் மேம்பாட்டுக்கு உரிய வழிவகைகளை ஆராய்வதற்கு 2 பட்டறைகளும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு வே.இளஞ்செழியன் தலைமையில் ஓர் ஏற்பாட்டுக்குழு அனைத்துப் பணிகளையும் செய்துவருகின்றது. இந்தக் குழுவில் கல்வி அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெறுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



மலேசியாவில் 200 ஆண்டுகளைக் கடந்துவந்துள்ள தமிழ்க்கல்வி 21ஆம் நூற்றாண்டிலும் மாணவர்களுக்குப் பொருத்தப்பாட்டைக் கொண்டிருப்பதோடு திறன்மிக்க மாந்த மூலதனத்தை உருவாக்குவதற்கு ஏற்புடையதாக அமைவதற்கு இந்த மாநாடு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு தொடர்பான மேல் விவரங்களை www.tamilkalvi.my என்ற இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

நன்றி:  www.tamilkalvi.my

Thursday, February 07, 2013

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சரிவு! ஏன்? என்ன செய்யலாம்?

தமிழ்ப்பள்ளி என்பது ஒரு கழகம் (institution) இங்கிருந்துதான் தமிழ், தமிழர் சம்பந்தப்பட்ட அனைத்து சமாச்சாரங்களும் உருவாக்கப்பட்டு வியாபித்து ஆலமரமாய் உருவெடுக்கின்றன. தமிழன்  இந்நாட்டின் ஓர் அங்கமாய் விளங்க, தொடர்ந்து ஒரு சமுதாயமாக இருக்க, அரசாங்கம் தமிழனை இந்நாட்டில் உள்ள மூவினங்களில் ஓரினமாய் அங்கீகரிக்க அதன் வழி அந்த இனத்திற்கு வேண்டிய சலுகைகளை தொடர்ந்து ஒதுக்கிட தமிழ்ப் பள்ளிகளின் நிலைத்தன்மை இந்த நாட்டில் அவசியமாகின்றது.

தமிழ்ப் பேசும் கூட்டம் இருந்தால்தான், தமிழன் என்ற ஒரு இனம் அடையாளம் காணப்படும்; அதற்குறிய அங்கீகாரமும் கிடைக்கும். தமிழ்ப் பேசும் மக்களை உருவாக்கும் தளம் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள். ஆகவே தமிழ்ப் பள்ளிகள் அழிந்தால், தமிழ்ப் பேசுபவர்கள் குறைவார்கள், தமிழின் பயன்பாடு குறையும், தமிழை அரசாங்கம் ஒரு தேவையானா மொழியாக கருதாமல் புறந்தள்ளும். அதானால், தமிழை எங்கெல்லாம் அரசாங்கம் இதுகாறும் பயன் படுத்தி வந்ததோ (உதாரணம்: வானொலி தொலைக்காட்சி, அரசு வெளியீடுகள்) அங்கெல்லாம் அதன் பயன்பாட்டை சிறுது சிறிதாக குறைத்து இறுதியில் அது முற்றிலுமாக நீக்கப்பட்டு விடும்.

தமிழ்ப்பள்ளியிலிருந்து விளையும் பயிற்கள் எங்கெல்லாம் ஊடுருவுகின்றன என்பதனைக் காண்போம் :

•    தமிழ் ஆசிரியார்களாக உருவாகி தமிழ்ப்பள்ளிகளுக்கே உரமாகிறார்கள். இதனால் 9 ஆயிரம் தமிழ் ஆசிரியர்கள், 523 தலைமை ஆசிரியர்களின் வாழ்வாதாரமாக தமிழ்ப்பள்ளிகள் விளங்குகின்றன.

  • •    தமிழ்ப்பாடம் இடைநிலப்பள்ளியில் தொடர்ந்து ஒரு பாடமாக இருக்க மாணவர்களை அனுப்பும் ஊட்டிகளாக (feeder) தமிழ்ப்பள்ளிகள் விளங்குகின்றன. பின்பு இம்மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டதாரியாவதற்கும் தமிழ்ப் பள்ளிகளே காரணமாக அமைகின்றன.

•    தமிழை திறனாக படிப்பதாலும் பேசுவதாலும், தமிழ் சார்ந்த அமைப்புகளிலும், நிறுவனங்களிலும் வேலை செய்ய வாய்ப்புகளும் அதன் வழி வாழ்வாதாரமும் கிடைக்கின்றன. உதாரணம் : மின்னல் எப் எம், டிஎச்ஆர் ராகா வானொலி, அஸ்ட்ரோ வானவில்.

  • •    தமிழ்ப் பத்திரிக்கை துறைக்கு, ஆசிரியர்கள்,  நிருபர்கள், பிழை திருத்துபவர்கள் இவர்களை உற்பத்தி செய்யும் முதல் கட்ட தொழிற்சாலை தமிழ்ப் பள்ளிகளாகும். தமிழ்ப் பள்ளிகள் இல்லயென்றால் இத்துறைதான் முதலில் காணாமல் போகும்.

நூல் எப்படி சிதறிய முத்துக்களை ஒன்றிணைத்து கோர்வையாய் ஒரு மாலையாய் உருவாக்குகின்றதோ அதே போல் தமிழ் என்னும் நூலானது, தமிழ்ச் சார்ந்த அனைத்திலும் ஊடுறுவி தமிழனை ஒரு இனமாய் ஒரு சமூகமாய் அடையாளங் காட்டுகிறது. தமிழ்ப்பள்ளிகள் இல்லையேல் தமிழனின் அடையாளங்கள் யாவும் கோர்க்கப்படாத காரணத்தினால் சிதறி, நாளடைவில் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.


  • மாணவர் சரிவு

இந்த ஆண்டு தமிழ்ப் பள்ளிகளுக்கு செல்லும் ஒன்றாம் ஆண்டின் மாணவர்களின் என்ணிக்கை முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் சரிவைக் கண்டுள்ளது என்பதனை நாம் அறிவோம். தொடர்ந்து இந்த நிலைமை நீடிக்குமானால் தமிழ்ப் பள்ளிகள் இந்த நாட்டில் அதிக நாட்கள் நீடிக்க மாட்டா என்ற உண்மையும் நம்மை சுடுகின்றது. இது குறித்து தனி மனிதர்கள் வழியும்  சமூக அமைப்புகள் வழியும்  பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கணிசமான இந்திய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஏன் தமிழ்பள்ளிகளுக்கு அனுப்புவதினின்றும் தவிர்க்கிறார்கள் என்பதற்கு பல காரணங்களுண்டு…

  • 1.    தேசிய பள்ளிகளில் கணிதமும், அறிவியலும் மலாய்  மொழியில் பயிற்றுவிப்பதால் அவர்கள் இடைநிலைப் பள்ளிக்கு போகும் பொழுது அவ்விரு பாடங்களும் தொடர்ந்து மலாய் மொழியில் இருப்பதாலும் அது தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு  சுலபமாக இருக்கும் என்ற எண்ணம்.
  •  2.    தமிழ்ப் பள்ளிகளில் பயில்வதனால் பொருளாதார  பலன் இல்லை.
  •  3.    தமிழரல்லாதவர்கள் பெரும்பாலும் வேற்று மொழி பள்ளிகளுக்கே தங்கள் பிள்ளைகளை அனுப்ப விரும்புகிறார்கள். குறிப்பாக வட இந்தியர்கள் மலையாளிகள் தெலுங்கர்கள் (தோட்டபுற மக்களைத் தவிர) ஆங்கிலம் போதனா மொழியாக இருந்த காலந்தொட்டே தமிழ்ப்பள்ளிகளை தவிர்த்து வந்துள்ளனர்.
  •  4.    சில பெற்றோர்களுக்கு இனப்பற்றும் மொழிப்பற்றும் குறைவாக இருப்பதனால்.
  •  5.    தமிழ்ப்பள்ளிகளின் தரத்தின் மீது பெற்றேர்களுக்கு நம்பிக்கை இன்மை.
இந்த மேற்கூறிய காரணங்களுக்காக எறக்குறைய 70 ஆயிரம் இந்திய  மாணவர்கள் மற்ற மொழி பள்ளிகளில் பயிலும் நிலைமை உருவாகியுள்ளது. தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தற்பொழுது 1 லட்சமாக இருக்கிறது.

அறிவியலும் கணிதமும் மலாய் மொழியில் போதிப்பதனால் தமிழ்ப் பிள்ளைகள் மலாய் பள்ளிக்கு செல்கிறார்கள் என்ற கூற்றில் உண்மை இருந்தாலும், இதே பிரச்சனை சீன பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும் பொருந்தும் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அவ்வின மக்களில் 97 விடுக்காட்டினர் சீனப்பள்ளிக்களுக்குத்தான் அனுப்புகிறார்கள் என்று ஆய்வு கூறுகின்றது.

தமிழ்ப் பள்ளிகளில் தேசிய மொழியில் நல்ல தேர்ச்சி இருந்தால் அவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் இந்த இடையூறுகளை சுலபமாக எதிர்கொள்வார்கள் என்பதும் நிரூபிக்கப்பட்ட  உண்மை.  இதை ஒன்றையே முதற்காரணமாகக் கொண்டு தமிழ்ப் பிள்ளைகள் தமிழ்ப் பள்ளிகளுக்களுக்கு அனுப்பாதது மிகவும் தவறு. அதோடு, தமிழ் மொழி  மலாய் மொழியைவிட கடினமான மொழி. நம் மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு மற்ற மொழிகள் சுலபமாக வரும். ஆகவே தமிழ்ப்பள்ளியிலிருந்து போகக் கூடியவர்கள் தமிழில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவர்களால் எந்த மொழியிலும் எந்த பாடத்தையும் சுலபமாக படிக்கும் ஆற்றல் ஏற்படும்.

இந்த சிந்தனை மாற்றம் இந்தியப் பெற்றொர்களுக்கு ஏற்பட்டால் அதனால் குறந்தது 35 ஆயிரம் இந்திய மாணவர்களையாவது  நாம் தமிழ்ப் பள்ளிகளின் பால் ஈர்க்கமுடியும் . அதனால் ஏறக்குறைய 3000 தமிழ் ஆசிரியர்கள் பணியிலமர்த்தப்படுவார்கள்.

தமிழ்ப்பள்ளிகளில் பயில்வதானால் பொருளாதார பயன்கள் எதுவும்  இல்லை என்று கூறுவது அறியாமையால் வருவது என்பது என் கருத்து. தமிழ்ப்பள்ளியில் பயிலுவதோ வெறும் 6 ஆண்டுகள் மட்டுமே, அதுவும் எண் எழுத்து வாசித்தல் என்னும் அடிப்படை கல்வி மட்டுமே கற்று, உடல்  முதிர்ச்சி, மனப்பக்குவம்  அடையாத வயதில் எந்த விதமான பொருளாதர பயனையும்  நாம் எதிர்பார்க்க முடியாது.

 
இது தமிழ்ப் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தக்கூடியது அல்ல, ஒரு மாணவன் எந்த மொழிப்பள்ளியில் பயின்றாலும் ஆரம்ப கல்வியின் மூலம் அவனுடைய பொருளாதாரம் உயராது. இந்த அறியாமையால்தான் இந்தியப் பெற்றோர்களில் சிலர் தங்களின் பிள்ளகளை சீனப்பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். சீனமொழிப்படித்தால் எப்படியாவது நம் பிள்ளை முன்னுக்கு வந்துவிடுவான் என்று நம்புகின்ற பெற்றோரை இன்றும் காணலாம்.

1.    1950 களில் மலாயாப் பல்கலைகழகத்தில் இந்தியப் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட பொழுது , அங்கு பயிற்று மொழியாக சமஸ்கிருதத்தை கொணர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அப்பொழுது சிங்கப்பூரிலிருந்து வெளி வந்த தமிழ் முரசு பத்திரிகையின் ஆசிரியர் தமிழவேள் கோ சாரங்கபாணி அவர்களின் விடாமுயற்சியாலும், கடும் உழைப்பாலும், நடத்திய ஆர்பாட்டங்களாலும் அப்போதைய அரசாங்கம் தமிழ்ச் சமுதாயத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழை பயிற்று மொழியாக்கிற்று. அன்று  தமிழ்வேள் கோ.சாரங்கபாணி அந்த முயற்சியை மேற்கொண்டிராவிட்டால் இன்று தமிழே மலாயாப் பல்கலைகழகத்தில் இல்லாமல் போய் தமிழ்ப் பட்டதாரிகளும் உருவாகாமலேயே போயிருப்பார்கள். அது எத்தனை பெரிய இழப்பாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

எப்படி அண்ணன் கோ.சாரங்கபாணி 60 வருடங்களுக்கு முன்னால் தமிழுக்காக போராடினார்களோ அதே வழியில் நாம் சென்று போராட வேண்டும். மாநிலங்கள் தோறும், ஜில்லாக்கள் தோறும், தோட்டங்கள் தோறும், தமிழ் சார்ந்த இயக்கங்கள், தமிழர் இளைஞர் மணிமன்றங்கள், அரசியல் சார்புடைய இயக்கங்கள், அரசு சாரா இயக்கங்கள் ஒன்று சேர்ந்து அந்த அந்த இடத்திலுள்ள பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு தமிழ்ப் பள்ளிக்கூடங்களின் அவசியத்தை உணர்த்தி, அங்கு அவர்கள் பிள்ளைகளை அனுப்ப உத்தரவாதம் பெறவேண்டும்.

முதலில் அங்குள்ள பகுதிகளில் எத்தனை தமிழ்ப் குடும்பங்கள் இருக்கின்றன, அதில் எத்தனை பிள்ளைகள் அடுத்த வருடம் பாலர் பள்ளிக்கும், ஒன்றாம் வகுப்புக்கும் போகும் வயதுடையவர்கள் என்ற புள்ளி விவரங்களை துல்லியமாக எடுக்கவேண்டும். அதன் பின் அங்குள்ள தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் துணை கொண்டு ஒரு பொதுக்கூட்டமோ விருந்தோ வைத்து எல்லா பெற்றோர்களையும் அழைத்து அங்கேயே பதிவினை நடத்தவேண்டும்.

இதற்கு தலைமை ஆசிரியர்களும் ஒத்துழைப்பு நல்கவேண்டும். இந்த வேலையை அரசாங்கம்தான்  செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. தமிழ் மொழி என்பது தமிழர்களால் மட்டுமே கட்டிக்காக்கப்படவேண்டிய ஒரு சொத்து. அதனின் வாழ்வும் சாவும் தமிழர் கையில்தான் உள்ளது. இதுதான் நிதர்சனமான உண்மை, இதனை அனைத்து தமிழர்களும் முதலில் உணரவேண்டும். ஆகவே இந்தாட்டில் தமிழ் நிலைக்க வேண்டுமா இல்லையா என்பதனை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

2.    தமிழ் பள்ளிக்கூடங்களை தேசிய பள்ளிகளுக்கு இணையாக தரத்தில் உயர்தப்படவேண்டும். தமிழர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை தமிழின் மேல் உள்ள பற்றால் மட்டும் அனுப்புகின்றார்கள் என்ற நிலை மாறி, தமிழ்ப் பள்ளிகளிலும் கற்றல் கற்பித்தல் சிறப்பாக உள்ளது ஆகவே என் பிள்ளையை தமிழ்ப் பள்ளிக்குத்தான் அனுப்புவேன் என்று ஒவ்வொரு பெற்றோரும் சொல்லும் காலம் வரவேண்டும்.  ! சீனப்பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோரின் மனம் மாற சரியான ஆயுதமும் இதுதான்.

3.    தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு படிப்போடு ஓரளவு பண்பாடும் வளர வாய்ப்புள்ளது என்பதனை நம் பெற்றோர்கள் உணரவேண்டும். பல்லின மக்கள் படிக்கும் தேசிய பள்ளிகளில் இந்த பண்பாட்டுக் கல்வி போதனை குறைவாகவே கிடைக்கும். பெரும்பாலான  நம் தமிழ் ஆசிரியார்களிடம் அற்பணிப்பு உணர்வும் , இன உணர்வும் இருப்பதனால் தமிழ் மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் ஒரு பாதுகாப்பான சூழ்நிலையில் கல்வி பயிலும் சூழல் உள்ளது.

4.    தமிழ்ப் பள்ளிகளின் தரம் உயர மாணவர்களின் சேர்க்கையில் கலப்பு இருக்க வேண்டும், அதாவது கீழ்மட்ட மக்களும் நடுத்தர மக்களுமே பெரும்பாலும் சென்றுகொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு மேல் குடியைச் சேர்ந்த தமிழ்ப் பிள்ளகளும் அங்கு சென்று பயிலவேண்டும்.

டாக்டர்கள், எஞ்சீனியர்கள் வியாபரிகள் முதலாளிகள் இவர்களின் பிள்ளைகளும் அங்கு சென்று பயில்வார்களேயானால் , அங்கு ஒரு நல்ல  மாணவர் கலப்பு உருவாகும். நல்ல சூழ்நிலயில் இருந்து வரும் பிள்ளகளுடன் , வசதி குறைந்த மாணவர்களும் சேர்ந்து படிப்பதால் , பின்னவர்களுக்கு முன்னவர்களின் நற்பண்புகளும் பழக்க வழக்கங்களும் பரவும் வாய்ப்பு உள்ளது. இதை துணிந்து இந்த வசதி படைத்தவர்கள் தமிழ்ப் பள்ளிகளின் வளர்சிக்காகவும் , தர உயர்வுக்காகவும் செய்ய வேண்டும்.

5.    கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்தில் இருந்த பொழுது அதிகமான மேல் மேல்குடி மக்கள் அவர்களின் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பினார்கள் என்பது ஆய்வில் தெரிய வரும் உண்மை. மீண்டும் அந்த மொழி மாற்றம் ஏற்படுமேயானால் பழையபடி  தமிழ்  மாணவர் எண்ணிக்கை கூடுமென்பது திண்ணம். இதனை கல்வியாளர்களும் அரசியல் வாதிகளும், தமிழ்ப் பற்றாளர்களும் நன்கு சிந்திக்க வேண்டும்.

உணர்ச்சிவசப்படாமல், தமிழ் பள்ளிகளும் தமிழ் மாணவர்களும் மேலோங்க இந்த மொழி மாற்றம் அவசியமென்று நான் கருதுகிறேன். துன் மகாதீர் செய்த உறுப்படியான சில  காரியங்களில் இந்த கணித அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் பயிற்றுவிக்க ஆவணம் செய்ததும் ஒன்று. இவ்விரு பாடங்களும் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்ட பொழுது தமிழ் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி மற்ற மொழிப் பயன்ற மாணவர்களை விட சிறப்பாக இருந்தது என்பது ஆய்வில் தெரிந்த உண்மை.

இந்த முறை நமது மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்த்ததோடு மட்டுமில்லாமல், அவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் இந்த 2 பாடங்களில் நன்கு தேர்ச்சிபெற உதவியுள்ளது. தாய்மொழிப் பற்றாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்பதனை அறிந்துள்ளேன். இருந்தாலும் நடைமுறைக்கு ஏற்ப சிந்தித்தோமானால் இது ஒரு சிறந்த வழி என்று எனக்குப் படுகிறது.

தாய் மொழியில் கணிதம் அறிவியல் பாடங்களைக் கற்றால் அவை மாணவர்கள் மனதில் நன்கு பதியும் என்பது உண்மை என்ற போதிலும், இந்த பாடங்கள் தொடர்ந்து தாய்மொழியிலேயே இடைநிலை, மேல்நிலை பள்ளிகள் என்று பல்கலைக்கழகம் வரை தொடர்ந்து இருந்தால் மேலும் சிறப்பாக அமையும். ஆனால் மலேசியாவில் அப்படி செயல் படுத்த சாத்தியமில்லை. அப்படியிருக்கும் பொழுது 13 வயதில் வேற்று மொழியில் படித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் பட்சத்தில் அதனை 9 வயதிலிருந்தே ஆங்கிலத்தில் பயின்றால் விளையும் நன்மைகளை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இதனால் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, தரம், வளர்ச்சி ஆகியவை  உறுதிசெய்யப்படும். ஆகவே கணிதமும் அறிவியலும் மீண்டும் ஆங்கிலத்தில் கொண்டு வர முயற்சி செய்யப்பட வேண்டும்.

6. தமிழாசிரியர்களின் மனப்போக்கும் காலதிற்கேற்றார் போல் மாறவேண்டும். அதிகமான தலைமை ஆசிரியர்கள் தியாக உணர்வோடு தமிழ்ப்பள்ளிகளை நிர்வகித்து வந்தாலும் கூட, கணிசமான எண்ணிக்கையுடைய தலைமை ஆசிரியர்கள் இன்னமும் தலைமை ஆசிரியர் வேலையை மற்ற அரசாங்க வேலையைப் போன்றே எண்ணுகின்றார்கள்.


அவர்கள் தலைமையில் ஒரு சமுதாயத்தின் தலை எழுத்தை மாற்றக்கூடிய பொறுப்பு இருக்கின்றது என்பதனை அவர்கள் உணரவேண்டும். மாணவர்கள் சேர்க்கையில் அதிக ஈடுபாடு காட்டுதல், கற்றல் கற்பித்தல் தரத்தை உயர்த்த  பாடுபடுதல், பள்ளி கட்டொழுங்கை மேம்படுத்துதல், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம் இவற்றுடன் சுமூக உறவு இவைகளெல்லாம் பள்ளியின் தரத்தை உயர்த்த வழி வகுக்கும்.

மலேசிய திருநாட்டில் தமிழ் நிலைத்தோங்க இவற்றை செய்வோமா தமிழர்களே ! நம் மொழி, நமது பள்ளி,  நாம்தான் பொறுப்பு!

கட்டுரையாளர்: கோவிந்தசாமி அண்ணாமலை
தஞ்சோங் மாலிம்

நன்றி:- செம்பருத்தி
 

Monday, January 28, 2013

மலேசியாவில் உலகத் தமிழாசிரியர் மாநாடு

சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், 1992-ஆம் ஆண்டில் முதன் முதலாகத் 'உலகத் தமிழாசிரியர் மாநாடு' நடைபெற்றது. இதுவரை ஒன்பது உலகத் தமிழாசிரியர் மாநாடுகள் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, மொரிசியசு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சிறப்பாக நடந்தேறியுள்ளன.

இந்த நிலையில், பத்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாடு 2013 ஆம் ஆண்டு, சூன் திங்கள் 3 - 5ஆம் நாள் வரை மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் மிகச்சிறப்பாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநாட்டின் நோக்கம்:- 
1. தமிழ் கற்றல் கற்பித்தல் ஆகியவற்றில் மேம்பாடு காணத் திட்டமிடுதல்.
2. தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள், தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளமைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வழிவகைகளை ஆராய்தல்.
3. உலகத் தமிழாசிரியர்களிடையே தமிழ் கற்றல் கற்பித்தல் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களும் பகிர்வுகளும் நிகழ வகை செய்தல்.
4. பல நாடுகளைச் சேர்ந்த தமிழாசிரியர்களிடையே அணுக்கத் தொடர்பும் நிபுணத்துவ ஒத்துழைப்பும் ஏற்பட வழிவகுத்தல்.

ஆய்வுக் கட்டுரைகள் கட்டுரைகள் 20 நிமிடங்களுக்குள் படைக்கப்படும் வண்ணம் அமைந்திருக்க வேண்டும். ஒருங்குறி (Unicode) முறையில் தட்டச்சு செய்து  28.02.2013 தேதிக்குள் மாநாட்டுக் குழுவினருக்குக் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவும்.

பின்வரும் தலைப்புகளைத் தழுவியமைந்த கட்டுரைகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. 
1. கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்
 - ஊடகங்களின் தாக்கம் 
- தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு 
- புதுக்கோட்பாடுகள் , Language Teaching Learning Methods ( LTLM )
2. தமிழை இரண்டாம் மொழியாகப் பயில்வோர்க்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
3. பிறமொழி மாணவர்கள் தமிழை எளிமையாக கற்றுக் கொள்வதற்கான பயிற்று முறைகள்/நடவடிக்கைகள்
4. புலம்பெயர்ந்த நாடுகளில்/சூழலில் தமிழ்க் கல்வி
5. பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவதில் தமிழ்க் கல்வியின் பங்கும் பணியும்
6. தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் மதீப்பீட்டில் புதிய அணுகுமுறை
7. தமிழ்மொழிப் பயன்பாட்டில் கருத்தாடல் திறன் வளர்த்தல்




கட்டுரைகளைப் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்:-
Email : mail@worldtamilteachersconf.org 
தொடர்பு முகவரி: 
10 th World Tamil Teachers Conference, 
C/O Department of Malaysian Languages & Applied Linguistics,
Faculty of Languages and Linguistics University of Malaya, 
50603,Kuala Lumpur
தொடர்புத் தகவல்கள்:- 
தலைவர்: 03-79673142 
செயலாளர்: 03-87331590 Tel: 603-7772 1 714 
தொலைப்படி (Fax): 603-7967 3 142
மேலும் விவரங்களுக்கு:- 

Saturday, November 19, 2011

ஆசிரியர்கள் உழைப்பில் குளிர்காயும் தனியார் நிறுவனங்கள்




2011ஆம் ஆண்டுக்கான யுபிஎசார் முடிவுகள் வெளியாகிவிட்டன. இவ்வாண்டில் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 1191 மாணவர்கள் அனைத்து ஏழு பாடங்களிலும் ‘ஏ’ பெற்று (7ஏ) சாதனை படைத்துள்ளனர். யுபிஎசார் வரலாற்றிலேயே தமிழ்ப்பள்ளி மாணவர்களின் 7ஏ தேர்ச்சி விகிதம் ஆயிரத்தை தாண்டியிருப்பது இதுவே முதன் முறையாகும்.

இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பின்னணியில் பலர் இருக்கலாம்; பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், வேறு யாரையும் விட; வேறு எந்தக் காரணத்தையும் விட இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணமானவர்கள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்தாம் என்பது மறுக்கவியலாத உண்மையாகும். ஆசிரியர்களின் அயராத உழைப்பும் ஈகமும் ஒன்றுசேர்ந்ததால் தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது என்றால் மிகையன்று.
 
ஆசிரியர்களை அடுத்து பெற்றோர்களின் பங்களிப்பும் அக்கறையும் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கிறது என்றால் மிகையன்று. ஏனெனில், குழந்தை பிறந்தது முதற்கொண்டு அக்குழந்தை ஆறாம் ஆண்டில் யுபிஎசார் தேர்வு எழுதுகின்ற வரையில் உடனிருந்து கவனித்து வளர்த்தெடுத்து வழிகாட்டியவர்கள் பெற்றோர்களே ஆவர்.

ஆனால், ஆசிரியர்களின் உழைப்பை மறுதளிக்கும் வகையிலும், பெற்றோரின் கவனிப்பை ஏளனப்படுத்தும் வகையிலும் நாளிதழ்களில் சில செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. அதாவது, சில கல்வி நிறுவனங்களும் தனிக்கற்கை (Tuition) வகுப்புகளும் முண்டியடித்துக் கொண்டு இந்த வெற்றிக்காகச் சொந்தம் கொண்டாடுகின்றன. தங்கள் நிறுவனத்தில் அல்லது வகுப்பில் படித்த இத்தனை மாணவர்கள் 7ஏ எடுத்தார்கள்; அத்தனை மாணவர்கள் 5ஏ எடுத்தார்கள் என்றெல்லாம் செய்தி போட்டு (மலிவு)விளம்பரம் தேடுகிறார்கள்.

  • முதலாம் ஆண்டு தொடங்கி ஆறாம் ஆண்டு வரையில், 6 ஆண்டுகள் மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்றல் கற்பித்தை முறையாக நடத்தியவர்கள் ஆசிரியர்கள்.
  • 6 ஆண்டுகள் பயிற்சிகளைக் கொடுத்தும், அவற்றைத் திருத்தியும், பிழைதிருத்தம் செய்ய வலியுறுத்தியும், வீட்டுப் பாடங்கள் கொடுத்தும் மாணவர்களின் ஆற்றலை வளர்த்தெடுத்தவர்கள் ஆசிரியர்கள்.
  • 6 ஆண்டுகள் குறைதீர் நடவடிக்கை, திடப்படுத்தும் நடவடிக்கை, வளப்படுத்தும் நடவடிக்கை எனப் பல்வேறு வழிகளில் கற்றல் கற்பித்தலைச் செய்தவர்கள் ஆசிரியர்கள்.
  • 6 ஆண்டுகள் நேரம் காலம் பாராமல் கூடுதல் வகுப்பு, சிறப்பு வகுப்பு, விடுமுறை கால வகுப்பு என நடத்தி மாணவர்களை உருவாக்கியவர்கள் ஆசிரியர்கள்.
  • 6 ஆண்டுகள் பல்வேறு தேர்வுகளை நடத்தி மாணவர்களின் கல்வி வளர்ச்சியை முறையாகக் கவனித்து முன்னேற்றியவர்கள் ஆசிரியர்கள்.
  • 6 ஆண்டுகளாக மாணவர்களின் உடனிருந்து அரவணைத்து அவர்கள் துவண்டு விழும்போதெல்லாம் தூக்கி நிறுத்தி, தன்னம்பிக்கை ஊட்டி, ஊக்கப்படுத்தியவர்கள்   ஆசிரியர்கள்.
  • ஆறாம் ஆண்டில் மாணவர்களுக்குப் பல வழிகாட்டிக் கருத்தரங்குகள் நடத்தி, தேர்வு அணுகுமுறைகளைக் கற்பித்து, வினாக்களுக்கு விடையெழுதும் நுட்பங்களைக் கற்றுக்கொடுத்து வழிகாட்டியவர்கள் ஆசிரியர்கள்.
  • யுபிஎசார் தேர்வு நாட்களில் தேர்வு மண்டப வாசலில் நின்று மாணவர்களின் தோள்களில் தட்டிக்கொடுத்து, ஊக்கமூட்டி வழியனுப்பி வைத்தவர்கள் ஆசிரியர்கள்.
  • அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புகள், சமுதாயம் ஆகிய தரப்பினரின் அழுத்தங்களுக்கு இடையில் அயராமல் அல்லும் பகலும் உழைத்தவர்கள் ஆசிரியர்கள்.

மேலே சொன்ன எல்லாவற்றையும் மறுதளிக்கும் வகையில்; இருட்டடிப்புச் செய்யும் வகையில் சில கல்வி நிறுவனங்கள் செயல்படுவது வருத்தமளிக்கிறது. ஒட்டுமொத்த தமிழ் ஆசிரியர்களின் உள்ளத்தையும் வேதனையில் ஆழ்த்துகிறது.

ஆறாம் ஆண்டில் மட்டும் சில மாதங்களுக்கு வகுப்புகளை நடத்திவிட்டு, கல்வி விரதம், கல்வி புரட்சி என்றெல்லாம் படம் காட்டிவிட்டு மாணவர்களின் வெற்றிக்கும் தேர்ச்சிக்கும் தாங்களே முழுக் காரணம் என உரிமை கொண்டாடுவதும் நாளிதழ்களில் பக்கம் பக்கமாகச் செய்திகள் போடுவதும் விளம்பரம் போடுவதும் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு செய்கின்ற கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் பயின்ற தமிழ்ப்பள்ளிகளைப் பற்றி செய்தியில் எதுவும் குறிப்பிடுவதே இல்லை. மாறாக, ஏதோ அந்த நிறுவனத்திலேயே மாணவர்கள் படித்து தேர்வு எழுதியதைப் போன்ற தோற்றத்தைப் பெரிதுபடுத்திக் காட்டுகிறார்கள்.

அதுமட்டுமல்லாது, இவர்களின் செய்தியிலும் விளம்பரத்திலும் 5ஏ பெற்ற தேசியப் பள்ளி மாணவர்கள் பற்றியும் கொட்டை எழுத்துகளில் போட்டுக்கொள்கிறார்கள். இதனால், தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கின்ற பெற்றோர்களின் மனநிலையில் தடுமாற்றம் ஏற்படுகின்றது. இதன் விளைவாக, தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டுப் பதிவு குறைந்து போகலாம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

இந்த விடயத்தில் தனியார் கல்வி நிறுவங்களை மட்டும் குறைசொல்வதில் பயனில்லை. நமது தமிழ் நாளிதழ்கள் குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் செய்திகளுக்கு முதலிடம் கொடுத்து விளம்பரப்படுத்துகின்றன. இவ்வாறான செய்திகளால் காலப்போக்கில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏற்படப்போகின்ற விளைவுகளைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் செயல்படுகின்றனர். ஆகவே, தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்துவரும் நமது தமிழ் நாளிதழ்கள் இதுபோன்ற செய்திகளைத் தவிர்ப்பது நல்லது.

தனியார் கல்வி நிறுவனகளும், தனிக்கற்கை வகுப்புகளும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் உழைப்பில் குளிர்காய்வதை உடனடியாக நிறுத்திகொள்ள வேண்டும். ஆசிரியர்களின் ஈகத்தைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு ஈட்டத்தைத் தேடிக்கொள்ளும் தன்னலப் போக்கைக் கைவிட வேண்டும். இயலுமானால், அவர்கள் தங்கள் பங்களிப்பை சமுதாய உணர்வோடு செய்ய முன்வர வேண்டும். இங்குச் சொல்லப்பட்ட கருத்துகள் அவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டவை என நினைக்காமல், தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி, சமுதாய நலன் ஆகியவற்றின் அடிப்படையில் சொல்லப்பட்டவை என பொறுப்புணர்வுடன் எண்ணிப்பார்க்க வேண்டும்.

  • பி.கு:- இந்தச் செய்தி மலேசியாவில் வெளிவரும் மூன்று நாளிதழ்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

@சுப.நற்குணன்

Friday, November 18, 2011

இணையம் வழி தமிழ் கற்றல் கற்பித்தல் (பாகம் 4)




4.0   இணைய வழிக் கற்றல் கற்பித்தலின் மேன்மைகள்

இணையம் வழியாகத் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் நடைபெறுவதால் குறிப்பிடத்தக்க நன்மைகள் விளைகின்றன. அவற்றைப் பின்வருமாறு பட்டியலிடலாம்:-

1)  மாணவர்கள் பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
2)  ஒன்றைப் பற்றிய மேலதிக தகவலை அறிந்துகொள்ளும் வகையில்
    தொடுப்புகளைக் (hypelinks) கொண்டிருக்கிறது.
3) வெவ்வேறு ஆற்றலும் விருப்பமும் கொண்ட மாணவர்கள் தாங்கள் விரும்பும்
   வகையில்  கற்பதற்கு வாய்ப்பினை வழங்கிகின்றது.
4)  எழுத்து (text), ஒலி (sound), காட்சி (visual), அசைவுப்படம் (graphics),
   நிகழ்ப்படம் (video), உடலியக்கம் (psychomotor), இருவழித் தொடர்பு (interactive)
   எனப் பலதரப்பட்ட வகையில் கற்பதற்குரிய சூழல் இருக்கின்றது.
5)  மாணவர்களின் கற்றல் திறனையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.
6)  தனியாகக் கற்பதற்குரிய (individualise learning) வாய்ப்பு கிடைக்கிறது.
7) மாணவரை இலக்காகக் கொண்ட கற்றல் கற்பித்தல் சிறப்பாக நடைபெறுகிறது.
8) மனமகிழ்ச்சியுடன் கற்பதோடு வெல்விளி(சவால்) நிறைந்த கற்றல் சூழலை
   உருவாக்கிக் கொடுகின்றது.
9) மாணவர்களின் ஆக்கச் சிந்தனையையும் ஆய்வுச் சிந்தனையையும்
   வளர்த்துகொள்ள உதவுகிறது.
10) குறிப்பிட்ட காலம், இடம், சூழல் என எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல்
    கற்பதற்குரிய வாய்ப்பு கிடைக்கிறது.
11) கிடைப்பதற்கு அரிய தகவல்களை விரைவாகவும் விரிவாகவும் பெற முடிகின்றது.
12)  குறைந்த செலவில் விலைமதிப்பில்லாத் தகவல்களையும் தரவுகளையும்
    நொடிப்பொழுதில் மிக எளிதாகப் பெற முடிகிறது. 
13) கற்றலில் ஏற்படும் சிக்கல்களுக்குரிய தீர்வுகளைப் பல முனைகளிலிருந்தும்
   மூலங்களிலிருந்தும் உடனடியாகப் பெற முடிகிறது.
14) உலகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு
    கொள்ளவும், இணைய உரையாடல் கருத்துப் பரிமாற்றம் செய்யவும், நிகழ்ப்பட
    கலந்துரையாடல் நடத்தவும், மின்னஞ்சல் வழி தகவல்களைப் பரிமாறவும்
    வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன.
15) தகவல்களைத் திரட்டவும், சேமிக்கவும், புதிய தகவல்களை இற்றைப்படுத்தவும்
    (update), தேவையற்ற விவரங்களை நீக்கவும், விரும்பியபடி மாற்றங்களைச்
    செய்துகொள்ளவும் முடிகிறது. 


5.0   முடிவுரை

மொழிக் கற்றல் கற்பித்தல் எளிமையான ஒன்றல்ல. அதுவும் இணையத்தில் தமிழ்மொழியைக் கற்பதும் கற்பிப்பதும் மிகக் கடுமையான ஒன்றாகும். இருந்தபோதிலும், ஒலியியல், எழுத்தியல், வரிவடிவம், இலக்கணம், இலக்கியம் என விரிந்து கிடக்கும் தமிழ்மொழியை இணையத்தின் துணைகொண்டு கற்கவும் கற்பிக்கவும் கூடிய வாய்ப்புகள் இன்று நடைமுறைக்கு வந்திருக்கின்றன. தற்போதைய சூழலில் இருக்கின்ற வாய்ப்புகளையும் ஏந்துகளையும் முழுமையாகப் பயன்படுத்தி தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலை முன்னெடுக்கும் முயற்சிகள் நடைபெற வேண்டும். மரபு வழியான கற்றல் கற்பித்தலுக்கு இடையில் இணையம் சார்ந்த நவின முறையிலான கற்றல் கற்பித்தலுக்கும் இடங்கொடுக்க வேண்டும். இணையம் வழி கற்பித்தலானாலும் சரி அல்லது இணையத்தளங்களைப் பயன்படுத்தி கற்பதானாலும் சரி, இவ்விரண்டினையும் விரிவுபடுத்தி வளர்த்தெடுக்கும் வழிகளை ஆராய வேண்டும்.

தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலைப் புதிய இலக்கு நோக்கி நகர்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் கல்வியாளர்களுக்கும் கணிஞர்களுக்கும் இருக்கின்றது. ஆகவே, உலக உருண்டையில் தமிழும் தமிழ்க் கல்வியும் நிலைபெற வேண்டுமானால், இணையம் வழியாகவும் இணைய ஏந்துகளின் வழியாகவும் தமிழைக் கற்கவும் கற்பிக்கவும் வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதனை உணர்ந்து, தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் தமிழைக் கற்கும் அல்லது கற்க விரும்பும் மாணவர்களும் இனையத்தையும் இணைய ஏந்துகளையும் பயன்படுத்த முன்வர வேண்டும்.

இனிவரும் காலம் இணையத்தோடு இரண்டறக் கலந்துவிடப்போகின்றது. அதற்கேற்றால்போல, தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலும் இணையத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அப்பொழுதான், தமிழும் தமிழ்க்கல்வியும் நீடுநிலவ முடியும்; தமிழ்மொழி தனது தொன்மையின் தொடர்ச்சியைத் தொலைத்துவிடாமல் நிலைத்து வாழும்.  

மேற்கோள்கள்

குழந்தைவேல் பன்னீர்செல்வம்.சு. (2009). இணையம்வழி மொழிக் கற்றல் கற்பித்தலில்
புதிய அணுகுமுறைகள், தமிழ் இணைய மாநட்டு மலர், செருமானியம்.

ரபி சிங். எம்.ஜே. (2010). மின்னனு வழியில் தமிழ்மொழி கற்பித்தல் மற்றும் கற்றல்,
தமிழ் இணைய மாநாட்டு மலர், கோவை

நக்கீரன்.பி.ஆர். (2010). தமிழ் இணையப் பல்கலைக்கழக மென்பொருள்கள் – ஒரு
கண்ணோட்டம். தமிழ் இணைய மாநாட்டு மலர், கோவை

இளஞ்செழியன்.வே & இளந்தமிழ்.சி.ம. (2011). தமிழில் தகவல் தொழில்நுட்பத்தைக்
கற்பித்தல்: வாய்ப்புகளும் சிக்கல்களும். தமிழ் இணைய மாநாட்டு மலர்,
பென்சில்வேனியா.

பெரியண்ணன்.கோ. (2011). இணையம் மற்றும் கணினி வழி தமிழ் கற்றல் கற்பித்தல்.
தமிழ் இணைய மாநாட்டு மலர், பென்சில்வேனியா.

Dr. Seetha Lakshmi. (2011). Facebook and Tamil Language in Singapore's Teacher
Education . தமிழ் இணைய மாநாட்டு மலர், பென்சில்வேனியா.

Dr.Sajap Maswan. (1998). Kelebihan Penggunaan Internet dan Laman Web dalam
Pengajaran dan Pembelajaran. Institut Perguruan Tuanku Bainun. Pulau
Pinang, Malaysia.

Collins,B. (1996). The Internet As An Educational Innovation: Lesson From
Experience With Computer Implementation. Educational Technology, 36 (6),
pg. 21- 30

@சுப.நற்குணன்
Blog Widget by LinkWithin